Election bannerElection banner
Published:Updated:

கலங்கிய சிராஜின் கலக்கல் விக்கெட்... ஆனால், பிங்க் டெஸ்ட்டில் செய்த அதே தவறுகள்?! #AUSvIND

#AUSvIND
#AUSvIND ( Rick Rycroft )

இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இருந்திருந்தால் போட்டியின் போக்கு மாறி இருக்குமோ என்ற எண்ணம் எழுவதை, தடுக்காமல் இருக்க முடியவில்லை.

தடுமாறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஃபார்முக்கு கொண்டுவந்துவிட்டது சிட்னி டெஸ்ட். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்- கவாஸ்கர் கோப்பையின் மூன்றாவது டெஸ்ட் இன்று காலை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. புற்றுநோய் விழிப்புணர்வுக்காக சிட்னி டெஸ்ட், பிங்க் டெஸ்ட்டாக அடையாளப்படுத்தப்படுகிறது.

பிங்க் பால் டெஸ்ட்டான அடிலெய்டில் செய்த அதே தவறுகளை இந்திய அணி, இன்றைய பிங்க் டெஸ்ட்டிலும் செய்தது. கேட்ச்களைக் கோட்டைவிட்டது, ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டது, ஜடேஜா- சைனி போன்ற பெளலர்களை தாமதமாகப் பந்து வீச வைத்தது என அடுக்கடுக்கான தவறுகளால் முதல் நாளை ஆஸ்திரேலியாவிடம் இழந்திருக்கிறது இந்தியா.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்தியா சார்பில், மயாங்க் மற்றும் காயம்பட்ட உமேஷுக்குப் பதிலாக ரோஹித் ஷர்மாவும் சைனியும் களம் கண்டனர். சைனி, தனது அறிமுகப் போட்டியில் ஆடினார். ஆஸ்திரேலியா தரப்பிலோ, வார்னர் மற்றும் வில் புக்கோவ்ஸ்கி உள்ளே வர, பர்ன்ஸ் மற்றும் ஹெட் வெளியேற்றப்பட்டிருந்தனர். பேட்டிங்கிற்கு பிட்ச் நன்றாக ஒத்துழைக்கும் என்பதால், ஆஸ்திரேலியா ரன்குவிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது.

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

போட்டி தொடங்குவதற்கு முன், இரு அணி வீரர்களும் அணி வகுக்க, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட, சிராஜ் கண் கலங்கியபடி, கூடவே சேர்ந்து பாடலைப் பாடியது நெகிழ்வான தருணமாய் இருந்தது. ஆர்ப்பரித்து ஆதரிக்க ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ, நான் விளையாடுவது என் நாட்டுக்காகவே என்று அவர் சொல்லாமல் சொன்னது போல் புல்லரிக்க வைத்தது, அவரது தேசப்பற்று.

இந்தப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக, க்ளெயர் போலோசாக் இருந்தார். 144 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, ஆண்கள் கிரிக்கெட்டில், ஒரு பெண் அம்பயராக இருப்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே களமிறங்கியது வார்னர் - புகோவ்ஸ்கி கூட்டணி. காயம் முழுவதும் குணமாகாத போதும், ஆஸ்திரேலியாவின் பேட்டிங் லைன் அப்பை பலப்படுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டிருந்த வார்னரும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் வாய்ப்புக் கிடைத்த புகோவ்ஸ்கியும் அணியை எங்கே எடுத்துச் செல்லப் போகிறார்கள் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது. பும்ராவும், சிராஜும் தொடக்க ஓவர்களை வீச, வார்னர் முதலில் இருந்தே அடித்து ஆடும் நோக்கத்தோடே இருந்தார். கடைசியாக விளையாடிய எட்டு இன்னிங்ஸ்களில், வார்னரின் சராசரி, 75.88. இதனால், வார்னரை இந்தியா கட்டுப்படுத்துமா இல்லை பணிந்து விடுமா என்ற கேள்வி எழுந்த போதே, களப்பலி போல, யாருமே எதிர்பார்க்காத வகையில், தனது விக்கெட்டை சிராஜிடம் பறிகொடுத்து, வார்னர் வெளியேறினார். 7.1 ஓவர்கள் வீசப்பட்டிருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்வதும் நிற்பதுமாகக் கண்ணாம்பூச்சி ஆட, முதல் செஷன் ஆட்டம் முழுவதுமே கைவிடப்பட்டது.

மழை நின்று, இரண்டாவது செஷனும் மிகத் தாமதமாகவே தொடங்கியது. லாபுசேன், புகோவ்ஸ்கி கூட்டணி பேட்டிங் செய்யக் களமிறங்கியது. அறிமுகப் போட்டியா என்ற சந்தேகம் எழும் வகையில் மிக அருமையாகப் பந்துகளை எதிர்கொண்டார் புகோவ்ஸ்கி. சென்ற போட்டியில், அறிமுகப் போட்டியில் கில் ஆடியதைப் போன்ற ஓர்அற்புதமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த, மறுபக்கம் லாபுசேனின் ஆட்டத்திலும் பயங்கர பக்குவம். மிகவும் கவனத்துடன் நிதானமாகப் பந்துகளை எதிர்கொண்டார்.

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

இந்தியத் தரப்பிலோ மெல்போர்னில் இருந்த அந்த உத்வேகம் சற்று குறைந்தே காணப்பட்டது‌. பந்து வீச்சில் பும்ராவும் சிராஜும் சிறப்பாக செயல்பட்டாலும், சென்ற போட்டியில் இருந்த அந்த 'ஸ்பார்க்' இல்லை. போன போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் ரஹானே, அஷ்வினை 14-வது ஓவரிலேயே கொண்டு வந்தார். விரைவாக விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் தென்பட்டது. ஆனால் அது விக்கெட் கீப்பரான பன்ட்டிடம் இல்லை. புகோவ்ஸ்கி அடித்த பந்தை இரண்டு முறை கேட்ச் பிடிக்காமல் கோட்டை விட்டார் பன்ட். இந்திய அணி முதல் விக்கெட்டை வீழ்த்தியதால் கிடைத்த மொமன்ட்டத்தைக் இந்த கேட்ச் டிராப்புகளினால் கோட்டை விட்டது‌. ஆஸ்திரேலியாவின் கை ஓங்கத் தொடங்கியதும் இந்தத் தருணத்தில்தான்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இருந்திருந்தால் போட்டியின் போக்கு மாறி இருக்குமோ என்ற எண்ணம் எழுவதை, தடுக்க முடியவில்லை. இந்திய பெளலிங் யூனிட்டை ரொம்பவே சோதித்துப் பார்த்தது இந்தக் கூட்டணி.

பன்ட் விட்ட கேட்ச்களின் மதிப்பை இந்திய அணி உணரத் தொடங்கும் போதே, சிராஜ் வீசிய பந்தை புகோவ்ஸ்கி அடிக்க, அதை பும்ரா தடுத்தார். ரன் ஓடுவதில் புகோவ்ஸிக்கும் லாபுசேனுக்கும் நடுவே குழப்பம் நிலவியது‌. இது ரன் அவுட் ஆக மாறப் போகிறது என்ற பரபரப்பு நிலவ, பும்ராவோ பந்தை ஸ்டம்ப்பை நோக்கி எறிய முற்பட்டு கீழே விழுந்தார். பந்து இன்னொரு ஃபீல்டர் கையில் இருந்து ஸ்டம்புக்கு வருவதற்குள் பேட்ஸ்மேன் கோட்டைத் தொட்டு விட, அருமையான ரன் அவுட் வாய்ப்பை இந்தியா தவறவிட்டது. மிஸ்ஃபீல்டிங், கேட்ச் டிராப் என அடிலெய்டில் செய்த அத்தனை தவறுகளையும் இந்தியா திரும்பச் செய்தது. இதன் பலனாய், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டிப் பிடித்தது புகோவ்ஸ்கி - லாபுசேன் கூட்டணி.

போன போட்டியில் அறிமுக வீரரான, சிராஜைத் தாமதமாக இறக்கியதைப் போல, இந்தப் போட்டியிலும் சைனியை மிகத் தாமதமாகவே இறக்கினார் ரஹானே. அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் புகோவ்ஸ்கி. இரண்டு அறிமுக வீரர்களுக்கு இடையேயான யுத்தமாக அது தொடங்கிய போது, தேநீர் இடைவேளை குறுக்கிட்டது‌. 31 ஓவர்களில், 93 ரன்களுடன் ஒரு விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்து வலிமையான நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா.

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

இடைவேளை முடிந்து போட்டி தொடங்கியது. கொஞ்சம் கூட தவறுகள் இன்றி, 100 ரன் பார்னர்ஷிப்பை எட்டிப் பிடித்தது ஆஸ்திரேலியக் கூட்டணி. நன்றாக ஆடிக்கொண்டிருந்த புகோவ்ஸ்கி சைனி வீசிய அற்புதமான ஃபுல் லென்த் பந்தில், எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். இரண்டு அறிமுக வீரர்களுக்கான போட்டியில், புகோவ்ஸ்கியின் விக்கெட்டை வீழ்த்தி, டெஸ்ட் அரங்கில் தனது முதல் விக்கெட்டைப் பதிவு செய்தார் சைனி! தன்னுடைய தேர்வு குறித்த சந்தேகங்கள் அத்தனைக்கும் அந்த ஒரே பந்தில் பதிலளித்தார். புகோவ்ஸ்கியும் மிக அருமையாக ஆடி, அரை சதம் எடுத்து அறிமுகப் போட்டியில் அரை சதம் அடித்த 82-வது ஆஸ்திரேலியர் என்ற பெருமையையும் பெற்றார். எனினும், மிக உறுதியுடன், கொஞ்சமும் தயக்கமின்றி பந்தை அவர் எதிர்கொண்ட விதம், அவர் இன்று சதமடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதனைப் பொய்யாக்கி, 62 ரன்களுடன் அவர் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, உள்ளே வந்தார் ஸ்டீவ் ஸ்மித். தொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்து வந்த ஸ்மித்துக்கு இந்த இன்னிங்ஸ் சவாலான காலகட்டமாய் இருக்கப் போகிறது என்ற எண்ணம் எழ, அதைப் பொய்யாக்குமாறு, பும்ரா பந்தில் ஒரு பவுண்டரியை அடித்தார் அவர். இந்தப் போட்டிக்கு மட்டுமன்றி, இந்தத் தொடருக்கே இதுதான் ஸ்மித் அடித்த முதல் பவுண்டரி.

Saini #AUSvIND
Saini #AUSvIND
twitter.com/BCCI

இதன் பிறகு அந்த செஷன் முழுவதுமே ஆஸ்திரேலியாவின் கைதான் ஓங்கி இருந்தது. இவர்களது கூட்டணியை முறிக்க வகுக்கப்பட திட்டங்கள் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கியது இந்தக் கூட்டணி. ஸ்மித்தை வீழ்த்த அஷ்வின் திரும்பக்கொண்டு வரப்பட, ஆனால் இந்த முறை ஆட்டம் என்னுடையது என்பதைப் போல, அவரது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார் ஸ்மித். சரி ஜடேஜாவால் ஏதாவது மாயம் நேரும் என அவரையும் உள்ளே கொண்டு வந்தார் ரஹானே. ஆனால் அதற்குள் மொத்த ஓவர்கள் 50-ஐ தொட்டுவிட்டன. ஜடேஜாவை சீக்கிரமாகக் கொண்டு வந்திருந்தால், ஒருவேளை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். கடைசியில் வேறு விக்கெட்டுகள் விழாமலே நாள் முடிவுக்கு வந்தது‌. ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா, 166/2 என வலிமையான நிலையில் உள்ளது.

மொத்தத்தில் இன்றைய நாள் எங்களுடையது என்பதைப் போல, ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தியது. நாளைய போட்டியில், விக்கெட்டுகளை வேகமாய் வீழ்த்தி, போட்டியைத் திரும்பவும் தங்கள் கைகளுக்குள் கொண்டு வர இந்தியா முனைந்தால் மட்டுமே, போட்டியை வெல்வது குறித்து கனவு காண முடியும். காத்திருப்போம்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு