Published:Updated:

INDvSA: அந்த சொதப்பல் பௌலிங்கைத் தவிர எல்லாம் மாறிடுச்சு; தொடர் குறித்த விரிவான அலசல்!

Team India |INDvSA ( ICC )

ஆசியக்கோப்பை, ஆஸ்திரேலிய தொடர், தென்னாப்பிரிக்கத் தொடர் என உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆடியிருக்கும் மூன்று தொடர்களிலும் பந்துவீச்சு பெரிய சொதப்பல்தான். குறிப்பாக, டெத் ஓவர் பௌலிங் அது இன்னும் மோசம்.

INDvSA: அந்த சொதப்பல் பௌலிங்கைத் தவிர எல்லாம் மாறிடுச்சு; தொடர் குறித்த விரிவான அலசல்!

ஆசியக்கோப்பை, ஆஸ்திரேலிய தொடர், தென்னாப்பிரிக்கத் தொடர் என உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆடியிருக்கும் மூன்று தொடர்களிலும் பந்துவீச்சு பெரிய சொதப்பல்தான். குறிப்பாக, டெத் ஓவர் பௌலிங் அது இன்னும் மோசம்.

Published:Updated:
Team India |INDvSA ( ICC )
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்திருக்கிறது. உலகக்கோப்பைக்கு முன்பு கடைசியாக ஆடி முடித்திருக்கும் இந்தத் தொடரை இந்திய அணி 2-1 என வென்றிருக்கிறது. கடைசி போட்டியை மட்டுமே தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கிறது. வெற்றி தோல்விகளை கடந்து இந்தத் தொடரில் இந்திய அணியின் பெர்ஃபார்மென்ஸ் எப்படியிருந்தது என்பதை கொஞ்சம் மதிப்பிட்டு பார்ப்போம்.

காயம் காரணமாக இந்த ஆண்டில் பல டி20 போட்டிகளை தவறவிட்ட கே.எல் ராகுல் கடந்த ஆஸ்திரேலிய தொடரிலிருந்து மீண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக கம்பேக் கொடுக்க தொடங்கியிருந்தார். அவர் இந்தத் தொடரில் மிகச்சிறப்பாக ஆடியிருப்பது பெரும் நம்பிக்கையை அணிக்கு கொடுத்திருக்கிறது.

KL Rahul
KL Rahul
ICC
முதல் போட்டியில் சூழலை உணர்ந்து நின்று நிலைத்து ஆடி 100 க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம் அடித்திருந்தார். அடுத்த போட்டியிலேயே 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதமடித்து அணியின் தேவைக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனை வெளிக்காட்டினார்.

ஸ்ட்ரைக் ரேட்டெல்லாம் ஒரு பொருட்டில்லை எனும் ஐ.பி.எல் பாணி ஆட்டத்தை முழுமையாக பற்றிக் கொள்ளாமல் விட்டது சிறப்பு.

ராகுலுக்கு அடுத்து விராட் கோலி நம்பர் 3 யில் வருகிறார். விராட் கோலியின் ஆட்டத்தைப் பற்றி தனியாக பேசுவதை விட சூர்யகுமாரின் ஆட்டத்தோடு இணைத்து பேசுவதே சிறப்பாக இருக்கும். சூர்யகுமார் ஒரு மிடில் ஓவர் ஸ்பெசஸலிஸ்ட்டாக மிரட்டி வருகிறார். டி20 போட்டிகளில் 7-15 மிடில் ஓவர்கள் என்பது பேட்டர்கல் கொஞ்சம் இளைப்பாறும் இடம். விக்கெட்டுகள் விழும். ரன்ரேட் குறையும். புதிய பார்ட்னர்ஷிப்கள் கட்டமைக்கப்படும். ஆனால், இந்த இடத்திலுமே பவர்ப்ளேக்கு குறைவில்லாமல் அதிரடியாக ஆட அணிகள் தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

SuryaKumar Yadav |
SuryaKumar Yadav |

இந்த தகவமைத்தலுக்கு இந்திய அணியில் அச்சாரமாக இருப்பது சூர்யகுமாரே. பெரும்பாலும் இந்த மிடில் ஓவர்களிலேயே களமிறங்கும் சூர்யகுமார் செட்டில் ஆவதற்கெல்லாம் நேரம் எடுப்பதே இல்லை. முதல் பந்திலிருந்தே அடிதான். இந்த பாணியில் இந்த தென்னாப்பிரிக்கத் தொடரிலுமே சிறப்பாக ஆடியிருந்தார். முதல் இரண்டு போட்டிகளிலுமே இரண்டு அரைசதங்கள்.

குறிப்பாக, இரண்டாவது போட்டியில் அடித்த அடியெல்லாம் விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. பந்து காற்றிலேயே மிதந்து கொண்டிருந்தது.

இவர் இப்படி அதிரடியாக ஆடுகிற போதுதான் கோலி ஆடுகிற அந்த ஆங்கர் இன்னிங்ஸூக்கு இன்னும் மதிப்பு கூடுகிறது. கொஞ்சம் சுணங்கியிருந்த கோலி ஆசியக்கோப்பையில் அடித்த சதத்திற்குப் பிறகு தாக்கம் ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறார். சூர்யகுமார் அடித்து ஆடும்போது எதிர்முனையில் ஆடும் பேட்டரும் அவரின் வேகத்திலேயே ஆட முற்பட்டால் அது சில சமயங்களில் அணிக்கு பின்னடைவையே கொடுக்கும். கடந்த ஐ.பி.எல் இல் பஞ்சாப் அணி ஆடிய ஆட்டம்தான் இந்த பாணி கொடுக்கும் பின்னடைவுக்கான உதாரணம். இந்திய அணிக்கு அது ஏற்படாமல் தனது அனுபவத்தின் மூலமும் ஆங்கர் இன்னிங்ஸின் மூலமும் கோலி துணையாக இருக்கிறார்.

Virat Kohli
Virat Kohli
https://twitter.com/BCCI

ப்ளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக்கா ரிஷப் பண்ட்டா எனும் கேள்வி வரும்பட்சத்தில் தினேஷ் கார்த்திக்தான் முதல் சாய்ஸ் எனும் இடத்தை நோக்கி இந்திய அணி தெளிவாக நகர்ந்திருக்கிறது. அவர்தான் அணியின் ஃபினிஷர் எனும் முடிவையும் உறுதியாக எடுத்திருக்கிறார்கள். அணியின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தினேஷ் கார்த்திக் இந்தத் தொடரில் ஆடியிருப்பதும் சிறப்பான விஷயம். பேட்டிங்கை பொறுத்தவரை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்னும் சிறப்பாக ஆட வேண்டிய தேவை இருக்கிறது.

Deepak chahar
Deepak chahar

மேற்குறிப்பிட்டவை எல்லாம் பாசிட்டிவ்வான விஷயங்கள். இந்திய அணி இன்னும் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களும் அதிகமாகவே இருக்கின்றன. குறிப்பாக, பந்துவீச்சில் இந்திய அணியின் நிலை கவலைகொள்ளத்தக்க வகையிலேயே இருக்கிறது. ஆசியக்கோப்பை, ஆஸ்திரேலிய தொடர், தென்னாப்பிரிக்க தொடர் என உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆடியிருக்கும் மூன்று தொடர்களிலும் பந்துவீச்சு பெரிய சொதப்பல்தான். குறிப்பாக, டெத் ஓவர் பௌலிங் அது இன்னும் மோசம். முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 106 ரன்களைத்தான் எடுத்திருக்கும்.

அந்தப் போட்டியிலேயே கடைசி 3 ஓவர்களில் 30 ரன்களை இந்திய பௌலர்கள் வழங்கியிருந்தார்கள். இரண்டாவது போட்டியில் கடைசி 3 ஓவர்களில் 57 ரன்களையும் மூன்றாவது போட்டியில் 50 ரன்களையும் வழங்கியிருந்தனர்.

புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப், தீபக் சஹார், ஹர்சல் படேல் என இந்த 3 தொடர்களில் அத்தனை பௌலர்களும் டெத் ஓவர்களில் சொதப்பியிருக்கிறார்கள். அந்த சொதப்பல்கள் இந்தத் தொடரிலும் தொடர்ந்தது சோகமே. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடருக்கு முன்பாக இந்திய அணியின் டெத் பௌலிங் சிறு நம்பிக்கையை கூட விதைக்காமல் இருப்பதை ஒட்டுமொத்த நிர்வாகத்தின் தோல்வியாகவே பார்க்க வேண்டும். பும்ரா வந்தால் எல்லாம் மாறிவிடும் என்றார்கள். பும்ராவே இப்போது அணியில் இல்லை. என்ன செய்யப்போகிறார்கள்? ரோஹித் டிராவிட் கூட்டணி பதவியேற்றவுடன் ஏகப்பட்ட பரிச்சார்த்த முயற்சிகளை செய்து பார்த்தார்கள். ஒவ்வொரு பேட்டிங் ஆர்டருக்கும் ஒவ்வொரு வீரராக மாற்றி மாற்றி இறக்கி பல ஆப்சன்களை சோதித்து பார்த்தார்கள். இப்போது சூழல் கருதி திடீரென ரிஷப் பண்ட்டோ சூர்யகுமாரோ ஓப்பனிங் இறங்கினால் கூட ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது.

 புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்

ஏனெனில், இதையெல்லாம் ஏற்கனவே முயன்று பார்த்து ஏற்பாடுகளை இந்திய அணி சரியாக செய்திருக்கிறது. ரோஹித்தோ கோலியோ அணியில் இல்லையென்றால் கூட சமாளித்துவிட முடியும். ஆனால், பும்ரா இல்லையேல், வழியே இல்லை. டெத் ஓவர்களில் அடி வாங்கியேத்தான் ஆக வேண்டும். பேட்டிங் ஆர்டரில் ஏக ஜாக்கிரதையாக இருந்த டிராவிட்-ரோஹித் கூட்டணி பும்ரா விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டதென்றே சொல்ல வேண்டும். அதன் பலன் என்ன என்பதை இந்த தென்னாப்பிரிக்க தொடர் மீண்டும் ஒரு முறை காட்டியிருக்கிறது. பந்துவீச்சில் அந்த புதிய விதிமுறையயும் இந்திய அணி கவனத்தில் கொள்ள வேண்டும். டெத் பௌலிங் ஏற்கனவே சுமாராக இருக்கிறது. இதில், தாமதமாக பந்துவீசி பவுண்டரி லைனில் ஒரு ஃபீல்டரை குறைவாக நிறுத்தும் நிலைமை இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய அணி பந்துவீச்சு நேர நிர்வாகத்தில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஏமாற்றமிக்க பந்துவீச்சு படையோடு ஆஸ்திரேலியா புறப்படும் இந்திய அணி சிக்கல்களை எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்தத் தொடர் குறித்த உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.