கிரிக்கெட்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

இனியும் இவர்கள் கத்துக்குட்டிகள் அல்ல!

Bangladesh
News
Bangladesh

வங்கதேசம்... தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமாகப் போராடியது. ஆனால், எதிர்பார்த்த முடிவை வங்கதேசம் பெற்றிருக்கிறதா என்பதுதான் கேள்வி.

பெரும்பாலானவர்கள், வங்கதேசத்தை இன்னும் கத்துக்குட்டி அணியாகவே பார்த்துக்கொண்டிருப்பதால், அவர்களின் இந்தச் செயல்பாடு அவர்களுக்கு சிறப்பானதாகவே தெரிந்திருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் எட்டாவது இடத்துக்குத் தகுதியானவர்கள் அல்ல. அதைவிடச் சிறப்பாக இந்த உலகக் கோப்பையை முடித்திருக்க வேண்டும். உண்மையில், அது அரையிறுதிக்குத் தகுதியான அணி. குறைந்தபட்சம், இலங்கை, தென்னாப்பிரிக்காவுக்கு முன்பாகவாவது அவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அந்த அணியின் பேட்டிங் பலமடங்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஷகிப், முஷ்ஃபிகுர் இருவரும் தங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதைப் பூர்த்தி செய்தனர். ஷகிப் - இந்த உலகக் கோப்பையில் யாரும் காட்டிராத கன்சிஸ்டன்ஸியைக் காட்டியுள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் 40+ ஸ்கோர் என்பது அசாத்திய சாதனை. மிடில் ஆர்டரில் லிட்டன் தாஸ், முஷ்ஃபிகுர் போன்றவர்கள் அவருக்கு நன்றாக கம்பெனி கொடுத்தனர். தேவைப்பட்ட நேரத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த ஒரு தகுதியே போதும், வங்கதேசம் முன்னணி அணிதான் என்பதை நிரூபிக்க!

Shakib Al Hasan
Shakib Al Hasan

சௌம்யா சர்கார் சில போட்டிகளில் ஜேசன் ராயின் மினி வெர்ஷனாக விளையாடினார். ஆரம்பத்திலேயே அதிரடி காட்டி, நல்ல தொடக்கங்களை ஏற்படுத்திக்கொடுத்தார். ஆனால், தமீம் அந்த வேலையைச் செய்வதில் சற்று சறுக்கிவிட்டார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கெதிராக மட்டுமே பெரிய ஸ்கோர் எடுத்தார். நியூசிலாந்து, பாகிஸ்தான் போட்டிகளில் இவர் நல்ல தாக்கம் ஏற்படுத்தியிருந்தால், வங்கதேசம் இன்னும் முயற்சி செய்திருக்கலாம். அதேபோல், மஹமதுல்லா! ஒரேயொரு அரைசதம்தான். மற்ற போட்டிகளில் சராசரியாக 20 ரன்கள் எடுத்தார். ஆனால், அவரது அணுகுமுறையும் கொஞ்சம் வங்கதேசத்துக்குப் பாதகமாகத்தான் அமைந்தது. ஒவ்வொரு இன்னிங்ஸின் தொடக்கத்திலும், ஸ்டிரைக் ரொட்டேட் செய்வதில் மிகவும் தடுமாறினார். அதனால், மற்றொரு எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன்மீது நெருக்கடி அதிகரித்தது. தமீம் - மஹமதுல்லா, இந்த இரண்டு சீனியர் பேட்ஸ்மேன்களும் இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால், வங்கதேசத்தின் பேட்டிங் யூனிட் பட்டையைக் கிளப்பியிருக்கும். இருந்தாலும், சில நல்ல கேமியோக்கள் ஆடிய லிட்டன் தாஸ், எதிர்காலத்தில் தமீமின் இடத்தை நிரப்பத் தகுதியானவர் என்பதை நிரூபித்திருப்பது ஒரு நல்ல விஷயம்!

வங்கதேசத்தின் மிகப்பெரிய சிக்கலாக இருந்தது அவர்களின் பந்துவீச்சுதான். முதல் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தத் தடுமாறிய வங்கதேசம், எதிரணிகளின் டாப் ஆர்டர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வழிவகுத்துவிட்டது. மிடில் ஓவர்களிலும் பார்ட்னர்ஷிப்களை உடைக்கத் தடுமாறினார்கள். முஸ்தஃபைசூர் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும், அதில் பெரும்பாலானவை டெத் ஓவர்களில் வீழ்த்தப்பட்டவையே. சைஃபுதீன் மட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் சொல்லிக்கொள்ளும்படி விக்கெட் வீழ்த்தினார். சில போட்டிகள் சௌம்யா சர்கார்கூட சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால், கேப்டன் மொர்தஸா, ரூபெல் ஹுசைன் போன்ற முன்னணி பௌலர்கள் அதைச் செய்யத் தடுமாறினார்கள்.

Bangladesh
Bangladesh

லெக் ஸ்பின்னர் இல்லாததும்கூட அவர்களுக்குக் கொஞ்சம் பின்னடைவு என்று சொல்லலாம். சில போட்டிகளில் மெஹதி ஹசன் மிராஜ் சிறப்பாகச் செயல்பட்டாலும், சஹால், தாஹிர் போல் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. பேட்டிங்கில் வெளுத்துக்கட்டிய ஷகீப்பின் செயல்பாடு, பந்துவீச்சில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் என்பது ஷகீப்பின் தரம் இல்லை! அந்த அணியின் மிகச் சிறந்த பௌலரும் அவர்தான் எனும்போது, அவர் அதற்குத் தகுந்ததுபோல் செயல்பட்டிருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வேண்டுமானால், அவரது சிக்கன பௌலிங்கைப் பாராட்டலாம். ஆனால், மற்ற போட்டிகளில் சொல்லிக்கொள்ளும்படி சிக்கனமும் இல்லை, விக்கெட் வேட்டையும் நடத்தவில்லை. உலகத்தர பேட்ஸ்மேன் ஷகிப்பைக் கண்ட வங்கதேசம், வழக்கமான சூப்பர் பௌலரை மிஸ் செய்துவிட்டது!

ஒரு அணியின் மோசமான செயல்பாட்டுக்கு ஒற்றை வீரரைக் கைகாட்டுவது மிகப்பெரிய தவறு. ஆனால், வங்கதேசத்தின் இந்த உலகக் கோப்பைச் செயல்பாடு கவிழ்ந்ததில் மொர்தஸாவின் பங்களிப்பைப் பற்றிப் பேசிய ஆக வேண்டும். 8 போட்டிகளில், 56 ஓவர்கள் பந்துவீசி வெறும் ஒரே விக்கெட்! ஒரு பௌலராக அவரது பங்களிப்பு எந்த இடத்திலும் அணிக்கு உதவவில்லை. கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால், அணியில் இடமே இருந்திருக்காது. சரி, கேப்டனாக இருந்தாரே அதைத்தான் சரியாகச் செய்தாரா என்றால் அதுவும் இல்லை. முதல் ஸ்பெல்லில் இவரால் தாக்கமே ஏற்படுத்த முடியாத நிலையிலும், `நான்தான் முதல் ஸ்பெல் வீசுவேன்' என்று தொடர்ந்து பந்துவீசிக்கொண்டிருந்தார். சரி, அதையும் சரியாகச் செய்தாரா? இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஸ்பெல் வீசும் பௌலிங் பார்ட்னர்ஷிப்பை மாறிக்கொண்டே இருந்தார்.

vs தென்னாப்பிரிக்கா : முஸ்தாஃபிசுர், மெஹதி ஹசன்
vs நியூசிலாந்து : மொர்தசா, மெஹதி ஹசன்
vs வங்கதேசம் : ஷகிப், மொர்தசா
vs இலங்கை : மழையால் போட்டி ரத்து
Bangladesh fans
Bangladesh fans
vs வெஸ்ட் இண்டீஸ் : மொர்தசா, சைஃபுதீன்
vs ஆஸ்திரேலியா : மொர்தசா, முஸ்தாஃபைசூர்
vs ஆப்கானிஸ்தான் : மொர்தசா, முஸ்தாஃபைசூர்
vs இந்தியா : மொர்தசா, சைஃபுதீன்

vs பாகிஸ்தான் : மெஹதி ஹசன், சைஃபுதீன்

இப்படியாக, மொத்தம் 6 வித்யாசமான பௌலிங் காம்பினேஷன்களைக் கொண்டு ஒவ்வொரு போட்டியையும் தொடங்கினார் மொர்தசா. முதல் பவர்பிளேவில், ஃபார்மில் இருக்கும் ஒரு பௌலர் பந்துவீசி, நல்ல தாக்கம் ஏற்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு, தானே இப்படிச் செய்தால், அந்த அணி என்ன ஆவது? வங்கதேசத்துக்கு இந்த உலகக் கோப்பையில் இழைக்கப்பட்ட அநீதி தொடர் நாயகன் விருது.

Shakib Al Hasan & Mushfiqur Rahim
Shakib Al Hasan & Mushfiqur Rahim

606 ரன்கள் அடித்ததோடு, 11 விக்கெட்டுகள் வீழ்த்தி, வங்கதேச அணியின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் தாங்கிய ஷகிப் அல் ஹசன் இந்த விருதுக்குத் தகுதியானவர் இல்லையா? வில்லியம்சன் நியூசிலாந்தை வழிநடத்தினார் என்றால், ஷகிப் ஒரு கத்துக்குட்டி அணியைப் பறக்கவிட்டிருக்கிறார். அதுவும் பெரிய விஷயம்தான். சொல்லப்போனால், அதுதான் மிகப்பெரிய விஷயம். ஒரு சிறிய அணியின் அடுத்த தலைமுறையை, அந்த விருது எந்த அளவுக்கு ஊக்குவித்திருக்கும்?! ஐ.சி.சி அந்த இடத்தில் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது.

உலகக் கோப்பை எப்படி இருந்தது...

vs தென்னாப்பிரிக்கா : 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
vs நியூசிலாந்து : 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
vs வங்கதேசம் : 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs இலங்கை : மழையால் போட்டி ரத்து
vs வெஸ்ட் இண்டீஸ் : 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
vs ஆஸ்திரேலியா : 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs ஆப்கானிஸ்தான் : 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
vs இந்தியா : 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
vs பாகிஸ்தான் : 94 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி