விராட் கோலி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, சொந்தமண்ணில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்று டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியைக் கொண்டு வந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸ் இன்னிங்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை மீண்டும் உயிர்பிக்கச் செய்துள்ளது.

உலகக் கோப்பை தொடரை அடுத்து இரண்டு மாத ஓய்வில் சென்ற தோனி மீண்டும் திரும்பியுள்ளார். ஒரு பக்கம் தோனி எப்போது ஓய்வு முடிவை அறிவிப்பார் என ஒரு தரப்பினர் காத்திருக்க தோனியின் இன்னிங்ஸையும் மின்னல் வேக ஸ்டெம்பிங்கையும் காண அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில்தான் தென்னாப்பிரிக்கத் தொடரில் தோனி பெயர் சேர்க்கப்படவில்லை என்ற தகவல் வந்துகொண்டிருந்தது. அடுத்தாண்டு நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பையை மனதில் கொண்டு ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில்தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், மனிஷ் பாண்டே, ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, க்ருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தத்தொடரிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தோனிக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. உலகக் கோப்பை தொடரில் தோனியின் ஆட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தோனியின் ஓய்வு தொடர்பாக இந்தியக் கிரிக்கெட் வாரியம் அவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகக்கோப்பை தொடருக்கு பின்னரே தோனி இனி அணிக்கு தேர்வாவது கடினம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்து வந்தனர். மேலும் அவரே ஓய்வு முடிவை அறிவிக்க உந்தப்படுவார் போன்ற செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.