Published:Updated:

கிங் கோலிக்கு வில்லனாய் வந்த ரஹானே... அடிலெய்ட் டெஸ்ட்டின் முதல் நாள் எப்படியிருந்தது?! #AUSvIND

#AUSvIND

வெளிநாட்டில் இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட், கோலி இந்தத் தொடரில் விளையாடப் போகும் ஒரே டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் எனப் பல பில்ட் அப்களோடு பரபரப்பாய் தொடங்கியிருக்கிறது அடிலெய்டு முதல் டெஸ்ட்.

கிங் கோலிக்கு வில்லனாய் வந்த ரஹானே... அடிலெய்ட் டெஸ்ட்டின் முதல் நாள் எப்படியிருந்தது?! #AUSvIND

வெளிநாட்டில் இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட், கோலி இந்தத் தொடரில் விளையாடப் போகும் ஒரே டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் எனப் பல பில்ட் அப்களோடு பரபரப்பாய் தொடங்கியிருக்கிறது அடிலெய்டு முதல் டெஸ்ட்.

Published:Updated:
#AUSvIND
இந்தியா தன் பிளேயிங் லெவனை மிக நம்பிக்கையாக நேற்றே அறிவிக்க, "பிரித்வி ஷாவுக்குப் பதில் கில் சேர்க்கப்பட்டிருக்கலாமே", "பன்ட்டை பின்னுக்குத் தள்ளி, சஹாவின் தேர்வு சரியா?" எனப் பல விவாதங்கள் அனல் பறந்தன. அதற்கான விடைகளும் இன்று ஓரளவுக்குக் கிடைத்துவிட்டன.

டாஸை வென்ற கோலி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்க, டாஸை வென்ற போட்டிகளில் கோலி தோற்றதில்லை என்ற புள்ளி விவரங்கள் புத்துணர்ச்சியூட்ட உற்சாகமாகயிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.

பிரித்வி ஷாவும், மயாங்க் அகர்வாலும் ஓப்பனிங் இறங்கினார்கள். பல மாதங்களாய் ரசிகர்கள் காணக் காத்திருந்த மகாயுத்தம் தொடங்கியது! ஐபிஎல், பயிற்சி ஆட்டம் என கடந்த பல போட்டிகளில் சொதப்பியும், தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த பிரித்வி ஷா இந்தப் போட்டியிலாவது உயிர்த்தெழுவாரா எனக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டாவது பந்திலேயே, ஸ்டார்க்கால் ஸ்டம்ப் சிதறடிக்கப்பட, பிங்க் பாலுக்கு முதல் இரையாக, 0/1 என பரிதாபமாய் கணக்கைத் தொடங்கியது இந்தியா. அடுத்ததாய் களம் கண்டார் புஜாரா.

#AUSvIND
#AUSvIND

அதே ஓவரின் நான்காவது பந்தில் புஜாராவின் கேட்ச் தவற விடப்பட, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் இந்திய ரசிகர்கள். அதன் பிறகும் இருவருக்கும் தலா ஒரு கேட்சை ஆஸ்திரேலியா கோட்டை விட, ஃபீல்டிங் பரிதாபங்கள் தொடர்ந்தன. எனினும் பெளலர்களோ, போட்டியை எந்த ஒரு தருணத்திலும் தங்கள் பக்கமிருந்து விட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். பேட்ஸ்மேனைத் திணறடிக்கும் பந்துவீச்சின் மூலம், ரன் ரேட்டையும் தொடர்ந்து கட்டுக்குள் வைத்தனர். அகர்வால் அடித்த இரண்டு பவுண்டரிகள் தவிர்த்து பந்து பவுண்டரி லைன் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை. ஆஸ்திரேலிய ரசிகர்கள் மெய்சிலிர்க்க மெய்டன் ஓவர்கள் வரிசை கட்டி வர, கம்மின்ஸின் பந்தில், 17 ரன்களில் ஆட்டமிழந்தார் மயாங்க்.

கிங் கோலி உள்ளே வந்தார். கோலி வந்ததும், ஹேசில்வுட்டும் உள்ளே வந்தார், 'இந்த மேட்சிலும் கோலியின் விக்கெட்டை நான்தான் எடுப்பேன்!' என்ற கங்கணத்துடன் களமிறங்கியவரின் ஆசை கடைசிவரைப் பலிக்கவில்லை. மிகவும் அடக்கமாக ஆடி டின்னருக்குப் பிறகு பார்த்துக் கொள்கிறோம் என ஓவருக்கு ஒன்றிரண்டு ரன்களுடன் இந்தக் கூட்டணி நிதானமாய் ஆட, டின்னர் பிரேக்கில், இந்தியாவின் ஸ்கோர் கார்டு 41/2.

முதல் செஷனில், பெளலிங்கில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும் புஜாராவை அவர்களால் அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அந்த செஷனின் பெரும்பாலான பந்துகளை எதிர்கொண்டிருந்த அவர், உடனாடும் பேட்ஸ்மேனின் அழுத்தத்தை தன் ஆட்டம் மூலமாய்க் குறைப்பது, மெய்ன் பெளலர்களைக் களைப்படையச் செய்வது என ஒரு கேப்டன் செய்யவேண்டிய அத்தனை சம்பவங்களையும் செய்தார். அடிலெய்டில், நாளின் மத்திய இன்னிங்ஸ்கள்தான் ரன்களைக் கொண்டு வரும் என்பதால் எதிர்பார்ப்புடன் தொடங்கியது இரண்டாவது செஷன்.

#AUSvIND
#AUSvIND

முதல் செஷனில் கைகோத்த இந்தக் கூட்டணி, இரண்டாவது செஷனிலும் தொடர்ந்தது. மிகப் பொறுமையுடன், எதிரணியின் பொறுமையைச் சோதிக்கும் வேலையைச் சிறப்பாய்ச் செய்தது இந்தக் கூட்டணி. கடந்த சில மாதங்களாக பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செய்யும் டி20, ஒருநாள் போட்டிகளில், பெளலர்கள் திணறுவதைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு, ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோரின் அசத்தும் வகைவகையான பெளலிங் வேரியேஷன்கள் பிரமிக்கவைத்தன. "இதனால்தானே டெஸ்ட் கிரிக்கெட்டை கொண்டாடுகிறோம்'' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது ஆஸ்திரேலியாவின் பெளலிங் அட்டாக். ஆனால், புஜாரா - கோலி கூட்டணி கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல், தங்கள் மீதான அழுத்தத்தை பெளலர்கள் பக்கமே எதிரொளிக்கச் செய்ய, பந்துக்கும் பேட்டுக்குமான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒருசில கேட்ச் டிராப்களைத் தவிர்த்துப் பார்த்தால், பெளலிங்கில் ஆஸ்திரேலியா எங்கேயுமே தவறுகளைச் செய்யாவிடினும், இந்தக் கூட்டணியை அவர்களால் வீழ்த்தவே முடியவில்லை. ரன்ரேட் குறைவாக இருந்தாலும், அது இப்போதைக்கு பெரிய விஷயமில்லை. இந்த இருவரும் இந்த நாளின் இறுதி வரை நிலைத்து ஆடும் பட்சத்தில், அதன்பிறகு மிச்சமுள்ள வேலையை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் இந்தக் கூட்டணியை முறிக்க பெரும் போராட்டமே நடத்தியது ஆஸ்திரேலியா. நீண்ட நேரமாக பவுண்டரியே அடிக்காத புஜாரா திடீரென பேக் டு பேக் பவுண்டரிகள் அடித்து கியரை மாற்ற, நாதன் லயான் கோபமானார்.

160 பந்துகள் நிலைத்து நின்று ஆடி, அணியைக் கோட்டைச்சுவராய் காத்து, அணியின் ஸ்கோரை 100ஐ தொடவைத்த புஜாராவின் விக்கெட்டைத் தூக்கினார் நாதன் லயான். புஜாராவுக்கு அடுத்து ரஹானே வந்தார். கேப்டனும், துணைக் கேப்டனும் இணைந்து இந்தியக் கப்பலை முன்னோக்கிச் செலுத்த, அதன் பின் வந்த 5 ஓவர்களில் டீ பிரேக் குறுக்கிடுகையில் 107 ரன்களை எட்டி இருந்தது இந்தியா.

#AUSvIND
#AUSvIND

முதல் செஷனில் ஆஸ்திரேலியா 1.64 ரன் ரேட்டிலே இந்தியாவைத் தடுத்து, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்த, இரண்டாவது செஷனிலோ ஒரு விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்து ரன் ரேட்டையும் அதிகரித்து இந்தியாவின் கை மேலோங்கியது. எனினும் புஜாராவை அனுப்பியதே புண்ணியம் என புளகாங்கிதம் அடைந்தனர் பெளலர்கள்.

கடைசி செஷனுக்காக உள்ளே வந்தனர் கோலியும் ரஹானேவும்‌. கோலி இல்லாத மற்ற போட்டிகளை கேப்டனாகத் தலைமை தாங்க இருக்கும் ரஹானேக்கு, பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க கிடைத்த போட்டியாக இதை எடுத்துக் கொண்டு விளையாட்டைத் தொடர்ந்தார். கோலி 123 பந்துகளில் அரைச் சதம் கடந்தார்.

மறுபடியும் இவர்களுக்கு இடையே ஒரு வலுவான பார்ட்னர்ஷிப் உருவாக, மீண்டும் போட்டியைத் தங்கள் கூட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்தியர்கள். பறிகொடுத்த ஒன்றிரண்டு கேட்சுகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிர்முனையாய்த் திரும்ப, மறுபடியும் விக்கெட்டுக்கான வியூகங்கள் வகுக்கப்பட, எதிலும் வீழாத இந்த வெற்றிக் கூட்டணி, அணியை 100/3 என்பதிலிருந்து 188/3க்கு என்ற நல்ல நிலைக்குக் கொண்டுபோனது.

லயான் ஓவரில், ரஹானே அடித்த பந்தை ரன்னாக மாற்ற ரஹானே கோலியை அழைக்க கோலியும், ரஹானேவை நம்பி ஓடிவர, ரன் அவுட்! 74 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார் கிங் கோலி. கோலியின் விக்கெட்டை ஹேசில்வுட் வீழ்த்துவாரா, கம்மின்ஸ் வீழ்த்துவாரா என்ற போட்டியில் இருவரையும் வீழ்த்தி, ரஹானேவே கோலியை வெளியே அனுப்பினார்‌. போட்டியின் போக்கையே இந்தத் தருணம் மாற்றிவிட்டது. அதுவரை விக்கெட்டை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது என வைராக்கியத்துடன் ஆடிய கோலி, இந்த ரன் அவுட்டால் உடைந்து போனார். சதம் அடித்து இந்திய அணியைக் கரைசேர்ப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகிச் சென்றார் கோலி. அதுவரை இந்திய அணியின் கைகளில் இருந்த போட்டி அப்படியே ஆஸ்திரேலியாவின் கைகளுக்குச் சென்றுவிட்டது!

#AUSvIND
#AUSvIND

ஆட்டம் 80 ஒவர்களை நெருங்கி இருந்தது. புதுப்பந்து இன்னும் சற்றுநேரத்தில் எடுத்துவிடுவார்கள். இரவு நேர வெளிச்சத்தில் புது பிங்க் பால் பயங்கரமாக ஸ்விங் ஆகும். அதனால் செட் ஆன பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக களத்தில் நிற்க வேண்டும் என எதிர்பார்த்த நிலையில் கோலியின் ரன் அவுட் போட்டியை மாற்றிவிட்டது.

அடுத்ததாக ஹனுமா விஹாரி வர, இந்த இருவரணி வெகு நேரம் நிலைக்கவில்லை. கோலியை ரன் அவுட் செய்த குற்றவுணர்வோ என்னவோ அடுத்த மூன்று ஓவர்களிலேயே ஸ்டார்க் பந்தில் ரஹானே எல்பிடபிள்யூ ஆக வெளியேறினார்.

அதற்கடுத்து உருவான சஹா, ஹனுமா விஹாரிக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்பும் பலனளிக்கவில்லை‌. அடுத்த சில ஓவர்களிலேயே ஹேசில்வுட், போட்டியில் தன்னுடைய முதல் விக்கெட்டாய் ஹனுமா விஹாரியை எல்பிடபிள்யூவில் அனுப்ப, எட்டு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

இறுதியாய் கைகோத்த சாஹா மற்றும் அஷ்வின், அணியின் ஸ்கோரை, இன்றைய ஆட்ட நேர இறுதியில், 233/6-க்கு எடுத்துச் சென்றனர்.

#AUSvIND
#AUSvIND

முதல் இரு செஷன்களில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தலா ஒன்றைக் கைப்பற்ற, கடைசி செஷனின் முற்பகுதியை இந்தியாவும், கடைசி ஓவர்களை ஆஸ்திரேலியாவும் கோலோச்ச, இந்தியாவுக்கு நெருக்கடியான நிலையில்தான் முடிந்திருக்கிறது, முதல் நாள்.

மிஞ்சிய பேட்ஸ்மேன்கள் நாளை எந்த அளவுக்குத் தாக்குப் பிடிப்பார்கள், இன்னும் எத்தனை ரன்களை இங்கிருந்து இந்தியாவால் எடுக்க முடியும் என்பதில்தான் இருக்கிறது இந்தியாவின் வெற்றியும் தோல்வியும்! எனினும் நாளைய போட்டியில் எதுவும் நடக்கலாம், காட்சிகள் மாறலாம், அதுதானே டெஸ்ட் போட்டிகளின் தனிச்சிறப்பே!