Published:Updated:

`காலி மைதானம்; வழிகாட்டுதல் நெறிமுறைகள்!'- ஐபிஎல் விவகாரத்தில் பாசிட்டிவ் பகிர்ந்த கங்குலி

பிசிசிஐ தலைவர் கங்குலி
பிசிசிஐ தலைவர் கங்குலி

ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலால் உலக அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பொது முடக்கம், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குத் தடை எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஒலிம்பிக் தொடங்கி உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளும் இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர்பாக அக்டோபரில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி அனுப்பியிருக்கும் கடிதத்தில், ``ரசிகர்கள் இல்லாமல், காலி மைதானத்தில் நடத்துவது உட்பட இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ பல்வேறுவிதமான வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு செய்துவருகிறது. ரசிகர்கள், அணி நிர்வாகங்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் ஆர்வமாக இருக்கிறார்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

கம்பேக்னா இப்படி இருக்கணும்... திரும்ப வந்துட்டோம் என சிஎஸ்கே தெறிக்கவிட்ட நாள் இது! #IPL2018

மேலும், ``சமீபத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலரும் நடப்பாண்டு தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக விரைவில் பிசிசிஐ நல்ல முடிவெடுக்கும்’’ என்றும் கங்குலி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்காக பிசிசிஐ காத்திருப்பதாகத் தெரிகிறது. ஐபிஎல் மட்டுமல்லாது உள்ளூர் கிரிக்கெட் தொடர்களையும் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து நடந்த பிசிசிஐ விரும்புகிறது.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

அதேபோல், போட்டிகள் நடத்தப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் ஓரிரு வாரங்களில் இதுகுறித்து தெளிவான முடிவுக்கு பிசிசிஐ வரும் என்கிறார்கள். அதேபோல், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் கங்குலி சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு