இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மறக்க முடியாத ஆண்டுகளின் வரிசையில் 1983-ம் ஆண்டும் 2011-ம் ஆண்டும் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். அந்த இரண்டு ஆண்டுகளில்தான் உலகக் கோப்பை இந்தியா உச்சிமுகர்ந்து. அதேபோல், 2019-ம் ஆண்டும் எப்படியாவது இடம்பெற்றுவிடும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா சந்தித்த தோல்வி, அந்தக் கனவை நொறுக்கியுள்ளது. தோல்விக்கு ஒவ்வொரு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுதொடர்பாக பிசிசிஐ விரிவாக ஆய்வு நடத்த உள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் தவறு ஒன்று நிகழ்ந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர், வீரர்களுடன் அவர்களது மனைவிகள் தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது, தொடர் தொடங்கிய 21 நாள் ஆன பிறகே குடும்பத்தினருடன் வீரர்கள் இருக்க வேண்டும். அதுவும் 15 நாள்கள்தான் தங்கிக்கொள்ள வேண்டும் என வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது.
அதன்படி பாகிஸ்தான் போட்டி முடிந்த பிறகே வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இணைந்துகொண்டனர். ஆனால், நிர்வாக கமிட்டியின் இந்த அனுமதியை மீறி, மூத்த வீரர் ஒருவர் உலகக் கோப்பை நடந்த 7 வாரமும் மனைவியுடன் தங்கியிருந்ததாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல், தற்போது பிசிசிஐ-க்குத் தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது அந்த நிறுவனம்.

மேலும், இதுதொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தின் அடிப்படையில், அந்த வீரர் மீது நடவடிக்கை பாயலாம் எனவும் தெரிகிறது. ஆனால், அந்த வீரர் யார் என்ற எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே உலகக் கோப்பை தோல்வி தொடர்பாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துகொண்டது.