அந்த கடைசி ஓவர் மொத்தமுமே மிரட்சிதான். வான்கடே மைதானத்தில் ஊதா நிற ஜெர்சி அணிந்து அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அத்தனை பேரும் உறைந்துதான் போயிருந்தனர்.
அர்ஷ்தீப் சிங் அந்த கடைசி ஓவரில் உடைத்துப் போட்டது ஸ்டம்புகளை மட்டுமல்ல. மும்பை ரசிகர்களின் இதயங்களையும்தான். இறுதி ஓவரில் 16 ரன்களுக்குள் மும்பையை கட்டுப்படுத்த வேண்டும். க்ரீஸூக்குள் திலக் வர்மாவும் டிம் டேவிட்டும் இருந்தார்கள். திலக் வர்மா நல்ல ஃபார்மில் முறுக்கிக் கொண்டு நிற்கும் இளம் வீரர். டிம் டேவிட் ஆட்டங்களை ஃபினிஷ் செய்து கொடுப்பதில் வல்லவர்.

இப்படியான இருவரை உள்ளே வைத்துக்கொண்டுதான் அர்ஷ்தீப் அந்த ஓவரில் வெறும் இரண்டு ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். மேலும், ஸ்டம்புகள் தெறிக்க இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். ஐ.பி.எல் ஐ பொறுத்தவரைக்கும் பஞ்சாப் அணி ஒரு மோசமான நிர்வாகத்தை கொண்ட அணி. தொடர்ச்சியான வாய்ப்புகளை யாருக்கும் கொடுக்கமாட்டார்கள். கேப்டன்களை மாற்றுவார்கள். வீரர்களை மாற்றுவார்கள். பயிற்சியாளர்களை மாற்றுவார்கள்.
அணியின் செட்டப்பே முழுமையாக மாறிக்கொண்டே இருக்கும். இப்படியான ஒரு சூழலில் அந்த அணி செய்த ஒரே நல்ல காரியம்.அர்ஷ்தீப் சிங் போன்ற ஒரு வீரரை அணியில் எடுத்து அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி பட்டை தீட்டி அப்படியே தக்கவைத்திருப்பதுதான். சரி, இந்த அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் அணி எப்படிதான் அடையாளம் கண்டது?
23 வயது நிரம்பிய அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். ஆக, லோக்கல் கனெக்ட் என்ற விதத்தில் பஞ்சாப் அணிக்கான சரியான தேர்வு அர்ஷ்தீப் சிங். அர்ஷ்தீப்பின் தந்தை தர்ஷன் சிங் 25 வருடங்களாக ராணுவத்தில் (cisf) பணியாற்றியவர். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது தீரா காதல் கொண்டிருந்தார் அர்ஷ்தீப் சிங், தனது 13 வயது முதலே கிரிக்கெட் ஆட தொடங்கிவிட்டார். 2018ல் உலகக்கோப்பையை வென்ற U19 இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றிருந்தார்.

தான் விளையாடிய இரண்டு போட்டிகளில், வேகத்தாலும் நேர்த்தியான திட்டமிடலாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2018ல் பஞ்சாப் U23 அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். சி.கே நாயுடு ட்ராபியில் விளையாடிய அர்ஷ்தீப், ஹாட்ரிக் விக்கெட் உட்பட 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 2019ல் நடைபெற்ற விஜய் ஹசாரே ட்ராபியில் விளையாடினார். தான் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
2019ம் ஆண்டு அர்ஷ்தீப் சிங்கை அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த சீசனில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. 3 ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், கிடைத்த வாய்ப்புகளிலும் ஸ்பார்க் காட்டி மிரட்டியிருந்தார்.

2020 முதல் பஞ்சாப் அணியின் பிரதான பௌலராக உருவெடுத்தார் அர்ஷ்தீப். அந்த சீசனில் 8 ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2022 ஆம் ஆண்டு மெகா ஏலம் நடந்திருந்தது. அந்த மெகா ஏலத்திற்கு முன்பாக வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் ப்ராசஸில் பஞ்சாப் அணி இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. அதில் அர்ஷ்தீப் சிங்கும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் 12 ஆட்டங்கள் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் உருமாரினார் அர்ஷ்தீப். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மிரட்டலான வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவே 'தற்போதைய சூழலில் ஐ.பி.எல் இன் சிறந்த டெத் பௌலர் அர்ஷ்தீப்தான்' என பாராட்டு மழை பொழிந்திருந்தார். ஐ.பி.எல் இல் இளம் கன்றாக சாதித்துக் காட்டியவருக்கு இந்திய அணிக்கான அழைப்பும் வந்தது. வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான சீரிஸிற்கு தேர்வு செய்யப்பட்ட அர்ஷ்தீப் சிங்கிற்கு முதலில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, ஐந்து போட்டிகளில் 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

மேன் ஆஃப் தி சீரீஸ் விருதையும் வென்றிருந்தார். 2022ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் நட்சத்திர பவுலரான பும்ராவின் வெற்றிடத்தை நிரப்பி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அர்ஷ்தீப். இந்தத் தொடரில் அர்ஷ்தீப் சிங் ஒரு கேட்ச்சை விட்டதற்காக ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்திருந்தனர். அதே ரசிகர்கள்தான் இப்போது அவரை தலையில் தூக்கி வைத்தும் கொண்டாடுகிறார்கள். நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பிற்கு சொந்தக்காரராகவும் மாறியுள்ளார்.
இளம் வயதிலேயே டெத் ஓவர்களில் பெரும் நிபுணத்துவம் பெற்றவராக திகழ்கிறார் அர்ஷ்தீப். மும்பைக்கு எதிரான இந்தப் போட்டியில் 18 மற்றும் 20 வது ஓவரை வீசியிருந்தார். 18 வது ஓவரில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்த ஓவருக்கு முன்பாக வீசப்பட்டிருந்த நான்கு ஓவர்களில் சராசரியாக ஓவருக்கு 14 ரன்கள் என்ற விகிதத்தில் சென்றிருக்கும். இச்சமயத்தில்தான் அந்த 18 வது ஓவரில் வெறும் 9 ரன்களை கொடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார் அர்ஷ்தீப்.

இந்த சீசனில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமாக எக்ஸ்ட்ராக்கள் வீசுவதை பார்த்திருப்போம். கவாஸ்கர் கூட 'ஒரு பௌலர் தொடர்ச்சியாக 2 வைடுகள் வீசினால் நோபால் வழங்கப்பட வேண்டும்' என கறாராக பேசியிருந்தார். ஆனால், கவாஸ்கரின் விமர்சனம் அர்ஷ்தீப்பிற்கெல்லாம் பொருந்தாது. மும்பைக்கு எதிராக டெத்தில் அவர் வீசிய இரண்டு ஓவர்களில் ஒரு வைடு ஒரு நோபால் கூட கிடையாது. 12 பந்துகள் எனில் 12 பந்துகள்தான். அதை நச்சென தான் நினைத்த லைன் & லெந்த்தில் வீசி வேலையை சுலபமாக முடித்துவிட்டார். இது தற்கால பௌலர்களிடம் இல்லாத அபூர்வ குணம்.
திறன் மட்டுமல்ல. அந்தத் திறனை தக்கவைத்துக் கொண்டு சீரான செயல்பாடுகளை கொடுப்பதிலும் கில்லாடியாக இருக்கிறார். ஆக, அவரைச்சுற்றி வெற்றிகள் அணிவகுப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.