Published:Updated:

ஆஃப்சைடின் ஆண்டவர், ஆக்ரோஷத்தின் அதிபதி... கங்குலி எனும் தன்னிகரற்ற தலைவன்! #HBDDada

ஆக்ரோஷம் அவரது அடையாளம். ஆளுமை அவரது அணிகலன். எளிதில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத போர்க்குணம் அவருடனே பிறந்தது. கங்குலி - ஒரு முழுமுதல் தலைவன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொதுவாக, எந்த ஒரு கிரிக்கெட்டரின் கரியரை எடுத்துப் பார்த்தாலும், அதில் அவர்கள் எட்டிய உயரங்களும், சந்தித்த சரிவுகளும் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், கங்குலியின் சுயசரிதையில்தான், இந்தியக் கிரிக்கெட்டின் எழுச்சியே எழுதப்பட்டிருக்கிறது. அதோடு பல கிரிக்கெட்டர்களின் சுயசரிதைகளில் தவறாது இடம்பெற்றுள்ள ஒற்றைப் பெயரும், அவருடையதே. இந்தியக் கிரிக்கெட்டின் அணுகுமுறையையே மாற்றிய அவர், அதற்குப் புது முகத்தையும், முகவரியையும் கொடுத்தார்.

சூதாட்டப் புகார் என்னும் சுனாமியால், சரிந்து போன ஒரு சாம்ராஜ்யத்துக்கு, மன்னனாக முடிசூட்டவே, எவ்வளவு தைரியமும் துணிவும் வேண்டும். அவருடைய அந்த மனோதிடமும், இறுமாப்பும்தான், இந்தியாவை உச்சங்களில் ஏற்றி அழகு பார்த்தது. எண்ணிப் பாருங்கள் பூஜ்ஜியத்திலிருந்து கூடத் தொடங்கவில்லை அவர். எதிர்குறி மதிப்பிலிருந்துதான், கணக்கையே தொடங்கினார். ஆனாலும் சோர்ந்துவிடவில்லை அவர். 'நடக்குமா, முடியுமா?!' என்ற தயக்கம் அவரிடம் அணுவளவும் இல்லை. அவரைப் பொறுத்தவரை, எடுத்த காரியம் முடிக்கும் வரை, ஓய்ந்து உட்காரும் பழக்கம் இருந்ததில்லை.

சௌரவ் கங்குலி
சௌரவ் கங்குலி
ஹாசிப்கான்

அந்த உந்துதல்தான் அவரை, இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும், நிற்காமல் ஓட வைத்தது. சல்லடை போட்டு அலசி, போருக்கு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதைப் போல், ஒவ்வொருவராய் பார்த்துப் பார்த்து அணியில் சேர்க்க வைத்தது. அப்படி, யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன், ஷேவாக், தோனி, கைஃப், இர்ஃபான் பதான், நெஹ்ரா, காம்பீர் என அவர் தேர்ந்தெடுத்த ஒருவர்கூட சோடை போகவில்லை. அதற்குக் காரணம், திறமையான வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்பதில் அவருக்கிருந்த உறுதிதான். அதிலிருந்து அவர் சிறிதுகூட வளைந்து கொடுக்கவே இல்லை.

ஒரே ஒரு போட்டிக்கான வியூகம் அல்ல, அவரது கேம் பிளான்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்குமான திட்டமிடலாக, தொலைநோக்குப் பார்வை உடையதாகத்தான், அவரது ஒவ்வொரு நகர்வுமே இருந்தது. ஹர்பஜனை, பௌலிங் படையில் இணைத்தது, கும்ப்ளே இல்லாமல், ஆஸ்திரலியாவுடனான தொடரில் தொடரவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தது, உலகக்கோப்பை முடியும் வரையாவது, அணியின் நலனுக்காக பௌலராகத் தொடருங்கள் என ஜவகல் ஸ்ரீநாத்திடம் பேசிச் சம்மதிக்க வைத்தது என அவர் எடுத்த ஒவ்வொரு முடிவும், இந்தியக் கணக்கில், வெற்றியை மட்டுமே பதிவேற்றம் செய்து கொண்டிருந்தது.

வழிநடத்துபவனை விட வழிகாட்டுபவனே சிறந்த தலைவன். அவனிடம், சுயநலம் இருக்காது. தனது சுயசாதனைகள் பற்றிய எண்ணமே இருக்காது. டீம் பிளேயராக, 'அணியின் வெற்றி போதும், அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயார்' என்பதுதான், தலைவனது அடிப்படைப் பண்பு. அது கங்குலியிடம், நிரம்பி வழிந்தது. அதனால்தான், தான் கோலோச்சிக் கொண்டிருந்த ஓப்பனிங் பொசிஷனை, ஷேவாக்குக்குத் தாரை வார்த்தார். கங்கலியின் இந்த ஒரு ஸ்மார்ட் மூவ்தான், இந்தியாவுக்கு, ஹை ஸ்கோர்களை சேஸ் செய்யவும், செட் செய்யவும் வாய்ப்பளித்தது. உண்மையில், இது இந்தியாவுக்கும் ஷேவாக்குக்கும் சாதகமாக அமைந்ததே ஒழிய, கங்குலிக்கு, அது பாதகமாகவே அமைந்தது.

அவரது ஸ்ட்ரைக் ரேட் சரிய, ஆவரேஜும் அடிவாங்கியது. பின்னாளில், அணியில் அவரது இடத்தையே அது ஆட்டங்காண வைத்தது. ஆனாலும், தனது முடிவுக்காக ஒரு நாளும் அவர் வருந்தியதுமில்லை, அதிலிருந்து பின்வாங்கியதுமில்லை. நாளின் முடிவில், 'அது அணிக்கு நன்மையாகத்தானே முடிந்திருக்கிறது, அப்படியெனில் அதுதானே வேண்டும்!' என்பதே, அவரது மனநிலை.

2002-ல் இலங்கையோடு சாம்பியன்ஸ் டிராபியை பகிர்ந்து கொண்ட இந்தியா, 2003-ல் உலகக்கோப்பையை, ஃபைனல் வரை சென்று தவறவிட்டது. கோப்பைகள் கை நழுவியதுதான். ஆனால், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கு, சற்றும் குறையவில்லை. ஏனெனில், எங்கே முடித்தார் என்பதைவிட எங்கிருந்து தொடங்கினார் என்பதுதான் அவர் மீதான மரியாதையை பலமடங்காக்கியது. உலகக்கோப்பைகளில் அவரது பெயர் எழுதப்படவில்லை எனினும், அவரது ஓய்வுக்குப்பின், இந்தியா வாங்கிய கோப்பைகளில் கூட, அவரது உழைப்பின் மிச்சம், இன்றும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

சௌரவ் கங்குலி
சௌரவ் கங்குலி

அன்று முதல், இன்று வரை, மக்களை அவரை அதிகமாக நேசிக்க வைத்தது. அவருடைய அணுகுமுறையும் ஆக்ரோஷமும்தான். அநியாயம் இழைக்கப்படுகிறதென நடு மைதானத்தில் அமர்ந்து, அமைதிப் போராட்டம் நடத்திய அசாருதீனின் பாணியைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு, அடுத்தவர்களைக் கலங்கடித்துப் பார்க்கும், ஆஸ்திரேலியாவின் கேப்டனையே, டாஸ் போடுவதற்காகக் காக்க வைத்து, பதிலடி கொடுத்த கங்குலி புதிதாகத் தெரிந்தார்.

அந்த ஆக்ரோஷம்தான், அவரை மக்களிடத்தே கொண்டு சேர்த்தது. "என் இடத்தில் வந்து, என்னைத் தோற்கடித்து, சட்டையைக் கழட்டி சுற்றுகிறாயா, தவறு செய்து விட்டாய்... என்னிடம் நீ வம்பு வைத்துக் கொண்டிருக்கக் கூடாது, இதற்கான வலியை நீ திரும்ப அனுபவித்துத்தான் ஆக வேண்டும்" என சொல்லாமல் சொன்னார். அவர்கள் இடத்துக்கே சென்று தோல்வியை பரிசளித்து, பழிதீர்த்து, ஃபிளின்டாஃபுக்கு, அவர் தந்த மருந்தின் சுவையை, அவரையே உணர வைத்த அந்தத் தருணம்தான் கிரிக்கெட்டில் இந்தியா மீதான பார்வையையே மாற்றியது. அதன்பிறகு, இந்தியாவுக்கு எதிராக ஸ்லெட்ஜிங் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தவே எதிரணிகள் துணியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சக வீரர்களை அரவணைக்கவும் தெரியும், வம்புக்கு வந்தால், திரும்பக் கொடுக்கவும் தெரியும், இதுதான் கங்குலியின் பாணி.

சிங்கத்தின் குகைக்கே சென்று, அதனுடன் சரிசமமாக சிம்மாசனமிட்டு அமர்ந்து, அதற்கு இணையாக கர்ஜிக்கும் அழகிய திமிர் அவருடையது. இதுதான் இன்றளவும் 'தாதா' என ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது. அவர் ஏற்படுத்தி வைத்த அந்த பயம்தான், சூதாட்ட புக்கீஸ்களுக்கு 'அவரை அணுகும் துணிவு எங்களுக்கில்லை' என்று சொல்ல வைத்தது.

தோல்வியை ஒப்புக் கொண்டு, அதனிடம் மண்டியிட்டு, மடங்கி, மூலையில் முடங்கிப் போகும், சராசரி மனிதனல்ல அவர். செயல் முடியும்வரை, முட்டி மோதும், விடாது போராடும் போராளி. அவரது இதே எண்ணங்கள், இந்திய அணிக்குள்ளும் கடத்தப்பட்டதால்தான், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா தலைநிமிரத் தொடங்கியது.

கங்குலி, லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங்
கங்குலி, லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங்

'பயங்கொள்ளாதே, பின்வாங்காதே, எடுத்து வைத்த அடியில் உறுதியாய் இரு, அடித்து வீழ்த்தி முன்னேறு!' - இதுதான் இந்திய அணிக்கு கங்குலி கற்றுத்தந்த பாலபாடம். அதற்கு முன்பு வரை, இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும், தோல்வியைத் தவிர்க்கவே, இந்தியா போராடும்; டிரா என்பதே பெரிய விஷயம். அப்படி இருந்த அணிக்கு, வெற்றியின் விலாசத்தைத் தெரிய வைத்தவர் கங்குலி. அதன்பிறகுதான் வெற்றி இந்தியாவுக்கு வழக்கமானது.

இரும்பு மனிதராக, சாத்தியமே அற்றதாக இருந்தவற்றைக் கூட, இலகுவாக நடத்திக் காட்டியவர்தான் அவர். அதுதான் அவரின் மீதான ரசிகர்களின் அபிமானத்தை, ஆணி வேராய், ஆழமாய்ப் பதிய வைத்தது. ''கங்குலியின் ஓய்வுக்குப் பின், கிரிக்கெட் பார்ப்பதையே விட்டு விட்டேன்'' எனச் சொல்லுமளவிற்கான ரசிகர்கள் அவருக்குக் கிடைக்கவும், ஒரு சூப்பர் ஹீரோ அந்தஸ்தோடு, அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருவதற்கும், இதுதான் காரணமாக இருந்தது.

எவரெஸ்டில் பலபேர் ஏறி இருக்கலாம், தடம் பதித்திருக்கலாம், கொடி நாட்டி இருக்கலாம், ஆனால், டென்ஸிங் நார்கேயின், மெய்டன் வெற்றி, சிறப்பானதுதானே?! அதேபோல, அதள பாதாளத்தில் கிடந்த அணியை, தோளில் சுமந்து, முதன்முதலில், உயரத்தில் உட்கார வைத்தது கங்குலியின் சாதனைதான். அதற்குப் பிறகு வந்தவர்கள் பின்பற்றுவது, அவரது கால் தடத்தைத்தான்‌. அதுவும், அவருக்காக, அவரே செப்பனிட்டுச் செய்த பாதையைத்தான்.

அணிக்காக மட்டுமே ஆடிக் கொண்டிருந்த ஜாம்பவானுக்கு, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் திரும்ப ஒருமுறை வந்தது. அறிமுகமான பின், சரியாக சோபிக்காமல், வெளியேறி, ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் திரும்ப வந்து நின்று அடித்த, லார்ட்ஸ் சதமே அவரது கிளாஸைக் காட்டியது. 25 ஆண்டுகள் ஆகி இருக்கிறது, இன்னொரு வீரர் வந்து அந்தச் சாதனையை முறியடிக்க. லார்ட்ஸ் சம்பவமே சாதாரணமானது எனும் வகையில் 6000, 7000, 8000 ரன்களை ஒருநாள் போட்டிகளில், அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனை வலம் வந்து கொண்டிருந்தவருக்கு, கேப்டன் என்னும் முள்கீரிடம், பளுவை பலமடங்காக்கியது.

'விக்கெட் கீப்பராக டிராவிட் சாதிப்பார், ஓப்பனிங்கில் ஷேவாக் பொருந்திப் போவார்' என்றெல்லாம், பார்த்துப் பார்த்துச் செய்தவர், தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகப் போராடவில்லை. விளைவு, எந்த அணிக்காக எல்லாவற்றையும், தியாகம் செய்தாரோ, அந்த அணியில், அந்த இந்தியக் கிரிக்கெட்டின் சிற்பியை, கேப்டனாகக் கூட இல்லை, குறைந்தபட்சம், வீரராகக் கூட தொடர முடியாமல் செய்யும்படியான, திரைமறைவு வேலைகள் அரங்கேறின. போரில், புறமுதுகு காட்டா விட்டாலும், முதுகில் குத்தப்படுவது வீரனின் வாழ்வில் சகஜம்தானே?! கிரேக் சேப்பலால், வேதனைகளையும், மனவலிகளையும் சுமந்து, சொந்த அணிக்கே அகதியாக மாற்றப்பட்டு, புறக்கணிக்கப்பட்டார்.

கங்குலி
கங்குலி
சுயபச்சாதாபப்பட்டு, விட்டு விட்டுப் போவதற்குக் கோழை அல்லவே அவர்?! மாவீரன்! நின்று போராடினார். உடைந்த சிறகுகளுடன் பறப்பது கடினம்தான், ஆனால், அது இயலாத காரியமில்லையே?! அணிக்காகச் செய்ததை, தன்னுடைய சுயமரியாதைக்காகவும், ஆத்ம திருப்திக்காகவும், தன்னை நிரூபிக்கவும், செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது.

ரன்களை, வெறித்தனமாக, ரஞ்சித் தொடர்களில் குவித்து, அணிக்குள் திரும்பி வந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸிலும், ஒரு வலம் வந்த பின்தான் விடைபெற்றார். எந்த கங்குலியை, மெதுவாக பேட்டிங் ஆடுகிறார், வேண்டாம் என்றார்களோ அதே கங்குலிதான், 2007-ம் ஆண்டு டெஸ்ட்டிலும், ஒருநாள் போட்டிகளிலும் என இரண்டு ஃபார்மட்களிலும் 1000 ரன்களுக்கு மேல் குவித்து, 2346 ரன்கள் எடுத்து, அந்த ஆண்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைத் தட்டிச்சென்றார். தன்னை ஒரு வருடம் வெளியே உட்காரவைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை தனது பேட்டால் நிரூபித்தார். லார்ட்ஸ் சம்பவத்திற்கும், இதற்கும் கிட்டத்தட்ட 11 வருடங்கள் இடைவேளை இருந்தது. ஆனால், வயதோ, சூழ்நிலைகளோ அவருக்குத் தடையாக இருந்ததே இல்லை. அதீத தன்னம்பிக்கையின், ஆளுருவம் அவர்.

அண்டர் ஆர்ம்ஸ் - 25: போர்க்குணம் கற்றுத்தந்த தன்னலமற்ற தலைவன்... சர்ச்சைகள் சூழ் கங்குலியின் கதை!
7 ஃபீல்டர்களை, ஆஃப்சைடில் நிறுத்தினால் கூட, கேப்பில் பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் வல்லவராக இருந்தார், கங்குலி. அதனால்தான், ஆஃப்சைடின் ஆண்டவர் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். ஸ்பின்னர்கள் ஓவர்களில், அவர் இறங்கிவந்து விட்டாலே, பந்து சிக்ஸருக்குச் சென்றிருக்கும் என பௌலர்கள் தலையைத் தூக்கிக் கூடப் பார்த்ததில்லை, அந்தளவுக்கு அதிரடிக்குப் பெயர் போனவர் கங்குலி.
பிசிசிஐ தலைவர் கங்குலி
பிசிசிஐ தலைவர் கங்குலி

எந்த ஒரு ஆக்ஷன் திரைப்படத்திற்கும் குறைவில்லாதது, கங்குலியின் கதையும், பிசிசிஐக்குள், அவருடைய ரீ எண்ட்ரியும். தோலில் வடுவேற்றாத அவர் சந்தித்த அவமானங்கள், அவரது மனதில் வலுவேற்றி இருக்க, இந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றை முன்பு ஒருமுறை மாற்றி எழுதியவர், அதன் வருங்காலத்தையே நிர்ணயிக்கும் பிசிசிஐக்கே தலைவராகத் திரும்பி வந்தார்.

முதல் முறை கேப்டனாக போது, எந்தக் கோர்ட்டை அணிந்திருந்தாரோ, அதே கோர்டோடு, அவர் பிசிசிஐக்குள் திரும்பக் கால் எடுத்து வைத்த போது, "உனது விதியை முடிவு செய்பவன் நீ மற்றும் நீ மட்டும்தான். எவருடைய கைகளுக்குள்ளும் அது அடங்கிப் போவதில்லை" என சொல்லாமல் சொல்லிக் காட்டினார் கங்குலி.

வாழ்வில் வெல்ல வேண்டுமென்னும் துடிப்பிருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், இந்த சாம்பியனின் வாழ்க்கை, உந்தித் தள்ளும், உத்வேக விசை!

கங்குலி - காலங்கள் கடந்த காவிய நாயகன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு