Published:Updated:

IPL: `10 நாளில் முடிவு; இந்தியா, யு.ஏ.இ மைதானங்கள்!’ - வேகமெடுக்கும் ஐ.பி.எல் பணிகள்

ஐ.பி.எல் கிரிக்கெட்
ஐ.பி.எல் கிரிக்கெட்

இரு நாட்டு தொடர்கள் போன்று அல்ல ஐ.பி.எல். 8 அணிகள், பல உலக நாடு வீரர்கள் என எல்லோரும் சங்கமிக்கும் இடமாக இருக்கும். இதனால் கூடுதல் கவனம் தேவைப்படும்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான துறைகள் பாதிக்கப்பட்டன. தற்போது இந்தியா உட்பட உலக நாடுகளில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து பரிசோதனைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மனிதர்களுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றிருப்பதாக நேற்று அறிவுத்திருக்கிறது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம். அதே நாளில் மற்றொரு அறிவிப்பும் வெளியானது. அதாவது, இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ஐசிசி அறிவித்தது.

ஐசிசி
ஐசிசி

ஐசிசி-யின் இந்த அறிவிப்புக்காகத்தான் இத்தனை நாள்களாகக் காத்திருந்தது ஐ.பி.எல் நிர்வாகம். கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் இன்னும் ரத்து செய்யப்படவில்லை. கொரோனா தாக்கம் குறையும் நேரத்தில் தொடரை நடத்தலாம் என்றால், அதற்கு இத்தனை காலம் தடையாக இருந்தது டி20 உலகக் கோப்பை குறித்த அறிவிப்பு தான். ஐ.சி.சி அறிவித்த உடனேயே, ஐ.பி.எல் தொடருக்கான வேலைகளில் முழு வேகத்துடன் களமிறங்கிவிட்டது ஐபிஎல் நிர்வாகம்.

ஏற்கெனவே பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, ``2020, ஐ.பி.எல் இல்லாத வருடமாக நிச்சயம் இருக்காது. இந்தியாவில் நடத்ததான் விருப்பம். குறைந்தது 35-40 நாள்கள் கிடைத்தால் கூட போதும், விரைவாக நடத்தி முடித்துவிடலாம்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. உலகக் கோப்பை தொடர் காரணமாக அக்டோபர் நவம்பர் காலக்கட்டத்தில் உலக நாடுகளுக்கு வேறு தொடர்கள் இல்லை. இந்த இடைவெளியாகப் பயன்படுத்திக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் வேகமாகச் செயல்படுகிறது.

ஐபிஎல்
ஐபிஎல்

அனைத்து அணிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசிடம் ஐபிஎல் தொடரை நடத்த அனுமதியும் கோரியுள்ளது ஐபிஎல் நிர்வாகம். தொடர் இந்தியாவில் நடைபெற்றாலும் பிற நாடுகள் நடைபெற்றாலும் இந்திய அரசாங்கத்தின் அனுமதி அவசியம் என்கிறார் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல். ``இன்னும் 7 முதல் 10 நாள்களில் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும். அதில் ஐபிஎல் அட்டவனை குறித்து ஆலோசனை செய்யப்படும்” என்கிறார் படேல்.

மேலும் அவர், கொரோனா பரவலை செப்டம்பர் மாதம் வரை கண்காணிப்போம். அதன் பின்னரே தொடரை நடத்தும் இடம் குறித்து இறுதி முடிவெடுப்போம். எப்படியும் போட்டிகளை காண ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி வழங்கப்படாது. அதனால் போட்டியை நடத்தும் இடம் இந்த முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

இங்கிலந்து மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் எந்த சிக்கலும் இல்லாமல் 2 டெஸ்ட் போட்டிகளை முழுமையாக நடத்தி முடித்துள்ளனர். இது ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு சாதகமான சூழலை உறுவாக்கியுள்ளது. எனினும் இரு நாட்டு தொடர்கள் போன்று அல்ல ஐபிஎல். 8 அணிகள், பல உலக நாடு வீரர்கள் என எல்லோரும் சங்கமிக்கும் இடமாக இருக்கும். இதனால் கூடுதல் கவனம் தேவைப்படும். தடுப்பு மருந்துகள் குறித்த நம்பிக்கை தரும் தகவல்கள் வருவது உலகம், கொஞசம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உதவும் என நம்பலாம். கிரிக்கெட் ரசிகர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்றே கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு