Published:Updated:

ரவி சாஸ்திரி ரிப்போர்ட் கார்டு: கோப்பைகள் இல்லை, மீம் மெட்டீரியல் - இவை மட்டுமா இவரின் அடையாளங்கள்?

ரவி சாஸ்திரி

ஓவர் ரேட்டடாக பயங்காட்டிக் கொண்டிருந்த ஓவர்சீஸ் டெஸ்ட் வெற்றியை, கடினமானதில்லை என மாற்றியது, ரவி சாஸ்திரியின் சாதனைதான்!

ரவி சாஸ்திரி ரிப்போர்ட் கார்டு: கோப்பைகள் இல்லை, மீம் மெட்டீரியல் - இவை மட்டுமா இவரின் அடையாளங்கள்?

ஓவர் ரேட்டடாக பயங்காட்டிக் கொண்டிருந்த ஓவர்சீஸ் டெஸ்ட் வெற்றியை, கடினமானதில்லை என மாற்றியது, ரவி சாஸ்திரியின் சாதனைதான்!

Published:Updated:
ரவி சாஸ்திரி

பயிற்சியாளர் என்றாலே வெற்றிகளின்போது வண்ணச் சாயம் பூசப்படுகிறதோ இல்லையோ, தோல்வியின்போது சிலுவைகள் சுமத்தப்படும், விமர்சனங்கள் கிழித்தெறியும். இன்னொரு பெரிய வெற்றியை உடமையாக்கும் வரை, தனக்கான நியாயங்களை அவர்கள் தேடிக் கொண்டே இருக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும், ரவி சாஸ்திரியும் விதிவிலக்கல்ல! என்ன, கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அவர் கேலிகளைச் சந்தித்தார் என்றே சொல்ல வேண்டும். மீம் மெட்டீரியலாக, டெம்ப்ளேட் ஸ்பான்சராக என சிக்கிய இடங்களில் எல்லாம் அவரை கன்டென்டாக மாற்றி கிண்டல் செய்து கொண்டிருந்தவர்களைக்கூட, சற்றே கண்கலங்க வைத்து நெகிழ வைத்தது பயிற்சியாளராக, அவருடைய கடைசித் தருணங்கள்.

துரதிர்ஷ்டவசமாக, இங்கே கேப்டனாக இருந்தாலும் சரி, பயிற்சியாளராக இருந்தாலும் சரி, அவர்களது திறமைக்கான அளவீடாக இருப்பது, ஐசிசி கோப்பைகள் மட்டுமே. அப்படி ஓர் இறகை, சாஸ்திரியின் மகுடம் சுமக்கவில்லைதான் எனினும், அதற்காக இந்தியக் கிரிக்கெட்டின் சாதனைப் பட்டியலை அவர் நீளச் செய்யவில்லை என எடுத்துக்கொள்ள முடியாது.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

36 ஆல் அவுட் டு தொடர் வெற்றி!

ஆஸ்திரேலியாவை டெஸ்டில் இருமுறை வீழ்த்தியது, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் முன்னிலை, நியூசிலாந்தை, டி20 போட்டிகளில் 5-0 என வொய்ட்வாஷ் செய்து ஜெயித்தது, இலங்கை மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளை அவர்களது மண்ணிலேயே வீழ்த்தியது எனப் பல வெற்றிகளை உள்ளடக்கியதுதான், ரவி சாஸ்திரியின் பயணம். அதுவும் 2020 ஆஸ்திரேலியத் தொடரில், 36 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனபோதும் கூட, வீரர்களின் மத்தியில், 'Wear this 36 like a badge and you will be a great team' என்ற நம்பிக்கை உரையாற்றி, தொடரை வெல்ல வைத்தது அவரது கோச்சிங் கரியரில் மணிமகுடம்.

சக்ஸஸ் ஃபார்முலா:

ரோஹித்தை டெஸ்ட் ஓப்பனராக்கியது, பும்ராவை இந்திய டெஸ்ட் அணியின் டிரம்ப் கார்டாகக் கண்டறிந்து அவரை பௌலிங் கோச் பரத் அருணுடன் சேர்ந்து பட்டை தீட்டி, பௌலிங் படையின் பிரம்மாஸ்திரமாக உருவெடுக்க வைத்தது, சஹால் - குல்தீப் ஸ்பின் கூட்டணியை உருவாக்கியது என அணியின் ஒவ்வொரு வீரரையும் அவர்களுக்கான இடங்களில், பொருத்தியது அவரது சக்ஸஸ் ஃபார்முலா.

அணிக்கு என்ன தேவை, எங்கே தவறுகிறோம் எனக் கண்டறிந்து தோல்வியிலிருந்து அணியை சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழச் செய்து, பலமுறை சிறகு விரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, ரெட் பால் கிரிக்கெட்டில், இந்தியா இவரது வரவுக்கு முன்னதாக இருந்த நிலையினை எண்ணிப் பார்த்தாலே கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், இறுதிப் போட்டி வரை முன்னேறியதே எவ்வளவு பெரிய சாதனை என்பது விளங்கும்.

வெற்றி சதவிகிதம் என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாம்ராஜ்யத்தையே, கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி கட்டமைத்தது. அவர் பொறுப்பேற்ற பிறகு, நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், மொத்தமே, 30 சதவிகிதம் போட்டிகளில் மட்டுமே, இந்தியா, தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதைத் தவிர்த்து, லிமிடெட் ஃபார்மட்டிலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டி ஃபார்மட்டுக்கும் சேர்த்து, அவரது வெற்றி சதவிகிதம் 66%! பல காரணிகளைக் கொண்டு அவரது ஒட்டுமொத்த செயல்பாட்டை பகுத்தாய்ந்து பார்த்தால், டி20-ல் வேண்டுமெனில் அவர் சற்றே பின்தங்கலாம், ஆனால், ஒருநாள் போட்டிகளில், அடித்து தூள் கிளப்பிய ரவி சாஸ்திரி, டெஸ்ட் ஃபார்மட்டில், இந்தியாவை பல ஒளி ஆண்டுகள், முன்னோக்கிப் பயணப்பட வைத்தார்.

இப்படி எல்லா ஃபார்மட்டிலும் ஓரளவு சிறப்பாகவே ஸ்கோர் செய்திருப்பவரின், உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளைப் பகுப்பாய்வு செய்தால், இரண்டிலுமே, இணையாகவே பயணித்திருக்கிறது அவரது பல்லக்கு. முன்னதாக, பேட்ஸ்மேனாக அவர் அடித்த 11 டெஸ்ட் சதங்களில் ஏழு, வெளிநாடுகளில் வந்தவைதான். அத்தகைய, அந்நிய மண்ணில் ஆதிக்கம் செய்யும் பாணி, அவர் பயிற்சியாளரான பின்பும் தொடர்ந்தது. அதிசயமாக நிகழ்ந்து கொண்டிருந்த ஓவர்சீஸ் வெற்றியை வழக்கமாகவும், வாடிக்கையாகவும் மாற்றியது ரவி சாஸ்திரியே.

SENA நாடுகளில், சர்வதேச டி20 தொடர்களை வென்று சாதித்தது, ஆஸ்திரேலிய மண்ணில் ஒருமுறை அல்ல இருமுறை தொடரை வென்ற ஒரே ஆசிய அணியாக இந்தியாவை பெருமையோடு வலம்வர வைத்தது என கோலி அண்ட் கோ செய்து காட்டிய ஒவ்வொரு பெரிய சாதனையிலும் அவரது பங்கும், உள்ளுறை ஆற்றலாக, உறைந்தே இருக்கும்.

 கோலி - ரவி சாஸ்திரி
கோலி - ரவி சாஸ்திரி

வேகப்பந்து வீச்சில் புரட்சி:

இவரது வழிகாட்டலில், வேகப்பந்து வீச்சில் ஒரு புரட்சியையே, இந்திய அணி பார்த்து விட்டது. ரிஸ்ட் ஸ்பின்னர்களின் வருகையால், இந்தியா பல போட்டிகளில், கோலோச்சியது. கோலி + ரவி சாஸ்திரி + பரத் அருண் கூட்டணி உள்ளீடாக, இந்தியாவுக்கு விக்கெட்டுகளும், வெற்றிகளும் வெளியீடாகக் கிடைத்தன.

பயிற்சியாளராக இருப்பவர் வீரர்களை, உடலளவிலும் களத் தேவைக்காகவும் வடிவமைப்பவராக மட்டும் இருப்பது போதாது. முதலில் அணிக்குள் ஒற்றுமையையும், வீரர்களுக்குள் ஒருங்கிணைப்பையும் புரிந்துணர்வையும் கொண்டு வருவதோடு, மனதளவிலும், அவர்களை எதற்கும் தயாரானவர்களாக உருவாக்க வேண்டும். ரவி சாஸ்திரி இதனை மிகக் கனகச்சிதமாகவே செய்தார்.

வீரர்களின் மேல் அழுத்தம் ஏற்றாமல், அவர்களது இயல்பான ஆட்டத்தை ஆடச் செய்து, அதன் மூலம் அணிக்கான வெற்றியையும், விளைவித்துக் கொண்டார். ஷமி போன்ற வீரர்களின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகள் போது, தோள் கொடுத்தது மட்டுமல்லாமல், ஃபார்ம் அவுட் ஆகி தவித்த வீரர்களையும், தன்னையுணர்ந்து திரும்ப மேடேற வைத்துள்ளார்.

பின்னடைவுகள் என்னென்ன?

எதிர்முனை இல்லாத பேட்டரி இல்லை என்பது போல், ரவி சாஸ்திரியின் கோச் கரியரிலும் பல பின்னடைவுகளை இந்தியா சந்தித்தது என்பதை மறுக்க முடியாது. 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் ஆடப்போகும் 4-வது வீரர் யார் என்ற முடிவை, கடைசிவரை எடுக்காமல் ரஹானே, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு என வீரர்களை மாற்றி மாற்றி, மியூசிக்கல் சேர் ஆடி இறுதியில் விஜய் சங்கரை எடுத்து, 3D வீரராக இருப்பார் என்ற கூற்றையும் முன்வைத்து, டிஸாஸ்டர் ஆனதுதான் மிச்சம். சில முக்கியப் போட்டிகளில், வீரர்களின் தேர்வில், கோலியும் அவரும் கூட்டணி போட்டு எடுத்த முடிவுகளின் விளைவுகளுக்கான விலையாகத்தான், ஐசிசி கோப்பைகளை, இந்தியா கொடுத்துள்ளது.

பிளேயிங் லெவன் குழப்பம்

2018-ல் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், ரஹானேவை வெளியே அமர வைத்தது, அதே ஆண்டு இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில், புஜாராவை எடுக்காதது எனத் தொடங்கிய தவறு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், சூழ்நிலைகளைக் கணிக்காது, வீரர்களைக் களமிறக்கியது வரை நீண்டு, கோப்பையே பறிபோகக் காரணமாக இருந்தது. டி20 உலகக்கோப்பை போட்டிகளில், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக அனுபவம் வாய்ந்த அஷ்வின் இறங்குவார் என்று எதிர்பார்த்தால், ஐபிஎல் அனுபவம் மட்டுமே கொண்ட வருணை இறக்கி சறுக்கினார்கள்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

இப்படிக் களத்தைக் கணிக்கத் தவறுவது, வீரர்கள் தேர்வில் துளிர்விடும் குழப்பம், வீரர்களது ரோலில் தெளிவில்லாமல் இருப்பது, பேட்டிங் ஆர்டரில் குளறுபடி என பல முக்கிய இடங்களிலும் அவர் தடுமாறியிருக்கிறார். மேலும், மாற்று கேம் பிளான் என்ற ஒன்று இல்லாமலே இருப்பது, எதிரணியின் பலவீனங்கள் என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ப, பிளேயிங் லெவனை இறுதி செய்யத் தவறுவது என பல கட்டங்களிலும், தளங்களிலும், அவர் செய்த தவறுகளுக்கான பாதிப்புதான், சமயங்களில், ரசிகர்களின் ஆதங்கத்திற்கும் விமர்சனத்திற்கும் காரணமாகியது.

ஒருமுறை, இங்கிலாந்தில் ராகுல் டிராவிட் விளையாடிய போட்டியில், அவரது பேட்டில், அவரது ஷூ லேஸ் பட்டு, சத்தம் வர, அதன் காரணமாக, அவர் ஆட்டமிழந்தாக அறிவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட டிராவிட், களத்தை விட்டு வெளியேறிய மறுநொடியே, தனது ஷு லேஸை மாற்றினாராம். இது, கேட்பதற்குத் தேவையற்றதாகத் தோன்றலாம். ஆனால், இப்படி சின்ன சின்ன மாற்றங்களும், தவறுகளை, தவறிக்கூடத் திரும்பச் செய்யக் கூடாதென்னும் கவனமும், நடப்பதற்கு முன்னதாகவே, நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்றாற் போல் திட்டமிடும் தெளிவும் ஒரு பயிற்சியாளருக்குத் தேவை. அது ரவி சாஸ்திரியிடம் இருந்ததெனினும், 100 சதவிகிதம் இல்லை என்பதனால்தான், பெரிய அரங்கங்களில், இந்தியா சோபிக்கத் தவறியது.

பயோ பபுள் காரணமா?

இந்த டி20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, இந்தியாவின் வீழ்ச்சிக்கான காரணமாக, பயோ பபுள் என்னும் கொடுங்காவல் தண்டனையையும், ஐபிஎல்லுக்கும் இந்தத் தொடருக்கும் இடைவெளி இல்லாமல் இருந்ததையும், ரவி சாஸ்திரி குறிப்பிட்டிருந்தார். அதனை முழுமையாக, 'சமாளிப்பு' எனச் சொல்லி தள்ளி வைக்க முடியாது. வீரர்களை, இயந்திரங்களாகப் பார்க்கும் பிசிசிஐயின் மனநிலையும் மாற வேண்டிய நேரம் இது.

எது எப்படியெனினும், இறகுகள் பரப்பப்பட்ட இருக்கையல்ல பயிற்சியாளர் பதவி; இடிகள் இறக்கப்படக் கூடிய நெருஞ்சியால் நிறைந்தது. கோப்பைகள் என்னும் செங்கோல் ஏந்தாவிடினும் முள்கிரீடம் தாங்கி, அந்த இருக்கையை ரவி சாஸ்திரி ஓரளவு அழகாகவே அலங்கரித்திருக்கிறார்.

கமென்டேட்டராக, இறுதி இந்தியா - இங்கிலாந்து போட்டியில்கூட, தான் இடம் பெறலாம் என நகைச்சுவையாகக் கூறி இருந்தார் ரவி சாஸ்திரி. அடுத்த ஐபிஎல்லில், புதிதாக உருவாக்கப்படவிருக்கும் அகமதாபாத் அணியின் பிரதானப் பயிற்சியாளராக அவர் தொடரலாம் என்ற செய்தியும் அடிபடுகிறது.

ஆனால், உண்மையில் அனைவரின் விருப்பமும், அவர் கமென்டேட்டராகத் தொடர வேண்டும் என்பதே! பயிற்சியாளரான பிறகு, அவர் தொலைத்திருந்த அந்தப் பழைய புன்னகையைப் பார்ப்பதுடன், “Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years!” என்ற காந்தக்குரலை மீண்டும் கேட்க, அனைவரும் ஆவலாக உள்ளனர். ஆனால் அவர் கமென்ட்ரி பாக்ஸுக்குத் திரும்புவாரா அல்லது புது ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் ஆவாரா என்பதனை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.