Published:Updated:

`15 வீரர்கள்; பவர் ளேயர்!' - ஐபிஎல்லை மெருகூட்ட பிசிசிஐயின் புதிய யோசனை

2020 ஐபிஎல் போட்டியில் பவர் ப்ளேயர் திட்டத்தை அறிமுகப்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தோனி
தோனி

ஐபிஎல் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக பவர் ப்ளேயர் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ. முதலில் இதனை சோதனை முயற்சியாக உள்ளூர் தொடரான முஸ்தாக் அலி டிராபி போட்டிகளில் அறிமுகப்படுத்தவுள்ளனர். காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் கிரிக்கெட் விதிமுறைகள் சிலவற்றை ஐபிஎல் போட்டிகளில் தளர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டி-20 கிரிக்கெட் தற்போது பேட்ஸ்மேன்களின் கிரிக்கெட்டாக மாறி வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 200 ரன்கள் எல்லாம் அசால்டாக அடிக்கிறார்கள். இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் பணக்கொழிக்கும் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. பிசிசிஐ கொண்டுவரவுள்ள இந்த முறையால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஐபிஎல்
ஐபிஎல்

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆடும் லெவனை அறிவிக்க வேண்டும். அதாவது அந்தப்போட்டியில் விளையாடவுள்ள 11பேர் கொண்ட பட்டியலை வெளியிட வேண்டும். அதுபோக அணியில் சப்ஸ்யூட் வீரர்கள் இருப்பார்கள். போட்டிகளின் போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சப்ஸ்ட்யூட் களமிறங்குவார். அவர் ஃபீல்டிங் மட்டுமே செய்ய முடியுமே தவிர பேட்டிங், பவுலிங், விக்கெட் கீப்பிங் போன்ற பணிகளில் ஈடுபட முடியாது. இதுதான் காலங்காலமாக இருக்கும் விதிமுறை இதில் தான் தற்போது சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது பிசிசிஐ.

அப்படி என்ன மாற்றம் யார் இந்த பவர் ப்ளேயர் அவருக்கு என்ன தான் பாஸ் ரோல் எனக் கேட்கிறீர்களா?. ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணி ஆடும் வெலன் 11 பேர் கொண்ட பட்டியலுக்கு பதிலாக 15 பேர் கொண்ட அணியை விவரத்தை தெரிவித்தால் போதும். மற்ற குழு விளையாட்டு போட்டிகளில் இருக்கும் மாற்றும் வீரரை களமிறக்கும் திட்டம்தான் இது. அதாவது சூழலுக்கு ஏற்ப வீரர்களை களத்துக்குள் கொண்டு வரும் திட்டம். உங்களுக்கு புரியும்படியே சொல்கிறேன்.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் வங்கதேசம் அணி நேற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு உதாரணத்துக்கு இந்தப்போட்டியை எடுத்துக்கொள்வோம். இந்தப்போட்டியில் பவர் ப்ளேயர் முறை இருந்தால் எப்படி இருந்திருக்கும் என சொல்கிறேன். ஆடும் லெவனில் பும்ரா, தோனி இல்லை ஆனால் அவர்கள் சப்ஸ்ட்யூடாக உட்கார்ந்திருந்தார்கள் என வைத்துக்கொள்வோம்.

பும்ரா
பும்ரா

நேற்றைய சூழலில் 19 ஓவரை கலீல் அஹமது வீச வரும்போது அந்த அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய ரசிகர்கள் பும்ராவை மிஸ் செய்தார். பும்ரா டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட், அவர் அந்த ஓவரை வீசியிருந்தால் கண்டிப்பாக அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார். கடைசி ஓவர்களில் நெருக்கடி ஏற்பட்டிருக்கும். பவர் ப்ளேயர் முறை இருந்திருந்தால் நேற்று பும்ராவை 19 ஓவர் மட்டும் வீச உள்ளே அழைத்திருக்கலாம். பவர் ப்ளேயராக உள்ளே களமிறங்கி அசத்தியிருப்பார். பன்ட் சில ரிவ்யூக்களை கோட்டைவிட்டார். அப்போது தோனியை கூட உடனே உள்ளே அழைத்திருக்கலாம். தொடர்ந்து விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ள செய்திருக்கலாம். இது தான் பவர் ப்ளேயர் ரோல். இதன்மூலம் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியும் என பிசிசிஐ நம்புகிறது. மும்பையில் நாளை ஐபிஎல் நிர்வாகக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், பவர் பிளேயர் விதிமுறை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தால், அடுத்த ஐபிஎல்-லில் பவர் பிளேயரை எதிர்பார்க்கலாம்.