Published:Updated:

`ராஜீவ் கேல் ரத்னாவுக்கு ரோஹித்; அர்ஜூனா விருதுக்கு தவான் உள்ளிட்ட 3 பேர்!’- பிசிசிஐ பரிந்துரை

தீப்தி சர்மா
தீப்தி சர்மா

ரோஹித் சர்மா, ஷிகர் தவன், இஷாந்த் சர்மா மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்து தீப்தி சர்மா ஆகியோர்களை இவ்விருதுக்கு பி.சி.சி.ஐ தேர்ந்தெடுத்துள்ளது.

ரோஹித் சர்மா, ஷிகர் தவன், இஷாந்த் சர்மா மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்து தீப்தி சர்மா ஆகியோர் பெயர்களை பி.சி.சி.ஐ நாட்டின் உயரிய விளையாட்டுத்துறை விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. ரோஹித் சர்மாவை ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்காகவும், இஷாந்த் சர்மா, ஷிகர் தவன் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர்களை அர்ஜுனா விருதுக்காகவும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

பரிந்துரை பட்டியல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. 2016 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து 2019ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிவரை வீரர்களின் செயல்திறன் கணக்கில்கொள்ளப்பட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக விதிகளுக்கு உட்பட்டு இவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் பி.சி.சி.ஐ கூறியுள்ளது.

ஷிகர் தவான் - ரோஹித் ஷர்மா
ஷிகர் தவான் - ரோஹித் ஷர்மா

ஒரு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 சதங்கள் விளாசிய சாதனையை இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் படைத்தார் ரோஹித் சர்மா. அதேபோல் 2019-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். தனது முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். அதேபோல் சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் ரோஹித் வசமே இருக்கிறது.

தவானைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்தவர் என்ற சாதனையைப் படைத்தவர். அது மட்டுமல்லாமல் ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு முறை `கோல்டென்பேட்ஸ்’ விருது பெற்றவரும் இவரே ஆவார். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அளவில் விரைவாக 2,000 மற்றும் 3,000 ரன்களைக் கடந்தவர் மற்றும் 4,000, 5,000 ரன்களை அதிவேகமாகக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனைகளுக்கு ஷிகர் தவான் சொந்தக்காரர்.

பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பௌலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்தும் நிலையில் இருக்கிறார் இஷாந்த் ஷர்மா. குறிப்பாக, ஆசியாவுக்கு வெளியே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பௌலர் என்ற பெருமை இஷாந்த் ஷர்மாவிடமே இருக்கிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராகக் கலக்கிக் கொண்டிருப்பவர் தீப்தி சர்மா. இந்திய அணியைப் பொறுத்தவரை, ஒரு போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை தீப்தி சர்மா. அதேபோல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீராங்கனை என்ற சாதனையும் இவர் வசமே இருக்கிறது.

`ராஜீவ் கேல் ரத்னாவுக்கு ரோஹித்; அர்ஜூனா விருதுக்கு தவான் உள்ளிட்ட 3 பேர்!’- பிசிசிஐ பரிந்துரை

இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ``நாங்கள் நிறைய தரவுகளை ஒப்பிட்டு பார்த்தது இந்தப் பட்டியலைத் தயாரித்திருக்கிறோம். கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரையை ஒரு பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா படைத்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு ரன்கள் குவித்து, வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அர்ப்பணிப்பு, தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் மற்றும் தலைமைப் பண்பு ஆகியவை அவரை ராஜீவ் கேல் ரத்னா விருது பெறத் தகுதியானவராக்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் ஷர்மாவின் பங்கு இன்றியமையாதது. வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, காயங்களால் பாதிகப்பட்டிருந்தபோதிலும் கிரிக்கெட்டுக்காகத் தன்னை அர்ப்பணிக்கக் கடுமையாகப் போராடியுள்ளார்.

சச்சினுடன் தீப்தி ஷர்மா
சச்சினுடன் தீப்தி ஷர்மா

ஷிகர் தவன் இன்றளவிலும் ஐ.சி.சி தொடர்களில் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். பெண்கள் கிரிக்கெட் அணியில் அனைத்துப் போட்டிகளிலும் தீப்தி ஷர்மாவின் செயல்பாடு வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களை விருதுகளுக்காகப் பரிந்துரைப்பதில் பி.சி.சி.ஐ பெருமை கொள்கிறது” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு