மார்ச் 17ம் தேதியை எதிர்கொண்டு சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பாக வேலைகள் நடந்து வருகிறது. கூடவே தோனியும் ஐ.பி.எல் ஐ முன்னிட்டு மைதானத்தில் பயிற்சியை தொடங்கிவிட்டதால் இப்போதே ஐ.பி.எல் ஜூரமும் அடிக்க தொடங்கிவிட்டது. பயிற்சிக்கிடையே தோனி வரும் 17ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்விலும் தோனி கலந்துக்கொள்ளவிருக்கிறார்.
சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கான திறப்பு விழா அன்றுதான் நடைபெறவிருக்கிறது. அந்த ஸ்டாண்டிற்கு 'கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்' என பெயரும் சூட்டப்படவிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார். இது சார்ந்து இன்னும் கூடுதல் தகவல்களுக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணியிடம் பேசினோம். அவர் விகடனுக்கான பகிர்ந்துகொண்ட பிரத்யேக தகவல்கள் இங்கே.
'வருகிற 17 ம் தேதி அந்த திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகேந்திர சிங் தோனி ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துக்கொள்ளவிருக்கின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகாலமாக கட்டமைப்புகளுக்கு அனுமதி கொடுக்காமல் தாமதப்படுத்தினார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முறையாக எல்லாம் பின்பற்றப்பட்டு அனுமதியும் வாங்கப்பட்டு இப்போது பணிகள் எல்லாம் நடந்து முடிந்து திறப்பு விழா நடக்கவிருக்கிறது.' என பேசத் தொடங்கினார் அசோக் சிகாமணி.
கலைஞரின் பெயர் ஏன்?
கலைஞர் தீவிர கிரிக்கெட் ரசிகர். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 90 சதவிகித ஆட்டங்களை நேரில் பார்த்திருக்கிறார். மேலும், 1960 களில் மைதானத்தில் சில பணிகள் நடந்தபோது அப்போதே 15 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். மேலும், சேப்பாக்கம் அவருடைய தொகுதி. அவருடைய பணிகளுக்காகவும் மூத்த அரசியல்வாதி என்கிற அடிப்படையிலும் கலைஞரின் பெயரை அந்த ஸ்டாண்ட்டிற்கு சூட்ட முடிவெடுத்துள்ளோம். எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்கிற பெயரையே 'கலைஞர் கருணாநிதி ஸ்டேடியம்' என மாற்றும் திட்டமும் பேசப்பட்டது. என். சீனிவாசனும் அந்த பெயர் மாற்றத்தில் ரொம்பவே ஆர்வமாக இருந்தார். ஆனால், முதலமைச்சர் அப்படி பெயரை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். உடனேதான் ஒரு ஸ்டாண்ட்டுக்காவது கலைஞரின் பெயரை சூட்டலாம் என முதல்வரிடம் சொன்னோம். அதற்கு மட்டும் முதல்வர் ஒப்புக்கொண்டார்."
சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் என்னென்ன விஷயங்களை செய்யவிருக்கிறீர்கள்?
"இந்த ஸ்டாண்ட் திறப்புவிழா முடிந்தவுடன் மைதானத்திற்குள்ளேயே இரண்டு அருங்காட்சியகங்களை அமைக்கும் பணிகளுக்காக அரசிடம் அனுமதி கேட்கவிருக்கிறோம். வெளிநாட்டு மைதானங்களில் 'Stadium Tour' என்ற பெயரில் ரசிகர்களுக்கு மைதானத்தை முழுமையாகச் சுற்றிக்காட்டும் வசதிகளெல்லாம் இருக்கிறது. இங்கேயும் அதேபோன்ற ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்தவிருக்கிறோம். போட்டிகள் இல்லாத சமயத்தில் ரசிகர்கள் ஸ்டேடியம் டூர்க்காக அனுமதிக்கப்படுவார்கள்.
தோனி பயிற்சியை தொடங்கிவிட்டார். ஆனால், ரசிகர்களுக்கு பயிற்சியை காண அனுமதியில்லையே?
கடந்த சீசன்களில், பயிற்சி ஆட்டங்களின் போதும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த முறை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் இந்த சமயத்தில் ரசிகர்களை அனுமதிப்பது சரியாக இருக்காது. அதனால் இந்த முறை நேரடியாக போட்டியில்தான் தோனியை ரசிகர்கள் பார்க்க முடியும்.
அசோக் சிகாமணியின் முழுமையான பேட்டியை காண கீழ்க்காணும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.