Published:Updated:

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஹானே..மிரட்டிய பெளலர்கள்.. மெல்போர்னில் என்ன நடந்தது? #AUSvIND

#AUSvIND
#AUSvIND ( Asanka Brendon Ratnayake | AP )

ஆஸ்திரேலியா சரியாக விளையாடவில்லை என்று சொல்வதை விட இந்திய பெளலிங் புத்தாக்கப் பயிற்சிக்குட்பட்டதைப் போல எழுச்சியுற்றது

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான 100-வது டெஸ்ட் போட்டி எனப் பல சிறப்பம்சங்களுடனும் ஆரம்பித்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள், இந்தியாவுக்கு சாதகமாக முடிந்துள்ளது. அடிலெய்டு அடிக்கு மருந்திடுவதைப் போல், அதே 36-க்கு ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து நாளை நிறைவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய வீரர்கள் தேர்வு குறித்த கருத்துத் தெறிப்புகள் மற்றும் விவாதங்களோடு தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது‌. மெல்போர்னில், கடைசி ஐந்து போட்டிகளில், முதல் இன்னிங்ஸின் சராசரி 446 என்பதாலும், தரையில் உள்ள ஈரப்பதம், ஒருசில ஓவர்களில் போகும் பட்சத்தில் பிட்ச் பேட்டிங்கிற்கும் ஒத்துழைக்கும் என்பதாலும் பெய்னின் முடிவு சரியானதாகவே பார்க்கப்பட்டது.

பர்ன்ஸும், வேடும் ஓப்பனிங் இறங்க, இந்தியா சார்பிலோ பும்ராவும் அவரைத் தொடர்ந்து உமேஷும் பெளலிங்கைத் தொடங்கினர். போட்டியின் முதல் பந்திலிருந்தே, இந்தக் கூட்டணியின் பந்து வீச்சு கொஞ்சம் மிரள வைக்கும் வகையில்தான் இருந்தது. சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசப்பட்ட பந்துகளைச் சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலியர்கள் திணறிய போது, ரஹானே விரும்பிய அந்த பிரேக்கை, பும்ரா கொடுத்தார். பர்ன்ஸின் விக்கெட்டை வீழ்ந்தது. தான் விளையாடிய கடைசி 12 இன்னிங்ஸில் வெறும் 121 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கும் பர்ன்ஸின் மோசமான ஃபார்ம், இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. லாபுசேன் உள்ளே வந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஹானே..மிரட்டிய பெளலர்கள்.. மெல்போர்னில் என்ன நடந்தது? #AUSvIND
Asanka Brendon Ratnayake

இதற்கடுத்தபடியாக ரஹானே செய்ததுதான் மாஸ்டர் மூவ். யாரும் எதிர்பாராத வகையில், பத்தாவது ஓவரிலேயே அஷ்வினை உள்ளே கொண்டு வர, அதற்கு கைமேல் பலனாய், அஷ்வின் வீசிய பந்தை வேடு தூக்கி அடிக்க, அற்புதமான ஒரு கேட்ச் பிடித்தார் ஜடேஜா! கடைசி நொடியில் கிட்டத்தட்ட கில்லுடன் மோதியும், பந்து மட்டும் அவரது கையில் இருந்து நழுவவே இல்லை. 30 ரன்களுடன் செட்டில் ஆகி ஆடிக் கொண்டிருந்த வேட் வேதனையுடன் வெளியேறினார்.

ஸ்மித் அடுத்ததாய் இறங்க, பில்ட் அப் ஆன மொமன்டத்தை அப்படியே வைத்துக் கொள்ள, உடனடியாய் பும்ராவை திரும்பவும் கொண்டு வந்தார் ரஹானே. பும்ராவின் பந்தால் ஸ்மித் வீழ்வார் என நினைத்தவர்களுக்கு, எதிர்பாராத திருப்பமாய், ஸ்மித்தை முதல் போட்டியில் செய்ததைப் போல, ஆட்டமிழக்கச் செய்து அஷ்வினே அனுப்பி வைத்தார். புஜாரா பிடித்த அந்த கேட்ச் சொன்னது, இந்தப் போட்டியில் இந்தியா இம்மியளவுகூட எதையும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பதனை. 2016-ல் இருந்து எந்தப் போட்டியிலும் டக் அவுட் ஆகாத, அதுவும் இந்தியாவுக்கு எதிராக 79.5ஐ சராசரியாக வைத்துள்ள ஸ்மித்தை அஷ்வின் வெளியேற்றியது, இந்தியாவின் பக்கம் அந்த செஷனை மொத்தமாய் திருப்பியது. 38/3 இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்கோர், ரசிகர்களுக்கு எதையோ(36/9) நினைவூட்டி இருக்கும். ஆனால் அங்கிருந்து இந்தியா மீண்டு எழுந்ததுதான் பெரிய விஷயமே!

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஹானே..மிரட்டிய பெளலர்கள்.. மெல்போர்னில் என்ன நடந்தது? #AUSvIND
Asanka Brendon Ratnayake

அடுத்ததாய் லாபுசேனுடன் இணைந்தார் ஹெட். பர்ன்ஸ் போலவே அணியில் தன்னுடைய இருப்பை நிருபிக்க வேண்டிய ஹெட், ஆட்டமிழக்கவே கூடாது என்ற உறுதியாக விளையாட, இந்தக் கூட்டணியை வீழ்த்த இந்திய பெளலர்கள் நிறையவே மெனக்கெட வேண்டி இருந்தது. முதல் செஷன் முடிவுக்கு வந்து, இரண்டாவது செஷனிலும் தொடர்ந்த இந்தக் கூட்டணியை, 86 ரன்கள் எடுத்திருந்த போது ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலமாக பும்ரா உடைக்க, நான்காவது விக்கெட் விழுந்தது. எனினும் லாபுசேனின் ஆட்டம் சற்று அச்சமூட்டுவதாகவே இருந்தது. கிரீன் உள்ளே வந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு மிக அவசியமான லாபுசேனின் விக்கெட்டை தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய சிராஜ் எடுத்தார். லாபுசேனுக்கு சிராஜ் வீசிய பந்தை, அவர் அடிக்க, அதை கில் கேட்ச் பிடிக்க, தங்கள் முதல் பயணத்தை, டெஸ்ட் களத்தில் தொடங்கி இருக்கும் இரண்டு இந்தியர்களும் சேர்ந்து லாபுசேனை வெளியேற்றினார்கள். போன போட்டியில் லாபுசேனைக் கட்டிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம், இன்றும் அவரை சற்று ஒட்டிக் கொண்டிருந்ததனால், இதற்கு முன்பு சில தருணங்களில் நூலிழையில் தப்பி இருந்தார். எனினும், இறுதியாய் சிராஜிடம் சிக்கினார் . கேப்டன் பெய்ன் களம் கண்டார். அதனைத் தொடர்ந்து சில ஓவர்களில் தேநீர் இடைவேளை குறுக்கிட, 52 ஓவர்களில், 136/5 என்ற நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஹானே..மிரட்டிய பெளலர்கள்.. மெல்போர்னில் என்ன நடந்தது? #AUSvIND
Asanka Brendon Ratnayake

முதல் மற்றும் இரண்டாவது செஷன்களில் முறையே மூன்று மற்றும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த இந்தியா நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவிலோ வார்னர் இல்லாததும், ஸ்மித் சோபிக்காமல் போனதும் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

புதிதாக இணைந்திருந்த பெய்ன் - கிரீன் கூட்டணி, அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டுத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால், 55-வது ஓவரில், அஷ்வின் வீசிய பந்தை அடித்த கிரீனுக்கும் பெய்னுக்கும் ஓடுவதில் ஏற்பட்ட தயக்கம், குழப்பம் எல்லாம் சேர்ந்து, பெய்னை ரன் அவுட் ஆக்கியது. கள அம்பயர், தேர்ட் அம்பயரிடம் முடிவறிவிக்க பணிக்க, அது நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது உண்மையில், அவுட் கொடுத்திருக்க வேண்டிய பந்து என்பதால், இந்திய ரசிகர்களிடம் அது சற்று ஆதங்கத்தையும், போன போட்டியில் நடந்ததைப் போல, பெய்னுக்கான இந்த இரண்டாவது வாழ்வு, இந்தியாவின் மேல் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற பயத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், போன போட்டியின் பரிதாபம் தொடராமல், சிராஜ், கிரீனை எல்பிடபிள்யூ ஆக்க, அதற்கடுத்த ஓவரிலேயே, அஷ்வின் பெய்னை வெளியேற்ற, இந்த நாள் இந்தியாவின் நாள் எனச் சொல்லுமளவிற்கு எல்லாமே சிறப்பாக நடந்தேறியது.

இனிமேல்தானே இருக்கிறது கதையே, நம்மவர்களுக்கு டெய்ல் எண்டிங்கில்தானே கண்டமே என்று எழுந்த பயத்தை தூள் தூளாக்கி, ஸ்டார்க்கையும் லயானையும் பும்ரா ஆட்டமிழக்கச் செய்ய, ஜடேஜா கம்மின்ஸை கடைசியாக அனுப்பி வைத்து 195-க்கு ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தார்.

முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்த கிட்டத்தட்ட 50 ஓவர்களை எடுத்துக் கொண்ட இந்தியா, சுமார் 13 ஓவர்களில், மிச்சமுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியது! மெல்போர்னின் பேட்டிங் ட்ராக்குக்கு இந்த ஸ்கோர் நிச்சயம் மிகக் குறைவானதே. ஆஸ்திரேலியா சரியாக விளையாடவில்லை என்று சொல்வதை விட இந்திய பெளலிங் புத்தாக்கப் பயிற்சிக்குட்பட்டதைப் போல எழுச்சியுற்றது என்றே சொல்ல வேண்டும். அறிமுகப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ், தனது தேர்வுக்கான நியாயம் கற்பிக்க, அஷ்வின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அனுபவத்தின் அருமையை நிரூபித்தார். மறுபுறமோ பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, மகுடம் சூட்டிக் கொள்ள, ஜடேஜாவும் தன் பங்கிற்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தி பெருமை சேர்த்துக் கொண்டார். மேலும் இந்தப் போட்டியில், இந்தியாவின் ஃபீல்டிங்கும் மெருகேறி இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஹானே..மிரட்டிய பெளலர்கள்.. மெல்போர்னில் என்ன நடந்தது? #AUSvIND
Asanka Brendon Ratnayake

இதனைத் தொடர்ந்து, மயாங்க்குடன், தன்னுடைய அறிமுகப் போட்டிக்காக, கில்லும் களம் காண, இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பிரித்வி ஷா இல்லாத குறையைத் தீர்த்து வைக்கும் விதமாக, முதல் ஓவரிலேயே ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழந்தார் மயாங்க். ஒவ்வொரு போட்டியிலும் நான் ஒன்டவுன் இறங்குகின்றேனா இல்லை, ஓப்பனிங் இறங்குகிறேனா என்ற கேள்விக்குறியுடன் உள்ளே வந்தார் புஜாரா.

ஒருபக்கம் புஜாரா நிதானமாக ஆட, மறுபுறமோ அறிமுகப் போட்டியா என்னும் சந்தேகம் எழுமளவிற்கு பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கில். அதுவும் நாளின் இறுதியில், அச்சுறுத்தும் ஆஸ்திரேலிய பெளலர்களை அவர் எதிர்கொண்ட விதம் கைதேர்ந்ததாக அமைந்தது. இன்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா, 36 ரன்களுடன் முடித்திருக்க, ஆஸ்திரேலியா 159 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

கோலி இல்லாத தருணத்தில், அதுவும் கடந்த போட்டி முடிவால், படுபாதாளத்தில் கிடந்த அணியை பக்குவமாய் மேடேற்றி இருக்கிறார் ரஹானே. பெளலிங் மாற்றங்கள் மற்றும் ஃபீல்டிங் வியூகங்களால். பெளலர்கள் நடத்திக் காட்டிய மாயத்தை, நாளைய தினம் பேட்ஸ்மேன்களும் நிகழ்த்துவார்களா எனப்பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு