Published:Updated:

கொரோனாவால் ஐபிஎல் போட்டிகள் தடை செய்யப்பட்டால் யாருக்கெல்லாம் வருமான இழப்பு! #corona #IPL

ஐ.பி.எல் கோப்பை
ஐ.பி.எல் கோப்பை ( vikatan )

ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அணிகளுக்கான உரிமம், வீரர்களுக்கான ஏலத்தொகை, விளம்பரதாரர்கள், டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் மற்றும் ஒளிபரப்பு உரிமம் ஆகிய வகைகளில் பி.சி.சி.ஐ-க்கு வருமானம் வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் பந்து, ஸ்டம்பு என ஒவ்வொன்றுக்கும் விளம்பர மதிப்பு உண்டு.

கோடைக்காலம் வந்தாலே ஐபிஎல் மீதான ஆர்வம் அனைவருக்கும் தொற்றிவிடும். ஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது. மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தற்போது ஏப்ரல் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை, பொழுதுபோக்குக்கான கிரிக்கெட் என்பதையும் தாண்டி நீண்டகால முதலீட்டு வணிகமாக உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சம்பந்தப்பட்ட சிறு, பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தப் போட்டி உதவிவருகிறது.

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் மூலம் சுமார் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வணிகம் நடந்தது. இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியிலும் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது.

ஐ.பி.எல்
ஐ.பி.எல்
vikatan

நடப்பு 2020-ம் ஆண்டு நிறைவடையும்போது ஐபிஎல் தொடரின் பிராண்ட் மதிப்பு 400 பில்லியன் டாலர்களைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் அணிகளுக்கான மதிப்பைப் பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் பிராண்ட் மதிப்பு அதிகபட்சமாக தலா 72 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளன. அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 69 மில்லியன் டாலர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 51 மில்லியன் டாலர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 45 மில்லியன் டாலர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 40 மில்லியன் டாலர், கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு 32 மில்லியன் டாலர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 25 மில்லியன் டாலர் பிராண்ட் மதிப்பு உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அணிகளுக்கான உரிமம், வீரர்களுக்கான ஏலத்தொகை, விளம்பரதாரர்கள், டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் மற்றும் ஒளிபரப்பு உரிமம் உள்ளிட்ட வகைகளில் பி.சி.சி.ஐ-க்கு வருமானம் வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பந்து, ஸ்டம்பு, பேட், ஜெர்ஸி என ஒவ்வொன்றுக்கும் விளம்பர மதிப்பு உண்டு. இதன்மூலமாக ஐபிஎல் அணிகளுக்கு வருமானம் வருகிறது. குறிப்பாக, வீரர்களின் ஜெர்ஸி, ஸ்லீவ்களில் வரும் விளம்பரங்களுக்கு பணமதிப்பு அதிகம்.

அடுத்ததாக, ஐபிஎல் கிரிக்கெட்டை நேரடியாக ரசிக்கவரும் பார்வையாளர்களின் டிக்கெட்டுகள் மூலமாகத் திரட்டப்படக்கூடிய தொகை மிகப்பெரிய வருமானமாக இருக்கும், 2009-ம் ஆண்டு மட்டும் பொதுத்தேர்தல் காரணமாக தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் நடந்ததால் இந்த வருமானம் பாதிப்புக்குள்ளானது.

ஐ.பி.எல் ஏலம்
ஐ.பி.எல் ஏலம்

ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில், ஒவ்வோர் அணியும் தலா 85 கோடி ரூபாய் செலவிடலாம். இந்த வகையில் பி.சி.சி.ஐ-க்கு 680 கோடி ரூபாய் வருமானம் வரும். ஒவ்வோர் அணிக்கும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பது, தக்கவைப்பது போன்றவற்றில் ஒரு பிசினஸ் மாடல் இருக்கும். இதன்படியே ஒவ்வோர் ஆண்டும் அணிகளுக்கான ஏலத்தில் பயன்படுத்தும் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஐபிஎல் அணிகள், அவற்றுக்கான பிராண்ட் மதிப்பை உருவாக்குவதன்மூலம் விளம்பரதாரர்களைப் பெருமளவு ஈர்க்க முடியும். விளம்பரங்களுக்கான மதிப்பையும் அதிகரிக்க முடியும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் முதலிடத்தில் இருக்கின்றன. பிராண்ட் மதிப்பை அதிக அளவில் வைத்துக்கொள்ள வேண்டுமானால் வீரர்கள் தேர்வில் கவனத்தோடு இருப்பது அவசியமாகும். இந்த விஷயத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுவருகிறது.

2018-2022 வரையிலான 5 ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் சுமார் 16,347.5 கோடி ரூபாய்க்குப் பெற்றிருந்தது. அதே 5 ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்ஸர் உரிமத்தை VIVO நிறுவனம் சுமார் 2,199 கோடி ரூபாய்க்குப் பெற்றிருந்தது. பி.சி.சி.ஐ அமைப்பின் central revenue pool வருமானம் ஆண்டுக்கு சுமார் 3,709 கோடி ரூபாயாக இருக்கும்.

ஐ.பி.எல் கிரிக்கெட்
ஐ.பி.எல் கிரிக்கெட்
vikatan

ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு செய்யும் சேனலுக்கு, விளம்பரங்கள் மற்றும் விநியோக உரிமைகள் மூலமாக பெரிய அளவில் வருமானம் திரட்டப்படும். ஒவ்வொரு ஐபிஎல் அணிகளுக்கும் central revenue pool மூலமாக ஆண்டுதோறும் தோராயமாக 250 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. Loca Pool மூலமாக, ஐபிஎல் அணிகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 30 கோடி ரூபாய் வருமானம் வரும். கிரிக்கெட் வீரர்களுக்கு ஏலம் மூலமாக 680 கோடி ரூபாய் வருமானம் வரும். எட்டு ஐபிஎல் அணிகளுக்குரிய மாநில கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் மொத்தம் 56 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் ஏதோவொரு வகையில் பங்களிப்பு தரும் ஒவ்வொரு நிறுவனமும் இதன்மூலம் வருவாய் ஈட்டும்.

கொரோனா: தமிழத்தில் செயல்படும் ஆய்வகங்கள் போதுமா? மருத்துவர்கள் கருத்தும் அரசுத் தரப்பு பதிலும்

ஐபிஎல் போட்டிகளை நடத்திக்கொடுப்பதற்காக ஐ.எம்.ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தோராயமாக ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதோடு இணைந்து இன்னொரு நிறுவனத்துக்கும் 25 கோடி ரூபாய் என்ற வகையில் மொத்தம் சுமார் 50 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்துக்கு உரிய கிரிக்கெட் அசோசியேசன்கள், பி.சி.சி.ஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு தலா 50 லட்சம் ரூபாயை ஒவ்வொரு போட்டிக்கும் வழங்க வேண்டும். போட்டியின்போது பங்கெடுக்கும் அதிகாரிகள், பணியாளர்கள் என அனைவருக்கும் பி.சி.சி.ஐ அமைப்பு ஊதியம் வழங்கும். வீரர்களின் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு அந்தந்த அணி நிர்வாகமே பொறுப்பெடுத்துக்கொள்ளும். இதற்கான செலவுகள், அணிக்கு அணி மாறுபடும்.

ஐபிஎல் வெற்றிக்கோப்பைக்கான பரிசுத்தொகை 20 கோடி ரூபாயிலிருந்து பாதியாகக் குறைக்கப்படுகிறது!

கொரோனா வைரஸ் தாக்கம் விரைவில் குறையும்பட்சத்தில், ஐபிஎல் போட்டிகள் சற்று காலம்தாழ்த்தி நடத்தப்படலாம். அப்போது கொரோனா தொடர்பான செய்திகளே பார்வையாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறும் என்பதால் டைட்டில் ஸ்பான்ஸர் மற்றும் ஒளிபரப்பு உரிமம் பெற்ற தொலைக்காட்சிக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும். அதன்படி தோராயமாக 3,300 கோடி ரூபாய் முதலீட்டுக்கு எதிர்பார்க்கப்படும் வருவாயை ஈட்டுவது கடினம். விளம்பரதாரர்களும் விநியோகஸ்தர்களும் அதிக விலை கொடுக்கத் தயங்குவார்கள். மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்கள் கூட்டமும் குறையக்கூடும்.

கொரோனா பாதிப்பு மேலும் சில காலம் தொடரும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஜூன் மாதவாக்கில் நடத்தப்படலாம். அப்படி நடத்தப்படும்போது போட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் அனைத்துவகையான வருமானமும் பாதிக்கப்படும். அதைச்சரிக்கட்ட இப்போதே முன்னெச்சரிக்கையாக செலவுக்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஐபிஎல் வெற்றிக்கோப்பைக்கான பரிசுத்தொகை 20 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாகக் குறைக்கப்படுகிறது. ஐபிஎல் தொடர்பான விமானப்பயணங்களில் பலருக்கும் பிசினஸ் கிளாஸ் பயணங்களை எகானமி கிளாஸாக மாற்றவுள்ளார்கள்.

ஐ.பி.எல் ரசிகர்கள்
ஐ.பி.எல் ரசிகர்கள்
vikatan

இறுதியாக, ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் சூழல் வந்தால் மொத்த வணிகமும் பெரிய பாதிப்பைச் சந்திக்கக்கூடும். அப்படி பாதிப்பு ஏற்பட்டால், டைட்டில் ஸ்பான்ஸரான VIVO மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்களுக்கு எவ்வித வருமானமும் இருக்காது என்பதால் அவர்கள் பி.சி.சி.ஐ-க்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்தத்தேவைப்படாது. ஆனால், அதை நம்பி போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்துமே செயல்படுத்தமுடியாததால் அனைத்து நிறுவனங்களும் மாற்று வழியைப் பார்க்கவேண்டியிருக்கும்,

அடுத்த கட்டுரைக்கு