டேனியல் வெட்டோரி - Underrated என்ற வார்த்தையே தற்போது overrated ஆகியிருந்தாலும் கிரிக்கெட்டின் ஒரிஜினல் underrated வீரர் இந்த வெட்டோரி. டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என இரண்டையும் ஒரு சேர எடுத்த மூன்று வீரர்களுள் ஒருவர் வெட்டோரி. கடந்த ஆண்டு ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த அஜாஸ் பட்டேல் தற்போது நியூசிலாந்து அணியில் இல்லை. நியூசிலாந்து ஸ்பின்னர்களுக்குக் கிடைக்கும் வழக்கமான மரியாதை இதுதான். ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளராக 18 ஆண்டுகள் நியூசிலாந்து அணிக்காக விளையாடியவர் வெட்டோரி.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் போல ஆடும் தற்போதைய நியூசிலாந்து கலாச்சாரத்தை கட்டமைத்ததில் வெட்டோரியின் பங்கு அதிகம். எந்தவித பிரச்னையும் செய்யாமல் விளையாடும் அணிகளுக்கு ஜ.சி.சி வழங்கும் 'Spirit of the game' விருதைத் தொடர்ந்து இரண்டு முறை 2009 மற்றும் 2010ல் நியூசிலாந்து வென்றது. அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் வெட்டோரி. தான் குறுக்கே வந்ததால்தான் எதிரணி வீரர் ரன் அவுட் ஆனார் என்று தானே ஒப்புக்கொண்டு அந்த வீரரின் அவுட்டுக்கு நடுவரிடம் முறையிடாமல் இருந்தவர். 2012ம் ஆண்டும் வெட்டோரி 'Spirit of cricket' விருதை வாங்கினார். மற்றொரு முறை பந்து dead ஆகிவிட்டது என தவறுதலாக க்ரீசை விட்டு வெளியேறிய இயன் பெல்லை வெளியேறச் சொல்லாமல் ஆட்டத்தைத் தொடரச் செய்த கேப்டன் வெட்டோரி.
தாடி கூட பெரிதாக முளைக்காத காலத்தில், தனது 18 வயதில் களத்திற்கு வந்தவர் வெட்டோரி. குட்டிக் கண்ணாடி, பால் வடியும் முகம் என்று ரேகிங் செய்ய ஏதுவான முதலாம் ஆண்டு மாணவர் போல வந்தவர். ஆனால் சிறிது நாள்களிலேயே தன்னுடைய சுழற்பந்து வீச்சால் எதிரணியை ரேகிங் செய்ய ஆரம்பித்தார். நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரும் இவர்தான். விக்கெட்டுகள் எடுக்கத்தகுந்த சூழல் இல்லாத போது, தனது பேட்டிங் மூலம் இவர் அமைத்துக் கொடுக்கும் குட்டி குட்டி பார்ட்னர்ஷிப்கள் நியூசிலாந்தை பல முறை கரை சேர்த்துள்ளன.

2015 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை நியூசிலாந்து சென்றதில் வெட்டோரியின் பங்கு அதிகம். அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் இவர்தான். ஸ்பின்னுக்கு பெரிதும் உதவாத ஆடுகளங்களில், தனது 36 வயதில் 15 விக்கெட்டுகளை வெட்டோரி கைப்பற்றி அசத்துவார். உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள் வரிசையில் இப்போதும் மூன்றாவது இடத்தில் இருப்பவர் வெட்டோரி. ரிச்சர்ட் ஹாட்லி நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சு முகம் என்றால் வெட்டோரிதான் அந்த அணியின் சுழற்பந்து வீச்சின் முகம்.
ஹாட்லி, ஜான் ரைட், மார்டின் க்ரோவ் போன்ற வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு நியூசிலாந்து அணிக்கென ஒரு தனி கௌரவத்தை பெற்றுத் தந்த வீரர் வெட்டோரி. வில்லியம்சன், வாட்லிங், சவுதி போன்ற தலைசிறந்த நியூசிலாந்து வீரர்கள் அணிக்குள் வந்தது வெட்டோரியின் தலைமையில்தான். கல்லூரியில் எல்லா தரப்பு மாணவர்களாலும் நேசிக்கப்படும் பேராசிரியர் போன்ற வெட்டோரியின் 44வது பிறந்தநாள் இன்று.