Published:Updated:

`அக்ஸரோடு மூவரானோம்!'- மூவேந்தர்களாக அசத்தும் ஆல்ரவுண்டர் கூட்டணி; முன்வரிசை வீரர்கள் கவனத்திற்கு!

Ashwin - Jaddu ( BCCI )

அஷ்வின் - ஜடேஜா இணைந்து ஆடியுள்ள 45 போட்டிகளில் 462 விக்கெட்டுகளை இந்த இணை வீழ்த்தியிருக்கிறது. சராசரியாக இவர்கள் 10.27 விக்கெட்டுகளை ஒவ்வொரு போட்டிக்கும் சரித்திருக்கின்றனர்.

Published:Updated:

`அக்ஸரோடு மூவரானோம்!'- மூவேந்தர்களாக அசத்தும் ஆல்ரவுண்டர் கூட்டணி; முன்வரிசை வீரர்கள் கவனத்திற்கு!

அஷ்வின் - ஜடேஜா இணைந்து ஆடியுள்ள 45 போட்டிகளில் 462 விக்கெட்டுகளை இந்த இணை வீழ்த்தியிருக்கிறது. சராசரியாக இவர்கள் 10.27 விக்கெட்டுகளை ஒவ்வொரு போட்டிக்கும் சரித்திருக்கின்றனர்.

Ashwin - Jaddu ( BCCI )
சொந்த மண்ணில் ஆடும்போது அணிகளின் பலம் இரட்டிப்பாவது வழக்கம்தானெனினும் இந்தியாவின் விஷயத்திலோ அதனை மும்மடங்காக்குகின்றனர் அஷ்வின், ஜடேஜா மற்றும் அக்ஸர்.

2013 பார்டர் கவாஸ்கர் தொடரில் தொடங்கி நடப்புத்தொடருக்கு முன்புவரை இந்தப் பத்தாண்டுகளில் இந்தியாவில் வைத்து நடைபெற்ற 15 தொடர்களில் பதினைந்தையுமே இந்தியா கைப்பற்றியுள்ளது. அதில் 13 முறை ஒரு போட்டியைக்கூட வெல்லமுடியாதவாறு எதிரணியை வீழ்த்தியிருப்பதோடு பல இன்னிங்ஸ் கணக்கிலான மிகப்பெரிய வெற்றிகளையும் பதிவுசெய்துள்ளது. இவற்றுக்கான முதல் காரணி அஷ்வின், ஜடேஜாவின் மாயாஜாலப் பந்துகளும் பேட்டிங்கும்தான். இந்த கூட்டணியில் இப்போது அக்ஸரும் ஐக்கியமாகியுள்ளார்.

R.Ashwin
R.Ashwin
AP

90-களில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளின் மேல் அதீத காதலை கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியது அவர்களது அசாத்திய பலங்கொண்ட லோயர் மிடில் ஆர்டரின் பேட்டிங் கண்காட்சி. அதன் மீட்டுருவாக்கத்தை சற்றே சாம் கரணின் சாயலிலும்கூட இந்தியா தரிசித்ததுண்டு. டாப் ஆர்டரையே ஆட்டங்காணச் செய்தாலும் லோயர் மிடில் ஆர்டரும் போதாக்குறைக்கு டெய்ல் எண்டர்களும் 'Wagging Tail' ஆக நீண்டு ரசிகர்களின் பொறுமையைச் சோதித்ததுண்டு. மற்ற அணிகளில் எல்லாம் பௌலர்களிடமிருந்து பேட்டிங் மூலம் சிறிதளவேனும் ரன்கள் வந்து சேரும்போது நமது அணியில் மட்டும் அது கானல்நீராகாவே இருந்து வந்தது. இப்போதோ இந்திய லோயர் மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்கள் பேட்டிங்கின்போது கேம் சேஞ்சர்களாக உருமாற்றம் அடைந்து அதனைத் தற்போதைய இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் டெம்ப்ளேட்டாக்கியுள்ளனர்.

1970-களில் இந்தியாவின் `Spin Quartet' உலகையே உலுக்கியது. நிகழ்காலத்தில் அது மேலும் மேன்மையடைந்துள்ளது. இந்திய ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் ரோலர் கோஸ்டராக சுழலும் பந்துகளால் மட்டும் எதிரணியை சுருட்டுவதில்லை, தங்களது பேட்டாலும் கோலோச்சுகின்றனர். `அக்ஸரோடு மூவரானோம்' என இந்த அசைக்க முடியாத கூட்டணி இந்திய பேட்டிங்கின் நீளத்தை அதிகரிப்பதோடு எதிரணியைக் கட்டுண்டு சரணடையவும் செய்கிறது.

நடப்பு பார்டர் - கவாஸ்கர் தொடரில் அதிக ரன்களை இதுவரை எடுத்துள்ளவர்களின் பட்டியலில் டாப் 10-ல் இந்த மூவருமே இடம்பெற்றுள்ளதே அதற்கான சான்று.

அஷ்வின் - அக்சர் பட்டேல் கூட்டணி | IND v AUS
அஷ்வின் - அக்சர் பட்டேல் கூட்டணி | IND v AUS
AP

450 விக்கெட்டுகளைக் கடந்து அஷ்வின் ஒருபக்கம் கொடியேற்ற "விட்டேனா பார்!", என ஜடேஜா கம்பேக் போட்டியிலேயே 5 விக்கெட் ஹாலினைக் கைப்பற்றுகிறார். இரண்டாவது இன்னிங்ஸிலோ "சவாலே சமாளி!", என அஷ்வின் இன்னொரு ஐந்து விக்கெட் ஹாலினை தன் கணக்கில் சேர்க்கிறார். இரண்டாவது போட்டியிலோ அக்ஸருக்கே மிச்சமின்றி தங்களுக்குள்ளேயே விக்கெட்டுகளை செட்டில் செய்து கொள்கின்றனர். அஷ்வின் மட்டுமே மிகப்பெரிய அச்சுறுத்தல் என 'Ashwinphobia' உடன் சுற்றிவந்த ஆஸ்திரேலியாவை அவுட் ஆஃப் சிலபஸில் வந்த ஜடேஜா இன்னமும் கதறவைக்கிறார். மறுபக்கம் அக்ஸரோ பௌலிங்கில் நீங்கள் இருவர் விக்கெட்டுகளை பகிர்ந்துகொண்டால் நான் பேட்டிங்கில் கவனித்துக் கொள்கிறேன் என முக்கியமான நேரங்களில் அணிக்குக் கைகொடுத்து தூக்கிவிடுகிறார்.

ஒரே ஓவரில் உலகின் மிகச்சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்களை அஷ்வின் வேட்டையாடிய விதமே அனைவரையும் கட்டிப்போட்டது. உள்நோக்கிப் பாய்ந்து லபுசேனின் பேட்டின் இன்சைட் எட்ஜோடு நட்புப் பாராட்டிய அந்த ஆஃப் பிரேக்கும், டர்ன் ஆகாமலே ஸ்மித்தின் பேட்டின் அவுட்சைட் எட்ஜோடு பகைமை பாராட்டி வெளியேற்றிய அந்த ஸ்லைடரும் பேரதிசயங்களே. ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து வீசியது அபாயகரமான கோணத்தை ஏற்படுத்த, பந்தின் சீம் பொஷிஸனை சற்றே மாற்றி நினைத்ததை அஷ்வின் முடித்திருந்தார்.

இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அஷ்வின் - ஸ்மித் மோதல் ருசிகரமானதாக நீடித்தது. கோட்லாவின் லோ பவுன்சிங் பிட்சில் தவறான ஸ்ட்ராடஜியாக ஸ்வீப் ஷாட்டை ஆஸ்திரேலியா கையிலெடுக்க அதோடு அவர்களது பயத்தையும் முதலீடாகக் கொண்டே விக்கெட் அறுவடை செய்தார் ஜடேஜா. இரு போட்டிகளில் 17 விக்கெட்டுகளை அவரது பந்து காவு வாங்கியுள்ளது. பேட்டிங்கிலோ இன்னமும் தரமேற்றம் அடைந்துள்ளது இவர்களது கூட்டணி.

அக்ஸர் பட்டேல்
அக்ஸர் பட்டேல்

முதல் டெஸ்டின் இரண்டாவது நாளில் முதல் ஒருமணி நேரம் ரோஹித்துடன் இணைந்து அஷ்வின் ஆடிய ஆட்டமே அவருக்குள் ஒளிந்திருந்த ஸ்பின்னைச் சமாளிக்கும் ஒரு கிளாசிக்கல் பேட்ஸ்மேனைக் காட்சிப்படுத்தியது. பலமுனை ஸ்பின் தாக்குதலையும் பிழையே இன்றி எதிர்கொண்டார். ஜடேஜா - அக்ஸர் இணையோ ஆஸ்திரேலியா ஆட்டங்காணுவதை உறுதிசெய்தது. 240/7 என்ற கணக்கில் இருந்த இந்தியா பழைய அணி போல இருந்திருந்தால் 260 ரன்களைக்கூட தாண்டியிருக்காது. ஆனால் இக்கூட்டணி சகலத்தையும் மாற்றியது. அதுவும் இடக்கை ஆட்டக்காரர்களுக்கு எதிரானதாக சித்திரிக்கப்பட்ட களத்தை இவர்கள் கைப்பற்றி தங்களுடையதாக்கினர்.

சுழல்பந்துகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல இந்திய டாப் ஆர்டருக்கே பாடம் கற்பிப்பதாக இருந்தது அந்த ஆட்டம். ஆளுக்கொரு அரைசதத்தோடு `இன்று போய் நாளை வா!' என இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விடைசொல்ல இவர்களது 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் 400 ரன்கள் எல்லையில் கொண்டு போய் அணியை நிறுத்தியது. நான்காவது இன்னிங்ஸைப் போட்டியிலிருந்து அழிப்பதையும் உறுதி செய்தது. இரண்டாவது போட்டியிலும் அஷ்வின் - அக்ஸரின் 100+ பார்ட்னர்ஷிப்தான் போட்டியின் திருப்புமுனை. இத்தொடரில் என்றில்லை சமீபத்தில் எப்போதெல்லாம் இந்தியா தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் பள்ளத்தாக்கிலிருந்து அதனை மீட்டெடுக்கும் ஆட்டத்தை இந்த மூவரணி ஆடிவருகிறது. அந்த நிலைப்புத்தன்மைக்கான சாட்சியத்தை அவர்களது சராசரி அழுத்தம் திருத்தமாக பதிவேற்றுகிறது.

அஸ்வின் - ஜடேஜா இருவரும் இணைந்து தாங்கள் ஆடியுள்ள 45 போட்டிகளில் 462 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். சராசரியாக 10.27 விக்கெட்டுகளை ஒவ்வொரு போட்டிக்கும் சரித்திருக்கின்றனர். 2020-க்குப் பிந்தைய போட்டிகளில் அவர்களது பேட்டிங்கில் கண்வைத்தால், ஜடேஜாவின் பேட்டிங் ஆவரேஜ் 40.8 (775 ரன்கள்) ஆகவும், அஷ்வினுடையதோ 44.3 (712 ரன்கள்) ஆகவும் மிரட்டுகிறது. தற்போது உலகின் சிறந்த டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் இவர்கள் இருவர்தான் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

மிக அதிசயமாக முன்னிருவர் தவறும் இடைவெளிகளிலெல்லாம் ஐந்தாவது இடத்தில் உள்ள அக்ஸரும் தனது வாகனத்தை முன்செலுத்துகிறார்.

இவர்களது பௌலிங்கிற்கு மட்டுமல்ல பேட்டிங்கிற்குமென தனித்தனி திட்டம் வகுக்கவேண்டிய நிலையில் எதிரணி தடுமாறுகிறது. ஏனெனில் எதிரணியின் பாசறையில் உள்ள எந்த ஆயுதமும் இவர்களை வீழ்த்தும் அளவு வலிமையுடையதாக இல்லை. Juggling-ஐ வியந்து பார்க்கும் கூட்டம் போல இவர்களை அதிசயித்துப் பார்க்க மட்டுமே எதிரணியால் முடிகிறது. வீழ்த்தமுடியாத வேங்கையாக இந்தியா, இந்தியாவில் உருவெடுத்து நிற்பதும் இவர்களால்தான்.

Ravindra Jadeja
Ravindra Jadeja

இந்த ஆல்ரவுண்டர்கள் மட்டுமின்றி டெய்ல் எண்டர்களும் தங்கள் பங்கிற்கு எதிரணிக்கு இக்கட்டை பரிசளிக்கின்றனர். 2021-க்கு பிந்தைய போட்டிகளைக் கருத்தில் கொண்டால், 6 - 11 பேட்டிங் ஆர்டரில் இறங்கும் வீரர்களின் சராசரிக்கான பட்டியலில், 24.36 சராசரியோடு இந்தியா இரண்டாவது இடம் பிடிக்கிறது. ஐந்து சதங்கள் இவர்களிடமிருந்து வந்துள்ளன. இதே காலகட்டத்தில் 19 அரைசதங்களை இந்திய லோயர் ஆர்டர் மட்டுமே எடுத்திருக்கிறது.

35 ரன்களை ஒரே ஓவரில் விளாசி பிராடை ஸ்தம்பிக்க வைத்ததோடு லாராவையே ஓவர்டேக் செய்த பும்ராவின் அந்த இன்னிங்க்ஸ் நினைவிருக்கிறதா? அற்புதமான ஃபுட் வொர்க்கோடு சிக்ஸர்களால் சிறப்பித்த ஷமியின் சமீபத்திய இன்னிங்ஸை மறக்கமுடியுமா? உண்மையில் 'Nightwatchmen became Nightmares' என்றுதான் இதனை வர்ணிக்க முடியும். அந்தளவு டாப் ஆர்டரை விட பின்வரிசை வீரர்கள் சிங்கத்தின் காதில் புகுந்த எறும்பாக எதிரணியை நிலைதடுமாற வைக்கின்றனர். வேர்களையே பெயர்த்தெடுத்தாலும் விழுதுகளோடு மோதியே எதிராளியின் கோடாரி மழுங்கிப் போவதே இங்கே நிதர்சனம்.

ஆகமொத்தம் டாப் ஆர்டரில் யாரோ ஒருவர் மட்டுமே பங்களிக்க, லோயர் மிடில் ஆர்டரும் லோயர் ஆர்டரும் சேர்ந்து மீதத்தை மீட்டெடுப்பதுதான் இந்தியாவின் தற்போதைய நிலை. துணைக்கண்டங்களில் அஷ்வின் - ஜடேஜா இணை இதனை பலமுறை நடத்தியிருக்க இங்கிலாந்தில் பும்ரா - ஷமி, ஆஸ்திரேலியாவில் விகாரி - அஷ்வின் என எடுத்துக்காட்டுக்கள் ஏராளமாகி வருகின்றன. ஒரு கோணத்தில் இது வரமாகப் பார்க்கப்பட்டாலும் இன்னொரு வகையில் இது சாபமே.
Ashwin
Ashwin

ரிலே எனப்படும் தொடர் ஓட்டத்தில் முதலில் ஓடும் வீரர்கள் தவறவிடும் விநாடிகளை ஈடுகட்ட இறுதி வீரர் மூச்சிறைக்க ஓடவேண்டியிருக்கும். இங்கேயும் இதுதான் நடந்தேறுகிறது. லோயர் மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர்கள் சாதிக்கும் ஒவ்வொரு போட்டியும் அவர்களது திறனைக் கடைவிரித்தாலும் முன்வரிசை வீரர்களின் குறைபாடுகளையும் அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. டாப் ஆர்டர், குறிப்பாக மிடில் ஆர்டர் தவறிழைப்பதாலேதான் பின்வரிசை, ஆட்டத்தைத் தங்கள் கைகளில் எடுக்க வேண்டிய சூழல் வருகிறது.

இதனாலேயே, "பிரதான பேட்ஸ்மேன்களின் வேலைதான் என்ன, பேட்டிங், பௌலிங் என அத்தனையையுமே ஆல்ரவுண்டர்கள் என்ற காரணத்திற்காக இவர்களே தலையில் போட்டுக்கொள்ள முடியுமா?" என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன. வெறும் 115 ரன்கள் சேஸ் செய்யும்போதுகூட விக்கெட் இழப்பின்றி அதனை எட்டவேண்டுமென்ற மைண்ட்செட் இந்திய அணிக்குள் வரமறுக்கிறது.

தத்தம் பணிகளை முன்வரிசை வீரர்கள் சரியாகச் செய்யும் பட்சத்தில் அஷ்வின், ஜடேஜா மற்றும் அக்ஸரின் செயல்பாடுகள் மேலும் சிறப்படைந்து அணி வீழ்த்தவே முடியாத உயரத்தை எட்டும்.