Published:Updated:

`ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம்பளம்' பிசிசிஐயின் புதிய அறிவிப்பும் சில கேள்விகளும்!

Women's team ( BCCI )

சம ஊதியம் என்கிற அறிவிப்பு உள்ளூர் அளவில் ஆடும் பெண் கிரிக்கெட்டர்களுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதையும் பிசிசிஐ இங்கே செய்யவில்லை. உள்ளூர் அளவில் பாலின பாரபட்சம் தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கப்போகிறது.

`ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம்பளம்' பிசிசிஐயின் புதிய அறிவிப்பும் சில கேள்விகளும்!

சம ஊதியம் என்கிற அறிவிப்பு உள்ளூர் அளவில் ஆடும் பெண் கிரிக்கெட்டர்களுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதையும் பிசிசிஐ இங்கே செய்யவில்லை. உள்ளூர் அளவில் பாலின பாரபட்சம் தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கப்போகிறது.

Published:Updated:
Women's team ( BCCI )
பிசிசிஐ மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இனி இந்திய கிரிக்கெட்டில் ஆண் வீரர்களுக்கு வழங்கப்படும் அதே போட்டி ஊதியம் பெண் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பிசிசிஐ
பிசிசிஐ

கடந்த ஜூலை மாதம் இதே திட்டத்தை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தியது. அப்போதிருந்தே அதிக வருமானம் ஈட்டும் பிசிசிஐ அமைப்பும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வந்தன. இப்போது இத்திட்டத்தை செயல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக பிசிசிஐயே தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக இனி பாலின வேறுபாடு இல்லாமல்...

இந்திய அணிக்காக விளையாடும் எந்த ஒரு வீரர், வீராங்கனைக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ரூபாய், ஒரு நாள் போட்டிக்கு 6 லட்ச ரூபாய், டி20 போட்டி ஒன்றுக்கு 3 லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு ஒரு டெஸ்ட்டுக்கு மூன்று லட்சம் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு ஒரு லட்சம் என்று மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. புதிய திட்டத்தின் அவுட்லைன் இதுதான். ஆனால் இந்த திட்டம் எப்படி எல்லாம் மகளிர் கிரிக்கெட்டுக்கு பலன் அளிக்கப் போகிறது என்பதை பற்றி விரிவாகப் பேசியாக வேண்டும்.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

இந்தத் திட்டத்தின் அழுத்தத்தை உணர நாம் சுமார் 10 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். 2012 - இப்போது மாதிரி மகளிர் கிரிக்கெட்டுக்கு எந்த ஒரு வரவேற்பும் அதிகம் இல்லாத காலம். இலங்கையில் இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையில் விளையாடத் தயாரானது. தொடருக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பு உண்டு என்று மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு கூறப்பட அவரும் அதற்குத் தயாராக வந்தார். 20 நிமிடம் காத்திருந்த பின்பு எந்த ஒரு பத்திரிகையாளரும் மகளிர் கிரிக்கெட்டை கவர் செய்ய விரும்பவில்லை என்று மிதாலிக்குக் கூறப்பட அவர் தனது ஹோட்டலுக்குத் திரும்பினார். இந்தத் தொடர் முடிந்த பின்னும் மிதாலி கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஒரே ஒரு பத்திரிகையாளர் மட்டுமே வந்திருந்தார். இன்னமும் மோசமான விஷயம் என்னவென்றால் நிறைய பத்திரிகையாளர்கள் இருப்பது போல உங்கள் பார்வையை வலது இடது என திருப்பிக் கொண்டே கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கேள்விகள் எல்லாம் முடிந்த பிறகு மிதாலி முணுமுணுக்கும் குரலில் என்றாவது ஒருநாள் மகளிர் கிரிக்கெட் சார்ந்த பேட்டிகளுக்கும் பத்திரிகையாளர்கள் நிரம்பி வழிவார்கள் என்று கூறிக்கொண்டே வெளியே வந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மிதாலி கூறிய ஆருடம் கிட்டத்தட்ட தற்போது பழித்துவிட்டது என்றே கூறலாம். வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணி வென்று நாடு திரும்பும் போது ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவதைத் தற்போது காண முடிகிறது. இந்த மாற்றங்கள் கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் மகளிர் கிரிக்கெட்டர்களின் நிலையோ இன்றுவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தான் இருந்து வருகிறது.

மகளிர் கிரிக்கெட்டை பொழுதுபோக்காக ஆட பலர் தயாராக உள்ளனர். ஆனால் அதையே ஒரு தொழிலாக பாவித்து காலத்துக்கும் விளையாட வீராங்கனைகள் தயாராக இருக்கிறார்களா என்றால் அது சற்றுக் கடினம்தான். ஆடவர் கிரிக்கெட்டை மார்க்கெட்டிங் செய்யும் ஆர்வத்தில் அரைப்பங்கை இந்தப் பக்கமும் காட்டியிருந்தால் கூட மகளிர் கிரிக்கெட்டும் கிரிக்கெட்டர்களும் இன்று எட்ட முடியாத உயரத்தில் இருந்திருப்பர். ஆனால் அதை செய்ய பிசிசிஐ தவறியிருந்தது.

முன்பெல்லாம் வருடாந்திர ஊதியமே பெண்கள் கிரிக்கெட்டிற்கு கிடையாது. ஆட்டம் நடக்கும் போது மட்டுமே கிடைக்கும் சொற்ப பணத்துக்காகக் குடும்பத்தை பிரிந்து வெளிநாடு எல்லாம் சென்று வருவது பலருக்கும் சிரமத்தை மட்டுமே கொடுத்தது. பெண்களுக்கான ஐபிஎல் கூட 2019ல் பேசப்பட்டு இப்போதுதான் செயல்வடிவம் பெற்றுள்ளது. பிசிசிஐ விட குறைந்த வருமானம் ஈட்டும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் மகளிருக்கான பிரிமீயர் லீக் தொடர்கள் நடந்து வருகின்றன. இவ்வளவு ஏன்? 'எங்களுக்குச் சம்பளம் போதவில்லை' என்று வீரர்கள் தொடர்ந்து மல்லுக்கட்டும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கூட கடந்த ஆண்டு அந்நாட்டு மகளிருக்கான தொடரை நடத்திக் காட்டிவிட்டது.

இப்போது சம ஊதியம் எனக் கூறுகிறார்கள். ஆனால், சமநிலை என்பது ஒவ்வொரு போட்டிக்கும் வழங்கப்படும் சன்மானம் என்கிற விஷயத்தில் மட்டுமே கொண்டு வரப்பட்டிருக்கிறது. மற்றபடி வருடாந்திர ஒப்பந்த விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை.

விராட் கோலி
விராட் கோலி
வருடாந்திர ஒப்பந்தத்தின் படி ஆண் கிரிக்கெட்டர்களில் சிலர் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறுகின்றனர். குறைந்தபட்சமாக சில வீரர்கள் 1 கோடி ரூபாயை ஆண்டு ஊதியமாகப் பெறுகின்றனர். பெண்கள் கிரிக்கெட்டில் வருடாந்திர ஒப்பந்தத்தின் படி அதிகபட்சமாக வீராங்கனைகள் பெறும் ஆண்டு ஊதியமே வெறும் ரூ.50 லட்சம்தான்.
ஸ்மிருதி மந்தனா - ஷெஃபாலி வர்மா
ஸ்மிருதி மந்தனா - ஷெஃபாலி வர்மா

ஜெய் ஷா பெருமிதத்தோடு கொடுத்திருக்கும் சம ஊதியம் என்கிற அறிவிப்பில் இதைப் பற்றியெல்லாம் பேசவே இல்லை. மேலும், சம ஊதியத்தைப் பெறப்போகும் வீராங்கனைகளின் எண்ணிக்கையுமே ரொம்பவே சொற்பம்தான். பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருக்கும் வீராங்கனைகள் மட்டுமே இதனால் பயன்பெறுவர். மிஞ்சிப்போனால் ஒரு 20 வீராங்கனைகள் பயன்பெறக்கூடும். பெண்கள் கிரிக்கெட் இப்போதுதான் வளரும் பருவத்தில் இருக்கிறது. அது முழுமையாக வளர்ச்சியடைய வேர்களை வலுப்படுத்த வேண்டும். அதற்கு உள்ளூர் அளவில் கிரிக்கெட் ஆடும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும். எனில்,

இந்த சம ஊதியம் என்கிற அறிவிப்பு உள்ளூர் அளவில் ஆடும் பெண் கிரிக்கெட்டர்களுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதைத்தான் செய்திருந்தது. அப்படி எதையும் பிசிசிஐ இங்கே செய்யவில்லை. உள்ளூர் அளவில் பாலின பாரபட்சம் தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கப்போகிறது.

உண்மையில் மகளிர் கிரிக்கெட்டில் சம்பளத்தோடு சேர்த்து வீராங்கனைகள் ஆடும் போட்டிகளின் எண்ணிக்கையையுமே உயர்த்தியாக வேண்டும்.

Sneh Rana - Mithali Raj
Sneh Rana - Mithali Raj
மிதாலி ராஜ் அவரின் 24 ஆண்டு கால கரியரில் மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். இந்திய ஆண்கள் அணிக்கு அறிமுகமாகும் வீரர் ஒருவர் ஒன்றரை ஆண்டுகளில் மிதாலி ராஜை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிடுவார்.

இதுதான் மகளிர் கிரிக்கெட்டுக்கு பிசிசிஐ கொடுக்கும் முக்கியத்துவம். பல உள்ளூர் மகளிர் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய, ஸ்பான்சர் செய்ய ஆட்கள் இல்லாத அவலம் எல்லாம் வாடிக்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

போட்டிக்கான சம்பளம் உயர்த்தப்பட்டது நல்ல விஷயம்தான். பணம் எப்போதும் நமக்குக் கைகொடுக்கும் என்பதில் எல்லாம் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அதோடு கூட சேர்ந்து, மகளிர் கிரிக்கெட்டின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். இங்குப் பலருக்கு எப்போது பெண்கள் கிரிக்கெட்டுக்கான உள்ளூர் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பதே தெரியாது. கிரிக்கெட் பெண்களுக்கான விளையாட்டு அல்ல என்ற பொது புத்தி இன்றும் பல இடங்களில் பரவிக் கிடக்கிறது. இது மாற வேண்டும் என்றால் பெண்கள் கிரிக்கெட்டுக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுதல் வேண்டும். குறிப்பாக மகளிர் கிரிக்கெட், கிராமங்களில் வலுப்பெற வேண்டும். சச்சின், தோனி படங்கள் போட்டு நடக்கும் கிராமத்துப் போட்டிகளில் மந்தனா மற்றும் கோஸ்வாமி படங்களும் இடம் பெறும் காலம் வர வேண்டும். என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட முடியுமோ அத்தனையும் எடுக்கப்படுதல் அவசியம். அதற்கான ஒரு சிறிய முதல் அடியை மட்டுமே 'சம ஊதியம்' என்ற பெயரில் பிசிசிஐ எடுத்திருக்கிறது.

பிசிசிஐயின் இந்த முன்னெடுப்பை பாராட்டலாம். ஆனால், இது இன்னும் விரிவடைந்து வேர்களைத் தொட வேண்டும். அங்கிருந்துதான் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.