Published:Updated:

பாபர் அசாம்: தவறான டீமில் இருக்கும் உலகின் சரியான பேட்ஸ்மேன்!

சந்தித்த முதல் 30 பந்துகளில், வெறும் 40 ஆக இருந்த பாபரின் ஸ்ட்ரைக் ரேட், அடுத்த 30 பந்துகளுக்கு, இரட்டிப்பாகி 80 ஆக மாறியது. அதன்பின் 60 - 90 பந்துகளில் 140 ஆக இருந்த ஸ்ட்ரைக்ரேட், 90 பந்துகளை எதிர் கொண்ட பிறகு 266.66 என மிரட்டி அச்சமூட்டியது.

பாபர் அசாம்… தவறான டீமில் இருக்கும் உலகின் சரியான பேட்ஸ்மேன்… 150 ரன் அடித்தும் தோல்வியைப் பரிசளித்த பாகிஸ்தான்!

எப்போதெல்லாம் பாகிஸ்தான், படுபாதாளத்தில் பரிதவிக்கிறதோ, அப்போதெல்லாம், தனது பேட்டை உரக்கப் பேசவைத்து, அணியை மீட்கப் போராடுபவர் பாபர் அசாம்.

பாகிஸ்தான் - இங்கிலாந்துக்கு இடையேயான, மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டியிலும் படுதோல்வியைச் சந்தித்து, மரண அடி வாங்கியிருந்த பாகிஸ்தானை, கடைசிப் போட்டியில், தனது 158 ரன்களினால், கசப்பை மறக்கடிக்கும் மாற்று மருந்தான வெற்றியைச் சுவைக்க வைக்க முயற்சி செய்திருந்தார் பாபர் அசாம். இங்கிலாந்து வென்று, அவரது போராட்டம் வீணாகி இருந்தாலும், சரித்திரம் பேசப் போகும் ஆட்டமாகத்தான், அவருடைய ஆட்டம் இருந்தது.

முதல் இரண்டு போட்டிகள் பாகிஸ்தானுக்கு, தோல்வியை மட்டும் கொண்டு வரவில்லை. அதன் தொடர் நிகழ்வுகளான கேலிகளுக்கும், கேள்விகளுக்கும் வழிவகுத்தது. அதற்கு முக்கிய காரணம், இரண்டு தோல்விகளுமே படுமோசமான தோல்விகள் என்பதுதான். முக்கியமாக, கொரோனா கட்டிக் கொண்ட புண்ணியத்தால், முதல் போட்டியில், இங்கிலாந்து ஏ அணியாக, கிட்டத்தட்ட ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கிய இங்கிலாந்துடன், ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதையெல்லாம், ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும், முதல் இரண்டு போட்டிகளில் முறையே 0, 19 ரன்களில் ஆட்டமிழந்திருந்த பாபர் அசாமின் மீதுதான் ஒட்டுமொத்த கணைகளும் பாய்ந்திருந்தன.

பாபர் அசாம்
பாபர் அசாம்

ஒருபக்கம் அக்தர் அணியின் தோல்விக்காக, கடுமையான வார்த்தைகளால், பாபர் அசாமைச் சாடியிருந்தார். மறுபக்கம், இன்சமாம் உல் ஹக், பாபர் மற்றும் ரிஸ்வான் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும் என்று சொல்லியிருந்தார். நெட்டிசன்களோ வழக்கம் மாறாமல், 'பாபருக்கு இன்னொரு சதம் சாத்தியமாக வேண்டுமெனில், ஃபிளாட் பிட்ச்களையோ, குறைந்தபட்சம், எதிரணியாக ஜிம்பாப்வேயையோ கொடுங்கள்' என இழிவு வார்த்தைகளை வீசியிருந்தனர். ஆனால், மூன்றாவது போட்டியில், அத்தனை விமர்சனங்களையும், அடித்து நொறுக்கி, தூள் தூளாக்கிவிட்டார் பாபர்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், ஐந்தாவது ஓவரிலேயே உடைந்தது. ஒருநாள் போட்டிகளில், தான் ஏன் ஒன்றாம் நிலை வீரர் என்பதற்கான விளக்கத்தைக் கொடுக்க, ஒன் டெளனில் இறங்கினார் பாபர். முதல் 14 பந்துகளும் டாட் பால்கள்தான். ஒருபக்கம் இங்கிலாந்தின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்பது உண்மை என்றாலும், மறுபக்கம், பாபரும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சில பந்துகளை எடுத்துக் கொண்டார். சகி மொகமதுவின் ஓவரில் மெய்டனெல்லாம் கொடுத்து பொறுமையைச் சோதித்தார். 15-வது பந்தில்தான் முதல் ரன். அதுவும் ஃபிளிக் ஷாட் ஆடி, மிட் விக்கெட்டில் பவுண்டரி ஆக்கினார். ஆனால், மறுபடியும் அடுத்த எட்டு பந்துகளுக்கும், அவரது பேட் மௌன பாஷை பேச, சந்தித்த 24-வது பந்து, மறுபடியும் கோட்டைத் தாண்டியது. அதன்பின்தான் பாபர் அசாமின் ஆட்டம் ஆரம்பமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓப்பனர் இமாமுடனான பாபரின் கூட்டணி, பொறுமையும் நிதானமுமே பிரதானம் என்றுதான் நகர்ந்தது. பவுண்டரிகளுக்கு பஞ்சம் இருந்தாலும், அதனை ஓடியே ஈடுகட்டினர் இருவரும். எட்டு பவுண்டரிகள் வந்திருந்தது என்றால், மிகச்சரியாக, அதே எண்ணிக்கையில், இரண்டு ரன்களும் ஓடியே எடுத்து இருந்தனர். முதலில் வீணடித்த பந்துகளை நேர் செய்யும் விதமாக, அசலை அடைக்க ஆடிக் கொண்டிருந்த பாபர் அசாம், ஒருகட்டத்தில், இமாம் அரைசதமடித்து ஆட்டமிழந்து வெளியேறி, ரிஸ்வான் வந்தபின்தான், வட்டியும் முதலுமாகத் திரும்பக் கொடுக்கத் தொடங்கினார். முதல் அரைசதம், 72 பந்துகளில் வந்து சேர்ந்தது, அதன்பின், தனது ஸ்ட்ரைக் ரேட்டை முடுக்கி விட்டார் பாபர்.

ஸ்டோக்ஸின் வேகமோ, பார்கின்ஸனின் சுழலோ, அவரை பாதிக்கவில்லை. இன் ஸ்விங்கர்கள், அவுட் ஸ்விங்கர்கள் எல்லாவற்றையும் சிறப்பாகவே எதிர்கொண்டார். சுழலுக்கும் சளைக்கவில்லை. பார்கின்ஸனின் பந்துகளில், முதலில் ரன் எ பால் என்ற கணக்கில் ஆடிக் கொண்டிருந்தவர், அதன்பின், லாங் ஆஃபில் ஒன்று, லாங் ஆனில் ஒன்று என இரண்டு சிக்ஸர்களைப் பறக்க விட்டார். 72 பந்துகளில் அரைசதம் அடித்த பிறகு, சதத்தை நெருங்க, வெறும், 32 பந்துகளே எடுத்துக் கொண்டார், அதன்பின் 150-ஐ தொட, வெறும் 30 பந்துகளே பாபருக்குத் தேவைப்பட்டது. ரிஸ்வானும் அதிரடி காட்ட, ஸ்கோர் போர்டு சூடுகண்ட தெர்மாமீட்டராக, கிடுகிடுவென ஏறியது. அணியின் ஸ்கோர், 100ஐ தொடவே, 24 ஓவர்கள் எடுத்துக் கொண்ட நிலையில், மிச்சமிருந்த 26 ஓவர்களில், ரன்களை அடித்து ஏற்றி, 331-ல் கொண்டு வந்து நிறுத்தியதில் இருந்தே கணக்கிட்டுக் கொள்ளலாம், எந்தளவு ஆட்டத்தின் வேகம் முடுக்கப்பட்டிருக்கும் என்பதனை.

அசாம்
அசாம்

சந்தித்த முதல் 30 பந்துகளில், வெறும் 40 ஆக இருந்த பாபரின் ஸ்ட்ரைக் ரேட், அடுத்த 30 பந்துகளுக்கு, இரட்டிப்பாகி 80 ஆக மாறியது. அதன்பின் 60 - 90 பந்துகளில் 140 ஆக இருந்த ஸ்ட்ரைக்ரேட், 90 பந்துகளை எதிர் கொண்ட பிறகு 266.66 என மிரட்டி அச்சமூட்டியது. இதன் காரணமாக, கடைசி, 15 ஓவர்களில் மட்டும் வந்த ரன்கள், 144.

104 பந்துகளில், தனது 14-வது சதத்தை பாபர் அடித்தார். ஷகிப் வீசிய அந்தப் பந்தை பாயின்ட்டில் பவுண்டரிக்கு அனுப்பி, அதன்பின் தனது சதத்தினை அவர் கொண்டாடியதுதான், தனிச் சிறப்பே. 44-வது மற்றும் 45-வது ஓவரில் என இருமுறை பாபரின் கேட்சை இங்கிலாந்து தவறவிட, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, 150-ஐ எட்டித் தொட்டார். மறுபுறம், ரிஸ்வானின் விக்கெட் விழ, நான்கு பேட்ஸ்மேன்கள் வந்து சென்றாலும், பாபர் மட்டும், கடைசி ஓவர் வரை, நிலைத்து நின்று ஆடினார். அணியின் ஸ்கோரும், 331-ஐ எட்டியது.

இந்த 14-வது ஒருநாள் சதத்தின் வாயிலாக, பல சாதனைகளை தனதாக்கி இருக்கிறார், பாபர். 14 சதங்களும் வெறும் 81 இன்னிங்ஸ்களில் வந்து சேர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக, மெக் லானிங் மற்றும் ஆம்லா முறையே, 82 மற்றும் 84 இன்னிங்ஸ்களில், தங்களது 14-வது சதங்களை எட்டி இருந்த நிலையில், இச்சாதனையை பாபர் நிகழ்த்தி உள்ளார். கேப்டனாக பதவியேற்று ஆடியுள்ள ஒன்பது போட்டிகளில், இது இவரது மூன்றாவது சதமாகும். இதன்படி, அதிக சதங்களை கேப்டன் பதவியில் இருந்து அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை, அசார் அலியுடன், பாபர் பங்கிட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, பாபரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரும் இதுதான். முன்னதாக, 2017-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, அவர் அடித்த 125 ரன்களே அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராக இருக்க, தனது முந்தைய ஸ்கோரை முந்தியிருக்கிறார் பாபர்.

பாபர் அசாம்
பாபர் அசாம்

இதைத் தவிர்த்து, ஒருநாள் போட்டிகளில், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ஸ்கோர், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு பாகிஸ்தான் கேப்டனின் அதிகபட்ச ஸ்கோர், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு அணியின் கேப்டனின் அதிகபட்ச ஸ்கோர் என அடுக்கடுக்கான பல சாதனைகளைச் செய்திருக்கிறது இந்த 158 ரன்கள்.

38 ஆண்டுகளுக்குப்பின், இம்ரான் கானைத் தொடர்ந்து, ஒரு பாகிஸ்தான் கேப்டன், இங்கிலாந்தில், ஒருநாள் போட்டியில், சதமடிப்பது இதுவே முதல்முறை. அதுவும் ஃபிளாட் டிராக் புல்லி என கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பாபர், இங்கிலாந்தில் வைத்தே இந்த ரன்களைக் குவித்ததுதான், அவர் மீதான விமர்சனங்களுக்கு, அவர் கொடுத்துள்ள, மௌனமான அதிரடி தன்னிலை விளக்கம்.

நாளின் முடிவில், இங்கிலாந்து வெற்றிபெற, 3/0 என பாகிஸ்தான், தொடரை மோசமாக இழந்தது. எனினும், அணியைக் கரை சேர்க்க முயற்சித்த அவரது போராட்டம் பொய்யாகவில்லை. கேப்டனாக இந்தத் தொடரில், பாபர் தோற்றிருக்கலாம். ஆனால், வீரராக, அவர் மீண்டுமொருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார். ஃபாபுலஸ் ஃபோரில் தனக்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் நியாயத்தை மறுபடியும் ஒருமுறை கற்பித்திருக்கிறார், பாபர் அசாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு