Published:Updated:

கிரிக்கெட் போர்டு, டி-20 தொடர்கள் மட்டுமா வெஸ்ட் இண்டீஸின் பிரச்னை?!

Jason Holder
Jason Holder ( AP )

ஷெல்டன் காட்ரல், ஒஷேன் தாமஸ், கீமோ பால் என அசுர வேகத்தில் பந்துவீசும் ஒரு இளம் படை காத்திருக்கிறது. அவர்களைக் கொஞ்சமாவது ஒருங்கிணைத்து மெருகேற்றியிருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. இதற்கும் கிரிக்கெட் சங்கத்தின் ஊழலுக்கும் சம்பந்தம் இல்லையே!

இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் இவ்வளவு காமா சோமாவாக இருந்ததில்லை. ரசிகர்களிடம் அணு அளவு எதிர்பார்ப்பும் இல்லை. ஒளிபரப்பாளர்களும் பெரிதாக அக்கறை காட்டவில்லை. ப்ரீ மேட்ச் ஷோ, போஸ்ட் மேட்ச் ஷோ போன்றவற்றையெல்லாம் கடனுக்கென்று தயாரித்திருந்தனர். எப்போது போட்டி, என்ன ஸ்கோர் என்ற எந்த பரபரப்பும் காணப்படவில்லை. கடந்த இரண்டு மூன்று வாரங்களில், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரைப் பற்றிப் பேசிய அளவுக்குக்கூட இந்தியாவின் இந்தத் தொடர் பற்றி இந்தியர்கள் பேசவில்லை. இதற்கு ஒரே காரணம், வெஸ்ட் இண்டீஸ்!

பும்ரா `பூம் பூம்' ஹாட்ரிக்; விஹாரி, இஷாந்த் அசத்தல் பேட்டிங்! - திணறும் வெஸ்ட் இண்டீஸ் #WIvIND

வாத்தியக் கருவிகளும் கலாசார உடைகளும், வயதானவர்களின் விளையாட்டுத்தனங்களும் எப்போதுமே நிரம்பியிருக்கும் கரீபிய கிரிக்கெட் கேலரிகள் வெறிச்சோடி இருந்தது. உள்ளூரில் இந்தத் தொடர் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கான சாட்சி இது. ஒரு பெரிய அணியை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லையெனும்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இந்தத் தொடருக்கு இந்தியர்களிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கும்?

West Indies Cricket
West Indies Cricket
ஏன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீழ்ந்தது?

கிரிக்கெட் போர்டில் நடக்கும் ஊழல், அரசியல் விளையாட்டுகள்.

ஏன் வெஸ்ட் இண்டீஸ் அணி சொதப்புகிறது?

வீரர்கள் யாரும் தேசிய அணிக்கு விளையாடத் தயாராக இல்லை. டி-20 தொடர்களில் விளையாடத்தான் விரும்புகிறார்கள்.

ஒரு நிமிடம்... கடந்த ஐந்தாறு வருடங்களுக்கும் மேலாக இதையேதான் எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இதுதான் காரணமா, இதுதான் உண்மையான காரணமா? நிச்சயமாக இது மட்டுமே உண்மையான காரணம் கிடையாது.

சர் விவியன் ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாய்ட், சர் ஃப்ரான்க் வோரல், சர் காப்ரியல் சோபர்ஸ் என உலகின் அனைத்து பௌலர்களையும் விளாசித் தள்ளும் பேட்ஸ்மேன்கள் இருந்த அணி என்றார்கள். இப்போதும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். ஷாய் ஹோப், நிகோலஸ் பூரண், ஷிம்ரான் ஹிட்மேயர் போன்ற வீரர்கள் எந்த அணிக்குமே சிறப்பாக ஆடக்கூடியவர்கள். மூவருமே இந்தியாவின் உலகக் கோப்பை அணியிலேயே ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள். இவர்களோடு ஈவின் லூயிஸ், டேரன் பிராவோ, ஆண்ட்ரே ரஸல் போன்றவர்கள் இருக்கும் பேட்டிங் ஆர்டரின் செயல்பாடு என்ன?

West Indies vs India
West Indies vs India

எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ஓடி வரும்போதே பயத்தைகாட்டிவிடும் மால்கம் மார்ஷல், கர்ட்லி ஆம்ப்ரோஸ், கோர்ட்னி வால்ஷ், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங் என மிகப் பெரிய படையையே கொண்டிருந்த அணி என்றார்கள். உண்மைதான். அப்படியான பௌலிங் யூனிட் அதன் பிறகு அமையவில்லை. அதுபோன்ற ஒரு பௌலர்கூட அடுத்தடுத்த தலைமுறைகளில் தோன்றவில்லை. ஆனால், இப்போது அற்புதமான பௌலிங் யூனிட்டை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கீமர் ரோச் தன் வாழ்நாளின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். ஷெல்டன் காட்ரல், ஒஷேன் தாமஸ், கீமோ பால் என அசுர வேகத்தில் பந்துவீசும் ஒரு இளம் படை காத்திருக்கிறது. அவர்களைக் கொஞ்சமாவது ஒருங்கிணைத்து மெருகேற்றியிருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. இதற்கும் கிரிக்கெட் சங்கத்தின் ஊழலுக்கும் சம்பந்தம் இல்லையே! அப்படியெனில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் என்னதான் பிரச்னை?

இத்தனை ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் சங்கம் பிரச்னைகள் காணவில்லையா என்ன? ஐ.பி.எல் ஊழல், நிர்வாக உறுப்பினர்களின் தலை உருட்டல், தலைவர்கள் மாற்றம், நீதிமன்றத் தலையீடு, லோதா கமிட்டி, அதற்கான எதிர்ப்பு என இந்திய கிரிக்கெட்டும் சிக்கல்களுக்கு மத்தியில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், அணியின் செயல்பாட்டில் அது எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தியது? எதுவும் இல்லை! காரணம், ஒரு திடமான தீர்க்கமான தலைமை, ஒரு நல்ல டிரஸ்ஸிங் ரூம் இந்திய அணிக்கு வாய்க்கப்பெற்றது. தோனி, கேரி கிறிஸ்டன், ரவி சாஸ்திரி, கோலி எனச் சரியாகத் தலைமைதாங்கும் ஆளுமைகள் இருந்ததால், அணியைச் சரியாக ஒருங்கிணைக்க முடிந்தது. பொதுவாக, குழு விளையாட்டுகளில் முக்கியமான விஷயமே 'அணி ஒருங்கிணைப்பு' (team coordination) தான். ஒரு தீர்க்கமான தலைமை, ஒரு திடமான டிரஸ்ஸிங் ரூம்... அதுதான் ஒரு அணியை சரியாக வழிநடத்த முக்கியமான விஷயம்.

தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களால் ஏற்பட்டிருக்கும் விளைவு இது. அணியின் வெற்றிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, அதை ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். இனியாவது அதைச் சரிசெய்ய வேண்டும். அதுதான் எங்களுக்கு வெற்றிகளையும் அடையாளத்தையும் தந்தது.
சர் விவியன் ரிச்சர்ட்ஸ்
Sammy, Bravo and Gayle
Sammy, Bravo and Gayle

கடந்த சில ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் சறுக்கியிருக்கும் இடம் இதுதான். லாராவின் ஓய்வுக்குப் பிறகு, அந்த அணியை இதுவரை 8 பேர் (தற்காலிக கேப்டன் உள்பட) டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியிருக்கிறார்கள். அதாவது, 12 ஆண்டுகளில் 8 கேப்டன்கள். இதே காலகட்டத்தில் இந்திய அணியை வழிநடத்தியவர்கள் வெறும் 4 பேர்தான். ரஹானே உட்பட! சர்வான், கெய்ல், பிராவோ, சமி, ராம்தின், ஹோல்டர் என கேப்டன்களை மாற்றிக்கொண்டே இருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. சமியின் காலகட்டத்தில் ஷார்ட் ஃபார்மட்டில் ஓரளவு மீண்டும் ஃபார்மை மீட்டுக்கொண்டிருந்தபோது, மீண்டும் மாற்றங்கள். மீண்டும் சரிவு.

கடந்த 4 ஆண்டுகளாக ஹோல்டரிடம் நிலைகொண்டிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். அவரைப் பெரிதாக நம்புகிறார்கள். ஒரு வீரராக, அணியின் நம்பிக்கையை மிகவும் சிறப்பாகச் சுமந்துகொண்டிருக்கிறார். ஆனால், கேப்டனாக? மேலே சொன்னதுபோல், மிகச் சிறந்ததொரு இளம் பட்டாளம் இருக்கிறது. அதைச் சரியாக ஒருங்கிணைக்கிறாரா? அந்த இளம் பட்டாளத்துடன் கெய்ல், ரஸல் போன்ற வீரர்கள் இணைந்தார்கள். அதைப் பயன்படுத்தினாரா? இதற்கெல்லாமும் பதில் 'இல்லை'தான்!

Holder
Holder
AP

2019 உலகக் கோப்பை... மற்ற அணிகளெல்லாம் பிளான் A, பிளான் B ,பிளான் C என எக்கச்சக்க திட்டங்களோடு களத்தில் இறங்க , இவர்களுக்கோ பிளான் B என்பதே தெரியாது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வெறும் ஷார்ட் பால் யுக்திகொண்டு வீழ்த்திவிட , மொத்த தொடருக்கும் அதை மட்டுமே பிடித்துக்கொண்டது விண்டீஸ். ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், ஷகிப் அல் ஹசன் போன்ற உலகத்தர பேட்ஸ்மேன்கள் அவர்களின் திட்டத்தைத் தவிடுபொடியாக்கியபோதும் மாற்றவில்லை. கூல்டர்நைல், கிறிஸ் வோக்ஸ் போன்ற டெய்ல் எண்டர்கள் பிரித்து மேயும்போதும் அதை மாற்றவில்லை. வங்கதேச பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய ஸ்கோரை அநாயசமாக சேஸ் செய்தபோதும் மாற்றவில்லை. ஒரு அணி, ஒரே பிளான் என இங்கிலாந்துக்கு வந்திறங்கினார்கள் போலும். கேப்டனோ, லீடர்ஷிப் குழுவோ, பயிற்சியாளர்கள் டீமோ யாருமே இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி முடிவுகளை மாற்றியதாகத் தெரியவில்லை.

இவற்றையெல்லாம்கூட விட்டுவிடலாம். அணித் தேர்வில் நடக்கும் களேபரங்களெல்லாம் கோலி - சாஸ்திரி கூட்டணியையே விஞ்சிவிடும். ஒரு போட்டியில் கார்லோஸ் பிராத்வெயிட் பௌலராகக் களமிறங்குவார். அடுத்த போட்டியில் அவர் ஏழாவது பேட்ஸ்மேனாக்கப்பட்டு, ஒரு பௌலர் சேர்க்கப்படுவார். அடுத்து, அந்த பௌலரும் மாற்றப்பட்டு வேறொரு பௌலர் களமிறங்குவார். அதற்கடுத்த போட்டியில் பிராத்வெயிட்டே நீக்கப்பட்டு பேட்ஸ்மேன் ஒருவர் சேர்க்கப்படுவார். பிறகு, எல்லாம் முதலிலிருந்து தொடங்கும். உலகக் கோப்பைக்கு முன்பும் இவர்களது அணுகுமுறை இப்படியேதான் இருந்தது. 2018-ல் நடந்த இந்திய சுற்றுப் பயணத்தின்போது, 3 ஃபார்மட்களிலும் சேர்த்து 27 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். அதிலும் கீமோ பால், ஒஷேன் தாமஸ் போன்ற அறிமுக வீரர்கள் ஓரிரு போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டனர்.

Nicholas Pooran
Nicholas Pooran
AP

ஒரு அறிமுக வீரர், உலகின் தலைசிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்கள் இருக்கும் முன்னணி அணியை, அவர்களின் சொந்த மண்ணில் சந்திப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. உலக கிரிக்கெட்டின் வாசம் புரிய அவர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் அது சரியாகக் கிடைப்பதில்லை. ஒஷேன் தாம்ஸ் இரண்டு போட்டிகளோடு பிளேயிங் லெவனிலிருந்து தூக்கப்படுவார். கீமோ பால் ஒரு போட்டியிலேயே! இப்படி 20-களின் தொடக்கத்திலிருக்கும் வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்காமல் இருந்தால், ஒரு தலைமுறையை வளர்ப்பது எப்போது?

இவற்றையெல்லாம்விட மோசமான சில உதாரணங்கள் இந்த உலகக் கோப்பையில் நடந்தன. வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியின்போது ஆண்ட்ரே ரஸல் காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டார். அவ்வப்போது களத்துக்கு வெளியே சென்று ஓய்வெடுத்தார். ஒருமுறை ரஸலுக்கு மைதானத்திலிருந்து வெளியேற அனுமதி மறுத்தார்கள் நடுவர்கள். ரஸல் தன் நிலையைக்கூற முயற்சி செய்கிறார். நடுவர்கள் கேட்பதாக இல்லை. தொடர்ந்து அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அணியின் மிகமுக்கிய வீரர் அப்படித் தடுமாறிக்கொண்டிருக்க, கேப்டன் ஹோல்டர் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த வாதத்தில் ரஸலை ஆதரித்துப் பங்கேற்க நினைக்கக்கூட இல்லை. இவை மட்டுமல்ல, அந்த உலகக் கோப்பையில் இரண்டு முறை, 30 யார்டு சர்க்கிளுக்குள் ஃபீல்டர்கள் இல்லாமல் நோ பால் வாங்கியது, கிறிஸ் கெய்லை கவர் பொசிஷனில் நிற்க வைத்தது என, ஒரு தெளிவான கேப்டன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருந்தார் ஹோல்டர்.

Jason Holder
Jason Holder
AP

ஹோல்டரை குறை சொல்வதற்காக இதைச் சொல்லவில்லை. ஒரு வீரர், அதிலும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணியை வழிநடத்தும் ஒருவர், வெறுமனே டாஸ் போடும், அணியை முடிவு செய்யும் கேப்டனாக இருந்தால் மட்டும் போதாது. ஒரு லீடராக இருக்க வேண்டும். அப்படியொரு லீடராக ஹோல்டர் செயல்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில் அந்த அணியின் கேப்டனாக இருந்த யாருமே இந்த விஷயத்தில் சரியாகச் செயல்படவில்லை. கேப்டன் சரியாக இல்லையென்றாலும், பயிற்சியாளர் தீர்க்கமான ஒருவராக இருந்திருக்க வேண்டும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அந்த இடத்திலும் விளையாடிவிட்டது. அடிக்கடி செய்யப்பட்ட பயிற்சியாளர் மாற்றங்களும் அதற்கு உதவி செய்யவில்லை.

ஒரு நிலையான டிரஸ்ஸிங் ரூம் அந்த அணிக்கு அமையவே இல்லை. அப்படி அமையும்போதுதான், வெஸ்ட் இண்டீஸ் அணியால் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும்!

அடுத்த கட்டுரைக்கு