Published:Updated:

`போராட்டக் களத்தில் வங்கதேச முன்னணி வீரர்கள்!’ -பிசிசிஐ நிலைப்பாடு குறித்து கங்குலி

கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் போட்டியைக் காண வங்கதேச பிரதமர் வருகிறார் என்னும் தகவலையும் வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துவருகின்றனர்.

வங்கதேச வீரர்கள்
வங்கதேச வீரர்கள் ( Twitter/Shakib Al Hasan FC )

வங்கதேச கிரிக்கெட் அணி, நவம்பர் மாத தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் விளையாட உள்ளது. இந்திய அணி, தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடிவருகிறது. இதைத் தொடர்ந்து வங்கதேசத் தொடர் நடைபெறும் என்ற நிலையில், வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஹீம்
ரஹீம்

நேற்று, வங்கதேச கிரிக்கெட் வீரர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்களுக்கு வங்கதேசத்தில் வழங்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக உள்ளதாகவும் இதைக் கொண்டு எப்படி ஆரோக்கியமான வாழ்வை கடைபிடிக்க முடியும் என மூத்த முன்னணி வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தங்களுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கும் வரை கிரிக்கெட் சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடப்போவதில்லை என வீரர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தால் இந்திய சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் இந்தப் போராட்டத்தில், ஷகில் அல் ஹசன், மஹ்மதுல்லா, ரஹிம், தமிம் இக்பால் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வங்கதேச கிரிக்கெட் வாரியம்
வங்கதேச கிரிக்கெட் வாரியம்

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய பிசிசிஐ -யின் மூத்த நிர்வாகி ஒருவர், ``இந்திய அணிக்கு எதிரான தொடரில் வங்கதேசம் பங்கேற்க உள்ளதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. எனினும் இந்த விவகாரம், வங்கதேச கிரிக்கெட்டின் உள் விவகாரம். இதில் பிசிசிஐ நிச்சயம் தலையிடாது” என்றார்.

இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, அட்டவனையின்படி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும். இதனால் வங்கதேசத்திலிருந்து ஏராளமான ரசிகர்கள் போட்டியைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் தொடர் எந்த சிக்கலும் இல்லாமல் நடக்கும் என்றும், கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் போட்டியைக் காண வங்கதேசப் பிரதமர் வருகிறார் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

ganguly
ganguly
Twitter

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் கங்குலியிடன் கேட்கப்பட்டது. கங்குலி, ``இது வங்கதேச கிரிக்கெட்டின் உள் விவகாரம். அவர்கள் இதை நிச்சயமாகச் சரிசெய்து, தொடரில் பங்கேற்க வருவார்கள். இதில் பிசிசிஐ தலையிடுவதற்கு எதுவும் இல்லை. இது என் அதிகாரத்துக்குக் கீழ் வராது. எனினும், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடமும் இது தொடர்பாகப் பேசுவேன்” என்றார்.

இது, வெறும் இருநாட்டுத் தொடர் மட்டும் கிடையாது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர். ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடைபெறுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிடும் என்ற கருத்தும் நிலவுகிறது.