Published:Updated:

ரஞ்சிக் கோப்பை இல்லை... பிசிசிஐ முடிவும், அஷ்வினின் `வெண்ணிற ஆடை' மூர்த்தி கிண்டலும்!

அஷ்வின்
அஷ்வின்

"கொரோனா காரணமாக ரஞ்சிக் கோப்பை போட்டிகளுக்கான தேதியை தயார் செய்வது கடினமாக இருக்கிறது. ஏற்கெனவே ஏராளமான நாள்களை நாம் இழந்துவிட்டோம். ஆகவே, இந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பையை நடத்த வேண்டாம்."

87 ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வந்த ரஞ்சிக் கோப்பை போட்டி கொரோனா சூழல் காரணமாக முதல்முறையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்குக்கூட தடை என்று சூழல் நிலவி பின், பல்வேறு கட்டுப்பாடுகளோடு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் அரபில் நடைபெற்றது. ஆனால், 87 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த ரஞ்சிக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு இல்லை என அறிவித்திருக்கிறது பிசிசிஐ.

இந்தியாவில் முதல் ரஞ்சிக்கோப்பை 1934-ஆம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி சென்னை மற்றும் கர்நாடகா (அன்றைய மெட்ராஸ் மற்றும் மைசூர்) அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. உள்நாட்டு வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் முக்கியமான தொடரான ரஞ்சிக்குத் தடை என்பது இளம்வீரர்களிடையே பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி உள்ளூர் வீரர்கள் ஊதியத்தை இழக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

ரவிச்சந்திரன் அஷ்வின்
ரவிச்சந்திரன் அஷ்வின்

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கொரோனா காரணமாக ரஞ்சிக் கோப்பை போட்டிகளுக்கான தேதியை தயார் செய்வது கடினமாக இருக்கிறது. ஏற்கெனவே ஏராளமான நாட்களை நாம் இழந்துவிட்டோம். ஆகவே, இந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பையை நடத்த வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "விஜய் ஹசாரே கோப்பை, பெண்களுக்காக தேசிய அளவில் நடத்தப்படும் ஒரு நாள் போட்டி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான வினோ மன்கட் கோப்பைக்கான போட்டி நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார். சையது முஸ்தாக் அலி போட்டிக்குக் கடைபிடிக்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை வரும் போட்டிகளுக்கும் கடைபிடிக்கப்படும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விமர்சகர் சுமந்த் சி ராமன், "கொரோனாவால் ரஞ்சிக்கோப்பைக்குத் தடை... ஆனால், 2021 ஐபிஎல் இந்தியாவில் நடக்கலாம்" என்று விமர்சனம் செய்துள்ளார். இந்தப் பதிவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின், ”ஃபேனைக் கண்டுபிடிச்சது யார், டேபிளை கண்டுபிடிச்சது யாரு” என வெண்ணிற ஆடை மூர்த்தி படம் போட்டு, பிசிசிஐ முடிவுக்கு ஆதரவாக பதில் விமர்சனம் செய்துள்ளார்.

Ashwin Tweet
Ashwin Tweet

"ரஞ்சி போட்டிகளோடு, ஐபிஎல் போட்டிகளை ஒப்பிடுவது கொஞ்சமும் பொறுத்தமில்லாத ஒப்பீடு. இந்த பயோபபுள் சூழலில் 38 அணிகளைக் கொண்டு ரஞ்சிக்கோப்பை நடத்துவது மிக மிகக் கடினம்" எனச் சொல்லியிருக்கிறார் அஷ்வின்.

ஆனால், ரஞ்சிக்கோப்பை இளம் உள்நாட்டு வீரர்களுக்குப் பெரும் வாய்ப்பாக இருந்துவருகிறது. அதை ஓர் ஆண்டு நிறுத்துவைப்பது என்பது தவறு என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?! கமென்ட்டில் சொல்லுங்கள்..!

அடுத்த கட்டுரைக்கு