அதிகாலை 5.50 மணி. சூரியனின் ஒற்றை கதிர்கூட படாத வங்கதேசத்தின் ஓட்டுமொத்த ஜனமும் தொலைக்காட்சி பெட்டி முன் குவிகிறது. அதே சூரியன் விடிந்து சுட்டெரித்து கொண்டிருக்கும் உலகின் மற்றோரு மூலையில் அந்நாட்டின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத மிக பெரிய சாதனை ஒன்றை அந்த அணியின் வீரர்கள் நிகழ்த்தியதற்கு அம்மக்கள் ஒவ்வொருவரும் சாட்சி.

ஆம், டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சரித்திரம் படைத்துள்ளது வங்கதேசம். இதன் மூலம் மூன்று ஃபார்மெட்களையும் சேர்த்து நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக வெற்றி கனியை ருசித்துள்ளது வங்கதேசம். டாப்-5 அணிகளுக்கு எதிராக அந்நிய மண்ணில் வங்கதேசம் பெரும் முதல் வெற்றியும் இதுதான். இவ்வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 12 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன் நியூசிலாந்தை வங்கதேசம் வெற்றி கொண்டுவிடும் என்பதை உண்மையில் யாருமே கணித்திருக்கவில்லை. ஒருவேளை இப்போட்டியை டிரா செய்ய வேண்டுமானால் வங்கதேசத்திற்கு வாய்ப்பிருக்கிறது என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாளின் முதல் செக்ஷனிலேயே எதிரணிக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்திவிட்டது வங்கதேசம். அந்த அணியின் பௌலர்களுக்கு எதிராக போட்டியின் முதல் அரைமணி நேரத்தில் நியூசிலாந்து அடித்த ரன்கள் ஒன்று.

அதற்கு பிறகு மிக சிறப்பாக ஆடி முதல் இன்னிங்ஸில் 328 ரன்கள் அடித்தாலும் எந்த ஒரு தருணத்திலும் பின் வாங்கிவிடவில்லை வங்கதேசம். ஹசன் ஜாய், ஷாண்டோ, லிட்டன் தாஸ், மொமினுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 458 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் மிக சிறப்பாக பந்துவீசவும் செய்தது. குறிப்பாக எபதோத் ஹொசைன் எதிரணியின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் கடைசி இன்னிங்ஸில் வெறும் 42 ரன்கள் அந்த அணிக்கு இலக்காக அமைந்தது. அதை எந்தத் தடங்கலும் இல்லாமல் சேஸ் செய்து முடித்தனர் வங்கதேச பேட்டர்கள்.
வங்கதேச அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தங்கள் வாழ்வின் மிக சிறந்த நாளாக இந்நாள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை. ஆட்ட நாயகன் விருது வென்றவுடன் எபதோத் இவ்வாறு கூறுகிறார்.
“இந்நாட்டிற்குக் கடந்த 11 வருடங்களாக பயணம் செய்து விளையாடி வந்த நாங்கள் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. ஆனால், இம்முறை ஒர் இலக்கிலனைத் திட்டமிட்ட நாங்கள் அதை அடைந்திட தீர்மானமாக இருந்தோம். அதை செய்து முடித்தால் எங்களின் எதிர்கால வீரர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை”.எபதோத்
எபதோத்தின் வாழ்க்கை பயணமே மிக சுவாரஸ்யமான ஒன்று. ராணுவ வீரரான இவர் ஒரு வாலிபால் வீரர். அதன் பிறகே கிரிக்கெட் ஆடி வங்கதேச அணியில் இடம்பிடித்த இவர், தற்போது இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் சொந்த மண்ணில் கடந்த 17 டெஸ்ட் போட்டிகளாக தோல்வியடையாத நியூசிலாந்து அணி முதன்முறையாக தோல்வியை தழுவியுள்ளது.

அசோசியேட் நாடுகளை ஐசிசி தொடர்களில் பங்கேற்கவைப்பது, ஓரளவேனும் ரேங்கிங்கில் இருக்கும் தேசங்களுக்கு டெஸ்ட் அங்கீகாரம் கொடுப்பது ஆகியவற்றில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் போக்கு என்பது என்றுமே அலட்சியமாகத்தான் இருக்கும். சென்ற ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தங்களின் இருப்பைப் பலமாக பதிவு செய்துவிட்டு போனது சிறிய அணிகள். தற்போது இந்தாண்டின் தொடக்கத்திலேயே அதற்கான மற்றுமொரு அசைக்கமுடியாத சாட்சியாக அமைந்துள்ளது வங்கதேசத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.