நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. குறைந்த ஸ்கோர் கொண்ட இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த டெல்லி கேபிடல்ஸ், கடந்த இரண்டு போட்டிகளில் தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் அக்சர் படேல் நான்கு ஓவர்கள் பந்து வீசி 21 ரன்களை தந்து மயங்க் அகர்வால் மற்றும் மார்க்ரம் என இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். பேட்டிங்கில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்த அக்சர் படேல் 34 ரன்கள் அடித்திருந்தார். இதன் காரணமாக ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

ஆட்டநாயகன் விருதைப் பெற்ற அக்சர் படேல் போட்டிக்குப் பிறகு பேசும்போது, “ நான் காஃபி ஆர்டர் செய்திருந்தேன். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டோம் என்பதை அறிந்ததால் அந்த காஃபியை அப்படியே வைத்து விட்டு பேட்டிங் செய்ய சென்று விட்டேன். நானும் மனிஷ் பாண்டேவும் ஆட்டத்தை முடிந்தவரை ஆழமாக எடுத்துச் செல்வது என்று முடிவு செய்தோம். பந்து கொஞ்சம் மெதுவாக வந்ததால் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினேன். பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்துவது சுவாரசியமாக இருந்தது ”என்று மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.