Published:Updated:

ஃபின்ச், ஸ்மித் சென்சுரிகள்... போராடிய ஹர்திக், தவான்... ஆனால், இது ஐபிஎல் இல்லையே ப்ரோ!? #AUSvIND

எப்படியும் ஃபின்ச் சீக்கிரமே வெளியேறிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகள் வேறு, சர்வதேச ஒருநாள் போட்டிகள் வேறு என்பதை நிரூபித்தார் ஃபின்ச்.

கிட்டத்தட்ட ஏழு மாத இடைவெளிக்குப்பிறகு இன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கியது. இடையில் லீக் போட்டிகள் நடந்தாலும் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் ரசிகர்களின் ஆரவாரத்தோடு இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. #AUSvIND

சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரண்டு அணிகளின் ப்ளேயிங் லெவனுமே எதிர்பார்த்தது போலவே இருந்தது. இந்திய அணியில் சாம்சன், மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்கூர் போன்றோர் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். மயாங்க் அகர்வால், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ஓப்பனர்களாக ஃபின்ச்சும், வார்னரும் களமிறங்கினர். வார்னர் ஐபிஎல்-லிலேயே வெறித்தனமான ஃபார்மில் இருந்தார். ஆனால், ஃபின்ச் ஆர்சிபி அணிக்காக ஆடி மொத்தமாக சொதப்பியிருந்தார். அதனால், எப்படியும் ஃபின்ச் சீக்கிரமே வெளியேறிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகள் வேறு, சர்வதேச ஒருநாள் போட்டிகள் வேறு என்பதை நிரூபித்தார் ஃபின்ச். மிகவும் பொறுமையாக ஆடத்தொடங்கிய ஃபின் செட்டில் ஆவதற்கான நேரம் எடுத்துக்கொண்டு அதன்பிறகு அதிரடியாக ஆட ஆரம்பித்தார்.

#AUSvIND
#AUSvIND

இந்தியா சார்பில் முதல் ஓவரை ஷமி வீசினார். அடுத்தடுத்த ஓவர்களை பும்ராவும் ஷமியும் மாறி மாறி வீச இந்த ஸ்பெல்லில் வார்னர்-ஃபின்ச் கூட்டணி பெரிதாக எந்த ரிஸ்க்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, ஷமி தொடர்ந்து வீசிய சரியான லைன் அண்ட் லென்த் பந்துகளை ஜாக்கிரதையுடனே சமாளித்துக் கொண்டிருந்தது இந்த கூட்டணி. பும்ரா வீசிய 2 வது மற்றும் 4 வது ஓவரில் மட்டும் வார்னரும் ஃபின்ச்சும் ஆளுக்கொரு பவுண்டரியை அடித்துக்கொண்டனர். முதல் 10 ஓவர்களில் இருவருமே பெரிதாக எந்த ரிஸ்க்கும் எடுக்காததாலும், பிட்ச்சும் பௌலிங்கிற்குத் துணை செய்யும் வகையில் இல்லாததாலும் 51 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது ஆஸ்திரேலிய அணி. பவர்ப்ளேயில் பும்ரா மற்றும் ஷமி வீசிய ஸ்பெல் விக்கெட் இன்றியே முடிந்தது. இதுவே இந்திய அணிக்கு முதல் சறுக்கலாக அமைந்தது. அடுத்ததாக சைனியும் சஹாலும் பந்துவீச வர இப்போது செட்டில் ஆகியிருந்த வார்னர்- ஃபின்ச் கூட்டணி மோசமான பந்துகளை பவுண்ட்ரி அடித்து ஸ்ட்ரைக்கை தொடர்ந்து ரொட்டேட் செய்ய ஆரம்பித்தது. இந்தியாவின் பெரும் நம்பிக்கையான சஹாலை இருவரும் மிகவும் லாவகமாக எதிர்கொண்டனர். 19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைத்தொட, இன்னமும் ஒரு விக்கெட்கூட விழாமல் இருந்ததால் பார்ட்னர்ஷிப்பை உடைக்க பும்ராவை அழைத்து வந்தார் கோலி. பும்ராவின் இந்த ஸ்பெல்லில் இரண்டு ஓவர்களில் 14 ரன்கள் வர எதிர்பார்த்த விக்கெட் மட்டும் கிடைக்கவே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#AUSvIND
#AUSvIND

ஜடேஜாவின் ஓவரும் பாஸிங் ஓவர்களாகத்தான் அமைந்ததே தவிர விக்கெட் விழவில்லை. பும்ராவுக்கு பிறகு அடுத்த ஆப்ஷனாக ஷமியை விக்கெட்டுக்காக அழைத்து வந்தார் கோலி. ஷமியின் இந்த இரண்டு ஓவர் ஸ்பெல்லில்தான் இந்தியாவுக்கு முதல் விக்கெட் கிடைத்தது. ஷமி வீசிய ஆட்டத்தின் 28-வது ஓவரின் 5-வது பந்தில் வார்னர் அவுட் ஆகி வெளியேறினார். யார்க்கர் லென்த்தில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே போடப்பட்ட பந்தை பேட்டால் தட்டி விக்கெட்கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் வார்னர். அம்பயர் அவுட் கொடுக்காத நிலையில் சரியாக முடிவெடுத்து உறுதியாக ரிவியூ கேட்டு வார்னரை வெளியேற்றினார் கோலி.

முதல் விக்கெட் அதுவும் வார்னரின் விக்கெட் கிடைத்துவிட்டதால் இந்திய அணி இந்த இடத்திலிருந்து மீளத் தொடங்கிவிடும் என நினைக்கையில் ஸ்மித் உள்ளே வந்தார். ஸ்மித்தும் ஐபிஎல்-ல் பெரிதாக சோபித்திருக்கவில்லை. ''ஐபிஎல்-ல் நான் சரியான ரிதத்தில் இல்லை. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. சரியான ரிதத்தைப் பிடித்துவிட்டேன்'' என இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்மித் பேசியிருந்தார். அது வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் செயலிலும் காட்டினார் ஸ்மித். முதலில் செட்டில் ஆவதற்கு ஸ்மித் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டார். இந்த கேப்பில் ஏற்கெனவே செட்டில் ஆகி அரைசதத்தை கடந்திருந்த ஃபின்ச் ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்து கியரை மாற்றத் தொடங்கினார். 20 பந்துகளில் 19 ரன்கள் அடித்திருந்த ஸ்மித்தும் ஃபின்ச்சோடு கோதாவில் இறங்க ரன்ரேட் வேகமெடுத்தது. ஒரு கட்டத்தில் ஜடேஜா ஓவரில் 3 பவுண்டரிகள், ஷமி, சஹால் ஓவரில் தலா இரண்டு பவுண்டரிகள் என ஸ்மித் மிரட்டியெடுத்தார். இடையில் ஃபின்ச்சும் தனது 17-வது சதத்தை நிறைவு செய்தார். 100 ரன்னை நெருங்கிக் கொண்டிருந்த இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க மீண்டும் பும்ராவைக் கொண்டு வந்தார் கோலி. இந்த 40 வது ஓவரில் ஸ்கொயருக்கும், ஃபைன் லெக்குக்கும் இடையில் இரண்டு பவுண்டரிக்களை அடித்த ஃபின்ச் அடுத்ததாக பும்ரா வீசிய ஒரு ஷார்ட் பாலை அப்பர் கட் ஆட முயற்சித்து ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 124 பந்துகளில் 114 ரன்களை எடுத்து பொறுப்பான கேப்டன்ஸ் நாக் ஆடிய திருப்தியோடு பெவிலியனுக்குச் சென்றார்.

#AUSvIND
#AUSvIND

அடுத்ததாக, முரட்டு ஃபார்மில் இருக்கும் ஸ்டாய்னிஸ் உள்ளே வந்தார். வந்த வேகத்தில் சஹால் வீசிய 41-வது ஓவரில் சந்தித்த முதல் பந்திலியே எட்ஜாகி ராகுலிடம் கேட்ச் ஆனார். அடுத்ததாக மேக்ஸ்வெல் நம்பர் 5-ல் வந்தார். மேக்ஸ்வெல்லும் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் மோசமான பர்ஃபாமென்ஸையே கொடுத்திருந்தார். ஆனால், இன்றைய போட்டியில் பும்ராவை அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரியாக்கினார். சஹால் வீசிய அடுத்த ஓவரில் இரண்டு ரிவர்ஸ் ஸ்வீப்களை ஆடி ஒரு பவுண்ட்ரியும் சிக்சரும் அடித்தார். அந்த ஓவரின் கடைசி பந்தையும் சிக்சராக்கி அந்த ஓவரில் மட்டும் 21 ரன்களை எடுத்தார். போன மாசம் பார்த்த மேக்ஸ்வெல்லா இது!? என வாய்ப்பிளந்தார்கள் இந்திய ரசிகர்கள். அடுத்து சைனி ஓவரில் பவுண்டரிகளுடன் 14 ரன்கள் அடித்துவிட்டு, ஷமி வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆனில் சிக்சருக்கு முயன்று ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார் மேக்ஸ்வெல். 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 45 ரன்களை என அதிரடி தாண்டவம் ஆடிவிட்டு பெவிலியனுக்குச் சென்றார் மேக்ஸ்வெல். கடைசி 5 ஓவர்களில் ஸ்மித் ஒரு சில பவுண்டரிக்களை அடித்து 66 பந்துகளில் விரைவாக 105 ரன்களை அடித்து கடைசி ஓவரில் ஷமி வீசிய பந்தில் போல்டானார். இன்னிங்ஸின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 374-6 என்ற ஸ்கோரை எட்டியது. இந்தியா சார்பில் ஷமி வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

#AUSvIND
#AUSvIND

375 என்ற பெரிய இலக்கை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியது இந்திய அணி. ரோஹித் ஷர்மா இல்லாததால் மயாங்க் அகர்வாலும் தவானும் ஓப்பனிங் இறங்கினர். இந்திய வீரர்கள் பௌலிங்கில் சொதப்பியதால் சோகத்தில் இருந்த ரசிகர்களை முதல் ஓவரிலேயே குஷிப்படுத்திவிட்டார் மிட்செல் ஸ்டார்க். இவர் வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரில் மட்டுமே 4 வைடுகளோடு ஒரு நோபாலையும் வீசி மொத்தம் 11 பந்துகளை வீசி 20 ரன்களை வாரி வழங்கி இந்திய ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்ட் ஏற்றினார். பாசிட்டிவ் மொமன்டத்தோடு தொடங்கிய இந்திய அணிக்கு ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என மூவரும் வீசிய அடுத்த நான்கு ஓவர்களில் 33 ரன்கள் கிடைத்தது. மயாங்க் அகர்வால் - தவான் இருவருமே ஆஸி பௌலர்களை அட்டாக் செய்வதில் குறியாக இருந்தனர். ஆனால், ஹேசல்வுட் வீசிய 6-வது ஓவரில் ஷார்ட்டர் பாலை லெக் சைடுக்கு சரியாக கனெக்ட் செய்ய முடியாமல் சொதப்பி மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மயாங்க் அகர்வால். அடுத்ததாக, கேப்டன் கோலி வழக்கம்போல நம்பர் 3-ல் களமிறங்கினார்.

#AUSvIND
#AUSvIND

கோலியும் செட் ஆகிவிட்டு அடிப்போம் என்கிற மனநிலையில் இல்லை. வந்தவுடனே அட்டாக் செய்யவே நினைத்தார். கம்மின்ஸ் வீசிய 6-வது ஓவரில் ஒரு ஷார்ட் பாலை சரியாக பிக் செய்ய முடியாமல் ஃபைன் லெக்கில் நின்ற ஆடம் ஸாம்பாவுக்கு ஒரு அழகான கேட்ச் வாய்ப்பை கொடுத்தார் கோலி. அந்த கேட்சை ஸாம்பா கோட்டைவிட்டு சொதப்பினார். அந்த ஓவரிலேயே மேலும் இரண்டு பவுண்டரிகளை அடித்து ஆஸியினரை வெறுப்பேற்றினார் கோலி. கம்மின்ஸின் அடுத்த ஓவரிலும் செம்மையான ஃபிளிக் ஆடி ஒரு சிக்சர் அடித்தார். ஆஸி பௌலர்களை அட்டாக் செய்ய வேண்டும் என நினைத்தாரே தவிர தவானுடன் ஒரு பார்ட்னர்ஷிப்பை மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என கோலி நினைக்கவே இல்லை. ஹேசல்வுட் வீசிய அடுத்த ஓவரிலேயே ஷார்ட் பாலை சரியாக கணிக்காமல் டைமிங் மிஸ் ஆகி ஒரு ஷாட் ஆடி ஃபின்ச்சிடம் கேட்ச் ஆனார் கோலி. 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து கோலி வெளியேற நம்பர் 4-ல் வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் வந்த வேகத்திலேயே ஹேசல்வுட்டின் இன்னொரு ஷார்ட் பாலுக்கு இரையாக இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 80-3 என்றிருந்தது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் இன்னொரு பக்கம் தவான் கொஞ்சம் பொறுமையாக நின்று இன்னிங்ஸை பில்ட் செய்துகொண்டிருந்தார். நம்பர் 5-ல் வந்த கே.எல்.ராகுலும் 12 ரன்களில ஸாம்பா வீசிய ஒரு ஃபுல்டாஸை தட்டிவிட்டு கவர் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4 விக்கெட்டுகள் சீக்கிரமே விழுந்துவிட்ட நிலையில் 14-வது ஓவரிலேயே ஹர்திக் பாண்டியா க்ரீஸுக்குள் வந்தார். அவர் உள்ளே வரும்போது அணியின் ஸ்கோர் 101-4. பாண்டியா முதலில் கம்மின்ஸின் ஒன்றிரண்டு ஓவர்களை மெதுவாக பார்த்தே ஆடினார். ஸாம்பா, ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் மிடில் ஓவர்களை வீச பௌலர்கள் வந்தவுடன் பாண்டியாவும் வேகமெடுக்கத் தொடங்கினார்.

#AUSvIND
#AUSvIND

ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடிக்கத் தொடங்கினார். மேக்ஸ்வெல் வீசிய 23-வது ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து 31 பந்துகளில் அரைசதம் கடந்தார் ஹர்திக் பாண்டியா. இனி வாய்ப்பே இல்லை என்றிருந்த சேஸிங்கை உயிர்பெற வைத்தார் ஹர்திக். அடுத்த ஒன்றிரண்டு ஓவர்களில் மெதுவாக செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருந்த தவானும் அரைசதத்தைக் கடந்தார். டாப் ஆர்டரை சீக்கிரமே வெளியேற்றிவிட்ட ஆஸி பௌலர்களால் தவான்-ஹர்திக் கூட்டணியை அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியவில்லை. கம்மின்ஸ், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் என யாரைப் பயன்படுத்தியும் இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை. ரொம்பவே நேர்த்தியாக ஓவருக்கு ஒரு பவுண்டரி என்ற கணக்கில் ஆடிக்கொண்டிருந்ததால் ரன்ரேட் ப்ரஷரும் எகிறவில்லை. எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருந்தபோது 35-வது ஓவரில் ஸாம்பா வீசிய பந்தை தூக்கியடிக்க முற்பட்டு மிட் ஆஃபில் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார் தவான். 86 பந்துகளில் 74 ரன்களை எடுத்து தவான் வெளியேறியபோது அணியின் ஸ்கோர் 230-5. இன்னும் 15 ஓவர்களில் 146 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஹர்திக்குடன் கூட்டணி சேர்ந்தார் ஜடேஜா. தவான் விக்கெட் விழுந்தவுடன் ரன்வேகம் கொஞ்சம் குறைய 39 வது ஓவரை வீச வந்த ஸாம்பாவிடம் சான்ஸ் எடுக்க முடிவு செய்து லாங் ஆனில் தூக்கியடிக்க பவுண்டரி லைனில் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார் ஹர்திக். அவர் 76 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்தார். 6 விக்கெட் வீழ்ந்த நிலையில் ஜடேஜா மட்டுமே நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக உள்ளே இருந்தாலும், டெய்ல் எண்ட் தொடங்கிவிட்டதாலும், தேவைப்பட்ட ரன்ரேட் 12-ஐ தாண்டிவிட்டதாலும் போட்டி ஆஸ்திரேலியா பக்கம் முழுவதுமாகத் திரும்பியது.

#AUSvIND
#AUSvIND

ஜடேஜாவும் ஸாம்பாவின் பந்தில் சிக்சர் அடிக்க முயற்சி செய்து கேட்ச் ஆக அடுத்ததாக நடந்ததெல்லாம் சம்பிரதாயம்தான். ஷமியும், சைனியும் ஒன்றிரண்டு பவுண்டரிகளை அடித்து ஆறுதல்பட்டுக்கொண்டனர். இறுதியில் இந்திய 50 ஓவர் முடிவில் 308-8 மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. மயாங்க் அகர்வால், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் விக்கெட்டுகளை ஹேசல்வுட்டும் கேஎல்ராகுல், தவான், ஹர்திக், ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை ஆடம் ஸாம்பாவும் வீழ்த்தி ஆஸியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினர்.

இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்த போட்டி இதே சிட்னி மைதானத்தில் வைத்து நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி அந்தப் போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டும்.

இன்றைய போட்டி குறித்து கேப்டன் கோலியிடம் இரண்டு கேள்விகள்...

சமீபமாக ஓப்பனராக இறங்கி நல்ல ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுலை மூன்றாவது டவுனில் இறக்கியது சரியா?
தவான் நல்ல ரிதத்தோடு விளையாடிக்கொண்டிருந்தபோது அவருடன் பெரிய பார்ட்னர்ஷிப்புக்கு முயற்சிக்காமல் அதிரடி ஆட்டம் ஆட ஆசைப்பட்டது சரியா, அதுவும் ஒரு லைஃப் லைன் கிடைத்தப்பிறகும்?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு