Published:Updated:

முச்சதம் சேவாக்; இர்பான் அசத்தல்.. ஆனாலும் பாகிஸ்தானே உச்சரிச்ச பெயர்! - நெஹ்ராவின் `2004’ சீக்ரெட்

நெஹ்ரா
நெஹ்ரா

டெஸ்ட் தொடரில் முச்சதம் அடித்து கெத்து காட்டினார் சேவாக். இந்தியாவின் சுவர் என வர்ணிக்கப்படும் டிராவிட் இரட்டை சதம் என இந்தியப் படை பாகிஸ்தானை மிரட்டியது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு இருநாட்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். உலகக்கோப்பை ஃபைனல் போன்று இருநாட்டு ரசிகர்களும் டிவி-யின் முன்பு ஆஜராகிவிடுவார்கள். போட்டி நடக்கும் மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி காணப்படும். கார்கில் போர் முடிந்து சில ஆண்டுகள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க 2003-04 ஆண்டுகளில் பாகிஸ்தான் சென்றது. இந்திய ரசிகர்களால் தாதா என செல்லமாக அழைக்கப்படும் கங்குலி தலைமையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்றது. தாதா தலைமையிலான அந்த டீம்தான் இப்போதும் பல இந்தியா ரசிகர்களுக்கு ஃபேவரைட்.

இந்திய அணி
இந்திய அணி

கங்குலி, சேவாக், சச்சின், டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், யுவராஜ் சிங், இர்பான் பதான், முகமது கைஃப் அது ஒரு பட்டாளம். பாகிஸ்தானில் மிரட்டிவிட்டு வந்தது இந்திய அணி. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முச்சதம் அடித்து கெத்து காட்டினார் சேவாக். இந்தியாவின் சுவர் என வர்ணிக்கப்படும் டிராவிட் இரட்டை சதம். இர்பான் பதான் ஹாட்ரிக் விக்கெட் என இந்தியப் படை பாகிஸ்தானை மிரட்டியது. இந்தத் தொடரில் அக்தர், ஷமி வீசிய பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்கவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஒரு டெயில்டென்ட் பேட்ஸ்மேன். அவர் வேறுயாரும் இல்லை நம்ம லக்‌ஷ்மிபதி பாலாஜி தான்.

`டிரஸ்ஸிங் ரூமில் இர்பான் பதான் எவ்வளவோ கதைகள் சொன்னாலும் என் நினைவில் இருப்பது என்னவோ பாலாஜிதான்’ என வெளிப்படையாக பேசியுள்ளார் அந்த தொடரில் பங்கேற்ற மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா.

பாலாஜி
பாலாஜி

``பாகிஸ்தானின் இப்போதைய பிரதமர் இம்ரான் கானை விட பாலாஜிதான் அப்போது பாகிஸ்தானில் பிரபலமாக இருந்தார். டிரஸ்ஸிங் ரூமில் இர்பான் பதான் எவ்வளவோ கதைகள் சொன்னாலும் என் நினைவில் இருப்பது என்னவோ பாலாஜிதான். அந்த 6 வாரமும் பாலாஜிதான் மைதானத்தின் எல்லாப் பகுதிகளிலும் சிக்ஸர் அடித்துக்கொண்டிருந்தார்.

சேவாக் அடித்த முச்சதம், ராகுல் டிராவிட் அடித்த இரட்டை சதம், இர்பான் பதானின் சிறப்பான செயல்பாடு எல்லாம் இருந்தது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் களத்துக்கு வெளியே பாகிஸ்தானும் ட்ரெஸிங் ரூமில் பாலாஜி மட்டுமே இருந்தனர். மியான்தத் எங்களை வீட்டுக்கு அழைத்து சென்று விருந்து வைத்தது எல்லாம் மறக்க முடியாத நிகழ்வு’’ என்று பழைய நினைவுகளை நெஹ்ரா அசைபோட்டிருக்கிறார்.

பாலாஜி
பாலாஜி

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்படும் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் பந்துவீச்சில் பாலாஜி அடித்த சிக்ஸர்தான் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதேபோல் முகமது ஷமி பந்துவீச்சில் சிக்ஸர் அடித்திருந்தார். ராவல் பிண்டியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாலாஜி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு