கும்மிருட்டான குகைக்குள் மொத்த தேசமும் பயணித்துக் கொண்டிருந்தாலும், ஆப்கனின் நட்சத்திரங்கள் நிறைந்த கிரிக்கெட் அணி, இருளை விழுங்கி அவ்வப்போது வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டுள்ளது.
எந்த ஒரு பெரிய தொடரிலும், கோப்பையை வெல்வதற்கான எதிர்பார்ப்பு வட்டத்துக்குள் சிக்காத ஏதோ ஒரு அணி, திடீரென ஒன்றிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஆச்சரியத்தைப் பரிசளிக்கும். அப்படிப்பட்ட அணியாக மட்டுமே சில காலம் முன்பு வரை ஆப்கானிஸ்தானும் இருந்து வந்தது. ஆனால், அது மெது மெதுவாக மாறி, அவர்கள் அப்கிரேட் ஆகி வருவதற்கான ஆரம்பகட்ட அறிகுறி ஆசியக் கோப்பையில் தெரிந்திருக்கிறது. இலங்கை மற்றும் பங்களாதேஷினை அட்டகாசமாக வென்றது என்பது மட்டும் இங்கே கவனத்தில் வைக்க வேண்டிய விஷயமல்ல, எப்படி ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தினார்கள் என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆப்கானிஸ்தானின் முகமாக ரஷித் கான்தான் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இருந்து வருகிறார். உலகின் எந்தவொரு மூலையில் உள்ள டி20 லீக் அணியாக இருந்தாலும், அவரைத் தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென்பது அதன் விருப்பமாக இருக்கும். இன்னமும் சொல்லப் போனால், டி20-ல் `நவீன யுக வார்னே' என்றுகூட சொல்லலாம். 6.16 என்னும் அவரது அசர வைக்கும் எக்கானமி மட்டுமல்ல, அதிவேகமாக 100 டி20 விக்கெட்டுகளை (53 போட்டிகளில்) கடந்துள்ளார் என்பதும் அவரது திறனுக்கான சான்றுகள். எந்த ஒரு எதிரணி பேட்ஸ்மேனும் அவரது ஓவர்களை சாய்ஸில் விடுவதற்கு இதுவும் ஒரு காரணம். அவரோடு முஜிபுர் ரஹ்மான் மற்றும் மொகம்மத் நபி ஆகியோரது லெக் மற்றும் ஆஃப் ஸ்பின் இத்யாதிகள்தான், மற்ற அணிகளை நடுங்க வைத்து வருகின்றன.
ஆனாலும், இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால், கடந்த காலங்களில் அவர்களது வேகப்பந்து வீச்சும் பேட்டிங்கும் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. ஆனால், நடந்துவரும் ஆசியக் கோப்பையில் இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டிகளில் பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என முப்பரிமாணத்திலும் ஜொலித்தது ஆப்கானிஸ்தான். எதிரியை எழ எழ அடிப்பது ஒரு ரகமென்றால், எழவே விடாமல் அடிப்பது இன்னொரு விதம். ஆப்கன் தேர்ந்தெடுத்தது இரண்டாவது பாணியைத்தான்.
அதற்கான அடித்தளம், முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே ஃபரூக்கியால் இடப்பட்டது. வீசிய முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகள், இரண்டாவது ஓவரோ மெய்டன் என டி20 ஃபார்மேட்டில் தனது அணியின் கரம் ஓங்குவதற்குத் தேவையான அத்தனையையும் செய்தார். அவரது வேகம், இரண்டு புறமும் பந்தை ஸ்விங் செய்யும் திறன், பந்தின் வேகத்தை வேறுபடுத்துவது என அத்தனையும் அவரை ஆபத்தானவராக மாற்றியிருந்தது. இந்தியாவை அஜந்தா மெண்டீஸ் 2008 ஆசியக் கோப்பையில் துவைத்து எடுத்த போது ஏற்பட்ட அதே தாக்கத்தை, ஃபரூக்கி, தனது ஓவர்களில் நிரப்பியிருந்தார்.

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியிலோ, தாங்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டதைப் போல் சீனியர் வீரர்களான ரஷித் மற்றும் முஜிபுர் இருவருமே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
அரபு மண் சேஸிங்குடன்தான் நட்புறவு பாராட்டும் என்பது தெரிந்தும், இலங்கைக்கு ஆப்கன் கொடுத்த மரண அடியைப் பார்த்திருந்தும், பங்களாதேஷ் தங்களது பௌலிங் படை எந்த ஸ்கோரையும் டிஃபெண்ட் செய்துவிடும் என்று நம்பி, துணிந்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்தப் போட்டியிலோ ஆப்கனின் சுழல் படை, சகலத்தையும் சத்தமின்றி முடித்துவிட்டது. இந்த இரு போட்டிகளிலுமே 100 ரன்களுக்குள் சுருண்டு விடும் பயத்தை, ஆப்கானின் பௌலிங் படை எதிரணிக்கு விதைத்திருந்தது. புதை குழிக்குள் சிக்கிக் கொண்டதை போல, பேட்ஸ்மென்களுக்கு கை கால்களை வீசி பேட்டிங் செய்வதற்கான இடத்தையும் அவகாசத்தையும் கொடுக்காமல் ஹார்ட் லைன் அண்ட் லெந்த்தில் வீசி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதுதான் இரு போட்டிகளிலும் எதிரணியை சொற்ப ரன்களில் சுருள வைத்தது.
இந்த இரு போட்டிகளிலுமே குறைந்த இலக்குதான் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதை எட்டுவது மிக சுலபமான காரியமல்ல. காரணம், இலங்கை மற்றும் பங்களாதேஷின் சிறந்த பௌலர்களும், கொஞ்சம் சூதுகள் சூழ்ந்த Tricky பிட்சும். ஆனாலும் அதனையும் சமாளித்துதான் ஆப்கானிஸ்தான் ஆடியது.
அணியின் கேப்டன் நபி, இதைப் பற்றி சொல்லும் போது, "பௌலர்கள் தங்களது திறனால் பெற்றுத் தந்த குறைந்த ஸ்கோரைக் கூட, எங்களது பேட்டிங் யூனிட்டால் சேஸ் செய்ய முடியாதென்பதே கடந்த காலகட்டங்களில் எங்கள் மீதான விமர்சனமாக இருந்து வந்தது. அதை இந்தப் போட்டிகளில், மாற்றிக் காட்டியிருக்கிறோம்" எனக் கூறியிருந்தார்.
இந்தப் புள்ளியில்தான் ஆப்கன் புதிதாகத் தெரிகிறது. கடந்த 2018 ஆசியக் கோப்பையில் கூட, 50 ஓவர்கள் ஃபார்மேட்டில் ஆடிய போது, இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷை 136 ரன்கள் வித்தியாசத்திலும் ஆப்கன் வென்றிருந்ததுதான். எனினும், சேஸிங் செய்ய வேண்டிய சூழல்களில், பெரும்பாலும் ஆப்கன் சற்றே திணறியிருப்பதுதான் பழைய வரலாறு. இந்தியாவிற்கு சேஸிங்கில்தான் கூடுதல் விருப்பம் என்றால், ஆப்கன் அதற்கு நேர்மாறு. அதைத்தான் இத்தொடரில் மாற்றியிருக்கின்றனர்.

இப்போட்டிகளில், இரண்டாவதாக பேட்டிங் செய்த போதும் கூட, எங்கேயும் சின்ன தடுமாற்றம் கூட ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸில் இல்லை. முதல் போட்டியில் ஓப்பனர்கள் ஹஜ்ரதுல்லா மற்றும் குர்பாஜ் கூட்டணியே போட்டியைக் கிட்டத்தட்ட முடித்து வைத்திருந்தது. இரண்டாவது போட்டியில், பங்களாதேஷ் அவர்களது விக்கெட்டுகளோடு ஆறுதல்பட்டுக் கொண்டனர். ஆனால், இப்ராஹிம் ஜத்ரனை அவர்களால் அசைக்கக் கூட முடியவில்லை. அந்த ஜத்ரன் ஆங்கர் ரோலில் போட்டியின் லகான் கை மாறாமல் பார்த்துக் கொண்டார் என்றால், 17 பந்துகளில், 43 ரன்களைக் குவித்த நஜிபுல்லா ஜத்ரன், ஜித்தனாக மாறி பவர் ஹிட்டிங்கிற்குப் பாடம் எடுத்தார். பங்களாதேஷின் மொத்த இன்னிங்ஸிலும் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே வந்திருக்க, இவர் ஒருவரே ஆறு சிக்ஸர்களை விளாசினார். அடுத்தடுத்த ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக்களில், அவரைப் பார்ப்பதற்கான உத்தரவாதமாக அந்த இன்னிங்ஸ் அமைந்தது.
இவை தாண்டி நபியின் கேப்டன்ஷிப்பிலும் பக்குவம் இருந்தது. ஃபீல்ட் செட் செய்வதிலிருந்து பௌலிங் மாற்றங்கள் வரை சிறப்பாகவே செய்தார். ஒட்டுமொத்தமாக, இந்த இரு வெற்றிகளின் வாயிலாக மற்ற அணிகளையும் தங்களை உற்று நோக்க வைத்துள்ளது ஆப்கானிஸ்தான். `சூப்பர் 4-ல்' இந்தியா, பாகிஸ்தான் இரண்டில் ஒன்றை ஆப்கானிஸ்தான் வெளியேற்றினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அஜய் ஜடேஜா கூறியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு, ஆப்கனின் ஆட்டம் இன்னமும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. பேட்டிங்கில் இன்னமும் நம்பிக்கை அளிக்கின்றனர். வர இருக்கும் உலகக் கோப்பை மீது கண் வைத்து அடுத்தடுத்த நகர்வுகளை திட்டமிடும் ஆப்கானிஸ்தான், தங்களது வேகப்பந்து வீச்சினை ஃபரூக்கி போன்ற வீரர்களால் இன்னமும் பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. சீம் மூவ்மெண்டோடு கைகுலுக்கும் பௌலராக நவீன் இருந்தாலும், இரண்டாவது போட்டியில் அவரது சில பந்துகளை பங்களாதேஷ் டார்கெட் செய்தது. அத்தவறுகள் களைந்து, ஸ்பின்னுக்கு இணையாக வேகப் பந்து வீச்சையும் பலப்படுத்தி விட்டால், ஓவர்சீஸ் சூழல்களிலும் ஆப்கானிஸ்தானால் போட்டிகளை வெல்ல முடியும்.
பௌலிங் பயிற்சியாளரான முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல்லின் கவனம் தற்சமயம் அதில்தான் இருக்கும். உண்மையில் அந்த அளவு பலம் வாய்ந்த, தங்களை மெருகேற்றிக் கொள்ளத் துடிக்கும் ஒரு அணிக்கு அவர்களது நாட்டிலும் அதற்குரிய நல்ல சூழல் அமையவில்லை. வருடத்தின் பாதி நாள்கள், வீரர்கள் மற்ற லீக்குகளில் ஆடித்தான் தங்களது கிரிக்கெட்டை உயிர்ப்போடு வைத்துக் கொண்டுள்ளனர். நேர்மறை சிந்தனையோடு அப்படி அவர்கள் சேகரித்து வரும் புதிய நுணுக்கங்கள்தான் அந்த அணியை இன்னமும் ஓரடி முன்னணி பெற வைத்துக் கொண்டுள்ளது.

"அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான கிரிக்கெட் காலண்டரில் நாங்கள் ஆடவுள்ள பெரும்பாலான போட்டிகள் ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற அணிகளோடுதான் பெரும்பாலும் உள்ளது. பெரிய அணிகளைப் பெரிய மேடையில் மட்டுமே சந்திக்க நேரிடுகிறது. டி20 லீக்கில் ஆடுவது மூலமாக எங்களுக்குக் கிடைக்கும் அதே அனுபவம் மற்ற வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும்!"என ரஷித் கான் ஆதங்கப்பட்டிருந்தார்.
இது மறுக்க முடியாத உண்மை. தங்களது மண்ணில் கோலோச்சிய ஜிம்பாப்வே, தற்சமயம் ஆஸ்திரேலிய தொடரில் கொஞ்சம் சோதனைக்கு உள்ளாகிறது. எனினும், அதுதான் அவர்களது பலவீனங்களை அவர்களுக்குச் சுட்டிக் காட்டி, வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும்.
அந்த வகையில் கிரிக்கெட் வல்லரசுகளுடன் வளர்ந்து வரும் ஆப்கன் உள்ளிட்ட அணிகளை மோதவிட்டால்தான் இந்த அணிகளை அடுத்தடுத்த தளங்களுக்குப் பயணிக்க வைக்கும். ஐசிசி இதைக் கவனத்தில் கொள்ளுமா?