Published:Updated:

`அச்சமின்றி விளையாடுவது வேறு; கவனக்குறைவு வேறு!' - ரிஷப் பன்ட்டுக்கு பேட்டிங் பயிற்சியாளரின் அறிவுரை

'இந்திய அணியில் விளையாடும் வீரர்கள், அச்சமின்றி விளையாட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்' என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசியுள்ளார்.

Dhoni, Rishab Pant
Dhoni, Rishab Pant

மகேந்திர சிங் தோனிக்கு அடுத்ததாக விக்கெட் கீப்பில் இந்திய அணியின் சாய்ஸாக இருப்பது, ரிஷப் பன்ட் தான். இளம்வீரர், இடதுகை பேட்ஸ்மேன், இக்கட்டான சூழலில் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர் என பாசிடிவ் இமேஜ் அவர்மீது இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு முடிவை அறிவித்த பின்னர் தினேஷ் கார்த்திக், விருத்திமான் சஹா உள்ளிட்டோர் கீப்பிங் பணியைச் செய்துவந்தனர். தற்போது அந்தப் பணியை ரிஷப் பன்ட் மேற்கொண்டுவருகிறார். உலகக்கோப்பை தொடரின்போது, காயம் காரணமாக தவான், விஜய் சங்கர் ஆகியோர் விலகினர். உலகக்கோப்பை வாய்ப்புக்காக அம்பதி ராயுடு காத்திருந்தபோது, பன்ட் அணிக்குள் வரவழைக்கப்பட்டார். அது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் தோனிக்குப் பின்னர் கீப்பிங்கில் வெற்றிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், ரிஷப் பன்ட் அழைக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினர்.

Rishab Pant
Rishab Pant
Twitter

உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றது. தோனி, இரண்டு மாத விடுப்பில் சென்றார். அப்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ரிஷப் கீப்பிங் பணியை மேற்கொண்டார். தினேஷ் கார்த்திக், சஹா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. `தோனியின் இடத்தை அவ்வளவு எளிதில் இளம்வீரர் ஒருவரால் நிரப்ப முடியாது. அதனால் அவருக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும். தோனிக்கும் இந்த நிலையை அடைய சிறிது அவகாசம் தேவைப்பட்டது' என முன்னாள் கேப்டன் கங்குலி பேசியிருந்தார்.

தொடர்ச்சியாக விளையாட வாய்ப்புகள் கிடைத்தும், ரிஷப் கவனத்தை ஈர்க்கத் தவறிவருவதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. ரிஷப், இக்கட்டான சூழலில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்தான். ஆனால், சில தவறான ஷாட்டுகளால் தனது விக்கெட்டை இழக்கிறார். அது அவருக்கு, தற்போது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காம்பீர் சில தினங்களுக்கு முன் ரிஷப் பன்ட்டுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். ``பன்ட், நீங்கள் நல்ல வீரர்தான். சஞ்சு சாம்சன் என்ற இளைஞர் பின்னால் வருகிறார்; கவனமாக விளையாடுங்கள்” என எச்சரிக்கை விடுக்கும் தொனியில் கம்பீர் பேசியிருந்தார்.

Indian team Batting Coach
Indian team Batting Coach

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ``ரிஷப் பன்ட் ஒரு தனித்துவமான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் தனது திட்டத்தை சரியாகச் செயல்படுத்த வேண்டும். ரிஷப் பன்ட் போன்ற இளம்வீரர்கள் பயமின்றி ஆடுவதற்கும் கவனக்குறைவாக ஆடுவதற்குமான வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு வீரரும் பயமின்றி விளையாட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். சரியான திட்டமிடலுடன் தெளிவாக ஆட வேண்டும். அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார்.