Published:Updated:

Axar Patel: கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் ஸ்கோர் செய்யும் `ஆட்டநாயகன்' அக்ஸர் படேல்!

Axar ( BCCI )

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாவிட்டாலும், பந்துவீச்சாளர்களும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற பயம் எதிரணிக்கு எப்போதும் இருக்கும். அந்தப் பயத்தை அக்ஸர் படேல், நேற்றைய ஆட்டத்திலும் எதிரணியினருக்கு ஏற்படுத்தினார்.

Axar Patel: கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் ஸ்கோர் செய்யும் `ஆட்டநாயகன்' அக்ஸர் படேல்!

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாவிட்டாலும், பந்துவீச்சாளர்களும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற பயம் எதிரணிக்கு எப்போதும் இருக்கும். அந்தப் பயத்தை அக்ஸர் படேல், நேற்றைய ஆட்டத்திலும் எதிரணியினருக்கு ஏற்படுத்தினார்.

Published:Updated:
Axar ( BCCI )

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய இலங்கை அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

முதல் 10 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி நிலையில் அடுத்து களம் இறங்கிய அக்ஸர் படேல் அதிரடியாக சிக்ஸர்களை விளாசினார். அக்ஸர் படேலும் சூரியகுமார் யாதவும் இணைந்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். அதிரடியாக ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசியதுடன் 20 பந்துகளில் அரை சதம் அடித்தார், அக்ஸர் படேல். அதிகபட்சமாக 31 பந்துகளில் 65 ரன்கள் (3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், அக்ஸர் படேல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
Surya & Axar
Surya & Axar
BCCI

ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல், 2015 ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடினார். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 39 ஆட்டங்களில் விளையாடியுள்ள அக்ஸர், 38 விக்கெட்களையும் 267 ரன்களையும் எடுத்துள்ளார். இவருடைய கடைசி 10, டி20 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இவருடைய கரியரில் அதிகபட்சமாக எடுத்த ரன்கள் (65) (இந்தப் போட்டிதான்). இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் 20 பந்துகளில், 31 ரன்கள் ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் சிறப்பாக விளையாடினார்.

பொதுவாகவே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாவிட்டாலும், பந்துவீச்சாளர்களும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற பயம் எதிரணிக்கு எப்போதும் இருக்கும். இதை உலகின் பல முன்னணி வீரர்கள் தெரிவித்திருக்கின்றனர். அந்தப் பயத்தை அக்ஸர் படேல், நேற்றைய ஆட்டத்திலும் எதிரணியினருக்கு ஏற்படுத்தினார்.

கடந்த 2021-ம் ஆண்டில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்தார். ஆனால் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அக்ஸர் படேல் என்பது மறுக்க முடியாத ஒன்று. இந்திய அணியை சொந்த மண்ணில் எளிதில் சாய்த்து விட முடியாது என்பது போல் இந்த மூன்று டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Axar Patel
Axar Patel

இந்த வெற்றியின் மூலம் உலகின் நம்பர் 1 டி20 அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது. நேற்றைய ஆட்டத்தைப் போலவே, 2022 செப்டம்பர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், அக்ஸர் படேல் மட்டும் தனி ஒருவனாய் களத்தில் நின்று அதிரடியாக 5 சிக்ஸர்களையும், 3 பவுண்டரிகளையும் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இந்த ஆட்டத்தில் 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடந்த 2021-ல் நடைபெற்ற தொடர்களில் சிறப்பாக விளையாடாததால் அக்ஸர் படேல் இந்திய அணியில் விளையாடுவது குறித்து விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், இந்த இரண்டு ஆட்டங்களின் மூலம் பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நிரூபித்து காண்பித்திருக்கிறார் அக்ஸர் படேல்.

இதையடுத்து, 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 14 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 38 ரன்கள் எடுத்ததுடன், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் 56 ரன்கள் எடுத்திருந்தார், மூன்றாவது ஒருநாள் போட்டியில் 20 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்திய அணியைப் பொருத்தவரை அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், அடுத்து களமிறங்கக்கூடிய பந்துவீச்சாளர்களும் அதிரடியை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்வர். இந்த வரிசையில் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வீரர்களாக விளையாடி வரும் ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு அடுத்ததாகச் சிறந்த ஆல்ரவுண்டராக அக்ஸர் படேல் உள்ளார்.

அக்ஸர் படேல்
அக்ஸர் படேல்
ICC

டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடாவிட்டாலும், வங்கதேச தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த ஆட்டங்களின் மூலம் ஃபார்முக்குத் திரும்பியுள்ள இவர், 2023 ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் அக்ஸர் படேல் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்தத் தொடருக்குப்பின் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் அடுத்தடுத்து இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. இது மட்டுமல்லாமல் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தத் தொடர்களில் சிறப்பாக விளையாடுபவர்கள், 2023 செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையிலும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

இந்தப் போட்டிகளில் அக்ஸர் படேல் சிறப்பாக விளையாடுவதைப் பொருத்து, நவம்பர் மாதத்தில் நடைபெறம் உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு அமையும். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பிரகாசித்து வரும் அக்ஸர் படேல் அதையும் சாத்தியப்படுத்துவார் என நம்புவோம்.