Published:Updated:

Ashes: லபுஷேனின் 400 நிமிட ஸ்டாண்டிங்; நீசரின் அட்டகாச அறிமுகம்... தொடர்ந்து சொதப்பும் இங்கிலாந்து!

மைக்கேல் நீசர்
News
மைக்கேல் நீசர் ( Cricket Australia )

ஹசீப் ஹமீதை அறிமுக வீரரான மைக்கேல் நீசர் தனது இரண்டாவது பந்திலேயே வீழ்த்தியிருந்தார். இன்றைய நாளின் முக்கியமான மொமண்டாக இதை குறிப்பிடலாம். ஏனெனில், நீசருக்கு 31 வயதாகிறது. அவர் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்...

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ஒரு பெரிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எடுப்பதற்கான அஸ்திவாரத்தை நேற்றே அமைத்துவிட்ட ஆஸ்திரேலிய அணி இன்று முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தங்கள் இலக்கையும் எட்டியிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை 473-9 என்ற நிலையில் டிக்ளேர் செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 17-2 என்ற நிலையில் வழக்கமான தள்ளாட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.

லபுஷேனும் ஸ்மித்தும் நேற்று எங்கே விட்டார்களோ அங்கிருந்தே ஆட்டத்தை தொடங்கினார்கள். முதல் ஸ்பெல்லை ஆண்டர்சனும் ப்ராடுமே வீசியிருந்தனர். லபுஷேன் ஒரு துறவியின் உச்சக்கட்ட நிதானத்தோடு முதல் நாளில் ஆடியிருந்தார். முதல் நாள் முடிவில் 95 ரன்களை எடுத்திருந்தார். முதல் நாளில் ஆடிய மனநிலையோடே அவர் இரண்டாம் நாளிலும் ஆடுவாராயின் சதமடிக்க குறைந்தபட்சம் ஒரு 15 ஓவர்களாவது எடுக்கும் என்றே தோன்றியது. ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆண்டர்சன் வீசிய ஒரு பந்தில் எட்ஜ் ஆகி பவுண்டரி ஸ்கோர் செய்து தனது 287வது பந்தில் சதத்தை எட்டியிருந்தார். ஆஷஸ் போட்டிகளில் லபுஷேனின் முதல் சதம். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கரியரில் லபுஷேனின் 6வது சதம் இது. குறிப்பாக, பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 3 சதங்களை அடித்திருக்கிறார். பகலிரவு போட்டிகளில் அவருடைய ஆவரேஜ் மட்டும் 90க்கு மேல் இருக்கிறது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நேற்று செய்த அதே தவறையே இன்றும் செய்து கொண்டிருந்தனர். ஃபுல் லெந்த்தில் ரிஸ்க் எடுத்து வீசி விக்கெட்டுக்கு முயலாமல் தொடர்ந்து ஷார்ட் பிட்ச்சாகவும் குட் லெந்த்தாகவும் மட்டுமே வீசிக்கொண்டிருந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்மித் & லபுஷேன்
ஸ்மித் & லபுஷேன்
Cricket Australia
இங்கிலாந்து எதற்காக அப்படி ஷார்ட் பிட்ச்சாக வீசிக்கொண்டிருந்தனர் எனப் புரியவில்லை. அது அவர்களின் திட்டமாக இருந்திருக்கலாம். ஆனால், அது எங்களுக்கு நன்றாகவே உதவியது.
டேவிட் வார்னர்

என நேற்றைய ஆட்டத்தை முடித்துவிட்டு டேவிட் வார்னர் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருந்தார். ஆனாலும் இங்கிலாந்து தங்களின் கொள்கையில் உறுதியாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தச் சமயத்தில்தான் ஆலி ராபின்சன் உள்ளே வந்து முதல் பந்தையே ஃபுல் லெந்த்தில் வீசி லபுஷேனை Front Foot இல் இழுத்து எட்ஜ் ஆக்கினார். பட்லரும் அந்த கேட்ச்சை எந்தத் தவறும் செய்யாமல் பிடித்திருந்தார். நீண்ட நேரம் கழித்து இங்கிலாந்து வீரர்களிடம் ஓர் உத்வேகம் தென்பட்டது. சதம் அடித்த திருப்தியில் லபுஷேனும் மனநிறைவோடு பெவிலியனுக்கு நடக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த ட்விஸ்ட் நிகழ்ந்தது. ராபின்சன் வீசியது ஒரு நோ-பால். மூன்றாவது நடுவர் நோ-பால் என அறிவிக்கவே லபுஷேன் மீண்டும் க்ரீஸுக்குள் வந்தார். முதல் டெஸ்ட்டில் வார்னரின் விக்கெட்டையும் ஸ்டோக்ஸ் இப்படித்தான் நோ-பாலில் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லபுஷேனின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. அந்த சந்தோஷத்திலேயே இன்னும் 300 பந்துகளுக்கு கட்டையை போட்டுவிடுவாரோ என இங்கிலாந்து கதி கலங்கியது. ஆனால், தனது அடுத்த ஓவரிலேயே லபுஷேனை ராபின்சன் மீண்டும் வீழ்த்தினார். இந்த முறையும் ஒரு ஃபுல் லெந்த் டெலிவரிதான். ஆனால், ஆங்கிள் இன் ஆக உள்ளே வந்தது. லெந்தை கணிக்க தவறிய லபுஷேன் அதை பேடில் வாங்கி lbw ஆகினார். 305 பந்துகளில் 103 ரன்களை அடித்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

லபுஷேன் க்ரீஸுக்குள் வந்து கிட்டத்தட்ட 400 நிமிடங்களை செலவிட்டிருந்தார். இந்த 400 நிமிடத்தில் பெரிதாக எங்கேயுமே அவரது நிதானத்தை இழக்கவே இல்லை.
லபுஷேன்
லபுஷேன்
Cricket Australia

முதலில் செட்டில் ஆகிவிட்டு பிறகு அட்டாக் செய்யும் வேலையை கூட அவர் செய்யவில்லை. இன்னிங்ஸ் முழுவதுமே ஒரே மாதிரியாக கட்டுக்கோப்பான டிஃபன்ஸிவ் அணுகுமுறையுடனேயே ஆடி முடித்திருந்தார்.

நேற்று கடைசி செஷனில் லபுஷேனை போன்றே ஓவர் டிஃபன்ஸிவ்வாக ஆடியிருந்த ஸ்டீவ் ஸ்மித், இன்றைக்கு தொடக்கத்திலிருந்தே கொஞ்சம் அட்டாக் செய்து ஆடிக்கொண்டிருந்தார். ப்ராட் மற்றும் ஆண்டர்சனின் முதல் ஸ்பெல்லிலேயே பவுண்டரிகளை அடித்திருந்தார். எதிர்முனையில் லபுஷேன் அதீத தற்காப்பாக ஆடுகிற போது ஸ்மித்தும் அதே பாணியில் ஆடினால் ரன்கள் ஏறவே ஏறாது என்பதால் இப்படி ஆட முடிவு செய்திருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லபுஷேன் அவுட் ஆன பிறகும் கூட சீராக ரன்களை சேர்த்துக் கொண்டே இருந்தார் ஸ்மித். ஸ்டோக்ஸ், ரூட், வோக்ஸ் ஆகியோரை டார்கெட் செய்து பவுண்டரிகளை அடித்தார். ஹெட்டுடன் இணைந்து ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அலெக்ஸ் கேரியுடன் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் ஸ்மித் அமைத்தார். இந்த இரண்டு பார்ட்னர்ஷிப்களும்தான் போட்டியை முழுமையாக ஆஸ்திரேலியா பக்கம் திருப்பியது.

அலெக்ஸ் கேரியும், ஹெட்டும் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் ஸ்டோக்ஸை வைத்து நேற்றை போன்றே மீண்டும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களாகவே வீசிக்கொண்டிருந்தனர். இவர்களுடன் பார்ட்னர்ஷிப் போட்ட ஸ்மித் ஷார்ட் பிட்ச் டெலிவரிகளை அசால்ட்டாக பவுண்டரி அடித்துக் கொண்டிருந்தார். கேரி, ஹெட் இருவருமே கூட ஷார்ட் பிட்ச் டெலிவரிகளுக்கு பெரிதாகத் திணறவில்லை. ஆனாலும், ஃபீல்ட் செட்டப்பில் லெக் சைடில் கட்டம் கட்டி ஷார்ட் பிட்ச்சாகவே வீசிக்கொண்டிருந்தனர்.

ஸ்மித்
ஸ்மித்
ICC
ஃபுல் லெந்தில் வீசினால்தான் விக்கெட் விழுகிறதென தெரிகிறதே! அப்புறம் எதுக்குய்யா ஷார்ட் பிட்ச்சாவே வீசிக்கிட்டு இருக்கீங்க?
மைக்கேல் வாஹன்

என மைக்கேல் வாஹனே ட்விட்டரில் குமுறியிருந்தார்.

இங்கிலாந்தின் சொதப்பலான ஃபீல்டிங், பலவீனமான ஷார்ட் பிட்ச் தந்திரம் இவற்றால் ஸ்மித் வேகமாகவே செஞ்சுரியை நெருங்கியிருந்தார். ஆனால், ஏமாற்றமளிக்கும் வகையில் ஆண்டர்சன் வீசிய ஓவரில், நன்கு டீவியேட் ஆகி வழக்கத்தைவிட குறைவான லெந்த்தில் வந்த ஒரு பந்தை சரியாகக் கணிக்கத் தவறி 93 ரன்களில் lbw ஆகினார்.

மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கேப்டனான முதல் இன்னிங்ஸிலேயே மாஸாக ஒரு சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டவர் 201 பந்துகளில் 93 ரன்களில் வெளியேறினார்.
ரோரி பர்ன்ஸ்
ரோரி பர்ன்ஸ்
ICC

அலெக்ஸ் கேரியும் தன்பங்குக்கு அரைசதம் அடித்து ஆண்டர்சனின் பந்திலேயே அவுட் ஆகியிருந்தார்.

கடைசி டெய்ல் எண்டர்களும் இங்கிலாந்தின் பௌலிங்கை வைத்து வெளுத்துவிட்டார்கள். அறிமுக போட்டியில் ஆடும் மைக்கேல் நீசர் வோக்ஸின் ஒரே ஓவரில் 16 ரன்களை அடித்து நொறுக்கினார். ஸ்டார்க் ஸ்டோக்ஸின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் என அடித்து ஆஸ்திரேலிய அணியை மேலும் வலுவடைய செய்தனர். ஸ்டார்க் 39 ரன்களையும் நீசர் 35 ரன்களையும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா 473-9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி 8.4 ஓவர்களில் 17-2 என்ற நிலையில் இருந்தது. அப்போது மழை அறிகுறிகள் தென்பட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் ஓப்பனர்கள் இருவருமே அவுட் ஆகிவிட்டனர். மீண்டும் ஒரு முறை ரோரி பர்ன்ஸை ஸ்டார்க் வீழ்த்தியிருந்தார்.

ஹசீப் ஹமீதை அறிமுக வீரரான மைக்கேல் நீசர் தனது இரண்டாவது பந்திலேயே வீழ்த்தியிருந்தார். இன்றைய நாளின் முக்கியமான மொமண்டாக இதை குறிப்பிடலாம். ஏனெனில், நீசருக்கு 31 வயதாகிறது. இவர் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவர் சிறுவனாக இருக்கும்போதே அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆட தொடங்கியவர் ஓர் ஆல்ரவுண்டராக உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தார். சீக்கிரமே ஆஸ்திரேலிய அணிக்கு அறிமுகமாகிவிடுவோம் என அவர் எதிர்பார்க்க அது மட்டும் நிகழாமலேயே இருந்தது. ஓடிஐ அணிக்கு 2018 இல் அறிமுகம் கிடைத்துவிட்டாலும் அவர் விரும்பிய டெஸ்ட் அணியில் மட்டும் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் என வலுவான வீரர்கள் இருந்ததால் இவர்களைத் தாண்டி நீசருக்கான இடம் கிடைக்கவே இல்லை.

நீசர்
நீசர்
Cricket Australia
ஒவ்வொரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் நீசரின் பெயர் இருக்கும். ஆனால், ப்ளேயிங் லெவனில் அவர் இருக்கமாட்டார். இப்படித் தொடர்ச்சியாக 17 டெஸ்ட் போட்டிகளில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்ட பிறகு கிடைத்த வாய்ப்பே இந்த அடிலெய்டு டெஸ்ட்.

இங்கேயும் ஹேசல்வுட், கம்மின்ஸ் இருவரும் இல்லை என்பதாலேயே இந்த வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் வீசிய இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி இத்தனை நாள் காத்திருப்பின் பலனை அறுவடை செய்திருந்தார். நீசரின் மனம் குளிர வானமும் குளிர இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருந்தது.

இங்கிலாந்தை பொறுத்தவரைக்கும் இந்த ஆஷஸ் தொடரில் இதுவரை மட்டும் 9 கேட்ச்சுகளை ட்ராப் செய்திருக்கின்றனர். பௌலிங்கில் ப்ளான் B என ஒன்று வைத்திருக்கிறார்களா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது. சரி, பேட்டிங்கை மட்டும் வைத்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்றால் அதுவும் ஜோ ரூட் எதாவது செய்தால்தான் உண்டு. பரிதாபம்!