Published:Updated:

HBD Dhoni: "தோனி... தோனி!" இன்றும் குறைந்திடாத ரசிகர்களின் உற்சாகம்! அப்படி என்ன செய்தார் எம்.எஸ்?

HBD Dhoni

கபில்தேவிற்குப் பிறகு ஒரு தேசத்தின் நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக முதுகில் தூக்கிச் சுமக்கும் திராணியோடு ஒரு கேப்டன் உருவானார். அவரே தோனி!

HBD Dhoni: "தோனி... தோனி!" இன்றும் குறைந்திடாத ரசிகர்களின் உற்சாகம்! அப்படி என்ன செய்தார் எம்.எஸ்?

கபில்தேவிற்குப் பிறகு ஒரு தேசத்தின் நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக முதுகில் தூக்கிச் சுமக்கும் திராணியோடு ஒரு கேப்டன் உருவானார். அவரே தோனி!

Published:Updated:
HBD Dhoni

தோனி, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. உள்ளூர் போட்டிகளில் அவர் ஆடுவதே இல்லை. வெறுமென ஐ.பி.எல் போட்டிகளில் அதுவும் ஆண்டிற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார். அதிலும் கூடிய விரைவிலேயே அவர் ஓய்வை அறிவிக்கக்கூடும். ஆனால், ஆச்சர்யம் என்னவெனில் இன்னமும் தோனி மீதான அந்த ஈர்ப்பு குறையவே இல்லை. இன்னமும் அவரின் பெயர் ஒலிக்கும் போதெல்லாம் அரங்கமே அதிர்கிறது.

மஞ்சள் ஜெர்ஸியில் மைதானத்திற்குள் வந்தாரெனில் `தோனி... தோனி' என்கிற ரசிகர்களின் அந்த ஆர்ப்பரிப்பே விண்ணை முட்டுகிறது.
MS Dhoni
MS Dhoni

ஜூலை 7 இன்று தோனிக்கு 41வது பிறந்தநாள். அதைக் கொண்டாடும் வகையில் தெலுங்கானாவில் தோனிக்கு 41 அடிக்கு சில ரசிகர்கள் கட் அவுட் வைத்திருக்கின்றனர். இங்கே தமிழகத்திலுள்ள திட்டக்குடியில் தோனியின் பிறந்தநாளுக்காக தன் வீட்டு சுவர்களில் தோனியின் படங்களை வரைந்து சிறப்பித்திருக்கிறார் கோபி கிருஷ்ணன் என்ற ரசிகர். இவர் ஏற்கெனவே தன் வீட்டை சிஎஸ்கே தீம் கலர்களில் கட்டி 'House of Dhoni Fan' என்று பெயர் வைத்தவர். தோனியின் மீதான ரசிகர்களின் அன்பு தீர்ந்தே போகாதா? இப்படிக் கேட்டால் இப்போதைய நிலவரப்படி வாய்ப்பே இல்லை என்பதைத்தான் பதிலாகக் கூற முடியும்.

கிரிக்கெட் சார்ந்த படங்களும் கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் படங்களும் பாலிவுட்டில் அடிக்கடி எடுக்கப்படுபவைதான். இந்த கேட்டகரியில் எக்கச்சக்கமான படங்களை எடுத்துக் குவித்திருக்கிறார்கள். தோனியின் பயோபிக்கையுமே எடுத்திருக்கிறார்கள். தோனிக்கு முன்பு ஆடிய சூப்பர் ஸ்டார் வீரர்களைப் பற்றியும் படங்கள் எடுத்திருக்கிறார்கள். ஆனால், தோனியின் 'MS Dhoni The Untold Story' என நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷாந்த் சிங் நடித்து வெளியான அந்தப் படத்திற்குக் கிடைத்த அளவுக்கான வரவேற்பு வேறெந்த படத்திற்கும் கிடைத்ததா என்பது கேள்விக்குறியே!

MS Dhoni
MS Dhoni

டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை என இந்தியா முழுவதும் அத்தனை ஏரியாக்களிலும் ஒரே மாதிரியான வரவேற்பே தோனியின் படத்திற்குக் கிடைத்திருந்தது. வெறும் மெட்ரோ சிட்டிகள் மட்டுமில்லை. தென் பகுதியில் இருக்கும் திருநெல்வேலியிலும் அதே வரவேற்புதான். அங்கே கல்லூரியை கட் அடித்துவிட்டு தோனி படத்தைப் பார்த்த அனுபவம் இன்னும் ஞாபகம் இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை இதுவரை பெரிதாக நேரில் பார்த்ததில்லை. ஆனால், அந்தப் படத்தைப் பார்க்கும்போது வான்கடேவின் கேலரியில் பலத்த ஆராவாரத்திற்கு மத்தியில் அமர்ந்தே உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியைக் காண்பது போல இருந்தது. 'தோனி...தோனி' என்கிற அந்த ஆர்ப்பரிப்பிலும் விசில் சத்தத்திலும் தியேட்டரே கிரிக்கெட் மைதானமாக மாறிப்போயிருந்தது. அப்படியொரு புல்லரிப்பான தியேட்டர் அனுபவத்தை அதற்கு முன்னும் பின்னும் அனுபவித்ததே இல்லை.

இப்போதும் ஆச்சர்யமாக இருக்கும். பெரும் ரசிகர் பலம் கொண்ட வேறு சில கிரிக்கெட் வீரர்களைப் பற்றி வெளியான படங்களுக்கு ரசிகர்கள் இவ்வளவு ஆர்வத்தை ஏன் வெளிப்படுத்தவில்லை? அதுவரை யாரென்றே தெரியாத ஒரு வீரர் அப்போதுதான் கிரிக்கெட்டுக்கே அறிமுகமாகிறார் என வைத்துக் கொள்வோம். ஐ.பி.எல்-இல் ஒரு போட்டியில் ஒரே ஓவரில் அவர் மூன்று சிக்ஸர்களை அடித்துவிட்டால் மறுநாள் அவர்தான் தலைப்புச் செய்தியாக இருப்பார். ஒரே இரவில் பெரும் வெளிச்சமும் புகழும் அவருக்குக் கிடைத்துவிடும். ஆக, இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் பெயர் புகழைச் சம்பாதிப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால், ஒரு வீரரின் வாழ்விலிருந்து கிரிக்கெட் விலகிய பிறகும், ஆண்டுகள் கடந்தும் அவர் அதே மாதிரியான மங்காத பெயரோடும் புகழோடும் இருக்கிறார் என்றால் ரசிகர்கள் அந்த வீரரின் கிரிக்கெட் திறனுக்காக மட்டுமே அவரை ரசிக்கவில்லை. அதைத் தாண்டியும் வேறொரு அன்பு அவர்களுக்கு இருக்கிறது.

MS Dhoni
MS Dhoni
"அது ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் மழையே பெய்யாததால் வறட்சியால் மக்கள் வாடிக்கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் எல்லாரும் கூடி ஒரு முடிவெடுக்கிறார்கள். மழை வேண்டி பிரத்யேகமான ஒரு வழிபாட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். அதன்படி, மக்கள் எல்லாரும் வழிபாட்டிற்காகக் கூடிவிட்டார்கள். அங்கே ஒரு சிறுவன் மட்டும் குடையை ஏந்திக் கொண்டு அந்தக் கூட்டத்திற்கு வருகிறான். மழையே வராத ஊருக்குக் குடையா என அத்தனை பேரும் அந்த சிறுவனை முட்டாளாக நினைக்கிறார்கள். ஆனால், அந்த சிறுவன் ஏந்தி வந்தது குடையை அல்ல ஒரு மாபெரும் நம்பிக்கையை..."
- கே.ஜி.எஃப் யஷ்

'KGF' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் யஷ் தனது ரசிகர்களிடம் இந்த குட்டிக் கதையைக் கூறியிருந்தார். ராக்கி பாய் கூறிய அந்தக் கதையில் மழையே இல்லாத ஊரில் குடையைப் பிடித்துக் கொண்டு ஒரு சிறுவன் வருகிறான் இல்லையா? அந்த சிறுவனுக்கு ஒப்பானவர்தான் தோனி.

இந்திய கிரிக்கெட் அவமானங்களாலும் சர்ச்சைகளாலும் இருள் படிந்து போயிருந்த சூழலில்தான் தோனி இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்றார்.

26 வயது இளைஞனான தோனி அந்தச் சமயத்தில் கொண்டிருந்தது வெறும் நம்பிக்கை மட்டும்தான்.

2007 டி20 உலகக்கோப்பை தொடங்கியது. தோனிக்குப் பெரிய நம்பிக்கையிருந்தது. ஆனால், தோனி மீது யாருக்கும் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. இந்த அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று ஓடும் என ரவி சாஸ்திரி ஆருடம் கூறினார். பெரும்பாலான ரசிகர்கள் ரவி சாஸ்திரியின் ஆருடத்தின் மீதே நம்பிக்கை வைத்தனர். ஆனால், வென்றது யாரின் நம்பிக்கை என்பது அனைவருக்கும் தெரியும். 2007 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது.

இதன்பிறகு, ரசிகர்கள் மனம் மாறினர். தோனியையும் தோனியின் ஒவ்வொரு அசைவையும் முழுமையாக நம்ப ஆரம்பித்தனர். கபில்தேவிற்குப் பிறகு ஒரு தேசத்தின் நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக முதுகில் தூக்கிச் சுமக்கும் திராணியோடு ஒரு கேப்டன் உருவானார். கபில்தேவ் போன்றே அவரும் இந்தத் தேசத்தை இன்னொரு முறை கம்பீரமாகத் தலைநிமிரச் செய்தார். 1983க்குப் பிறகு மீண்டும் 2011-ல் உலகக்கோப்பை வெற்றி சாத்தியப்பட்டது. 2013-ல் மீண்டும் ஒரு மினி உலகக்கோப்பை வெற்றி. ஒரு கேப்டனாக இந்திய அணியை எவ்வளவு உச்சத்திற்குக் கூட்டிச் செல்ல முடியுமோ அவ்வளவு உச்சத்திற்கு தோனி கூட்டிச் சென்றார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் இந்தளவுக்கு நிறைவேற்றிய வேறு ஒரு வீரரை யாராலும் காட்ட முடியாது. அப்படி ஒரு வீரனுக்குக் காலமுள்ள வரை அவரைக் கொண்டாடித் தீர்ப்பதை விட ரசிகர்கள் என்ன கைமாறு செய்துவிட முடியும்? அதனால்தான் அவர் ஓய்வை எட்டி நிற்கும் நிலையிலுமே கூட 'தோனி...தோனி...' என்கிற அந்த ஆர்ப்பரிப்பு இன்னும் குறையாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. யாருக்குத் தெரியும் இந்த ஆர்ப்பரிப்புகள் கொடுக்கும் எனர்ஜியில் 'Definitely Not' என்பதை மீண்டும் மீண்டும் கூறி தோனி இன்னும் 5 சீசன்களுக்கு ஆடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

ஹேப்பி பர்த்டே தோனி!