Published:Updated:

விரட்டி விரட்டி வெளுத்த பாபர் அசாம்... லிவிங்ஸ்டன் 100 அடித்தும் தோற்றுப்போன இங்கிலாந்து!

3-0 என ஒருநாள் தொடரை இங்கிலாந்திடம் இழந்ததற்காக முதல் டி20-ல் பழிதீர்த்திருக்கிறது பாகிஸ்தான். பாபர் அசாம் உள்பட பேட்டிங் செய்த எந்தவொரு பாகிஸ்தான் பேட்ஸ்மேனின் ஸ்ட்ரைக் ரேட்டும், 150-க்குக் கீழ் இறங்கவில்லை.

பாபர் அசாம் மற்றும் ரிஸ்வானின் பழிதீர்க்கும் ஆட்டத்தால், வெற்றியோடு டி20 தொடரை இங்கிலாந்தில் தொடங்கியிருக்கிறது பாகிஸ்தான்.

டாஸை வென்ற இங்கிலாந்து, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது. கடைசி ஒருநாள் போட்டியில் காட்டிய அதிரடியின் சொச்ச மிச்சத்தைக் காட்ட, களமிறங்கியது பாபர் - ரிஸ்வான் கூட்டணி. அந்தப் போட்டியில், சதமும், அரைசதமும் அடித்தும் அணியை வெற்றிபெறவைக்க முடியாமல் போன வலி, அவர்களை உந்தித் தள்ள, வென்று விட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கினார்கள். தொடக்கத்தில் இருந்தே ஆட்டத்தில் அனல் பறந்தது. களம் பேட்டிங்கிற்கு மிகச்சிறப்பாக ஒத்துழைத்தாலும், அதைக் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது இக்கூட்டணி.

சிக்கிய பௌலர்கள் எல்லோரையும் சின்னா பின்னமாக்கினர் பாபர் அசாம். மூன்றாவது ஓவரில் கவரில், மிட் விக்கெட்டில், ஸ்கொயர் லெக்கில் என ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார் பாபர். யார்க்கர்களாலும் இன்ஸ்விங்குகளாலும் அவரை எதுவுமே செய்ய முடியவில்லை. ஃப்ளிக் மற்றும் புல் ஷாட்களை மிக நேர்த்தியாக ஆடிக் கொண்டிருந்தார். ரிஸ்ட் மற்றும் ஃபுட் வொர்க் அபாரமாக இருந்தது.

விக்கெட்தான் விழவில்லை, ரன்களையாவது கட்டுப்படுத்தலாம் என பார்கின்ஸன் மற்றும் லிவிங்ஸ்டனைக் கொண்டு சுழலால் நெருக்கடி தரலாம் என இயான் மார்கன் முயன்றார். ஆனால், ரிஸ்வான் - பாபர் கூட்டணியிடம் எதுவும் பலிக்கவில்லை. அவர்களது பந்துகள்தான் அதிகமாக அடி வாங்கின. ஏழு ஓவர்களில், 58 ரன்களைச் சேர்த்திருந்த இவர்கள், அதன்பின், அந்த ஸ்பின்னர்கள் வீசிய ஐந்தே ஓவர்களில், 53 ரன்களைக் குவித்து விட்டனர். 12 ஓவர்கள் முடிவில் 111 என வந்து நின்றது ஸ்கோர். ஒருபக்கம் பாபர் அசாம் 35 பந்துகளில் அரைசதத்தை கடக்க, மறுபக்கம் 34 பந்துகளில், ரிஸ்வானும் அரைசதத்தை எட்டி விட்டார். பிரதான ஸ்பின்னரை மட்டும் தொடர விடலாமென, பார்கின்ஸனை மட்டும், மார்கன் பந்துவீச விட, 18 ரன்களோடு அவரையும் கலங்கடித்தனர்.

முகமது ரிஸ்வான்
முகமது ரிஸ்வான்

எட்டு ஓவர்கள் எஞ்சி உள்ள நிலையில், பத்து விக்கெட்டுகள் கைவசமிருப்பதால், என்ன நடக்குமோ என நடுங்கத் தொடங்கிய மார்கன் ஸ்பின்னை நிறுத்தி, வேகப்பந்து வீச்சாளர்களிடம் தஞ்சம் புகுந்தார். ரிஸ்வான், கிரிகோரி வீசிய ஒரு லோ ஃபுல் டாஸ் பந்தை, லாங் ஆஃபில் பவுண்டரிக்கு அனுப்ப, 88 பந்துகளில், 150 ரன்களைப் பார்ட்னர்ஷிப்பில் சேர்ந்திருந்த இக்கூட்டணியின் ஸ்ட்ரைக்ரேட், 170-ஐ தாண்டி இருந்தது. இதுவே, 200+ தான் இலக்கென நிரூபித்த நிலையில், இங்கிலாந்து எதிர்பார்த்த அந்தத் தருணம். அதற்கடுத்த பந்திலேயே கிடைத்தது. 41 பந்துகளில், 63 ரன்களைச் சேர்ந்திருந்த ரிஸ்வான் ஆட்டமிழந்தார்.

ஒன்டெளனில் உள்ளிறங்கிய மக்சூத், பவுண்டரியோடுதான் கணக்கையே தொடங்கினார். 7 பந்துகளில், 19 ரன்களைச் சேர்த்த அவர் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த ஃபகரும் பவுண்டரியோடுதான் தொடங்கினார். இதற்கடுத்த ஓவரிலேயே, 49 பந்துகளில், 85 ரன்களை எடுத்திருந்த பாபரும் ஆட்டமிழந்து, சதத்தைத் தவறவிட்டார்.

'அப்பாடா முடிந்தது' என இங்கிலாந்து மூச்சுவிடத் தொடங்கிய நேரம், அவர்களை புரட்டிப்போட்டு அடித்தது ஃபகர் - ஹஃபீஸ் கூட்டணி. இவர்கள் சந்தித்தது, 16 பந்துகள் மட்டும்தான், ஆனால் குவித்தது, 46 ரன்கள். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பைப் போலவே, இந்த கூட்டணியும், இங்கிலாந்து பௌலர்களைக் கிறுகிறுக்க வைத்து விட்டது. அடுத்தடுத்த இரண்டு பந்துகளில், இவர்கள் இருவரது விக்கெட்டுகளையும், இங்கிலாந்து வீழ்த்தி விட்டாலும், அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது. கடைசியில், 232 ரன்களைக் குவித்து விட்டது, பாகிஸ்தான். முதல் பந்திலிருந்து இறுதிப் பந்து வரை, வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு ஆடினர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

233 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இறங்கினர் மலானும், ராயும். ஒற்றை இலக்கோடு மலான் வெளியேற, ராய் மறுபுறம் மட்டும் அதிரடி காட்டிக் கொண்டிருந்தார். எனினும், பேட்ஸ்மேன் காட்டிய முனைப்பை, இரண்டாம் பாதியில், பாகிஸ்தான் பௌலர்களும் காட்டத் தொடங்கினர். சரியான லைன் அண்ட் லென்த்தில் வந்த பந்துகள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தின. ராயைத் தவிர மற்றவர்களால், களத்தில் நிற்கக்கூட முடியவில்லை. பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலியின் விக்கெட்டுகளை, பவர் ப்ளே ஓவர்களுக்குள் இழந்து விட்டது பாகிஸ்தான். ஷாகின் அஃப்ரிடி, பெயருக்கு ஏற்றாற் போல், அதிரடி காட்டி, ஓப்பனர் மலானையும், அபாயகரமான பேர்ஸ்டோவையும் காலி செய்து, பாகிஸ்தானுக்குத் தேவையான திருப்புமுனையை, தொடக்கத்திலேயே கொடுக்க, அது பாகிஸ்தானுக்கு பலமாக அமைந்தது.

பாபர் அசாம் - முகமது ரிஸ்வான்
பாபர் அசாம் - முகமது ரிஸ்வான்

ராயைத் தவிர்த்து மற்ற முன்வரிசை வீரர்கள், பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழக்க, ஐந்தாவது வீரராக உள்ளே வந்த லிவிங்ஸ்டன் மட்டும் வேறு கிரகத்தில் ஆடுபவர் போல் ஆடிக் கொண்டிருந்தார். மறுபுறம் விக்கெட் வீழ்ச்சி என்பது நிற்கவே இல்லை. இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டர் இடிந்து விழுந்து கொண்டிருந்தது. ஆனால், லிவிங்ஸ்டன் மட்டும் இடிபாடுகளுக்குள் நின்று இங்கிலாந்தின் கொடியை ஏற்றப் போராடிக் கொண்டிருந்தார், அதுவும் கொஞ்சமும் அஞ்சாமல்.

பவுண்டரிக்கெல்லாம் நேரமில்லை என்பதைப் போல், சிகஸர்களை விளாசி, வெறும் 17 பந்துகளில், அரை சதத்தை எட்டினார், லிவிங்ஸ்டன். இதனால், மற்றவர்கள் திணறினாலும், இவரால் இங்கிலாந்தின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. லிவிங்ஸ்டன் - மார்கன் கூட்டணி மட்டுமே ஐந்து ஓவர்கள் நீடித்தன. மற்ற அனைத்துக் கூட்டணியையுமே, உருவாக உருவாக, உடைத்துக் கொண்டே இருந்தது, பாகிஸ்தான்.

நான்கு ஓவர்கள்தான் மீதமுள்ளதென்ற நிலையில், பாகிஸ்தானுக்கு கண்களில் ஒளி தெரியத் தொடங்கி விட்டது. எனினும் ஒற்றை ஆளாக, இலக்கு எட்டக்கூடியதுதான் என்னும் வீம்போடு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் லிவிங்ஸ்டன். மைதானம் மொத்தத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, ஃபீல்டர்களுக்கே வேலை வைக்காமல், பவுண்டரி லைனை அதிர வைத்து, ரன்களை வாரிக் குவித்துக் கொண்டிருந்தார்.

ஷதாப் கானின் பந்தை, லாங் ஆனில், சிக்ஸருக்குத் தூக்கி, வெறும் 42 பந்துகளில், சதம் அடித்து மிரட்டினார் லிவிங்ஸ்டன். இறுதியாக அதற்கடுத்த பந்திலேயே, ஷதாப் கான் லிவிங்ஸ்டனின் விக்கெட்டை வீழ்த்தினார். லாங் ஆனில் நின்றிருந்த ஷாகீன் பிடித்த ஒரு பவுண்டரி லைன் கேட்சால், இங்கிலாந்திடம் ஒட்டிக் கொண்டிருந்த கடைசி சொட்டு நம்பிக்கையும் வற்றிப் போனது. 103 ரன்களோடு வெளியேறினார் லிவிங்ஸ்டன்.

லிவிங்ஸ்டன்
லிவிங்ஸ்டன்
Rui Vieira

ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த லிவிங்ஸ்டனின் அவுட்டையே வெற்றிக்கான கொண்டாட்டமாக பாகிஸ்தான் கொண்டாடியது. அதற்கடுத்து இருந்த மூன்று விக்கெட்டுகளை, 17 பந்துகளுக்குள்ளாகவே சுருட்டி விட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். 201 ரன்களுக்கு இங்கிலாந்து எல்லா விக்கெட்டுகளையும் இழக்க, 200-ஐயாவது தாண்டி விட்டோமே என்ற ஆறுதலுடன், வெளியேறியது இங்கிலாந்து.

31 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது பாகிஸ்தான். மூன்று பேட்ஸ்மேன்கள், பேட்டால் சாதித்திருந்தாலும், பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில், ஓப்பனர் உள்ளிட்ட மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்திருந்த ஷாகின் அஃப்ரிடி, ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது பாகிஸ்தான்.

உலகின் நம்பர் 1 அணியுடன் ஆடுகிறோம் என்பதோ, போன போட்டியில் வாங்கிய வலியின் வீரியமோ, எதுவும் அசைத்துப் பார்க்காமல், அட்டகாசமான ஒரு வெற்றியைப் பதிவேற்றி, டி20 தொடரைத் தொடங்கியுள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றி, எஞ்சியுள்ள போட்டிகளுக்கான களத்தில் தீ பற்றவைத்துள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு