Published:Updated:

`2000-த்துக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள்; ஆனாலும்...!' - இந்திய அணியில் ரவிசாஸ்திரி 2.0?

தினேஷ் ராமையா

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்புக்கு 2,000-த்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ரவி சாஸ்திரி, கோலி
ரவி சாஸ்திரி, கோலி ( Twitter )

உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங், பௌலிங் பயிற்சியாளர்கள் எனப் பயிற்சியாளர்கள் குழுவின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து, பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்தநிலையில், அதற்காக 2,000-த்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால், இதில் கிரிக்கெட் உலகின் பிரபலமானவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரவி சாஸ்திரி உள்ளிட்ட தற்போதைய குழுவே மீண்டும் பதவியேற்கும் என்று கூறப்படுகிறது.

பிசிசிஐ
பிசிசிஐ

புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும்வரை இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோரின் பதவிக்காலம் 45 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் உள்ளிட்டோரும் தங்களது பதவிகளுக்காக மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்கள். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பியதாக எழுந்த விமர்சனத்தால் சஞ்சய் பாங்கருக்கு மட்டும் சிக்கல் ஏற்படலாம் என்று ஒரு தகவலும் பரவி வருகிறது.

அதேபோல், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளரும் நியூசிலாந்தைச் சேர்ந்தவருமான மைக் ஹெசன் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் போன்ற இந்தியாவைச் சேர்ந்தவர்களும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ரவிசாஸ்திரி மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை வலுவாக முன்வைத்திருக்கிறார் ராபின்சிங்.

இதுகுறித்து பேசிய அவர், ``இந்திய அணி, தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கீழ் அடுத்தடுத்த இரண்டு உலகக் கோப்பை தொடர்கள் மற்றும் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியிருக்கிறது. எனவே, நாம் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குத் தயாராகும் நிலையில், ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது அணிக்கு நன்மை பயக்கும்'' என்றார்.

கபில்தேவ், விராட் கோலியுடன் ரவி சாஸ்திரி
கபில்தேவ், விராட் கோலியுடன் ரவி சாஸ்திரி
Twitter

முன்னதாக, இலங்கை அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்த்தனா, இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு வர ஆர்வம் காட்டியதாகத் தகவல் வெளியானது. ஆனால், உரிய நேரத்தில் அவர் விண்ணப்பத்தை அனுப்பவில்லை என்றும் கூறப்படுகிறது. பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள், குறிப்பிட்ட நபர்கள் தங்கள் மேலாளர் அல்லது பிரதிநிதிகள் மூலம் பிசிசிஐக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதனால், முக்கியமான நபர்கள் கொண்ட இறுதிப் பட்டியலைத் தயாரிக்க பிசிசிஐ-க்குக் கூடுதலாக காலஅவகாசம் தேவைப்படும் என்கிறார்கள்.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களிடம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கபில்தேவ் தலைமையிலான 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC) நேர்காணல் நடத்தும். இந்த நேர்காணல் வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது. கபில் தேவ் தவிர, அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

விராட் கோலி, ரவி சாஸ்திரி, ரோஹித் ஷர்மா
விராட் கோலி, ரவி சாஸ்திரி, ரோஹித் ஷர்மா
Twitter

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் யாரும் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாதநிலையில், ரவி சாஸ்திரியே தலைமையிலான குழுவே மீண்டும் அந்தப் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் என்கிறார்கள். ரவிசாஸ்திரிக்கு ஆதரவாக கேப்டன் கோலி, ஏற்கெனவே குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை புதிய குழுவைத் தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனைக் குழு முடிவு செய்தால், கபில் தேவ் தலைமயிலான அந்தக் குழு சற்று சிரமப்பட வேண்டும் என்கிறார்கள்.