Published:Updated:

சர்ச்சையான டி-ஷர்ட் போட்டோ!-தினேஷ் கார்த்திக்கிற்கு `show cause' நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ!

மலையரசு

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

dinesh karthik
dinesh karthik ( AP )

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் & பேட்ஸ்மேன், தினேஷ் கார்த்திக். தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வாகவில்லை. இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதைப் பார்க்க தினேஷ் கார்த்திக் சமீபத்தில் சென்றிருந்தார். இதில் என்ன சர்ச்சை என கேட்கிறீர்களா...

dinesh karthik
dinesh karthik
AP

ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள்தான், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் உரிமையாளர்களும். இந்தப் பந்தத்தில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரை பார்க்கச் சென்றவர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்றதுடன், அந்த அணியின் ஆடையை அணிந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம்கூட அமர்ந்திருந்தார்.

போட்டி லைவ் நடந்துகொண்டிருக்கும்போது, தினேஷ் கார்த்திக் அங்கே இருப்பது சில விநாடிகள் டி.வி-யில் காட்டப்பட, அதை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து ரசிகர்கள் நெட்டில் உலாவவிட்டுள்ளனர். இந்திய வீரர்கள் வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்றால், பிசிசிஐ-யின் அனுமதி பெறவேண்டியது அவசியம். அப்படி அனுமதிபெற்று பங்கேற்றுதான் அஸ்வின் உள்ளிட்டோர் வெளிநாட்டு தொடர்களில் விளையாடிவருகின்றனர். அப்படி இருக்கையில், தினேஷ் கார்த்திக் எப்படி அங்கே... அதுவும் அந்த அணியின் டி-ஷர்ட்டில் எப்படி இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டனர்.

dinesh karthik
dinesh karthik
twitter

மேலும், தினேஷ் கார்த்திக் அந்த டி20 தொடரில் விளையாடவில்லை என்றாலும், ட்ரின்பாகோ அணியின் உடை மாற்றும் அறையில் அந்த அணியின் உடையை அணிந்திருந்தது தவறு என நெட்டிசன்கள் சர்ச்சையைக் கிளப்ப, இது பிசிசிஐ-யின் கவனத்துக்குச் சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி அவருக்கு பிசிசிஐ `show cause' நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்காக ஒரு வாரகாலம் அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.