Published:Updated:

``இளமையான நிர்வாகி கங்குலி; தலைமைப் பண்பு தோனி” - தூத்துக்குடியில் ஷேன் வாட்சன்

``கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் எம்.எஸ். தோனி கிரிக்கெட் வலைப்பயிற்சிக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியா நாட்டின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஷேன் வாட்சன் கலந்துகொண்டு கிரிக்கெட் வலைப்பயிற்சிக் கூடத்தை திறந்துவைத்தார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவ, மாணவியர்களின் கேள்விகளுக்கு ஷேன் வாட்சன் பதிலளித்தார்.

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

தொடர்ந்து, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது ஒரு மிகமுக்கியமான நிகழ்வு. உலகக் கோப்பை அரையிறுதியில் துரதிர்ஷ்டவசமாக இந்திய அணியினர் தோல்வியைத் தழுவினர். ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் மீண்டும் டேவிட் வார்னர், ஸ்மித் இணைந்தது அவர்களுக்கு கூடுதல் பலம் தரும்.

இந்திய அணியில் துடிப்பு மிக்க வீரர்கள் இருக்கின்றனர். அடுத்த தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன் வந்துள்ளனர். தமிழகத்தில் டிஎன்பிஎல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் பார்த்தபோதுதான், ஏராளமான இளைஞர்களின் திறமை தெரிந்தது. இதனால், அவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி இளமையான நிர்வாகி.

ஷேன் வாட்சன்
ஷேன் வாட்சன்

அவர் திறம்பட செயல்படுவார். இந்திய அணியில் எம்.எஸ்.தோனியின் விளையாட்டு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் விளையாட்டில், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். அவரது தலைமைப் பண்பும், போராடும் குணமும் என்னைக் கவர்ந்தது” என்றார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்காக ஒரு ஆங்கிலப் பாடலைப் பாடி அசத்தினார் ஷேன் வாட்சன். ஷேன் வாட்சனைப் பார்க்க கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.