Published:Updated:

கம்பேக் கொடுத்த ஸ்டார்க்… வெறித்தனமான கடைசி ஓவர்… காயம்பட்ட சிங்கமாக கர்ஜித்த ஆஸ்திரேலியா!

மிட்செல் ஸ்டார்க்

ரஸலுக்கு ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒயிடு லைனில் வீசுவதே டெத் பௌலர்களின் வழக்கம். ஆனால், முதல் போட்டியில் ஸ்டார்க் இப்படி வீசித்தான் ரஸலிடம் மரண அடி வாங்கியிருந்தார்.

Published:Updated:

கம்பேக் கொடுத்த ஸ்டார்க்… வெறித்தனமான கடைசி ஓவர்… காயம்பட்ட சிங்கமாக கர்ஜித்த ஆஸ்திரேலியா!

ரஸலுக்கு ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒயிடு லைனில் வீசுவதே டெத் பௌலர்களின் வழக்கம். ஆனால், முதல் போட்டியில் ஸ்டார்க் இப்படி வீசித்தான் ரஸலிடம் மரண அடி வாங்கியிருந்தார்.

மிட்செல் ஸ்டார்க்

3-0 என வெஸ்ட் இண்டீஸிடம் சீரிஸை இழந்த பிறகே ஆஸ்திரேலியாவிற்கு ரோஷம் வந்திருக்கிறது. மிட்செல் மார்ஷின் அதிரடியான பேட்டிங்காலும் ஸ்டார்க்கின் அட்டகாசமான டெத் ஓவரினாலுல் வெஸ்ட் இண்டீஸிற்கு பதிலடி கொடுத்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதன் மூலம் ஆறுதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸை ஒரு பலமிக்க எதிரியாக கருதாமல் பி டீமை கரீபிய தொடருக்கு அனுப்பியிருந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட். இது மிகப்பெரிய தவறான முடிவாக அமைந்தது. இணைந்த கைகளாக வெஸ்ட் இண்டீஸின் டி20 லெஜண்டுகள் ஆஸ்திரேலிய அணியை விரட்டி விரட்டி வெளுத்தனர். ரஸல், பிராவோ, கெய்ல் என வரிசையாக ஆஸி பௌலர்களை அடித்து அடுத்தடுத்து ஃபார்முக்கு வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் எக்கானமி ரேட் 10-க்கும் மேல் போய் ஸ்டார்க்கே தடுமாறியிருந்தார்.

தொடரை 3-0 என இழந்த நிலையிலேயே ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் உஷாரானது. இப்படியே விட்டால் கரீபியர்கள் ஒயிட் வாஷ் செய்து கௌரவத்தை காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள் என்பதால் காயம்பட்ட சிங்கமாக மூர்க்கத்தனமாக தாக்குதலை தொடுக்க தயாரானது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் நடைபெற்ற தொடரின் நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவே பேட்டிங் செய்தது.

மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ்

முதல் மூன்று போட்டிகளிலும் ஏனோதானோவென பேட்டிங் ஆடியிருந்த கேப்டன் ஃபின்ச் இந்த முறை பொறுப்பை உணர்ந்து நன்றாக ஆடினார். மேத்யூ வேட் வழக்கம்போல சீக்கிரமே அவுட் ஆகி வெளியேற, ஃபின்ச்சுடன் மிட்செல் மார்ஷ் கூட்டணி சேர்ந்தார்.

மொத்த ஆஸ்திரேலிய அணியுமே எதோ இன்பச் சுற்றுலாவுக்கு வந்திருப்பதாக நினைத்துக் கொண்டே தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்க, முதல் போட்டியிலிருந்தே பொறுப்பை உணர்ந்து நன்றாக ஆடிய ஒரே வீரர் மிட்செல் மார்ஷ் மட்டும்தான். அவருடைய டி20 கரியரில் இதுவரை 3 அரைசதங்களை மட்டுமே அடித்திருக்கிறார். அந்த மூன்றுமே இந்த தொடரில் அடிக்கப்பட்டவை.

முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்திருந்தாலும், விக்கெட் ப்ரஷரில் அழுத்தத்தில் ஆடியதால் மிட்செல் மார்ஷால் அவ்வளவு இலகுவாக ஆட முடியவில்லை. இப்போது சீரிஸை இழந்தாயிற்று. முதல் பேட்டிங் வேறு அதுவும், பவர்ப்ளேயிலேயே இறங்கிவிட்டார் என்பதால் வெஸ்ட் இண்டீஸில் பௌலிங்கை வெளுத்துவிட்டார். உயரத்தின் பலனாக எக்ஸ்ட்ரா பவுன்சை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருந்த ஒஷேன் தாமஸின் ஓவரில் மட்டும் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர் என அடித்து, க்ரீஸுக்குள் வந்தவுடனேயே அதிரடியை தொடங்கிவிட்டார் மார்ஷ். இன்னொரு பக்கம் ஃபின்ச்சும் நல்ல அதிரடி காட்டினார்.

ஓவருக்கு ஒரு பவுண்டரி சிக்சர் என ரன்ரேட்டை ஜெட் வேகத்தில் கூட்டியது இந்த கூட்டணி. இருவருமே அரைசதம் கடந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்தபோது ஹேடன் வால்ஷ் பந்துவீச்சில் போல்ட் ஆனார் ஃபின்ச். 53 ரன்களில் ஃபின்ச் அவுட் ஆன பிறகு வரிசையாக விக்கெட் விழ ஆரம்பித்தது. ஒரு முனையில் தனது அதிரடியை தொடர்ந்து கொண்டிருந்த மார்ஷும், ஃபேபியன் ஆலனின் பந்துவீச்சில் எட்ஜ் ஆகி வெளியேறினார். 44 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்களுடன் 75 ரன்கள் குவித்திருந்தார் மார்ஷ்.

கடைசி கட்டத்தில் கிறிஸ்டியன் கொஞ்சம் அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணி 189 ரன்களை எட்டியது.

சிமோன்ஸ்
சிமோன்ஸ்

வெஸ்ட் இண்டீஸுக்கு டார்கெட் 190. ஓப்பனிங் இறங்கிய இவின் லூயிஸ், சிம்மோன்ஸ் இருவருமே டாப் கியரில் தொடங்கினர். பவர்ப்ளேயில் கிறிஸ்டியன் வீசிய ஓவரில் 23 ரன்கள், மெரிடித் வீசிய ஓவரில் 15 ரன்கள் என பெரிய ஓவர்களாக அமைய 60+ ரன்களை சேர்த்தது வெஸ்ட் இண்டீஸ்.

லூயிஸ் 31 ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் சிம்மோன்ஸ் நின்று அரைசதத்தை கடந்து 72 ரன்களை எடுத்தார். சிம்மோன்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி டார்கெட்டை நோக்கி சீராக முன்னேறியிருந்தது. அவர் அவுட் ஆன பிறகு, கடைசி 5 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. ரஸலும் ஃபேபியன் ஆலனும் க்ரீஸில் இருந்தனர்.

இருவரும் சிறப்பாக ஆடி ஆட்டத்தை நெருக்கிக் கொண்டு வந்தனர். மெரிடித் வீசிய 19-வது ஓவரில் மட்டும் 25 ரன்கள் வந்திருந்தது. ஆலன் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து அவுட் ஆகியிருந்தார்.


இப்போது கடைசி ஓவர் 11 ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கில் ரஸல் இருந்தார். பந்து ஸ்டார்க்கிடம் இருந்தது. இரண்டே இரண்டு ஷாட்டுகள் போதும் வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு. ரஸல் இருந்த ஃபார்முக்கு இதெல்லாம் ஜுஜுபி. ஏனெனில் முதல் போட்டியிலேயே ஸ்டார்க்கின் தலைக்கு மேல் மூன்று சிக்சர்களை அடித்து மிரட்டி இருந்தார் ரஸல். ஸ்டார்க்கும் இந்த தொடரில் சுமாராகவே வீசியிருந்தார். எப்படியும் வெஸ்ட் இண்டீஸ்தான் ஜெயிக்கப்போகிறது என்ற நிலையில் நடந்தது அந்த ட்விஸ்ட்.

முதல் நான்கு பந்துகளையும் டாட் பால் ஆக்கிய ஸ்டார்க், கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வெற்றிபெறச் செய்தார். வெறித்தனமான கடைசி ஓவர் அது!

ஃபேபியன் ஆலன்
ஃபேபியன் ஆலன்

ரஸலுக்கு ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒயிடு லைனில் வீசுவதே டெத் பௌலர்களின் வழக்கம். ஆனால், முதல் போட்டியில் ஸ்டார்க் இப்படி வீசித்தான் ரஸலிடம் மரண அடி வாங்கியிருந்தார். அதனால் இந்த முறை ரவுண்டி தி விக்கெட்டில் வந்து லெக் ஸ்டெம்ப் லைனில் உடம்புக்குள் வீசினார் ஸ்டார்க். டீப் லெக், டீப் மிட் விக்கெட், ஷார்ட் ஃபைன் லெக் என ஃபீல்ட் செட்டப்பும் அதற்கேற்றவாறு வைக்கப்பட்டிருந்தது. இப்படி ஸ்டார்க் டைட்டாக காலுக்குள் வீசிய பந்துகளில் ரஸலால் ஷாட்டே ஆட முடியவில்லை. முதல் நான்கு பந்துகள் டாட். அடுத்த பந்தில் இரண்டு ரன். கடைசி பந்தில் மட்டும் ஒரு பவுண்டரி. இந்த போட்டியில் ஸ்டார்க் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால், போட்டியை வென்று கொடுத்தது அவர்தான்.

எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட ஆஸ்திரேலிய அணி இப்போதுதான் விழித்திருக்கிறது. காயம்பட்ட சிங்கமாக ஆஸ்திரேலியா அடித்திருக்கும் அடி இந்த தொடரை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கிறது.