Published:Updated:

கூண்டோடு கைலாசம்... ரவி சாஸ்திரி, விக்ரம் ரத்தோர், பரத் அருண்... பயிற்சியாளர்கள் நீக்கப்படவேண்டுமா?!

ரவி சாஸ்திரி - கோலி
News
ரவி சாஸ்திரி - கோலி

மும்பை இந்தியன்ஸுடன் பணியாற்றி வரும் ஜாகிர்கானை பெளலிங் கோச்சாக்குங்கள், நடராஜன் போன்றவர்கள், அவர் கைப்பட்டால் ஜொலிப்பார்கள் என்ற கோரிக்கை வலுக்கிறது.

தொடரும் அவமானகரத்தோல்விகளுக்கு யார் காரணம், யார் நீக்கப்படவேண்டும் என்கிற கேள்விகள் தொடர்ந்து கேட்டகப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அடிலெய்ட் டெஸ்ட் நடந்து முடிந்து மூன்று நாட்கள் ஆகியும், தோல்வியை ஜீரணிக்க முடியாமல் இன்னமும் இதற்கான காரணங்களைக் கிளறித் தேடியெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர் இந்திய ரசிகர்கள்!

நியூஸிலாந்து தொடரில் ஏற்பட்ட மரண வலியைத் தொடர்ந்தே, ரவி சாஸ்திரி மற்றும் மற்ற கோச்களை கூண்டோடு மாற்ற வேண்டும் என்று இங்கொன்றும் அங்கொன்றுமாய், சன்னமாய்க் கேட்ட குரல்கள், இப்பொழுது பிசிசிஐக்குக் கேட்கும்படியாக, சத்தமாய் ஒலிக்கின்றன!

எங்கே தவறுகிறது இந்தியா?!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த காலப் பயிற்சியாளர்கள்!

அன்ஷுமன் கெய்க்வாட், கபில் தேவ் உள்ளிட்ட இந்திய பயிற்சியாளர்கள் இருந்த இந்திய அணிக்கு, புதிய யுத்திகளைப் புகுத்தவும், 2003 உலகக் கோப்பையையும் மனதில் நிறுத்தி அணியை வடிவமைக்கவும், வெளிநாட்டு பயிற்சியாளர் வேண்டும் என்பதை கேப்டன் கங்குலி வலியுறுத்த, 2000-ம் ஆண்டு ஜான் ரைட் உள்ளே வந்தார். அவரைத் தொடர்ந்து கிரெக் சேப்பல், 2011 உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேரி கிரிஸ்டன், ஃபிளட்சர் என வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கடியில் மெருகேறிக் கொண்டே வந்தது இந்தியா.

கபில்தேவ், விராட் கோலியுடன் ரவி சாஸ்திரி
கபில்தேவ், விராட் கோலியுடன் ரவி சாஸ்திரி
Twitter

2014 இங்கிலாந்து தொடரில் ரவி சாஸ்திரி டீம் டைரக்டராக நியமிக்கப்பட்டு இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் ஃபிளட்சரோடு இணைந்து பணியாற்றி வந்தார். 2015 உலககோப்பையுடன் ஃபிளட்சரின் பதவிக்காலம் முடிவுக்கு வர, அடுத்த ஓர் ஆண்டு பயிற்சியாளரே இல்லாமல் ரவி சாஸ்திரி டீம் டைரக்டராக அணியை வழி நடத்தினார். இதன் பிறகு 2016-ல் அனில் கும்ப்ளே பதவி ஏற்றார். இவரின் ஓராண்டு வழிகாட்டுதலில் பல உயரங்களை இந்தியா எட்டிப் பிடிக்க, துரதிஷ்டவசமாக, கோலிக்கும் அவருக்குமான மனக்கசப்பின் காரணமாக, கும்ப்ளே பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, சச்சின், கங்குலி, லட்சுமணன் என பிசிசிஐயால் அமைக்கப்பட்ட கிரிக்கெட் அட்வைஸரி கமெட்டி ரவி சாஸ்திரி, டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், ஷேவாக், லால்சந்த் ராஜ்புட் என பல பேரை நேர்முகதேர்வு செய்து ரவி சாஸ்திரியை பயிற்சியாளாராக அறிவித்தது. கேப்டன் கோலி ஆதரவுடன் மீண்டும் பயிற்சியாளரானார் சாஸ்திரி. அவர் பயிற்சியாளாராக பதவியேற்றபோது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 8 கோடி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இரண்டாண்டுகள் பதவியில் நீடித்த பின், 2019-ல் அவரது பதவிக்காலம் முடிவுக்குவர கபில்தேவ் தலைமையில் அமைந்த கமிட்டியால் திரும்பவும் 2021 டி20 உலககோப்பை வரை அவரின் பதவி நீட்டிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் சர்வதகுதி நிறைந்த டாம் மூடியைக் கூட வேண்டாமென்று இவருக்குப் பதவியை வழங்கி அழகு பார்த்தது கபில்தேவ் கமிட்டி.

இவரைத் தவிர பரத் அருண் பெளலிங் கோச்சாகவும், ஸ்ரீதர் ஃபீல்டிங் கோச்சாகவும் 2014-ம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் நீடித்து வருகின்றனர். பேட்டிங் கோச்சாக ஐந்தாண்டுகள் இருந்த சஞ்சய் பாங்கர் கடந்தாண்டு உலககோப்பை தோல்வியால் நீக்கப்பட, விக்ரம் ரத்தோர் பேட்டிங் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியத் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து தற்போதைய பயிற்சியாளர்கள் அத்தனை பேரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு, கேள்விக் கணைகள் அவர்களை நோக்கி, சரமாரியாகப் பாய்ந்து வருகின்றன.

கோலி
கோலி

ரவி சாஸ்திரி - விக்ரம் ரத்தோர்!

கோலியின் பேராதரவுடன் 2019-ல் திரும்பவும் பதவிக்கு வந்தாலும், பல காலமாகவே, கிரிக்கெட் ரசிகர்களின் கேலி வட்டத்துக்குள், ரவி சாஸ்திரி தொடர்ந்து சிக்கி வருகிறார். இவரது வழிகாட்டுதலில் இந்தியா ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்றது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் வென்றதுடன், 2018 ஆசியக் கோப்பையையும் வென்றது. எனினும் 2019 உலகக் கோப்பை சறுக்கல், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களிலும் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இப்படி வெற்றி தோல்விகளை சமமாக எதிர்கொண்டு வந்தார் சாஸ்திரி. ஆனால், இந்தாண்டு தொடக்கத்தில், நியூஸிலாந்துக்கு எதிரான தோல்வியே கசப்பான நினைவாய்ப் படிந்திருந்தபோது, கோவிட் அதனை மறக்கடித்திருக்க, தற்போதைய அடிலெய்டு வீழ்ச்சி, சாஸ்திரியை மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கிறது. அதுவும் இன்றைய தேதிக்கு உலகக் கிரிக்கெட் பயிற்சியாளர்களிலேயே அதிகமான சம்பளம் (ஆண்டுக்கு பத்து கோடி) பெறும் ரவி சாஸ்திரியை கேள்வி கேட்பதில் நிச்சயம் தவறில்லை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அணித்தேர்விலிருந்து, களத்தில் பயன்படுத்தப்படும் வியூகங்கள் வரை அனைத்தும் கேப்டன் மற்றும் தலைமை கோச் இணைந்து செய்ய வேண்டியவைதான். அப்படி இருக்கையில் கோலிக்குச் சமமான அதிகாரத்தில் இருந்தும், அதில் தொடர்ந்து அவர் தவறுகளை இழைத்து வருவதும், அது இந்தியக் கிரிக்கெட் மேலேயே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த காலங்களில் பிளேயிங் லெவனில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்காமல், தொடர்ந்து தவறுகள் அவரால் செய்யப்பட்டுக்கொண்டே வருகின்றன. பன்டுக்கு பதில் சாஹாவைத் தேர்ந்தெடுத்ததற்கு, அவரது கீப்பிங் திறமை காரணமாகக் கூறப்பட்டாலும், அதன் பாதிப்பு பேட்டிங்கில் எதிரொளித்தது. பயிற்சிப் போட்டிகளில், மூன்று இன்னிங்ஸில், இரண்டு முறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்த சாஹா, ஒரு இன்னிங்ஸில் மட்டும் 54 ரன்களைச் சேர்ந்திருந்தார். முதல் டெஸ்ட்டிலோ மொத்தமே 13 ரன்கள்தான் அவர் பேட்டிலிருந்து வந்திருந்தது. இவருக்குக் கூட ஏதோ ஒரு சமாதானத்தைச் சொல்லித் தப்பிக்க முடியும். ஆனால் ப்ரித்வி ஷாவின் தேர்வை நிச்சயம் நியாயப்படுத்த முடியாது.

#AUSvIND
#AUSvIND

ஆஸ்திரேலியாவின் பர்ன்ஸ், முதல் இன்னிங்ஸில் தவறான ஷாட்டுகளை ஆடி செய்த தவறை, பயிற்சியாளர் லாங்கர் சரி செய்ய, இரண்டாவது இன்னிங்ஸிலேயே நல்ல கம்பேக் கொடுத்தார், பர்ன்ஸ். ஆனால் இங்கு நிலைமையே வேறு! ஐபிஎல்-ல் இருந்து செய்த தவறையே திரும்பத் திரும்ப ப்ரித்வி செய்தும், அதை ஏன் ரவி சாஸ்திரி, விக்ரம் ரத்தோர் சரிசெய்ய முயலவில்லை? அதைச் சரி செய்யாத காரணத்தால், முதல் இன்னிங்ஸில் நடந்தததைப் போல அச்சுப்பிறழாமல் அதே போன்றதொரு ஷாட்டை ஆடி, அவர் ஆட்டமிழந்தார்! ஒரு வேளை, அதை குறுகிய காலத்தில் சரி செய்ய முடியாதெனில், எல்லோரும் கூறியதைப் போல, அவருக்குப் பதிலாக கில்லையே ஓப்பனிங்கிற்காக எடுத்திருக்கலாமே!

புஜாரா, ரஹானே, விஹாரி, மயாங்க் என அனைவரும் "ஃபுட் வொர்க்கா, கிலோ என்ன விலை?!" என்ற ரீதியில்தான் ஆடி ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய பெளலர்களோ, "நாங்கள் நார்மல் லைன் மற்றும் லென்த்திலேயே பந்துகளை வீசினோம், அதையே அவர்கள் தாக்குப் பிடிக்கவில்லை" என்று கூறி உள்ளனர்.

அப்படியெனில் இதற்கான முன்னேற்பாடான பயிற்சி எதுவுமே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தரப்படவில்லையா? சரி, ஓரிரு விக்கெட்டுகள் விழுந்தவுடனாவது சுதாரித்து, பிளான் 'பி' இருந்திருந்தால் (!) அதனைச் செயல்படுத்தி இருக்கலாமே! இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் தற்போது ரவி சாஸ்திரியும், விக்ரம் ரத்தோரும் இருக்கிறார்கள்.

இதற்கும் மேலாக டெஸ்ட்டில் மிடில் ஆர்டர் பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், இடக்கை ஆட்டக்காரர் ஒருவர் இருந்திருந்தால், பெளலர்களுக்கு கொஞ்சமாவது நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் டெஸ்ட் அணியில் அப்படிபட்ட ஒருவரை ஏன் இன்னமும் 'ரவி அண்ட் கோ' கண்டறியவில்லை என்பதற்கு பதில் இல்லை. உலகக் கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று சஞ்சய் பங்கர் வெளியேறியதைப் போல், ஏன் தற்போது ரவி சாஸ்திரி மற்றும் விக்ரம் ரத்தோர் பதவி விலகக் கூடாது?

ஒருதரப்பு "டிராவிட்டைக் கோச்சாய்க் கொண்டு வாருங்கள், அனில் கும்ப்ளேவைத் திரும்பக் கூப்பிடுங்கள்!" என்று கோரிக்கை விடுக்க, மறுதரப்போ, "வெளிநாடுகளில், தொடர்ந்து இந்தியா சொதப்புவதை மாற்ற, ஏன் இப்போது மீண்டும் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரிடம் இந்திய அணி ஒப்படைக்கப்படக் கூடாது?!'' என்கிறார்கள்.

#AUSvIND
#AUSvIND
James Elsby

ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்!

நியூஸிலாந்து சுற்றுப் பயணத்தின் போதே, "இந்திய அணியின் ஃபீல்டிங் சரியில்லை!" என ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரே சொல்லியிருந்தார். ஆனால் அதனைச் சரி செய்ய எந்த முயற்சியும் செய்யாமல் விட, இந்தத் தொடர் முழுவதுமே இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்பி வருகின்றனர். கேட்ச் டிராப், மிஸ் ஃபீல்டு என எல்லாத் தவறுகளும் ஒருங்கே வந்து கொண்டிருந்து, அதற்கான மொத்த விலையை டெஸ்ட் போட்டியில் கொடுத்து விட்டோம். லாபுசேன், பெய்னின் கேட்ச்களைக் கோட்டை விட்டது, போட்டியையே யூ டர்ன் போட வைத்தது! அப்படியெனில், 'உண்மையில் நமக்கு ஃபீல்டிங் கோச்சென்று ஒருவர் இருக்கிறாரா!?' என்றே கேட்கத் தோன்றுகிறது. 2019-ம் ஆண்டு ஃபீல்டிங்குக்கு என்றே பிறந்த ஜான்ட்டி ரோட்ஸ் தானாகவே முன்வந்து, ஃபீல்டிங் கோச் பதவிக்கு விண்ணப்பித்திருந்தும், அவரைப் பின்னுக்குத் தள்ளி, ஸ்ரீதரையே பதவியில் நீட்டிக்க வைத்தது, பிசிசிஐ!

பெளலிங் கோச் பரத் அருண்!

அணியில் ரவி சாஸ்திரியின் நிழல் என்றால் அது இவர்தான். உண்மையில், நிறைய போட்டிகளில் இவர் வகுத்துக் கொடுத்த வியூகங்கள்தான் வெற்றிக்கு வழிகாட்டியுள்ளன. இந்திய அணியின் 'மாஸ்டர் மைண்ட்' இவருடையதுதான்! பும்ராவை சிறந்த பெளலராய் உருவாக்கியதில் இவரது பங்கு அதிகம்.

சுழற்சி முறையில் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை முன்வைத்திருந்தார் பரத். இப்படி வித்தியாசமாக யோசித்தாலும், கேம் பிளான்களை வடிவமைத்தாலும், அதை வெற்றிகரமாய்ச் செயல்படுத்துவதில் தொடர்ந்து சறுக்கல்கள் நிகழ்கிறது. மும்பை இந்தியன்ஸுடன் பணியாற்றி வரும் ஜாகிர்கானை பெளலிங் கோச்சாக்குங்கள், நடராஜன் போன்றவர்கள், அவர் கைப்பட்டால் ஜொலிப்பார்கள் என்ற கோரிக்கை வலுக்கிறது.

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

ஒரு பயிற்சியாளரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது, அவுட் ஆஃப் பாக்ஸ் எண்ணங்கள்தான். வீரர்களின் சின்னச் சின்ன தவறுகளை களைய உதவுவது, புதுப்புது வழிமுறைகளை அணிக்குள் புகுத்துவது, அதன் மூலமாய் எந்த ஒரு சூழ்நிலைக்கேற்றாற் போலவும் தங்களை மாற்றிக் கொள்ளும் வீரர்களை உருவாக்குவது, இன்றைக்கு மட்டுமே யோசிக்காது, எதிர்காலத்தை மனதில் வைத்து அதற்கேற்றாற் போல அணியைக் கட்டமைப்பது... என இவையெல்லாம்தான் ஒரு பயிற்சியாளருக்கான அடிப்படை தகுதி! இதெல்லாம் நமது பயிற்சியாளர்களிடம் இருக்கிறதா, குறிப்பாக ரவி சாஸ்திரியிடம் இருக்கிறதா என்பதற்கான பதில் தொடரும் தோல்விகளில் தெரிகிறது.

கங்குலிதான் இப்போது பிசிசிஐ தலைவர். 2000-ல் செய்தவற்றை, திரும்பவும் 2020-ல் அவரே செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது! புயலுக்கான ஆரம்ப அறிகுறி, அடிலெய்டில் தெரிந்து விட்டது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் 2021, 2022 டி20 உலகக் கோப்பை, 2023 உலகக் கோப்பை பற்றி நாம் கனவாவது காண முடியும்!