Published:Updated:

Pravin Tambe: போராட்ட குணம், சோர்ந்துவிடாத உத்வேகம் - பிரவின் தாம்பேவின் வாழ்க்கை சொல்லும் பாடங்கள்!

Pravin Tambe

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று தன் 12-வது வயதில் கனவு கண்டிருக்கிறார் பிரவின் தாம்பே. அதற்காக தன் 41 வயது வரை அயராது உழைத்து சாதித்தும் காட்டியுள்ளார். இன்று அவரின் பிறந்தநாள்.

Published:Updated:

Pravin Tambe: போராட்ட குணம், சோர்ந்துவிடாத உத்வேகம் - பிரவின் தாம்பேவின் வாழ்க்கை சொல்லும் பாடங்கள்!

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று தன் 12-வது வயதில் கனவு கண்டிருக்கிறார் பிரவின் தாம்பே. அதற்காக தன் 41 வயது வரை அயராது உழைத்து சாதித்தும் காட்டியுள்ளார். இன்று அவரின் பிறந்தநாள்.

Pravin Tambe
நம் அனைவருடைய வாழ்க்கையிலும் 40-வது வயது ஒரு புதிய கோணத்தில் மீண்டும் தொடங்கிடும் என்று நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். புதிய விஷயங்களை முயற்சி செய்வதற்கு வயது ஒரு தடையே கிடையாது என்று பல சாதனையாளர்கள் நமக்கு உதாரணமாகச் சொல்லப்பட்டிருப்பார்கள். அப்படி தன் 40 வயதில் தன் கனவைத் துரத்தி சாதனையாளராக உருவெடுத்த பிரவின் தாம்பேவின் பிறந்தநாள் இன்று.
Pravin Tambe
Pravin Tambe

யார் இந்த பிரவீன் தாம்பே?

கனவு இல்லா வாழ்க்கை எவருக்கும் இருக்காது. அதே போல ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்று தன் 12-வது வயதில் கனவு கண்டிருக்கிறார் பிரவின் தாம்பே. அதற்காக தன் 41 வயது வரை அயராது உழைத்து சாதித்தும் காட்டியுள்ளார்.

அக்டோபர் 8-ம் தேதி, 1971-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் பிரவின் தாம்பே. தன் கிரிக்கெட் வாழ்க்கையை ஆல்-ரவுண்டராகத் தொடங்கிய இவரை வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தியது சுழற்பந்து வீச்சே. தன் கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு, பெற்றோரின் கட்டாயத்தால் வேலைக்குச் செல்லத் தொடங்கினாலும் எப்படியாவது ரஞ்சி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற வெறி மட்டும் அவருக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. தன் நண்பனின் தனியார் நிறுவனத்தின் கிரிக்கெட் அணியில் ஒரு மீடியம் பேஸ் பௌலராக இணைந்தார். அந்த அணிக்காகத் தொடர்ந்து விளையாடிய பிரவினுக்கு அவரின் மணிக்கட்டுதான் பலம் என்பதை அங்கிருந்த பயிற்சியாளர் அறிந்து அவரை 'லெக் ஸ்பின்' வீசும் படி அறிவுறுத்தினார்.

Pravin Tambe
Pravin Tambe

பலரைப் போலவும் வயது மற்றும் குடும்பச் சூழல்களால் திருமணம் செய்து கொண்டார் பிரவின். ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத சூழல்களால் தன் பணியையும் இழந்த நிலையில் தன் குடும்பத்திற்காகக் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்யத் தொடங்கினார். அத்துடன் பல அவமானங்களையும் சந்தித்தார். ஆனால் எக்காரணத்திற்கும் கிரிக்கெட்டை மட்டும் விட்டுவிடாத அவர் தன் கனவான ரஞ்சி தொடரில் நுழையத் தொடர்ந்து பாடுபடுகிறார். ஆனால், அதற்கு அவரின் வயது தடையாக வந்து அமைகிறது.

இதையெல்லாம் கண்டு பிரவின் தாம்பே கிரிக்கெட்டை வெறுக்கவில்லை. தன் நண்பனின் உதவியால் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டிடம் பேச அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே அவரின் கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை.

அப்போது டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை ஆலோசகராகப் பதவி வகிக்கவே அவரின் உதவியால் 2013-ம் ஆண்டில் பிரவின் தாம்பேவிற்கு ஐ.பி.எல்-யில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தாண்டு ஷேன் வாட்சன் தலைமையில் தன் முதல் போட்டியை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 2014-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதேபோல ரஞ்சி தொடரில் ஆடவேண்டும் என்ற தன் நீண்ட நாள் கனவையும் 2013-ம் ஆண்டு மும்பை அணிக்காகக் களமிறங்கியதன் மூலம் நனவாக்கினார் பிரவின் தாம்பே.

Pravin Tambe
Pravin Tambe

2016-ம் ஆண்டு சுரேஷ் ரெய்னா தலைமையில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியது, 2017-ம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடியது, அதற்கு அடுத்தாண்டு தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணிக்கு விளையாடியது என ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து பங்கேற்று வந்தவர் 2020-ம் ஆண்டு கரீபியன் பிரீமியர் லீகிலும் கால் பதித்தார். அத்தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார் பிரவின். இன்று தன் 51-வது வயதைத் தொட்டிருக்கும் அவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கான பயிற்சி குழுவில் பணிசெய்து வருகிறார்.

அவர் வாழ்வை மையப்படுத்திய `Kaun Pravin Tambe?' என்ற திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அந்தப் படத்தை தன் நண்பர்களுடன் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் பிரவின் தாம்பே. அவரின் போராட்ட குணம், வயது தடையில்லை என்று அவரின் வாழ்க்கை சொல்லும் மெசேஜ் போன்றவை நிச்சயம் அனைவருக்கும் ஒருவித உத்வேகத்தை அளிக்கும்.