Election bannerElection banner
Published:Updated:

பீல்டிங்கில் கோட்டை விட்ட இந்தியா... ஆறுதல் வெற்றி சுவைத்த ஆஸ்திரேலியா! #AUSvIND

Glenn Maxwell
Glenn Maxwell ( Rick Rycroft via AP )

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் என்று சொல்வதுண்டு‌. ஆனால் மூன்றாவது விக்கெட்டை எடுப்பதற்கான வாய்ப்பு, இந்தப் போட்டியில் பல முறை கிடைத்தும் இந்தியா, அதனைத் தவற விட்டது.

ஹாட்ரிக் வெற்றியுடன், வொயிட்வாஷ் செய்யும் ஆசையுடன் களமிறங்கிய இந்தியாவைக் கடைசிப் போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியைச் சுவைத்துள்ளது ஆஸ்திரேலியா. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதைப் போல, ஒருநாள் போட்டிகளில் நடந்ததெல்லாம் வேறு விதமாய் திரும்ப நடந்துள்ளது‌, டி20யில்! மேலும், பத்துப் போட்டிகளில் தொடர்ந்து வென்று சாதனை படைத்திருந்த இந்தியாவைத் தோற்கடித்து அவர்களின் தொடர் வெற்றிக்கும் முடிவுரை எழுதியுள்ளது ஆஸ்திரேலியா.

காயம் காரணமாக கடைசிப் போட்டியில் விளையாடாத ஃபின்ச் இந்தப் போட்டியில் திரும்பவும் உள்ளே வந்து அணித் தலைவராக பொறுப்பேற்றிருக்க, ஸ்டோய்னிஸ் வெளியேற்றப்பட்டருந்தார். இந்தியாவோ மாற்றமின்றிக் களமிறங்கியது. டாஸ் வென்ற இந்தியா, கடந்த இரண்டு டி20 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி செய்ததைப் போலவே ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

Mathew Wade
Mathew Wade
Rick Rycroft via AP

கடந்த போட்டியில் அடித்து நொறுக்கிய அமர்க்கள அரைச்சதத்தால், இந்தப் போட்டியிலும் ஃபின்சுடன் ஓப்பனிங் இறங்கினார், வேட். முதல் ஓவரில், பாரம்பர்யம் மாறாமல், இரண்டு பவுண்டரிகளுடன், ஆஸ்திரேலியா தொடங்கியது. இரண்டாவது ஓவரில், வாஷிங்டன் சுந்தர் பந்தையும் வேர்டு பவுண்டரிக்குத் துரத்த, அந்த ஓவரிலேயே, பவர்பிளேயின் பவர் ஸ்டார், சுந்தர், ஆர்சிபியில் பழகிய பாசத்துடன் ஃபின்சை வெளியேற்ற, ஐபிஎல்லுக்கு பிறகு மறந்திருந்த ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினார் ஃபின்ச். இந்தத் தொடரில் சுந்தர் வீழ்த்திய முதல் விக்கெட் இது.

அடுத்ததாக உள்ளே வந்ததோ ஸ்மித். புதிதாய் இணைந்த இந்தக் கூட்டணி, இந்திய பௌலர்களின் பந்து வீச்சை மிக லாகவமாகக் கையாள, அணியின் ஸ்கோர் மளமளவென உயர, பவர்பிளே முடிவில், 51 ரன்களை எட்டிப் பிடித்தது ஆஸ்திரேலியா. நன்றாக ஆடிய இந்த இருவரும் ரன்ரேட்டை 8 ரன்களுக்கு குறையாமல் பார்த்துகொண்டனர்.

Steve Smith
Steve Smith
Rick Rycroft via AP

9வது ஓவரில், ஸ்மித்க்கு அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பை கேஎல் ராகுல் தவறவிட பெரிய இன்னிங்க்ஸ் ஆடிவிடுவார் ஸ்மித் என பயந்த நிலையில் அதே ஒவரில் அவர் ஸ்டம்ப்பை சிதறச் செய்து மூடுவிழா நடத்தினார், சுந்தர். 48 பந்துகளில் 65 ரன்களைக் குவித்திருந்த பார்னர்ஷிப் முறிய, பத்தாவது ஓவரில்,

மேக்ஸ்வெல் உள்ளே வந்தார்.

அதற்கடுத்த ஓவரிலேயே நடராஜன் வீசிய பந்து, வேட் பேடில் பட, எல்பிடபிள்யூ அப்பீல் செய்தும் அம்பயர் அவுட் தர மறுக்க, அந்தக் குழப்பத்தில் கோலி தாமதித்து ரிவ்யூ கேட்க, அதற்குள் பெரிய திரையில் ரீப்ளே காட்டப்பட, அந்தக் காரணத்தினால், இந்தியாவுக்கு ரிவ்யூ மறுக்கப்பட்டு, நடராஜன் கணக்கில் சேர வேண்டிய விக்கெட் வீணாய்ப் போக, அந்தப் பந்துதான் போட்டியின் போக்கையே மாற்றப் போகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. உண்மையில் நடந்ததும் அதுதான்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் என்று சொல்வதுண்டு‌. ஆனால் மூன்றாவது விக்கெட்டை எடுப்பதற்கான வாய்ப்பு, இந்தப் போட்டியில் பல முறை கிடைத்தும் இந்தியா, அதனைத் தவற விட்டது. சகால் ஓவரில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, விடுவிக்கப்பட்ட ஸ்பிரிங் போல இந்திய ரசிகர்கள் துள்ளிக் குதிக்க, அம்பயர் அதை நோபாலாய் அறிவித்து, ஆசைத்தீயில் தண்ணீர் அள்ளிக் கொட்டினார். கிடைத்த வாய்ப்புகளையல்லாம் ரன்களாக மாற்றிக் கொண்ட இந்த இருவரும் இந்திய பௌலர்கள் அனைவரையும் பாகுபாடின்றி விளாசித் தள்ளத் தொடங்க, குறிப்பாய் சகாலும், தாக்கூரும் 10+ எக்கானமியுடன் சொதப்பினர்.

Sanju Samson
Sanju Samson
Rick Rycroft via AP

ஒருபக்கம் ஆஸ்திரேலியாவின் இந்த அசகாய சூரர்கள், அரைச்சதத்தைக் கடந்து அசத்த, இன்னொரு பக்கம், வாழ்வு தரும் வள்ளல்களாய், இந்திய ஃபீல்டர்கள் சுலபமாய்ப் பிடிக்க வேண்டிய கேட்ச்சை எல்லாம் கைவிட்டுக் கொண்டே இருந்தனர். 52 பந்துகளில், 90 ரன்களைக் குவித்த இந்தக் கூட்டணி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது‌. இறுதியில், அடுத்தடுத்த ஓவர்களில் வேர்டை தாக்கூரும், மேக்ஸ்வெல்லை நடராஜனும் ஆட்டமிழக்கச் செய்ய, அதற்குள் அணியின் ஸ்கோரை 175 ரன்களுக்கு உயர்த்தி, இந்தியாவுக்கு ஏற்படுத்த வேண்டிய அத்தனை இழப்பையும் இருவரும் சிறப்பாய்ச் செய்து முடித்திருந்தனர். அதற்கு அடுத்து வந்த ஷார்ட், இறுதி ஓவரில் ரன் அவுட் செய்யப்பட, சாம்ஸும் ஹென்ரிக்ஸும் இணைந்து 186 என்று ஆஸ்திரேலிய இன்னிங்ஸை முடித்து வைத்தனர்.

இரண்டாவது டி20-ல் இந்தியா பௌலிங்கில் மட்டுமே சொதப்பியது. ஆனால் இந்தப் போட்டியிலோ, ஃபீல்டிங்கிற்கும் சேர்த்தே பில்லி சூனியம் வைத்ததைப் போல, கேட்ச் டிராப்கள் போட்டியின் போக்கையே யூ டர்ன் போட வைத்தன. ஆஸ்திரேலியாவின் பக்கமோ, இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும், வேட் மற்றும் மேக்ஸ்வெல் ரன் வேட்டையாட, 187 என்ற இலக்கை அநாயாசமாக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா பேட்டிங்கில் செய்த அற்புதத்தை, இந்தியாவின் பக்கமும் எதிர்பார்க்கலாமா என இந்தியர்கள் எதிர்பார்க்க, 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்பதைப் போல, மட்டையால் மாயாஜாலம் நிகழ்த்திய மேக்ஸ்வெல் முதல் ஓவரிலேயே, பந்தாலும் பதற வைத்து, ரன் எதுவும் எடுக்காத கேஎல் ராகுலை வெளியேற்றி, ஆயிரம் வோல்ட் ஷாக் கொடுத்த அதிர்ச்சியோடு இந்திய இன்னிங்ஸைத் தொடங்கி வைத்தார்.

வழக்கம் போல ஓப்பனிங்கிற்கு வாஸ்து சரியில்லை என நொந்து கொண்டு உள்ளே வந்தார் கோலி. நிதானமாய் ரன் சேர்க்கத் தொடங்கிய தவான் - கோலி கூட்டணி, மோசமான பந்துகளைத் தண்டித்து 51 பந்துகளில் 74 ரன்களை எட்டிய போது, ஸ்வப்சன் பந்தில் தவான் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாக்கு ஆட்டம் காட்டிய இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது.

Virat Kohli
Virat Kohli
Rick Rycroft via AP

அடுத்ததாய் உள்ளே வந்த சாம்சன் வழக்கம் போல 'நிற்கட்டுமா, போகட்டுமா!' என காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு கிளம்பும் அவசரத்திலேயே விளையாடுபவர் போல், நூடுல்ஸ் செய்யும் இடைவெளியில் ஸ்வப்சன் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் மூன்று டி20இலும் சேர்த்துக்கூட அரைச்சதத்தைக் கடக்காத சாம்சனின் மோசமான ஃபார்ம், இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. சாம்சனைத் தொடர்ந்து உள்ளே வந்த ஸ்ரேயாசையும் ஸ்வப்சன், அடுத்த பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆக்க , 13 ஓவரில் 100 ரன்களை மட்டுமே எட்டி இருந்தது இந்தியா. மீதமுள்ள 42 பந்துகளில் 87 ரன்கள் சாத்தியமா என்ற கேள்வி எழுந்தாலும் ஹிட் ஸ்டார் ஹர்திக் இருக்கையில் கவலையேன், அவருக்கு எட்ட முடியாத இலக்குகள் கூட உண்டா என ரசிகர்கள் கொஞ்சமும் கவலையில்லாமல்தான் போட்டியைக் கண்டனர். ஆனால் உண்மையில் இந்தப் போட்டியில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது கோலிதான். இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் என ஓவருக்கொரு பவுண்டரியையோ சிக்ஸர்களையோ கண்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தார் கோலி. இந்தக் கூட்டணி தொடரும் பட்சத்தில், ஆஸ்திரேலியா வொயிட்வாஷ் ஆவது உறுதி என இந்திய ரசிகர்கள் எக்காளமிட்ட தருணத்தில், அணி 144 ரன்களை எட்டி இருந்த போது, வெற்றி பெறும் கனவுக்கு '144' இட்டதைப் போல, 13 பந்துகளில் 20 ரன்களை எட்டியிருந்த பாண்டியாவை ஜம்பா வீழ்த்த, அப்பொழுதே போட்டி ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பிப் பார்த்தது. எனினும் அதற்கடுத்த பந்திலேயே பவுண்டரிக்கு பந்தை அனுப்பி கோலி தனது இருப்பை நினைவூட்ட, 'இந்தப் போட்டியிலாவது ஜெயித்துக் கொள்கிறோம்!' என ரத்தக் கண்ணீர் வடித்தனர் ஆஸ்திரேலிய ரசிகர்கள். எனினும் அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலேயே டையின் பந்தில் 85 ரன்களுடன் கோலி ஆட்டமிழக்க, நிம்மதிப் பெருமூச்சு விட்டது ஆஸ்திரேலிய முகாம். இந்தத் தருணத்தில்தான் வெற்றி ஆஸ்திரேலியாவின் பக்கம் போய் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது.

எனினும் அதற்கடுத்து உள்ளே வந்த டெயில் எண்டர் தாக்கூர் டையின் ஓவரின் கடைசிப் பந்தை சிக்ஸருக்குத் தூக்க, அதற்கடுத்த கடைசி ஓவரின் முதல் பந்தை சுந்தர் பவுண்டரிக்கு விளாச, ஆஸ்திரேலியாவின் அடிவயிற்றை பயம் கவ்விப் பிடித்த தருணத்தில், அடுத்த பந்திலேயே சுந்தரை அப்பாட் வெளியேற்றினார். எனினும் கொஞ்சமும் அசராமல், அடுத்த பந்தை தாக்கூர் சிக்ஸருக்குத் தூக்க, விடாக்கண்டன் கொடாக்கண்டன்களாய் இருபக்கமும் போட்டித் தொடர, கடைசி மூன்று பந்துகளை சிறப்பாக வீசி அப்பாட் 4 ரன்களை மட்டுமே தர, இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

'கேட்சஸ் வின் மேட்சஸ்' என்பதைப் போல், இந்தியா கைவிட்ட கேட்சுகள், போட்டியை அவர்களைக் கைவிட வைத்தது. வேட் மற்றும் மேக்ஸ்வெல்லின் வெறியாட்டமும் அதிகமான ரன்களை இலக்காய் நிர்ணயிக்கக் காரணமாக, பௌலிங்கிலோ ஸ்வப்சன் எடுத்த மூன்று விக்கெட்டுகளும் போட்டியைப் புரட்டிப் போட்டாலும் பாண்டியா மற்றும் கோலி விக்கெட்டுகள்தான் ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தன‌.

Indian Team with T20 trophy
Indian Team with T20 trophy
Rick Rycroft via AP
2/1 என்று ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலியா வெல்ல, அதே 2/1 என்ற கணக்கில் ஸ்வீட் ரிவென்ஞ்சுடன், இந்தியா டி20 தொடரை வென்று பதிலடி கொடுத்திருக்கிறது. சமபலத்துடன் இருக்கும் இந்த இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டிகள் தொடங்க பத்து நாட்கள் இடைவெளி இருக்கிறது‌. அந்த விருந்துக்காய் ரசிகர்கள் இப்பொழுதே ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கி உள்ளனர்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு