Published:Updated:

ஆறாவது விக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அசைத்த வாஷிங்டன் - தாக்கூர்... கோப்பை கனவு நனவாகுமா? #AUSvIND

#AUSvIND ( twitter.com/BCCI )

150-க்கு மேல் பின்தங்கி இருப்போமோ எனப் பயந்த அந்த இடைவெளியை, தங்களது 123 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் முற்றிலுமாய் குறைத்து விட்டனர் இன்றைய கதாநாயகர்கள் சுந்தர் மற்றும் தாக்கூர்.

ஆறாவது விக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அசைத்த வாஷிங்டன் - தாக்கூர்... கோப்பை கனவு நனவாகுமா? #AUSvIND

150-க்கு மேல் பின்தங்கி இருப்போமோ எனப் பயந்த அந்த இடைவெளியை, தங்களது 123 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் முற்றிலுமாய் குறைத்து விட்டனர் இன்றைய கதாநாயகர்கள் சுந்தர் மற்றும் தாக்கூர்.

Published:Updated:
#AUSvIND ( twitter.com/BCCI )
'நீ எழும் போதெல்லாம் தாக்குவேன்!' என சூழ்நிலைகளும், ஆஸ்திரேலியாவும் அடித்து வீழ்த்தினாலும், 'விழும் போதெல்லாம் எழுவேன்!' என ஒவ்வொரு முறையும் இந்தியா கம்பீரமாய் எழுந்து நிற்கிறது, இந்தத் தொடர் முழுவதும்!

'இக்கட்டான நேரமெல்லாம் புதுத் திறமைகளை இனங்காணும் நேரமே!' - இதற்கு உதாரணமாக, முன்வரிசை பேட்ஸ்மேன்கள் நிரூபிக்கத் தவறினாலும், வெற்றிடத்திலிருந்து உதயமாகி, இன்றைய ஆட்டத்தின் நாயகர்களாக விஸ்வரூபம் எடுத்தனர் சுந்தரும், தாக்கூரும்! ஆட்டநேர இறுதியில், ஆஸ்திரேலியா, இரண்டாவது இன்னிங்ஸில், இந்தியாவை விட 54 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

62/2 என நேற்று முடித்த இடத்திலிருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தது புஜாரா - ரஹானே இணை! இன்றைய நாள் முழுவதும் நிலைத்து நின்று ஆடி விட்டாலே பார்டர் கவாஸ்கர் டிராபியை கை நழுவாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பதால், மொத்தத் தொடரின் உயிர்த்துடிப்பாய் இன்றைய போட்டி, இந்திய அணியால், ரசிகர்களால் பார்க்கப்பட்டது. புஜாரா - ரஹானேவைத் தொடர்ந்து வரும் பேட்ஸ்மேன்களின் அனுபவத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால், இந்த இருவரது பார்னர்ஷிப் மிக முக்கியமானதென்பது தெளிவாகவே புலப்படும்!

#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை இந்த இருவரணி நன்றாக அறிந்து வைத்திருந்ததால், ஒவ்வொரு பந்தையும் எச்சரிக்கையுணர்வுடனே எதிர்கொண்டது. விக்கெட் விழக்கூடாது என்ற கவனம் ஒருபுறம் இருந்தாலும், ரன் எடுப்பதற்கான ஓட்டத்தில் துரிதமும், துடிதுடிப்பும் வழக்கத்தைவிட அதிகரிக்க, சில ஷாட்களையும் தேர்ந்த முறையில் ஆடி, ரன்களையும் ஏற்றினர்.

எனினும், புஜாராவை நோக்கி, இந்தத் தொடரில் நீளும், "டாட் பால்களை ஆடச் சொன்னால், மெய்டன் ஓவர்களாய் ஆடிக் கொண்டிருக்கிறார்!" என்ற குற்றச்சாட்டை இன்றும் அவரால் சரி செய்ய முடியாத அளவு, ரன் எடுப்பதற்குத் திணறினார். நாலாவது ஸ்டம்ப் லைனில் வீசும் பந்துதான், அவரை வீழ்த்தும் என்று, அவரது பலவீனத்தைப் புரிந்து கொண்டுள்ள ஆஸ்திரேலியர்கள், குறிப்பிட்ட அதே லைன் அண்ட் லென்த்தில் தொடர்ந்து பந்துவீச, தடுமாறிக் கொண்டே இருந்தார் புஜாரா! இறுதியாக ஒரு கட்டத்தில், ஹேசில்வுட்டின் பந்தில், தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் புஜாரா. இந்தத் தொடரில், இதே முறையில், ஐந்து முறை புஜாரா ஆட்டமிழந்திருக்கிறார் என்பது கண்டனத்துக்குரியதே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சீசனில், இந்தியாவின் சார்பில் அதிக ரன்களைக் குவித்ததற்காகக் கொண்டாடப்பட்ட புஜாரா, ஏன் தனது தவறைத் திருத்திக் கொண்டு மீண்டு வர மாட்டேன் என்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்! இந்தத் தொடரில், சந்தித்த பந்துகளில், புஜாராவின் அட்டாக்கிங் ஷாட் விகிதம் மொத்தமே 7 சதவிகிதம்தான் என்பதே சொல்லும் அவரின் பங்களிப்பு எந்தளவு என்பதனை! ஒன்டவுனில் இறங்கி, லாபுசேன் சதமடிக்க, புஜாராவோ சந்திக்கும் பந்துகளில் மட்டுமே சதத்தைத் தொடுகிறார்.

ஃபார்மை இழந்ததாக சென்ற போட்டியில் வெளியே உட்கார வைக்கப்பட்ட மயாங்க் உள்ளே வந்தார். மறுபுறம் ரஹானேவின் ஆட்டம், தெளிந்த நீரோடை போல ஆர்ப்பாட்டமின்றித் தொடர்ந்து கொண்டே இருந்தது. 30 ரன்களைக் கடந்து அவர், நம்பிக்கையளித்துத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஆனால், இறுதியில், அவுட்சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் ஸ்டார்க் வீசிய பந்தை டிரைவ் செய்ய முயன்று முடியாமல் போய், வேடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், ரஹானே. தன்னைச் சிக்க வைக்க வீசப்படும் தூண்டில் எனத் தெரிந்தும், ஒரு சரியான பந்தை விட்டுவிடாமல் ஆடி, தனது விக்கெட்டையும் ரசிகர்களின் நம்பிக்கையையும் சேர்த்தே தூக்கி எறிந்து சென்றார் ரஹானே! அணியின் ஸ்கோர் 144/4.
#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

செட்டில் ஆகி இருந்த இரண்டு பேட்ஸ்மேன்களையும் இழந்து இடிந்து போய் அமர்ந்தது இந்தியா. பன்ட் உள்ளே வந்தார். ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த மயாங்க்கும், ஹேசில்வுட் பந்தில் வெளியே போகும் பந்தை அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். கில்லைத் தவிர விளையாடிய மற்ற அத்தனை வீரர்களும், ஆரம்பத்தில் நன்றாகத் தொடங்கினாலும், அதனை அங்கிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டுமென்ற முயற்சியைச் செய்யவில்லை. வாஷிங்டன் சுந்தர் உள்ளே வந்தார்.

மயாங்க் சென்ற சில ஓவர்களிலேயே பன்ட்டும் மிகத் தவறான ஷாட் ஆடி நடையைக் கட்டினார். இந்தியாவின் மிடில் ஆர்டரை முடித்து வைத்தது ஆஸ்திரேலியா. 186 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த இந்தியா, 183 ரன்கள் பின்தங்கி இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவின் டெய்ல் எண்டர்களின் கதை தெரிந்ததுதானே?! 200 ரன்களுக்குள் இந்தியா அத்தனை விக்கெட்டுகளையும் இழந்துவிடத்தான் போகிறதென உடைந்து போன ரசிகர்கள், எத்தனையோபேர் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்திருப்பார்கள். எனினும் மனம் கேட்காமல், அவ்வப்போது வந்து இணையத்தில், ஸ்கோரைப் பார்க்கும்போது கூட, ரன்களைப் பார்க்காமல் விக்கெட்டுகளின் எண்ணிக்கையையே பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள். அது அத்திப்பூத்தாற் போல் இன்று ஆறு என்ற எண்ணிலேயே நங்கூரமிட்டு, வெகுநேரத்திற்கு நின்று விட்டது, நம்பவே முடியாத ஆச்சர்யத்தை அனைவருக்கும் அளித்திருக்கும்! சுந்தர்- தாக்கூர் கூட்டணிதான் இதனைச் செய்து காட்டியது.

தேநீர் இடைவேளையையும் கடந்து தொடர்ந்தது இந்தக் கூட்டணி! முன்வரிசை வீரர்களால் சாதிக்க முடியாததைச் சாத்தியமாக்கினர், இந்த ஆல்ரவுண்டர்கள்! ஆஸ்திரேலிய பெளலர்களை 36 ஓவர்கள் ஓட வைத்து, பந்து போட வைத்து, களைப்பாக்கினர். தாக்கூர் கம்மின்ஸ் பந்தில் சிக்ஸ் அடித்து தனது கணக்கைத் துவங்க, அட்டகாசமாக ஒரு தேர்ந்தெடுத்த பேட்ஸ்மேன் போல் ஆட ஆரம்பித்தார். மறுபுறம் சுந்தர் தனக்குக் கிடைத்த தவறான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றிக் கொண்டிருந்தார்.

#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

'உனக்கொன்று எனக்கொன்று!' என ஆளுக்கொரு அரைச்சதத்தை அடித்ததுடன், 100 ரன் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தது இந்தக் கூட்டணி! மற்ற அணிகளின் டெயில் எண்டர்களின் விளாசல்களை, பார்த்துச் சலித்த கண்களுக்கு, நமது லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் கண்ணுக்குக் குளிர்ச்சி சேர்த்தது. பயமுறுத்தும் பிரிஸ்பேனின் பவுன்ஸ்களைத் தாக்குப்பிடிப்பதே பெரிய விஷயமெனில், இவர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலியா பௌலர்களுக்கே நெருக்கடி கொடுத்ததுதான் மாஸ்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் ஜடேஜா, மூன்றாவது போட்டியில் அஷ்வின் மற்றும் விஹாரி ஆகியோர் பார்ட்னர்ஷிப் போட்டு எதிர்பாராத நேரத்தில் எழுச்சியுற்றதைப் போல, இந்தப் போட்டியின் திருப்புமுனையாய் இந்தியாவின் ரட்சகர்கர்களாய் மாறிப் போனார்கள். இறுதியில் தாக்கூரின் விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்திய போது, இந்தியா வெறும் 60 ரன்கள்தான் பின்தங்கி இருந்தது! இந்தியாவை மீட்டெடுக்கும் ஓர் அற்புத இன்னிங்ஸை நிகழ்த்திக் காட்டிவிட்டனர் இவர்கள் இருவரும்! தாக்கூர் மூன்று விக்கெட்டுகளுடன் மட்டுமல்லாமல், தனது அரைச்சதத்தின் வாயிலாகவும், அணிக்கான சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்.

காயத்திலிருந்து மீண்டு வந்திருந்த சைனியை ஒருபுறம் வைத்துக் கொண்டு மறுபுறம் சுந்தர் ஆடிய ஆட்டம் வெகுநேரம் நிலைக்கவில்லை. சைனி ஹேசில்வுட் பவுன்சரில் அவுட் ஆனார் என்றால், ஸ்டார்க்கின் வேகத்தில் சிக்கி, கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சுந்தர். 161/5 என்று இருந்த ஸ்கோரை, தனது பொறுப்பான ஆட்டத்தால், 328க்கு எடுத்துச் சென்ற பின்னரே ஆட்டமிழந்தார் வாஷி. ஜடேஜா, அஷ்வின் இல்லாத நிலையில் பின்வரிசை பேட்டிங்கைப் பலப்படுத்தும் விதமாக, குல்தீப்பை பின்தள்ளி சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டதுக்குப் பல விமர்சனங்கள் எழுந்தன. மூன்று விக்கெட்டுகள், பேட்டிங்கில் முதல் அரைச்சதம் என இதற்கு மேல் அறிமுகப் போட்டியில் என்ன சிறப்பான சம்பவத்தை நிகழ்த்தி விட முடியும்?! அத்தனை விமர்சனங்களுக்கும் பந்தால் மட்டுமின்றி பேட்டாலும் பதில் சொல்லி இருக்கிறார் சுந்தர். ரெட் பால் கிரிக்கெட்டிலும் தன்னால் ஜொலிக்க முடியுமென்ற சமிக்ஞையையும் பிசிசிஐக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

கடைசியாக, ஹேசில்வுட்டின் பந்தில் போல்டாகி, சிராஜ் ஆட்டமிழக்க, 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவை விட 33 ரன்கள் மட்டுமே பின்தங்கி இருந்தது இந்தியா. 150-க்கு மேல் பின்தங்கி இருப்போமோ எனப் பயந்த அந்த இடைவெளியை, தங்களது 123 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் முற்றிலுமாய் குறைத்து விட்டனர் இன்றைய கதாநாயகர்கள் சுந்தர் மற்றும் தாக்கூர். ஆஸ்திரேலியா தரப்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹேசில்வுட் அசத்தினார். 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினர் வார்னர் மற்றும் ஹாரிஸ். ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி, 21 ரன்களுடன் முடித்தது ஆஸ்திரேலியா.

நெருக்கடியான நேரங்கள்தான், நம்மைப் பரிட்சித்துப் பார்த்து நம்மை நமக்கே பரிட்சியமாக்கும்! அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டுள்ளது இந்திய அணி. இந்தியாவின் முதல்தர வீரர்கள் முதல் இரண்டாம், மூன்றாம் நிலை வீரர்கள் வரை அனைவருக்கும், பயிற்சி ஆட்டம் போல் மாறிவிட்டது இந்தத் தொடர்! ஆனால் அதனை ஃப்ரெண்ட்லி போட்டியாக ஆடாமல், முழு அர்ப்பணிப்புடன் ஆடி, தங்களால் இயன்ற வரை அணியை உச்சத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் இந்திய வீரர்கள்.

இரண்டு நாள் ஆட்டமும், இருபக்கமும் இன்னொரு இன்னிங்ஸும் எஞ்சி இருக்கும் நிலையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது பிரிஸ்பேன் டெஸ்ட்! இந்தியாவுக்கு இலக்காக எவ்வளவு ரன்களை நிரண்யிக்கப் போகிறது ஆஸ்திரேலியா?! சஸ்பென்ஸ் காத்திருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism