Published:Updated:

பார்ட்னர்ஷிப்களின் மன்னன்... நாட்வெஸ்ட்டின் நாயகன்... ஆனால் 26 வயதிலேயே வாக் அவுட்... ஏன்? #HBDKAIF

முகமது கைஃப்
முகமது கைஃப்

இந்தியன் ஃபீல்டிங் அட்டாக்கின் சிங்கம், புலி, சிறுத்தை என எல்லாவுமாக இருந்தவர் முகமது கைஃப்.

ஜூலை 13, 2002. 'ஹோம் ஆஃப் கிரிக்கெட்' - லார்ட்ஸ் மைதானம். நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி. சச்சினின் விக்கெட் இழப்புக்குப்பின் இந்திய அணிக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல என்றிருந்த காலகட்டம். ஆனால், அது சாத்தியம் என்று இரண்டு இளைஞர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் புத்துணர்ச்சி பெற்ற நாள் அது. கங்குலி சட்டையைக் கழற்றி தலைக்கு மேல் சுழற்றி லார்ட்ஸில் கர்ஜித்த நாள் அது. ஹோம் ஆஃப் கிரிக்கெட்டில், அதுவும் பிரிட்டிஷ் மண்ணில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 325 ரன்களை சேஸ் செய்து இந்திய அணி முத்திரை பதித்த நாள் அது. அந்த நாளை, அந்தப் போட்டியை எந்த ஓர் இந்திய ரசிகனும் மறக்க வாய்ப்பேயில்லை. ஏன், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டும், அப்போதைய இங்கிலாந்து கேப்டன் நாசீர் ஹூசைனும்கூட அந்தப் போட்டியை மறக்கவில்லை.

கடந்த ஆண்டு அந்தப் போட்டி நடைபெற்ற அதே நாளில் அந்தப் போட்டியின் ஹலைட்ஸை தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி ட்விட்டரில் ஷேர் செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு.
இந்தப் போட்டி நடைபெற்று 17 வருடங்கள் கழித்து லார்ட்ஸ் மைதானத்தில் யுவராஜுடன் எடுத்த செல்ஃபியை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கைஃப். அந்தப் புகைப்படத்தை ரீ ட்வீட் செய்து, "காலை எழுந்தவுடன் பார்க்கக் கூடாத புகைப்படம் இது! இந்த 2 பேரை இப்போது நினைத்தாலும் பயமாக உள்ளது" என்று பதிவிட்டிருந்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசீர் ஹுசைன்.

இன்று ஐபிஎல் போட்டிகளை நகம் கடித்துப் பார்க்கும் சிறுவர்களுக்கு இந்தப் போட்டியைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 90-ஸ் கிட்ஸை நகம் கடித்துப் பார்க்க வைத்த போட்டி இது. இந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியை இந்தியா வெல்வதற்கு இரண்டு பேர் முக்கிய காரணம். ஒருவர் யுவராஜ் சிங். மற்றொருவர் அந்தப் போட்டியின் ஆட்டநாயகன் முகமது கைஃப். இந்தக் கட்டுரையின் நாயகனும் இவரே!

நான் பேட்டை பிடித்திருக்கும் உத்தி சரியானது அல்ல.
முகமது கைஃப்

முகமது கைஃப் என்றதும் 90-ஸ் கிட்ஸுக்கு நினைவுக்கு வருவது 3 விஷயங்கள். ஒன்று ஃபீல்டிங். இரண்டு கைஃபின் பேட்டிங் ஸ்டைல். மூன்றாவது நாட்வெஸ்ட் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு கைஃப் பெற்றுத் தந்த வெற்றி.

கைஃப்
கைஃப்
`சச்சின் அவுட்... டிவி ஆஃப்... நான் ஆடியதைப் பார்க்கவே இல்லை!' - முகமது கைஃபின் நாட்வெஸ்ட் தொடர் நாஸ்டால்ஜியா

இன்று, இந்தியன் ஃபீல்டிங் அட்டாக்கிற்கு ரெய்னா, ஜடேஜா, கோலி எனப் பல வடிவங்கள் உண்டு. ஆனால், இந்த வடிவங்களுக்கெல்லாம் விதை போட்டவர் கைஃப்தான். ஃபீல்டிங்கில் கைஃபின் Presence Of Mind க்கு நிகர் கைஃப் மட்டுமே. லாங்கிலிருந்து சரியாக ஸ்டம்புக்கு த்ரோ செய்வது, பாய்ந்து பந்தை கேட்ச் பிடிப்பது, ரன் அவுட் செய்வது, சரியான எண்டிற்கு பந்துகளை வீசுவதென 2000-களில் இருந்த இந்தியன் ஃபீல்டிங் அட்டாக்கின் சிங்கம், புலி, சிறுத்தை என எல்லாவுமாக கைஃப் இருந்தார். கைஃப் - யுவராஜ் இணை இந்திய ஃபீல்டிங்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.

ஃபீல்டிங்கில் கைஃப் செய்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றுள், 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் செய்த சம்பவம் தரமானது. முதல் விக்கெட்டே ரன் அவுட். ஸ்டம்ப்பின் சைடிலிருந்து டைவ் அடித்து பந்தைப் பிடித்து ஸ்டம்புக்கு எறிந்து நிக் நைட்டை பெவிலியனுக்கு அனுப்புவார் கைஃப். மாடர்ன் டே கிரிக்கெட்டில் ஸ்டம்புக்கு சைடிலிருந்து த்ரோ செய்து விக்கெட் எடுக்கும் வித்தையைப் பல பேர் செய்திருக்கலாம். ஆனால், 2003-ல் இது வேற லெவல் Effort. அதனால்தான் அவர் இந்தியன் ஜான்டி ரோட்ஸ்!

கைஃப் & சச்சின்
கைஃப் & சச்சின்

அடுத்தது கைஃபின் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைல். ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் அவரைப் போல ஒருமுறையேனும் பேட் செய்து பார்க்காத 90-ஸ் கிட்ஸ் இருப்பார்களா என்பது சந்தேகமே! பெளலர் ஓடி வரத் தொடங்கியதிலிருந்து பந்து பேட்டுக்கு வரும்வரை பேட்டை பிட்சில் தட்டிக்கொண்டே இருப்பார். ஒரு கை பேட் கிரிப்பின் மேல் பக்கமிருக்க மற்றொரு கை கிரிப்பின் அடிப்பகுதியில் இருக்கும். இதுதான் கைஃப் ஸ்டைல். ஒருமுறை இவரது பேட்டிங் ஸ்டைல் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, நான் பேட்டை பிடித்திருக்கும் உத்தி சரியானது அல்ல. சிறு வயதில் சரியான பயிற்சியாளர் இல்லாததால்தான் இந்த நிலை ஏற்பட்டது" என்று பதிலளித்தார் கைஃப். ஆனால், அந்த பேட்டிங் ஸ்டைல்தான் கைஃபின் அடையாளம்.

மூன்றாவது விஷயம். நாட்வெஸ்ட் இறுதிப் போட்டி. 326 ரன்கள் இலக்கு. இன்றைய காலகட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்வது அவ்வளவு கடினம் அல்ல. ஆனால், 2000-களில் அதுவும் இங்கிலாந்து மண்ணில் சேஸ் செய்வதென்பது கிட்டத்தட்ட முடியாத ஒன்று. கங்குலி மற்றும் ஷேவாக் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால், இமாலய இலக்கை எட்ட வேண்டுமென்றால் சச்சினும் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டுமென்பது அன்றைய கிரிக்கெட் ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்திய அணி 14.3 ஓவர்களுக்கு 106 ரன்கள் எடுத்திருந்தபோது கங்குலி 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து ஷேவாக், மோங்கியா, டிராவிட் என விக்கெட்டுகள் சரிய 14 ரன்களுக்கு சச்சினும் அவுட். அடுத்து ஜோடி சேர்ந்த கைஃப் - யுவராஜ் இணை இந்திய அணியை மட்டுமல்ல இந்திய ரசிகர்களின் நம்பிக்கையையும் சரிவிலிருந்து மீட்டனர். 63 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்டரி என 69 ரன்களில் ஆட்டமிழந்தார் யுவராஜ். அதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கடைசிவரை களத்தில் நின்று வெற்றியை இந்தியா பக்கம் திருப்பினார் கைஃப்.

Kaif Batting Style
Kaif Batting Style

75 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகள் பறக்கவிட்டு 87 ரன்கள் குவித்திருந்தார் கைஃப். 3 பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இங்கிலாந்து ரசிகர்கள் கைதட்டினர். கங்குலியோ இந்த வெற்றியை, லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள டிரெஸ்ஸிங் ரூம் பால்கனியிலிருந்து டி-ஷர்ட்டை கழற்றி சுற்றிக் கொண்டாடியதன் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக மாற்றினார். கைஃபிற்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் நிச்சயம் இது ஒரு நாஸ்டால்ஜியா மொமன்ட்!

நாட்வெஸ்ட் போட்டியின்போது எனது குடும்பத்தினர் சச்சின் ஆட்டமிழந்த பின்பு டிவியை ஆஃப் செய்துவிட்டு பக்கத்தில் இருந்த தியேட்டருக்குச் சென்றுவிட்டனர். அப்போது அங்கு ஷாரூக் கான் நடிப்பில் வெளியான `தேவ்தாஸ்' படம் ஓடிக்கொண்டிருந்தது. நான் விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்ததெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.
முகமது கைஃப்
Kaif In lords
Kaif In lords
வெற்றியைத் தன் அணிக்காகப் பெற்றுத் தந்த பின்பு, தனக்காக ஆர்ப்பரிக்கும் ரசிகர்களை நோக்கி கை அசைத்தபடி முன்னோக்கி நடந்துசெல்வார் கைஃப். அவரைப் பின்தொடர்ந்து லக்ஷ்மண், சச்சின், ஜாகீர் கான், கும்ப்ளே என அனைவரும் வெற்றிக் களிப்பில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் புகைப்படத்தை இன்று பார்த்தாலும் இந்திய ரசிகர்களுக்குள் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும்.

இந்தப் போட்டிக்குப் பின் கைஃப் பேட்டிங்கை ரசிக்கத் தொடங்கியவர்கள் அதிகம். ஆனால், இந்தப் போட்டியைவிட வேறு 2 போட்டிகளில் கைஃபின் பேட்டிங் இன்னும் பட்டாஸாக இருக்கும்.

kaif
kaif

"When Team Needs Him badly... He will be there for the team" என்ற வாசகம் தோனி ரசிகர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒன்று. அதாவது இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே சடசடவென விக்கெட்டுகள் விழுந்துவிட்ட பின் அணியைத் தன் தோளில் தாங்கிப் பிடிப்பார் தோனி. அந்த மாதிரியான பேட்டிங்கைத்தான் இரண்டு போட்டிகளிலும் ஆடினார் கைஃப்.

அதில் முதலாவது போட்டி ஜிம்பாப்வேவிற்கு எதிரான ஒருநாள் போட்டி. 87/5 எனத் தத்தளித்துக்கொண்டிருந்தது இந்திய அணி. ஜிம்பாப்வே போன்ற கத்துக் குட்டி அணியிடம் இந்தியா தோற்றுவிடக் கூடாது என வேண்டிக்கொண்டிருந்தார்கள் இந்திய ரசிகர்கள். நாம் மனதுக்குள் நினைத்ததை நிகழ்த்திக் காட்டிவிட்டது டிராவிட் - கைஃப் இணை. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 117 ரன்களைச் சேர்த்தனர். டிராவிட் 71 ரன்களில் அவுட்டான பின்னர் அதிரடி காட்டிய கைஃப் 112 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 111* ரன்களைக் குவித்தார். இறுதியில் இந்தியாவின் ஸ்கோர் 288/6. ஜிம்பாப்வே வெறும் 14 ரன்களில்தான் இந்தப் போட்டியில் தோற்றுப்போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைஃப்
கைஃப்

மற்றொரு போட்டி பாகிஸ்தானுக்கு எதிரானது. `ஜிம்பாப்வே அணியுடன்கூட தோற்கலாம் ஆனால், பாகிஸ்தானோடு மட்டும் தோற்றுவிடவே கூடாது', இதுதான் எப்போதுமே இந்திய ரசிகர்களின் மனநிலை. இந்தப் போட்டியிலும் டிராவிட்-கைஃப் இணைதான் இந்திய அணியை மீட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 293 ரன்கள் குவித்தது. இன்சமாம் உல்-ஹக் சதமடித்திருந்தார். 294 ரன்கள் குவித்தாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சச்சின் 7 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஷேவாக், லக்ஷ்மண், கங்குலி ஆகிய மூவரும் 20+ ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பினர். 94/4 என்ற நிலையில் டிராவிட்டுக்குச் சிறிது நேரம் உறுதுணையாக இருந்தார் யுவராஜ் சிங். 36 ரன்களுக்கு அவரும் அவுட்டாக, பின்னர் ஜோடி சேர்ந்தது டிராவிட் - கைஃப் இணை. இருவரும் சேர்ந்து 132 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தனர். டிராவிட் 76*(92) ரன்கள் குவித்திருக்க, 77 பந்துகளில் 71* ரன்களைச் சேர்த்திருந்தார் கைஃப். இந்த இரண்டு இன்னிங்ஸ் மூலம் இந்தியன் மிடில் ஆர்டருக்கு வலு சேர்த்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் கைஃப்.

கடைசி சர்வதேசப் போட்டி
முகமது கைஃப், தன் கடைசி சர்வதேசப் போட்டியை விளையாடியபோது அவருக்கு வயது 26.
mohammed kaif
mohammed kaif
Vikatan Infographics

அவரோடு இந்திய அணியில் ஆடிய சச்சின், ஷேவாக், யுவராஜ், தோனி, நெஹ்ரா, ஜாகீர்கான் உள்ளிட்ட வீரர்கள் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடினர். 2000 முதல் 2006-ம் ஆண்டு வரை 13 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 125 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார் கைஃப். 2000-ம் ஆண்டு நடைபெற்ற U19 உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக இருந்தவர் கைஃப். ஒரு போட்டியில்கூட தோல்வியடையாமல் இந்தியா U19 கோப்பையைக் கைப்பற்றியது. அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவரின் சர்வதேச கிரிக்கெட் பயணம் வெறும் ஆறே ஆண்டுகளில் முடிந்துவிட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும்? 2005 முதல் 2007 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல்தான் காரணம்.

தான் ஏன் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறவில்லை என்று கைஃப் ஒரு பேட்டியில் மனம் திறந்திருந்தார். "கேப்டன் கங்குலியும் பயிற்சியாளர் ஜான் ரைட்டும் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை கிரேக் சேப்பலும் அப்போதைய அணித் தேர்வாளர் திலீப் வெங்சர்க்காரும் என் மீது வைக்கவில்லை. இது எனக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இப்போது அந்த நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, ரன்கள் சேர்ப்பதில் காட்டிய கவனத்தைப்போல அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவதிலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதிகம் பேசாமல் இருக்கும் சுபாவம்தான் எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது" என்றார்.

கங்குலி & சேப்பல்
கங்குலி & சேப்பல்
YouTube
Vikatan

மேலும், "கிரேக் சேப்பல் என் ஃபீல்டிங் திறமையைப் பற்றியே கேள்வி எழுப்பினார். அது எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. அடுத்த போட்டியிலேயே நான் ஒரு கேட்ச்சை தவறவிட்டேன்" என்றும் கைஃப் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

வீரர்களின் பர்ஃபாமன்ஸில் கவனத்தைக் காட்டாமல், ஒரு வீரரைப் பற்றி மற்ற வீரர் புறங்கூறும் சூழ்நிலையை உருவாக்கினார் சேப்பல்!
முகமது கைஃப்
Kaif with his team mates
Kaif with his team mates

எது எப்படியோ அதிகம் பேசாத சுபாவம் கொண்ட கைஃப், இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி சேனலில் முன்னணி வர்ணனையாளராக இருக்கிறார். தன் பேச்சின் மூலம் இந்தி ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார். கைஃப் சர்வதேச கிரிக்கெட்டில் 6 ஆண்டுகள் மட்டுமே வலம் வந்திருந்தாலும், கிரிக்கெட்டராக அவர் பேசப்படுவதற்கு நாட்வெஸ்ட் ஃபைனல்ஸ் ஒன்றே போதும்!

90-ஸ் கிட்ஸின் நாஸ்டாலஜி கிரிக்கெட்டர் முகமது கைஃப்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
அடுத்த கட்டுரைக்கு