Published:Updated:

Ashes: கடைசி பந்தில் வீழ்ந்த ரூட், மலானும் காலி; இங்கிலாந்து தோல்வி முகம்! அதிசயம், அற்புதம் நிகழுமா?

ஆஸ்திரேலியா ( Cricket Australia )

கடைசி நாளில் 386 ரன்களை அடிக்க வேண்டும் அல்லது 90 ஓவர்களுக்கு நின்று டிரா செய்ய வேண்டும். கடந்த ஆஷஸில் ஹெட்டிங்லி போட்டியில் ஸ்டோக்ஸ் நிகழ்த்தியதை போன்ற ஒரு மேஜிக்கை இங்கேயும் நிகழ்த்தினால்தான் போட்டியை டிரா செய்ய முடியும். அசாத்தியம் நிகழுமா?

Ashes: கடைசி பந்தில் வீழ்ந்த ரூட், மலானும் காலி; இங்கிலாந்து தோல்வி முகம்! அதிசயம், அற்புதம் நிகழுமா?

கடைசி நாளில் 386 ரன்களை அடிக்க வேண்டும் அல்லது 90 ஓவர்களுக்கு நின்று டிரா செய்ய வேண்டும். கடந்த ஆஷஸில் ஹெட்டிங்லி போட்டியில் ஸ்டோக்ஸ் நிகழ்த்தியதை போன்ற ஒரு மேஜிக்கை இங்கேயும் நிகழ்த்தினால்தான் போட்டியை டிரா செய்ய முடியும். அசாத்தியம் நிகழுமா?

Published:Updated:
ஆஸ்திரேலியா ( Cricket Australia )

அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அணி 82-4 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அணியைக் காப்பாற்றி கரை சேர்க்கும் கேப்டன் ஜோ ரூட் மற்றும் டேவிட் மலான் இருவருமே அவுட் ஆகிவிட்டனர். இனி எதாவது அசாத்தியங்கள் நிகழ்ந்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு நல்லது நடக்கும்.

237 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 45-1 என்ற நிலையில் இருந்தது. மார்கஸ் ஹாரிஸும் நைட் வாட்ச்மேனான நீசரும் நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். முதல் பந்திலேயே ஒரு ரன் அவுட் வாய்ப்பை உருவாக்கிவிட்டு திகிலாகவே தொடங்கினர். அவுட் இல்லையென்றாலும் டைரக்ட் ஹிட்டோடு பாசிட்டிவ்வாக தொடங்கியிருந்த இங்கிலாந்து, இதுவரை இல்லாத வகையில் இன்றைய நாளின் முதல் செஷனில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தியது.

லபுஷேன் மற்றும் ஹெட்
லபுஷேன் மற்றும் ஹெட்
Cricket Australia

நைட் வாட்ச்மேனான நீசரை ஆண்டர்சன் க்ளீன் போல்டாக்கி வெளியேற்றவே அடுத்த ஓவரிலேயே மார்கஸ் ஹாரிஸை ஓவர் தி விக்கெட்டில் வந்து எட்ஜ் ஆக்கி கீப்பரான பட்லரிடம் ப்ராட் கேட்ச் ஆக வைத்தார். ஹாரிஸ் அவுட் ஆன அடுத்த பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தையும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி ப்ராட் எட்ஜ் எடுத்திருப்பார். இது சுலபமான கேட்ச் ஆக பட்லரை எட்டியிருக்கும். ஆனால், பட்லர் அதை டிராப் செய்திருப்பார். இந்தத் தொடர் முழுவதுமே பட்லரிடம் ஒரு விநோதமான குணாதிசயத்தை பார்க்க முடிகிறது. இயல்பாகக் கையில் சிக்காத மிகவும் கடினமான கேட்ச்களை தனக்குள் இருக்கும் ஸ்பைடர்மேனை தட்டி எழுப்பி அசாத்தியமாகப் பிடித்துவிடும் பட்லர், அதற்கடுத்து சாதாரண கேட்ச்சுகளை பரிதாபமாக கோட்டை விடுகிறார். இதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். முதல் இன்னிங்ஸில் டேவிட் மலானுக்கு இப்படிச் செய்திருந்தார். இந்த முறை ஸ்மித்துக்கு அப்படிச் செய்திருந்தார்.

ஆனால், அடுத்த பந்திலேயே ஸ்மித்துக்கு பேடில் வீசி ப்ராட் lbw க்கு பயங்கரமாக அப்பீல் செய்திருப்பார். ரிவியூவ்வும் எடுத்திருப்பார்கள். அது Impact மட்டும் Umpires Call என வரவே அதுவும் மிஸ் ஆனது. முதல் இரண்டு பந்துகளிலேயே ஸ்மித் அபாயத்தை கடந்திருந்தார். ஆனால், அவரும் நீண்ட நேரம் நிற்கவில்லை. 6 ரன்களில் ஆலி ராபின்சன் வீசிய ஒரு ஷாட் பாலை ஃபைன் லெக்கில் தட்ட முயன்று பட்லரிடமே கேட்ச் ஆகியிருந்தார். இந்த முறை பட்லர் கச்சிதமாக அந்த கேட்ச்சை பிடித்திருந்தார்.

வரிசையாக விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த சமயத்தில் லபுஷேனும் ஹெட்டும் மட்டும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இவர்கள் இருவரும் கொஞ்சம் நின்று ஆடியபோது ஆலி ராபின்சன் திடீரென ஓர் உருமாற்றத்தை மேற்கொண்டார்.

ஆறடி ஆஜானுபாகுவான உடலமைப்போடு வேகப்பந்து வீச்சை வீசிக்கொண்டிருந்தவர் திடீரென ஸ்பின்னராக மாறி ஆஃப் ஸ்பின் வீசி சர்ப்ரைஸ் கொடுத்தார். 3 ஓவர்களுக்கு ஆஃப் ஸ்பின் வீசியிருந்தார்.

டிராவிஸ் ஹெட் இடது கை பேட்ஸ்மேன். முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் பந்துவீச்சிலேயே ஹெட் போல்டாகியிருப்பார். இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜோ ரூட்டே பந்துவீசலாமென்றால், அவர் இன்றைய நாளில் போட்டி தொடங்குவதற்கு முன்பு பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் தாமதமாகத்தான் ஃபீல்டுக்கே வந்திருந்தார். அதனால், அவர் வீச வேண்டிய சில ஓவர்களை ஸ்பின்னராக மாறி ராபின்சன் வீசினார். வேகப்பந்து வீச்சை போன்றே ஸ்பின்னராகவும் நன்றாகவே வீசினார். உணவு இடைவேளைக்கு பிறகு, ரூட் தயாராகிவிட்டதால் ராபின்சன் மீண்டும் வேகப்பந்து வீச்சுக்கே திரும்பினார்.

ராபின்சன்
ராபின்சன்
ICC

வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்ததால் கொஞ்சம் டிஃபன்ஸிவ்வாக ஆடிக்கொண்டிருந்த லபுஷேன் + ஹெட் கூட்டணி, உணவு இடைவேளைக்கு சில ஓவர்கள் முன்பிருந்தே அதிரடியை ஆரம்பித்துவிட்டது. மூன்றாவது செஷனுக்கு முன்பாக சாத்தியமே இல்லாத ஓர் இலக்கை இங்கிலாந்துக்கு டார்கெட்டாக்கி, இரவு நேர மின்னொளியில் அவர்களை பேட்டிங் ஆட வைத்துவிட வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் திட்டம். இதை மிகச்சிறப்பாக செய்து முடித்தனர். ஆண்டர்சன், ப்ராட் ஆகியோரின் ஓவர்களில் 10 ரன்களுக்கு மேல் அடித்திருந்தனர். லபுஷேன், ஹெட் இருவரும் அவுட் ஆன பிறகும் க்றிஸ் க்ரீன், ஸ்டார்க், ரிச்சர்ட்சன் ஆகியோர் வேகமாக ரன்கள் சேர்த்தனர். ஜை ரிச்சர்ட்சன் அவுட் ஆன உடன் 467 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது.

இன்றைய நாளில் இரண்டாம் செஷனில் கடைசி அரை மணி நேரமும் மூன்றாவது செஷனும் முழுமையாக மீதமிருந்தது.

இங்கிலாந்து அணிக்கு 468 ரன்கள் டார்கெட். இங்கிலாந்தின் தற்போதைய ஃபார்முக்கு இது ஓர் அசாத்தியமான டார்கெட்டே.

அதிகபட்சமாக டிராவை நோக்கி யோசிக்கலாம் அல்லது தோல்வியை எவ்வளவு தூரம் தள்ளிப்போடலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம். ஆனால், இங்கிலாந்தின் தொடக்கம் ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்தது. முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரோரி பர்ன்ஸ்தான் முதல் பந்தில் ஸ்ட்ரைக் எடுத்திருந்தார். ஸ்டார்க்கின் வெறித்தனமான டெலிவரியில் முதல் பந்திலேயே போல்டை பறிகொடுத்து அவுட் ஆகியிருந்தார். அதன்பிறகு ஆடிய இரண்டு இன்னிங்ஸிலும் ரோரி பர்ன்ஸ் முதல் பந்தில் ஸ்ட்ரைக் எடுக்கவே இல்லை. ஹசீப் ஹமீத்தான் முதல் பந்தில் ஸ்ட்ரைக் எடுத்து ஸ்டார்க்கை எதிர்கொண்டிருந்தார். ஆனால்,

இன்று மீண்டும் ரோரி பர்ன்ஸே முதல் பந்தில் ஸ்ட்ரைக் எடுத்தார். ஸ்டார்க்கை எதிர்கொள்ள தயாரானார். இதுவே ஒரு பாசிட்டிவ்வான விஷயமாகப் பார்க்கப்பட்டது.

இனியும் பின்வாங்குவதில் பிரயோஜனமில்லை. முடிந்தளவுக்கு போராட போகிறோம் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு சொல்வதற்காகவே இந்த மூவ் செய்யப்பட்டதாக தோன்றியது. 150.6 கி.மீ வேகத்தில் ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் பர்ன்ஸ் வெற்றிகரமாக சர்வைவ் ஆகி நின்றார். மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரியை வேறு அடித்தார். முதல் ஓவர் முழுவதும் பெரிய தடுமாற்றமின்றி தப்பித்தார். ஆனாலும், இங்கிலாந்தின் வீழ்ச்சி நிகழாமல் இல்லை. ஜை ரிச்சர்ட்சன் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ஹசீப் ஹமீது எட்ஜ் ஆகி அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனார்.

Neser
Neser
Cricket Australia

நம்பர் 3 இல் டேவிட் மலான் களமிறங்கினார். மலான் + பர்ன்ஸ் கூட்டணி கிட்டத்தட்ட 19 ஓவர்களுக்கு நிலைத்து நின்றது. இருவரும் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் நேதன் லயன் அதிக ஓவர்களை வீசியிருந்தார். இருவரும் ரொம்பவே தற்காப்பாகவே லயனை எதிர்கொண்டிருந்தனர். அறிமுக வீரரான நீசர் வந்தே இந்தக் கூட்டணியை பிரித்தார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன்னாக அவர் வீசிய பந்தை பேடில் வாங்கிய மலான் lbw ஆகி வெளியேறினார். கூடுதலாகக் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த பர்ன்ஸ் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஸ்மித்திடம் கேட்ச் ஆனார்.

இதன்பிறகு, ரூட்டும் ஸ்டோக்ஸும் கூட்டணி சேர்ந்தனர். கிட்டத்தட்ட இங்கிலாந்தின் கடைசி நம்பிக்கையாக இந்த கூட்டணியே இருந்தது. இன்றைய நாள் முடிவதற்கு சில ஓவர்களே இருந்ததால் இருவருமே முழுக்க முழுக்க தற்காப்பாகவே ஆடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான்,

இன்றைய நாளின் கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் லீவ் செய்ய வேண்டிய டெலிவரிக்கு பேட்டைவிட்டு எட்ஜ் ஆகி ஜோ ரூட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
Rory Burns Wicket
Rory Burns Wicket

இந்த அதிர்ச்சியோடு நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டார்க் இதற்கு முன்பாக வீசிய ஓவரில் ஜோ ரூட் வாங்கக்கூடாத இடத்தில் அடி வாங்கி அசதியாகியிருந்தார். அந்த அடி ஜோ ரூட்டை நிலைகுலைய செய்து கவனச்சிதறலுக்கு உள்ளாக்கி விக்கெட்டை பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால், நிலைகுலைந்து போனது ரூட் மட்டுமில்லை, இங்கிலாந்தும்தான். டேவிட் மலான், ஜோ ரூட் இவர்கள் இருவரையும் வைத்தே இங்கிலாந்து பிழைத்துக் கொண்டிருந்தது. இவர்கள் இருவருமே இப்போது அவுட்.

கடைசி நாளில் 386 ரன்களை அடிக்க வேண்டும் அல்லது 90 ஓவர்களுக்கு நின்று டிரா செய்ய வேண்டும். ஸ்டோக்ஸ், போப், பட்லர் ஆகியோர் மட்டுமே எஞ்சியிருக்கும் முக்கிய பேட்ஸ்மேன்கள். கடந்த ஆஷஸில் ஹெட்டிங்லி போட்டியில் ஸ்டோக்ஸ் நிகழ்த்தியதை போன்ற ஒரு மேஜிக்கை இங்கேயும் நிகழ்த்தினால்தான் போட்டியை டிரா செய்ய முடியும். அசாத்தியம் நிகழுமா?