Published:Updated:

கிரிக்கெட்டில் இப்படியெல்லாம் ரூல்ஸா... பிக்பேஷ் லீகில் ஆஸ்திரேலியாவின் ஏடாகூட மாற்றங்கள்?! #BBL

பிக்பேஷ் லீக் | BBL
பிக்பேஷ் லீக் | BBL ( twitter.com/cricketcomau )

Power Surge, X-Factor Player, Bash Boost எனக் கூறப்படும் இந்த மூன்று புதிய விதிமுறைகள்தான் சர்ச்சையாகியிருக்கிறது.

கிரிக்கெட் உலகின் சமீபத்திய ஹாட் டாபிக் பிக்பேஷ் லீக்தான். ஆண்களுக்கான பிக்பேஷ் லீகின் 10-வது சீசன் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இப்போது, பிக்பேஷ் லீகை இன்னும் விறுவிறுப்பாக்குகிறோம் என்ற பெயரில் 3 புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. Power Surge, X-Factor Player, Bash Boost எனக்கூறப்படும் இந்த மூன்று புதிய விதிமுறைகள்தான் சர்ச்சையாகியிருக்கிறது. என்ன விவகாரம் என்று பார்ப்பதற்கு முன் இந்த மூன்று விதிமுறைகளும் என்ன என்பதை பார்த்துவிடுவோம்.
பிக்பேஷ் லீக் | BBL
பிக்பேஷ் லீக் | BBL
twitter.com/BBL

Power Surge:

கிரிக்கெட்டில் பவர்ப்ளே எல்லாருக்கும் தெரியும். டி20-க்களில் முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். இந்த பவர்ப்ளேயில் 2 ஃபீல்டர்கள் மட்டுமே 30 யார்டு வட்டத்திற்கு வெளியே நிற்பார்கள். பிக்பேஷ் லீகிலும் பவர்ப்ளே இதுவரை இப்படியே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இந்த 'Power surge' என்ற புதிய விதிமுறை மூலம் பேட்டிங் செய்யும் அணி கடைசி 10 ஓவரில் எப்போது வேண்டுமானாலும் 2 ஓவர்களை பவர்ப்ளேயாக எடுத்துக்கொள்ளலாம். அப்படியென்றால் பேட்டிங் செய்யும் அணிக்கும் 8 ஓவர் பவர்ப்ளே கிடைக்குமா? இல்லை. முதலில் 6 ஓவராக வழங்கப்படடு வந்த பவர்ப்ளே இப்போது நான்கு ஓவராக குறைக்கப்பட்டுவிட்டது. மேலே குறைக்கப்பட்ட 2 ஓவரை பிற்பாதியில் 10 ஓவருக்கு மேல் பேட்டிங் செய்யும் அணி எடுத்துக்கொள்ளலாம்.

X-Factor Player:

ஐசிசியின் புதிய விதிமுறைப்படி ஒரு பேட்ஸ்மேனோ பௌலரோ காயமடைந்துவிட்டால் அவருக்குப் பதிலாக அதே ரோலை செய்யும் வேறு ஒரு வீரரை களத்தில் இறக்கிக்கொள்ள முடியும். இந்த X-Factor player விதிமுறையும் இதுபோன்றதுதான். ஆனால், காயம் காரணமாக மட்டும் ஒரு வீரருக்குப் பதிலாக இல்லாமல், ஓர் அணி விரும்பினாலே ஒரு வீரருக்கு பதிலாக இன்னொரு மாற்று வீரரை பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எந்த வீரரை வெளியேற்றப் போகிறீர்களோ அந்த வீரர் பேட்ஸ்மேனாக இருந்தால் ஆட்டத்தில் அதுவரை பேட்டிங் ஆடியிருக்கக்கூடாது. பௌலராக இருந்தால் ஒரு ஓவர் மட்டுமே வீசியிருக்க வேண்டும். அப்படியிருந்தால், அந்த வீரரை வெளியே அழைத்துவிட்டு பென்ச்சில் உட்கார்ந்திருக்கும் தேவைப்படும் வேறு ஒரு வீரரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிக்பேஷ் லீக் | BBL
பிக்பேஷ் லீக் | BBL
twitter.com/cricketcomau

Bash Boost:

மேட்ச்சின் இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்யும் அணி 10 ஓவரை நிறைவு செய்தவுடன் இந்த Bash boost பயன்படுத்தப்படும். இதன்படி, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதாவது ஸ்கோரை சேஸ் செய்யும் அணி 10 ஓவர்கள் முடிவில் முதலில் பேட் செய்த அணி 10 ஓவர்களில் எடுத்த ஸ்கோரை விட அதிகமாக எடுத்துவிட்டால் அந்த அணிக்கு 1 புள்ளி வழங்கப்பட்டுவிடும். ஒருவேளை சேஸ் செய்யும் அணி 10 ஓவர் முடிவில் குறைவான ஸ்கோரை எடுத்திருந்தால் பந்துவீசும் அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டுவிடும். ஒரு அணி போட்டியையும் வெற்றி பெற்று இந்த Bash boost ஐயும் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு போட்டிக்கான இரண்டு புள்ளிகளோடு ஒரு புள்ளி சேர்த்து மூன்று புள்ளிகள் வழங்கப்பட்டுவிடும். ஒரு வேளை போட்டியில் தோற்றாலும் Bash Boost ஐ வென்றிருந்தால் ஒரு புள்ளி உறுதியாக கிடைத்துவிடும்.

புதிதாக இந்த சீசனிலிருந்து அறிமுகமாகவிருக்கும் இந்த விதிமுறைகள்தான் இப்போது விவாதத்தை கிளப்பியுள்ளன. ஏற்கெனவே பவர்ப்ளே தொடங்கி ஃப்ரீஹிட் வரை பௌலர்களுக்கு எதிராக அத்தனை விதிமுறைகளும் இருக்கையில் ஆஸி கிரிக்கெட் போர்டு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த விதிமுறைகள் பௌலர்களுக்கு இன்னுமே பின்னடைவாகத்தான் இருக்கும். மேலும், கிரிக்கெட்டை மொத்தமாக ஒரு எண்டெர்டெயின்மமெய்ன்டாக மட்டுமே அணுகும் இந்த போக்கினால் கிரிக்கெட்டின் இயல்பும் மொத்தமாக சீர்குலைந்துவிடும் என்கிற அச்சம் இருக்கிறது.

பிக்பேஷ் லீக் | BBL
பிக்பேஷ் லீக் | BBL
twitter.com/HeatBBL

கிரிக்கெட்டின் ஆன்மாவை இந்த விதிமுறைகள் எப்படி சீர்குலைக்கின்றன என்பதற்கு சில உதாரணங்களை குறிப்பிடலாம். அந்த 'Power Surge'ஐ சேஸ் செய்யும் அணி கடைசி 2 ஓவர்களில் பயன்படுத்தினால் அது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும்? 19-20 ஓவர்களில் வெறும் 2 ஃபீல்டர்கள் மட்டும் வட்டத்திற்கு வெளியே நின்றால் 50-60 ரன்களை கூட அசால்ட்டாக பேட்ஸ்மேன்களால் அடித்துவிட முடியும். குறைந்தபட்சமாக 1-4 என Default power play கொடுப்பது போல 10-12 என ஒரு குறிப்பிட்ட ஓவர்களையாவது Power Surge ஆக கொடுத்திருக்கலாம். அப்படியில்லாமல் மொத்தமாக எல்லாவற்றையும் தூக்கி பேட்ஸ்மேனின் கையில் கொடுத்தது போல் இருக்கிறது இந்த விதிமுறை.

அடுத்து அந்த X-Factor player, இப்போது உங்கள் அணி ஒன்றிரண்டு விக்கெட்டை மட்டும் இழந்து நல்ல ஸ்கோரை வைத்திருக்கிறது எனில் கீழே பேட் செய்யாமல் இருக்கும் ஒரு பேட்ஸ்மேனை வெளியேற்றிவிட்டு நீங்கள் ஒரு பௌலரை அணிக்குள் சேர்த்துக்கொள்ள முடியும். அதேமாதிரி, அடுத்தடுத்து விக்கெட்டை கொடுத்து ஒரு அணி தடுமாறி கொண்டிருக்கிறது எனில் உடனே ஒரு பௌலரை வெளியே எடுத்துவிட்டு எக்ஸ்ட்ராவாக ஒரு பேட்ஸ்மேனை உள்ளே சேர்த்துக்கொள்ள முடியும். என்னய்யா இது கள்ள ஆட்டமா இருக்கு? இப்படி ஒரு ரூல்ஸை நம்மூரில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் கூட ஒத்துக்கொள்ளமாட்டார்களே என்கிற குரல் கேட்கிறது.

பிக்பேஷ் லீக் | BBL
பிக்பேஷ் லீக் | BBL
twitter.com/HeatBBL

Bash Boost தான் எல்லாவற்றையும் விட கொடூரமானது. முதல் 10 ஓவருக்குள் எதிரணி 10 ஓவர்களில் அடித்த ஸ்கோரை விட அதிகமாக அடித்துவிட்டால் ஒரு பாயின்ட் நிச்சயம். கொஞ்சம் நஞ்சம் எஞ்சியிருக்கும் கிரிக்கெட்டின் அழகியலை ஒட்டுமொத்தமாக இந்த விதிமுறை சூரையாடிவிடும். தோல்வியிலிருந்து போராடி மீண்டு வந்து வெல்கிற கதையெல்லாம் இனி குறைவாகவே இருக்கும். ஐபிஎல்-ல் திவேதியா, இஷான் கிஷான் ஆடிய ஆட்டங்கள் மாதிரியானதையெல்லாம் பிக்பேஷில் பார்க்கவே முடியாது. ஒரு அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட் என்றாலும் அடுத்ததாக வருகின்ற பேட்ஸ்மேன் Bash boost ஐ மனதில் வைத்து அதிரடியாகத்தான் ஆடியாக வேண்டும். வெறுமனே சிக்ஸர் அடிப்பது மட்டும்தான் கிரிக்கெட்டா? ஒருவேளை நின்று நிதானமாக பார்ட்னர்ஷிப் போட்டு வென்றாலும் அந்த அணிக்கு 2 புள்ளியும் தோற்ற அணிக்கு ஒரு புள்ளியும் கிடைத்துவிடும். முழுமையான வெற்றி என்று எதையும் கொண்டாட முடியாது.

பிக்பேஷ் லீகை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இன்னும் இந்த லீகை பிரபலமாக்க வேண்டும் என்பதுதான் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் திட்டம். ஆனால், இந்த விதிமுறைகள் வெளியானதிலிருந்து 90% ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தையே வெளிப்படுத்தியிருக்கின்றனர். முன்னாள் வீரர்கள் பலருமே 'Ridiculous' என இந்த விதிமுறைகளை விமர்சித்து வருகின்றனர்.

டி20 ஃபார்மேட்டின் வெற்றியே அதன் எளிமையில்தான் இருக்கிறது. பிக்பேஷ் லீகில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகள் குழப்பத்தையே உண்டாக்குகின்றன.

"வளர்ச்சிக்காக இந்த மாதிரியான வித்தைகளை அறிமுகப்படுத்த தொடங்கினால், தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நீங்கள் புதிதாக விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும். அது ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை உண்டாக்கும்."
ஹர்ஷா போக்ளே
பிக்பேஷ் லீக் | BBL
பிக்பேஷ் லீக் | BBL
twitter.com/BBL

ஸ்டம்ப் லைட்டில் தொடங்கி இந்த லீக் போட்டியை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு ஆஸி கிரிக்கெட் போர்டு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இந்த பிக்பேஷ் லீகில் என்டெர்டெய்ன்மெண்ட்டுக்காக திணிக்கப்படும் பல விஷயங்களில் அங்கே விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கே விருப்பம் இருந்ததில்லை. கடந்த வருடம் பிக்பேஷ் லீகிலிருந்து ஓய்வு பெற்ற ஷேன் வாட்சன் வெளிப்படையாகவே இது குறித்து, "பிக்பேஷ் லீகில் தரமான கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட பொழுதுபோக்குக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. BBL அது தொடங்கப்பட்ட வழியிலிருந்து தவறிவிட்டது" எனப் பேசியிருந்தார்.

பிக்பேஷ் லீகில் இப்போது DRS உபயோகிக்கப்படுவதில்லை. வெளிநாட்டு வீரர்கள் 2 பேர்தான் ஆட முடியும் என்றிருந்தது இப்போதுதான் 3 வெளிநாட்டு வீரர்கள் என மாறியுள்ளது. முழுமையாக விடுமுறை காலங்களில் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. போட்டி அட்டவணையில் அத்தனை குழப்பங்கள் இருக்கின்றன. இந்தியா - ஆஸி சீரிஸ் நடைபெறும் அதே நேரத்தில் இந்தத் தொடரும் நடைபெறுகிறது என களைவதற்கும் புதுப்பிப்பதற்கும் ஆயிரம் பிரச்னைகள் இருந்தும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு தேவையின்றி ஆட்டோ கண்ணாடியைத் திருப்பியிருக்கிறது.

இன்னும் சுவாரஸ்யம் ஆக்குகிறேன் என்ற பெயரில் 'ஒன் பிட்ச் ஒன் ஹேண்ட் அவுட்' என்கிற ரேஞ்சுக்கு இறங்கிவிடாமல் கிரிக்கெட்டின் அடிப்படைகளை கொஞ்சமேனும் மதிக்கும் வகையில் லீகை நடத்துங்கள் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு