Published:Updated:

உலகை ஆளும் இந்திய கிரிக்கெட்... இனி கிரிக்கெட்டின் சூப்பர் பவர் ஆஸ்திரேலியா அல்ல! #AUSvIND

Australia v India

முதல் செஷன் முடிவில் இந்தியா 83 ரன்களுக்கு 1 விக்கெட் என இருந்தது, இன்னும் 60 ஓவர்களில் 246 ரன்கள் எடுக்க வேண்டும், ஓவருக்கு சராசரியாக 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது.

உலகை ஆளும் இந்திய கிரிக்கெட்... இனி கிரிக்கெட்டின் சூப்பர் பவர் ஆஸ்திரேலியா அல்ல! #AUSvIND

முதல் செஷன் முடிவில் இந்தியா 83 ரன்களுக்கு 1 விக்கெட் என இருந்தது, இன்னும் 60 ஓவர்களில் 246 ரன்கள் எடுக்க வேண்டும், ஓவருக்கு சராசரியாக 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது.

Published:Updated:
Australia v India
டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்பதை 2கே கிட்ஸுக்கு உணர்த்தியிருக்கிறது இந்தியா - ஆஸ்திரேலியா தொடர். திரில், திகில், திருப்பங்கள் என பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கைத் தந்திருக்கிறது.

பகைவனின் கோட்டைக்குள், அஞ்சாமல் உள்நுழைந்து, அவனது சிம்மாசனத்தில் சம இடம் கேட்டதைப் போல் இருந்தது இந்தியாவின் ஆட்டம். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து, சாய்த்துவிட்டு வந்திருக்கிறது இந்தியா.

அனுபவமற்ற இந்த இந்திய அணியுடன், டிரா என்பது கூட, 2018/19 தொடரை விட வலியும் அவமானமும் நிறைந்தது என்பதால் ஆஸ்திரேலியாவின் கண்ணில், வெற்றி ஏற்றி வைத்த வெறித்தீயைத் தவிர வேறு எதுவுமில்லை. எனினும் தலைகீழ் விகிதமாய் அது அவர்கள் தலையில், அழுத்தத்தையும் ஏற்றி வைக்க இந்தியாவுக்கோ, இழப்பதற்கு எதுவுமில்லை என்பதே ராட்சஷ பலத்தைக் கொண்டு வந்து, ஒரு கை பார்த்துவிடலாம் என்ற தைரியத்தையும் கொடுத்து விட்டது!

Australia v India
Australia v India

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேற்று மழையின் காரணமாக, 3-வது செஷன் ஆட்டம் தடைபட விட்ட இடத்திலிருந்து தொடர கில்லும், ரோஹித்தும் களமிறங்கினர். இவர்கள் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் ஆடி, 100 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டால், போன போட்டியில் நடந்ததைப் போல, பன்ட்டை வைத்து பட்டையைக் கிளப்பலாம் என பல சமன்பாடுகளையும் சூத்திரங்களையும் இந்திய ரசிகர்கள் மாற்றி மாற்றி எழுதிக் கொண்டிருக்க, அது எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, வெறும் 7 ரன்களை மட்டுமே தன் கணக்கில் எழுதிக் கொண்டு வெளியேறினார் ரோஹித்!

ஓப்பனராக, இந்தத் தொடரில் விளையாடிய நான்கு இன்னிங்ஸ்களில் 129 ரன்களை மட்டுமே இவர் சேர்த்திருந்தார் என்பது ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதைவிட கோபத்தை வரவழைப்பதாக இருப்பது அவர் ஒவ்வொருமுறையும் ஆட்டமிழக்கும் முறைதான். சுந்தர், தாக்கூர் போன்ற புதுமுக பின்வரிசை வீரர்கள் கூட தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடும் போது, சீனியர் வீரராக இருந்து முன்வரிசை வீரராக, அணிக்கு முதுகெலும்பாக இருக்க வேண்டிய முக்கியமான தருணத்தில், பொறுப்பென்பது மருந்துக்கும் இல்லாமல் தப்பான ஷாட் ஆடி அவர் வெளியேறுவது ரெட்பால் கிரிக்கெட்டில் அவரது இடத்தை கேள்விக்குறியாக்குகிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரோஹித் 7 ரன்களில் ஆட்டமிழக்க ஆபத்பாந்தவன், இந்திய அணியின் ரட்சகன், 'மினி' சுவர் என்றழைக்கப்படும் புஜாரா களமிறங்கினார். இந்தியா ஜெயிக்க வேண்டும் என்றாலோ இல்லை டிரா செய்ய வேண்டும் என்றாலோ புஜாரா இன்றைய நாள் முழுவதும் ஒருபுறம் தடுப்பாட்டம் ஆட, களத்தில் நின்றாக வேண்டும். இதை நன்றாக உணர்ந்து கொண்ட புஜாரா தவ ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். மறுபுறம் ஷுப்மன் கில் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தார். தவறான பந்துகளைத் தொடர்ந்து பவுண்டரிக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்.

ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின், கம்மின்ஸை மலையாக நம்பி, ஓவர்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரும் பல விதமான முயற்சியில் பந்துகளை வீசினாலும் கில்லின் அதிரடி ஆட்டத்தையும், இரும்புக்கோட்டையாக நின்ற புஜாராவையும் தடுக்கமுடியவில்லை.

முதல் செஷன் முடிவில் இந்தியா 83 ரன்களுக்கு 1 விக்கெட் என இருந்தது, இன்னும் 60 ஓவர்களில் 246 ரன்கள் எடுக்க வேண்டும், ஓவருக்கு சராசரியாக 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது.
Australia v India
Australia v India
Tertius Pickard

இந்திய வீரர்களுக்கு வீழ்ந்து விடுவோமோ பின்தங்கி விடுவோமோ என்ற அச்சம் எழும் போதெல்லாம் உள்ளுணர்வு உரக்கக் கூறிக் கொண்டிருந்தது, கோப்பை கைதொடும் தூரம்தான் என்பதை!

தைரியமாக இரண்டாவது செஷன் ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள். புஜாரா மீண்டும் தடுப்பாட்டம் ஆட, இந்தமுறை அரைச்சதத்தைக் கடந்திருந்த ஷுப்மன் கில், தனது அதிரடியைக் கையில் எடுத்தார். ஸ்டார்க் ஓவரில், ஒரு இமாலய சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடிக்க ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கைகளில் இருந்து இந்தியாவின் பக்கம் மெதுவாகத் திரும்ப ஆரம்பித்து. தொடர்ந்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷுப்மன் கில் சதமடிக்கப்போகிறார் என அனைவரும் எதிர்பார்க்க நாதன் லயான் பந்தில், கவர் டிரைவ் ஆட ஆசைப்பட்டு ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் ஷர்மா ஆட வேண்டிய அதிரடி ஆட்டத்தை எந்தவித பயமுமின்றி, ஷுப்மன் கில் அசால்ட்டாக ஆடிச் சென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷுப்மன் கில் அவுட் ஆனவுடன், அனைவர் கண்களும் பெவிலியன் நோக்கி ஓடியது, அடுத்து யார் உள்ள வரப்போகிறார் என்று அதிரடி மன்னன் ரிஷப் பன்ட்டா இல்லை கேப்டன் ரஹானேவா என அனைவர் கண்களும் காத்திருக்க கேப்டன் ரஹானே வந்தார். பன்ட் வந்தாலாவது அதிரடியாக ஆடுவார், ரஹானே அதைச் செய்வாரா என்று எதிர்பார்த்து இருந்து நிலையில், லயான் பந்தில் இறங்கி வந்து மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்து, நானும் அடித்து ஆடத்தான் வந்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னார். ஆனால் அவரது ஆட்டம் வெகுநேரம் நிலைக்கவில்லை. 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்தில் டிம் பெயினிடம் கேட்ச் கொடுத்து, அவுட்டாகிச் சென்றார்.

ரஹானே சென்றவுடன் பன்ட் உள்ளே வந்தார். ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி அவுட் ஆகிச் சென்று கொண்டே இருக்கிறார்கள். அதற்குக் காரணம் புஜாரா இருக்கும் தைரியம் மட்டுமே... தூண் போல் நிமிர்ந்து நிற்கும் புஜாராவின் தடுப்பாட்டதால், மற்ற பேட்ஸ்மேன்கள் தைரியமாகத் தங்களின் ஆக்ரோஷ ஆட்டத்தைக் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியாவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது, நாம் வீழ்த்த வேண்டியது புஜாராவின் விக்கெட்டை என்று!

Australia v India
Australia v India
Tertius Pickard

ஒருபுறம் நம்பர் 1 பௌலரான கம்மின்ஸ், மறுபுறம் 100வது டெஸ்ட்டை ஆடிக்கொண்டிருக்கும் லயான் என மாற்றி மாற்றி பெளலிங் போடவைத்து, நெருக்கடி கொடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தது. ஆனால் நெருக்கடிகள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாகத் திரும்பி ஆஸ்திரலியாவுக்கே சென்றடைந்தது. ஒரு கட்டத்தில் இவரது விக்கெட்டை லைன் அண்ட் லென்த்தில் போட்டு வீழ்த்தமுடியாது என உணர்ந்த ஆஸ்திரேலியா பாடிலைனில் தொடர்ந்து வீசி அவரை மனதளவிலும் உடலளவிலும் தளரச் செய்ய முடிவெடுத்து வீசினார்கள். இடுப்பில் அடி, கையில் அடி, ஹெல்மெட்டில் அடி, முதுகில் அடி என அடி மேல் அடி வாங்கிக் கொண்டே இருந்தாலும் பாகுபலி கட்டப்பா போல் அணியைப் பாதுக்காத்து நின்றார்.

தேநீர் இடைவெளியின் போது இந்தியா 183 ரன்களுக்கு, 3 விக்கெட்டுகள் என இருந்தது. புஜாரா 43 ரன்களுடனும் ரிஷப் பன்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கடைசிநேர செஷனில் இந்தியா 146 ரன்கள் எடுக்க வேண்டும், அதுவும் 35 ஓவர்களில். இந்தத் தடவையும் ஓவருக்கு 4 ரன்கள் எடுக்க வேண்டும் என வந்து நின்றது. இந்தியாவால் இந்த ரன்களை எடுக்க முடியுமா, பந்து கன்னா பின்னா என்று திரும்பிக் கொண்டிருக்கிறதே, புதுப்பந்தை வேறு எதிர்கொள்ள வேண்டுமே... ஒருவேளை போட்டி டிராவை நோக்கித்தான் செல்கிறதோ என்ற எண்ணம் எழுந்தால் கூட பன்ட் என்னும் அசகாய சூரனிருக்கும் வரை நமக்கான வாய்ப்பு கைநழுவவில்லை என்றே தோன்றியது.

மூன்றாவது செஷனின் ஆட்டமும் தொடங்கியது. புஜாரா தனது ஆட்டத்தைத் தொடர ரிஷப் பன்ட் லயானின் பந்தில் கஷ்டமான ஸ்டம்பிங் வாய்ப்பில் இருந்து தப்பினார். இதற்கு மேல் பொறுத்துக் கொண்டிருந்தால் ஆட்டம் டிராவை நோக்கிச் சென்று விடும் என உணர்ந்த பன்ட் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தார். லயானின் பந்து அதிகமாக திரும்பிய நிலையில் அவரது பந்தை டர்ன் ஆக விடாமல் இறங்கி வந்து ஆட ஆரம்பித்தார். அவருக்கு வசமான ஒரு பந்து மாட்ட, சிக்ஸருக்குப் பறக்க விட்டார். அதற்கு அடுத்து ஒருநாள் மட்டும் டி20 மோடுக்கு மாறிவிட்டார்! ரன்கள் வந்துகொண்டே இருந்தது, ஆஸ்திரலியாவால் எதுவும் செய்யமுடியவில்லை.

Australia v India
Australia v India
Tertius Pickard

ஆஸ்திரேலியா நினைத்தது எல்லாம் நியூபால் வரட்டும் அதில் இவர்களை திணறச் செய்யலாம் என்பதுதான். அவர்கள் நினைத்ததும் ஒரளவு நடந்தது. கம்மின்ஸ் புஜாரா வீக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். இந்தியாவுக்கு சிறியதாக பயம் வர ஆரம்பித்தது. அடுத்து வந்த மயாங்க் அகர்வால் பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கி நம்பிக்கையளித்த வேகத்தில், கம்மின்ஸ் பந்தில் வேடிடம் கவர் திசையில் கேட்ச் ஆகிக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

64 ரன்கள் எடுக்க வேண்டும். பன்ட், முதல் இன்னிங்க்ஸ் கதாநாயகர்களான சுந்தர் மட்டும் தாக்கூர் உடன் இணைந்து ஆட்டத்தை முடித்துவிடுவாரா என்ற படபடப்பு படிப்படியாக கூடிக் கொண்டே சென்றது.

சர்க்கரைப் பொங்கலாய் இனிப்பாரா என எதிர்பார்த்த சுந்தரின் ஆட்டம் பொய்க்கவில்லை. அதிரடியாக ஆடி கம்மின்ஸ் பந்தில் சிக்ஸ் மட்டும் பவுண்டரிகளை விளாச இந்தியா வெற்றிப் படிக்கட்டுகளுக்கு அருகில் வந்துவிட்டது. போட்டியை பன்ட் மட்டும் சுந்தர் முடித்துவிடுவார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில் லயான் பந்தில் சுந்தர் போல்ட் ஆனார். அடுத்து வந்த தாக்கூர் ஹேசில்வுட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக வெற்றிக்குத் தேவை 3 ரன்கள் என இருந்தது.

வெற்றிக்கான ரன்களை ஆட்டநாயகன் ரிஷப் பன்ட்தான் அடிக்க வேண்டும் என எழுதியிருந்தது போலும்! பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். 138 பந்துகளைச் சந்தித்தவர் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து ஆட்டமிழக்காமல் 89 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

32 வருடங்களாக பிரிஸ்பேன் மைதானத்தில் தோற்காமலே இருந்து வந்த ஆஸ்திரேலியா முதல்முறையாக இந்தியாவிடம் தோற்றுள்ளது.
Australia v India
Australia v India

2018-ல் இந்தியா தொடரை வென்றபோது வார்னர் இல்லை, ஸ்மித் இல்லை அதனால் ஏ டீம் அணியை எளிதாக வென்றுவிட்டார்கள் என வந்த கேலிப்பேச்சுகளைப் புறம்தள்ளி இந்திய அணியின் ஏ டீம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலே 2-1 என வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

முதல் போட்டியுடன் கோலி இல்லை, அதன்பின் ஒவ்வொருவராக காயம் என 7 முன்னணி வீரர்கள் இல்லாமல் கத்துக்குட்டி அணியை வைத்துக் கொண்டு கங்காருக்களைக் கதறவிட்டுள்ளது இந்தியா அணி.

எந்த 19-ம் தேதி 36 ரன்களில் ஆல் அவுட் ஆகி அனைவரின் வசைசொற்களையும் வாங்கினோமோ அதே 19-ம் தேதி ஆஸ்திரேலியாவை 2-1 என வீழ்த்தி 4-0 என ஆருடம் சொன்ன அத்தனை கணிப்பாளர்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறது இந்தியா.

பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி இந்திய அணியின் 2-1 வெற்றி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism