Published:Updated:

கலக்கிய பெளலர்கள்... இனி இந்தியாவின் வெற்றி பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் கையில்! #AUSvIND

#AUSvIND ( Tertius Pickard )

நாளைய போட்டியில் ஒப்பனர்களுக்கு அடுத்து புஜாராவை இறக்காமல் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பன்ட்டை இறக்கி முயற்சி செய்து பார்த்தால் இந்தியா வெற்றிபெறுவற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகும்.

கலக்கிய பெளலர்கள்... இனி இந்தியாவின் வெற்றி பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் கையில்! #AUSvIND

நாளைய போட்டியில் ஒப்பனர்களுக்கு அடுத்து புஜாராவை இறக்காமல் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பன்ட்டை இறக்கி முயற்சி செய்து பார்த்தால் இந்தியா வெற்றிபெறுவற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகும்.

Published:Updated:
#AUSvIND ( Tertius Pickard )
ஆருடங்கள், உத்தேசங்கள், கணிப்புகள் அத்தனையையும் பொய்யாக்கிக் கொண்டிருக்கிறது, நடப்பு இந்தியா ஆஸ்திரேலியா தொடர். இப்படித்தான் போட்டியின் போக்கு இருக்கப் போகிறது எனக் கணித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் கத்துக்குட்டி கிரிக்கெட் ரசிகர்கள் வரை அனைவரது கணிப்பும், பொய்யாகிக்கொண்டேயிருக்கிறது.

ஒருநாள் போட்டி போன்று ரன்களைத் துரிதகதியில் குவித்து, அதிக ரன்களை, இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கும் அவசரத்தோடே ஆரம்பித்தது, ஆஸ்திரேலிய அணி. ரோஹித், ஸ்லிப்பில் கிடைத்த ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பைத் தவறவிட, இந்தியாவோ வழக்கம்போல(!!!) சிறப்பாகத் தொடங்கியது. மழையும் இன்று குறுக்கிடும் எனச் சொல்லப்பட்டிருந்ததால், பந்துகளை எல்லாம் பவுண்டரிகளாக மாற்றிக் கொண்டிருந்தனர், ஆஸ்திரேலியர்கள்! ஒருபக்கம் நடராஜனின் ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ஹாரிஸ் அசத்த, மறுபக்கம், வின்டேஜ் வார்னரும் கம்பேக் கொடுக்க, பௌலர்கள் அனைவரும் ரன்களைக் கசியவிட, விக்கெட்டுக்காய் ஏங்கித் தவித்தது இந்தியா!

Shardul Thakur | #AUSvIND
Shardul Thakur | #AUSvIND
twitter.com/BCCI

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடைசியில், ஒருவழியாக நல்ல லைன் மற்றும் லென்த்தில் துல்லியமாகப் பந்து வீசிக் கொண்டிருந்த தாக்கூர், ஒரு சின்ன ஒளிக்கீற்றை, ஹாரீஸை ஆட்டமிழக்கச் செய்து இந்தியா கண்ணில் காட்ட, அதற்கடுத்த ஓவரிலேயே, சுந்தர் வார்னரை எல்பிடபிள்யூவில் வீழ்த்தினார்! நம்பிக்கையின்றி, வார்னர் ரிவ்யூ எடுக்க, முடிவு வந்ததோ, இந்தியாவிற்குச் சாதகமாய்! முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்த சுந்தர், இரண்டாவது இன்னிங்ஸில் வார்னரை வெளியேற்றி அசத்தினார். 48 ரன்களுடன் வார்னர் வெளியேறினார்.

லாபுசேனும் ஸ்மித்தும் புது பேட்ஸ்மேன்களாகக் கைகோத்தனர். இந்தியாவிற்கு சிறிய நம்பிக்கை பிறக்க, தனது அதிரடியால், அடுத்த சில நிமிடங்கள், அதனைப் பொடிப்பொடியாக்கினார் லாபுசேன்! ஐந்து பவுண்டரிகளை அடுத்தடுத்த ஓவர்களில் விளாசி, இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கினார். அடி வாங்குவதும், திருப்பி அடிப்பதையும்தானே இந்தத் தொடர் முழுவதும் இந்தியா செய்து கொண்டிருக்கிறது?! இப்பொழுதும் அதுதான் திரும்பவும் நடந்தது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'மறுபடியும் இவர்களா?' என மிரண்டு போய், பார்த்துக் கொண்டிருந்த லாபுசேன் ஸ்மித் கூட்டணியை, சிராஜ் முறித்துக் காட்டினார். கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்சின் உதவியுடன், லாபுசேனைக் குறிவைக்க, ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அவர்! அந்த சூடு தணியும் முன்பே, வந்த வேடையும் 'சென்று வாருங்கள்!' என சிராஜ் வழியனுப்பி வைக்க, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, அதகளம் காட்டியது இந்தியா.

எனினும் விக்கெட்டுகளின் வீழ்ச்சி, ஆஸ்திரேலியாவின் ரன்குவிப்பில் எந்தப் பாதகத்தையும் ஏற்படுத்தவில்லை. நெருக்கடித் தருக்கூடிய ஓவர்களை பௌலர்கள் வீசத் தவற, உணவு நேர இடைவேளைக்குள்ளாகவே, 149 ரன்களைக் குவித்து, 182 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டது ஆஸ்திரேலியா.

#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

250 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டினால் மட்டுமே வெற்றி பெறுவது பற்றி மனதில் ஓட்டிப் பார்க்கவாவது முடியுமென்பதால், இந்திய பௌலர்களின் மீது அழுத்தம் விழுந்தது. எனினும் முதல் இன்னிங்ஸைவிட, இன்னும் கொஞ்சம் அதிக தைரியமும் தன்னம்பிக்கையும் இந்திய பௌலர்களிடம் குடியேறியிருப்பது கண்கூடாகவே தெரிந்தது. அதற்குச் சவால் விடுக்கும் பணியை ஸ்மித் செவ்வனே செய்து கொண்டிருந்தார். 'சவாலே சமாளி!' என இந்தியாவும் முட்டி மோதிக் கொண்டிருக்க, ஆஸ்திரேலியா 200 ரன்கள் முன்னிலை வகிக்க, இந்த பார்னர்ஷிப்பும் 50ஐ தொட்டது.

இதன் பின் இவர்களது கூட்டணியை முறிக்கத்தான் பெரும் முயற்சிகள் எடுத்தனர் இந்திய பௌலர்கள். போதாக்குறைக்கு ஸ்மித்துக்கு ஒருமுறையும், கிரீனுக்கு ஒருமுறையும் சிராஜ் கேட்சைவிட, அவர் விட்டது கேட்சையா அல்லது மேட்சையா எனக் கேள்வி எழுந்தது. எனினும், அரைச்சதத்தைக் கடந்து, அடுத்ததாக அடித்து நொறுக்கத் தயாரான ஸ்மித்தை தானே வீழ்த்தி, கேட்ச் டிராப் செய்ததற்கான பாவ விமோட்சனம் பெற்றுக் கொண்டார் சிராஜ். இதனை அடுத்த சில ஓவர்களிலேயே கிரீன் விக்கெட்டை தனது புதிய ஸ்பெல்லை வீச வந்த தாக்கூர் வீழ்த்த, செட்டில் ஆன இரண்டு பேட்ஸ்மேன்களையும் எடுத்த ரன்கள் போதும் என செட்டில் செய்த இந்தியா, சற்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கட்டத்தில் 260 ரன்கள் முன்னிலை வகித்தது ஆஸ்திரேலியா. இனிவரும் டெய்ல் எண்டர்களை காலி செய்ய எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு பந்தும், அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும், தங்கள் கனவுக்கோட்டையை தகர்க்கும் தோட்டாக்கள் என்பதால், அழுத்தமும் கூடுதல் பொறுப்பும் இந்திய பெளலர்கள் தலையில் ஏற்றி வைக்கப்பட்டது!

அந்தப் பாரத்தைக் கொஞ்சம் குறைப்பது போல், மறுபடியும் தனது மாயாஜாலத்தால் பெய்னின் விக்கெட்டை தாக்கூர் வீழ்த்தி அசத்தினார். ஒரு புல் ஷாட்டுக்கு ஆசைப்பட்டதற்கு விலையாக, தனது விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினார் பெய்ன். இதன்பிறகு மழை குறுக்கிட, தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டது.

#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

மழையின் ஆட்டம், தேநீர் இடைவேளை தாண்டியும் தொடர, தாமதமாய்த் தொடங்கியது போட்டி. இந்தக் கட்டத்திலேயே ஆஸ்திரேலியா 275 ரன்கள் முன்னிலை வகித்ததால், விக்கெட் வீழ்த்துவதற்கான உத்வேகத்தை இன்னும் அதிகமாக்கினர் இந்திய பௌலர்கள். ஸ்டார்க்கை ஷாக் கொடுத்து சிராஜும், மிட் ஆஃபில் நின்று கேட்ச் பிடித்த சைனியும் சேர்ந்து அனுப்பி வைத்தனர். இதற்கடுத்து கேமியோ இன்னிங்ஸ் ஆட முயன்ற லயானை தாக்கூர் அனுப்பி வைக்க, மறுமுனையில், ஆஸ்திரேலியாவின் காப்பாளனாக மாறிய கம்மின்ஸால் ரன்கள் ஏறிக் கொண்டிருந்தது. இவரை வீழ்த்துவது கடினம் என ஹேசில்வுட்டை டார்கெட் செய்தது இந்தியா. விளைவு, சிராஜின் பந்தில் அவர் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் இது சிராஜின் ஐந்தாவது விக்கெட். முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி சோபிக்கத் தவறியதற்கு, இரண்டாவது இன்னின்ஸில் ஐந்து விக்கெட் ஹாலை, ஹேசில்வுட்டின் விக்கெட்டோடுப் பதிவு செய்தார் சிராஜ். நடப்புத் தொடரில் இந்திய பௌலர் ஒருவரின் ஒரே ஃபைபர் இதுதான்.

கடந்த 32 வருட வரலாற்றில் ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனில் வைத்து இரண்டு இன்னிங்ஸிலும் ஆல் அவுட் ஆவது, இது மூன்றாவது முறை மட்டுமே! இந்தியாவின் இளம் பௌலிங் படை இதனைச் சாதித்திருப்பதுதான் கூடுதல் சிறப்பு!

போட்டி தொடங்குவதற்கு முன், 1013 - 13 என முறையே ஆஸ்திரேலிய பௌலர்கள், இந்திய பௌலர்கள் எடுத்த மொத்த விக்கெட்டுகளையும் ஒப்பிட்டு எழுந்த கேலிகளையும், சந்தேகங்களையும் தகர்த்து எறிந்திருக்கிறது இந்த இருபது விக்கெட்டுகளும்!

ஒருகட்டத்தில் 300 ரன்களை இலக்காய் வைத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போன போட்டியில் பன்ட் காட்டிய மரண பயம் அவர்களை டிக்ளேர் செய்ய விடாமல் தடுத்ததே, இந்தியா செட் செய்திருக்கும் பென்ச் மார்க்தான்! இறுதியாக, 328 ரன்கள் என்ற இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

இதற்கு அடுத்தாக, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினர் கில்லும், ரோஹித்தும். இரண்டாவது ஓவரில் மழை குறுக்கிட, இன்றைய ஆட்டம் கைவிடப்படுவதாய் அறிவிக்கப்பட்டது. இந்தியா கோப்பையைத் தூக்க, இன்னும் 324 ரன்கள் தேவை, ஆஸ்திரேலியாவுக்கோ பத்து விக்கெட்டுகள்! போட்டி டிரா ஆனால் கூட கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளும். ஆனால், வெற்றி மட்டுமே ஆஸ்திரேலியாவைக் கோப்பையைத் தொட வைக்கும் என்பதால், இன்னும் கூடுதல் வேகத்தை, நாளை அவர்கள் ஆட்டத்தில் எதிர்பார்க்கலாம்.

சூடு பறக்கப்போகிறது நாளைய ஆட்டம்... மழை பெய்து, அது சூட்டைத் தணிக்காத வரையில்! ஏற்கெனவே மைதானத்தில் விரிசல் ஏற்பட்டு பந்து பயங்கரமாகத் திரும்ப ஆரம்பித்துவிட்டது. நாளை மழை தடையில்லாமல் ஆட்டம் நடந்தால் பேட் - பாலுக்கான யுத்தம் மிகக் கடுமையாக இருக்கும். கோப்பை என்ற ஒற்றைக் கனவை எல்லோரும் காணலாம், அது தகுதியானவர்களைத்தான் தேடிச் செல்லும். அது யாரை அடைந்து பெருமைப்படுத்துகிறதென நாளை பார்க்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism