Published:Updated:

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் : முரடர்கள் என விமர்சிக்கப்பட்டவர்கள்தான் ஓடிவந்து உதவுகிறார்கள்!

Australian Cricketers
Australian Cricketers

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. இதுவரை காணாத இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது இந்தியா. கஷ்டப்படும் இந்திய மக்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்திருக்கிறார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய மக்களுக்கு உதவுமாறு அனைவருக்கும் யுனிசெஃப் (UNICEF) ஆஸ்திரேலியா மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்!

ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருக்கும்போது கொரோனாவின் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலரும் கஷ்டப்படத் தொடங்கினார்கள். அதனால், அப்போதே 50,000 அமெரிக்க டாலர்களை இந்தியர்களின் ஆக்சிஜன் தேவைக்காகக் கொடுத்தார் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ். இந்திய மதிப்பில் அது சுமார் 37 லட்ச ரூபாய்!

அவரைத் தொடர்ந்து முன்னாள் வீரர் பிரெட் லீ 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிட்காயின் ஒன்றைக் கொடுத்தார். "நான் விளையாடியபோதும், ஓய்வு பெற்றதுக்குப் பிறகும் இந்தியா எனக்கு மிகவும் நெருக்கமான நாடாக இருந்திருக்கிறது. இந்திய மக்கள் இப்படி கஷ்டப்படுவது என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது" என்று கூறினார் பிரெட் லீ.

நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இந்திய மக்களுக்காகக் கைகோர்த்திருக்கிறார்கள். பேட் கம்மின்ஸ், பிரெட் லீ, ஸ்டீவ் ஸ்மித், அலீசா ஹீலி, மிட்செல் ஸ்டார்க், எல்லிஸ் பெர்ரி உள்பட ஆண்கள், மகளிர் அணியின் வீரர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு தரக்கோரி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யுனிசெஃப் ஆஸ்திரேலியாவின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில் அவர்கள் பேசியிருப்பது...

"இந்தியாவில் ஒவ்வொரு நொடியும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அங்கு போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை. கடந்த சில வாரங்கள் மிகவும் கடினமானதாக மாறியிருக்கின்றன. இந்த வைரஸ் நாடு முழுவதும் பேரழிவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலை நம் நெஞ்சங்களை பதபதைக்கச்செய்கிறது.

கடினமான சூழ்நிலைகளில் நாம் ஒன்றுசேரவேண்டும். யுனிசெஃப் இந்தியாவின் மூலம் நாங்கள் எங்கள் ஆதரவளித்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் குழுக்கள் களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. கஷ்டப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். யாராலும் அனைத்து விஷயங்களையும் செய்துவிட முடியாது. ஆனால், எல்லோரும் ஏதாவதொரு விஷயத்தை செய்யமுடியும். எங்களோடு கைகோருங்கள். ஏனெனில், இந்தியாவுக்கு நாம் தேவை!"

இவ்வாறு இந்திய மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

காலம் காலமாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் மீது நமக்கொரு பார்வை இருக்கும். மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்பவர்கள், மூர்க்கமானவர்கள், முரடர்கள் என்று அவர்கள்மீது ஒரு பிம்பத்தை உருவாக்கிவைத்திருக்கிறோம். களத்தில் அவர்கள் ஈகோவோடுதான் நடந்துகொள்வார்கள். ஆனால், மைதானத்தில் காட்டுவதொன்றும் அவர்களின் குணம் இல்லை. மொத்த நாடும் கஷ்டப்படும்போது, இந்திய மக்களுக்காக உதவிக்கரம் நீட்டியிருப்பவர்கள் அதே ஆஸ்திரேலியர்கள்தான்.

Cricket Australia
Cricket Australia

ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே "மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்படும்போது எப்படி கார்பரேட்களால், அரசாங்கத்தால் ஐபிஎல் தொடரை நடத்த முடிகிறதோ" என்று கேள்வி எழுப்பினார் ஆண்ட்ரூ டை. "தங்கள் குடும்பத்தினர் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது யாரும் கிரிக்கெட் பார்க்கமாட்டார்கள்" என்றார் ஆடம் ஜாம்பா. அப்போதிருந்தே இந்திய மக்களுக்காக முதலில் குரல் கொடுத்ததும், பொருள் கொடுத்ததுமே ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு