Published:Updated:

தோனியையே டென்ஷனாக்கிய செமையான தரமான கம்பேக் கதை தெரியுமா? ஐ.பி.எல் நாஸ்டால்ஜியா

MS Dhoni
MS Dhoni ( Photo: Twitter/@ChennaiIPL )

கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படாமல் இருந்திருந்தால் நாளை (மார்ச் 29) மும்பை இந்தியன்ஸ் சி.எஸ்.கே இடையேயான போட்டி கோலாகலமாக நடைபெற்றிருக்கும்.

இந்தியா - பாகிஸ்தான், ஆஸி - இங்கிலாந்து போன்று ஐ.பி.எல்லின் பரம எதிரிகளான சென்னைக்கும் மும்பைக்கும் சீசன் ஓப்பனிங் மேட்ச் என்பதால் ஒரு வாரம் முன்பிருந்தே இந்தப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு எகிறியிறுக்கும். தல - தளபதி ரசிகர்களின் இன்னொரு வெர்ஷனான மும்பை - சென்னை ரசிகர்களும் இணையதளங்களில் மாறி மாறி கிண்டலடித்து தரலோக்கல் ட்ரோல்களில் இறங்கியிருப்பார்கள். தோனியின் கம்பேக், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ரோஹித் மற்றும் ஹர்திக்கின் கம்பேக் என உச்சபட்ச எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு நியாயம் செய்யும் பொருட்டுத் தரமான மேட்ச்சாக இது அமைந்திருக்கும். சர்வம் கொரோனா மயமாக இருப்பதால் இது எதுவும் நிகழவில்லை. சைலன்ட் மூடில் சங்கடப்பட்டுக்கொண்டிருக்கும் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக சென்னை - மும்பை அணிகள் வரிந்துகட்டிக்கொண்டு என்டர்டெயின் செய்த ஒரு நாஸ்டால்ஜிக் மேட்ச் குறித்து ஒரு பதிவு....

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ்

சென்னை - மும்பை மேட்ச்கள் எப்போதுமே சீட் எட்ஜ் திரில்லர் வகையைச் சேர்ந்தவைதான். யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் கன்ஃபார்ம் இருக்கும். பல நேரங்களில் அதான் சென்னை ஜெயிக்கப்போகுதே என முக்கால்வாசி மேட்ச்சிலேயே காத்தாடியை ஹைஸ்பீடில் வைத்துவிட்டு ஹாயாகத் தூங்கிவிட்டு காலையில் எழுந்தவுடன் நியூஸ் சேனல் ஸ்க்ராலிங்கில் சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை த்ரில் வெற்றி என்ற செய்தியைப் பார்த்து தலையில் துண்டை போட்ட ரசிகர்கள் ஏராளம்.

அப்படி மும்பை ரசிகர்களைத் தலையில் துண்டை போட வைத்த மேட்ச்தான் 2018 சி.எஸ்.கே இரண்டு வருடங்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த 11-வது சீசனின் ஓப்பனிங் மேட்ச்.

இந்த சீசனுக்கு முன்பாக நடைபெற்ற வீரர்களின் ஏலத்தில் எல்லா டீமும் இளம் வீரர்கள், இப்போது ட்ரெண்டில் இருக்கும் வீரர்கள் எனத் தங்கள் அணிக்கு ஆட்களை அள்ளிப்போட சென்னை மட்டும் 30+ ஏஜ் க்ரூப் வீரர்களாக தேடித்தேடி டிக் அடித்து டாடி'ஸ் ஆர்மியை (Dad's Army) உருவாக்கி வைத்தது. அணி நிர்வாகம் வழக்கம்போல செம கூல்தான். ஆனால், ரசிகர்கள் வெறியாகி மன உளைச்சலுக்குள்ளானர். ``பாய்ஸ் ஆர் பேக்'', ``வர்ரோம்னு சொல்லு....தள்ளி நில்லு" என ஸ்டேட்டஸில் ட்ரெயின்விட்டாலும் சி.எஸ்.கே ஃபேன்ஸ் கொஞ்சம் கிலியோடுதான் இருந்தனர்.

Chennai super kings
Chennai super kings

அங்கிள்ஸ் அணி என மற்ற அணி ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்ட சென்னைக்கும் `அண்ணாத்த' மும்பைக்கும் முதல் மேட்ச் மும்பை வான்கடேயில் தொடங்கியது. மும்பை அணியில் எவின் லீவிஸ், ரோஹித், பாண்டியா பிரதர்ஸ், இஷன் கிஷன் என ஸ்ட்ராங் பேட்டிங் லைன் அப்போடு முதலில் பேட் செய்தது. ஹர்பஜன், இம்ரான் தாஹிர், சாஹர், மார்க் வுட் எனப் பெரிய அளவில் ட்ரெண்டில் இல்லாத பெளலிங் படையோடு சென்னை இறங்க `வாய்ப்பில்ல ராஜா....வாய்ப்பில்ல' என்ற மனநிலையில்தான் சென்னை ரசிகர்கள் இருந்தனர். ஆனால், நடந்தது ஆச்சர்யம். பவர்ப்ளே முடிவதற்குள் ரோஹித், லீவிஸ் இருவரையும் சஹார், வாட்ஸன் இணை காலி செய்துவிட, முதல் 10 ஓவர்களில் மும்பை 65 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்த 10 ஓவர்களில் சூரியகுமார், இஷன் கிஷன் பார்ட்னர்ஷிப் மற்றும் பாண்டியா பிரதர்ஸ் கொஞ்சம் அதிரடி காட்ட, ஸ்கோர் 165 ஆனது. மேட்ச்சுக்கு முன்பாக நம்ம பெளலிங் அட்டாக்குக்கு மும்பை எப்படியும் 200 அடிச்சுருவாங்க என சோகத்தில் இருந்த மஞ்சள் ஆர்மி மும்பையின் சொதப்பலால் ஹைடெசிபிலில் விசில் போட்டது.

அடுத்து சென்னை பேட்டிங். இரண்டு வருடம் கழித்து பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் கம்பேக் கொடுக்கும் மேட்ச். நிச்சயம் வெற்றி பெற்றதால்தான் ஒரு மொமன்ட்டம் கிடைக்கும். ரசிகர்களிடம் உள்ள அந்த கிரேஸையும், ஜோஷையும் அப்படியே தக்கவைத்துக்கொள்ள முடியும் எனப் பலவித ப்ரஷெர்களோடு களமிறங்கியது சென்னை அணி. வாட்ஸன், ராயுடு, ரெய்னா என டாப் ஆர்டர் சொதப்ப, தோனி 7-வது ஓவரிலேயே களமிறங்கினார். தோனி, ஜாதவ் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தால்தான் வெற்றி என்ற நிலையில் மார்க்கண்டே பந்தில் தோனி எல்.பி.டபிள்யூ ஆக, சென்னை ரசிகர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் உருக்குலைந்து போனது. 51-க்கு 4 என்ற நிலையிலிருந்து ஏறி வர வேண்டும். ஒரு பக்கம் ஜாதவ் காயம் காரணமாக நடையைக்கட்ட, `நிச்சயம் முடியாது' என்ற நிலையில் பிராவோ களமிறங்கினார்.

உடைந்துபோயிருந்த ரசிகர்களின் நம்பிக்கையைப் பிராவோ மீண்டும் ஒட்டவைத்தார். அவர் பெயருக்கேற்ற வகையில் அப்படியொரு பிரேவ்வான இன்னிங்ஸ். கடைசி 5 ஓவரில் 60 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் பும்ராவின் 2 ஓவர்களில் மட்டும் 4 சிக்சர்களைப் பறக்கவிட்டார். மொத்தமாக 6 சிக்சர்கள் விளாசி மும்பை ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் ஷாக் கொடுத்தார். சரி, அப்படியே பிராவோ மேட்ச்சை சுமுகமாக முடித்து வைத்தாரா என்றால் இல்லை. மும்பை vs சென்னை என்பது மித்ரனுக்கும், சித்தார்த் அபிமன்யூக்குமான மோதல் போன்றது. கடைசி நொடிவரை பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. பிராவோ சூப்பர்மேன் இன்னிங்ஸ் ஆடிவிட்டு 19-வது ஓவரின் கடைசிப்பந்தில் அவுட் ஆக, கடைசி விக்கெட்டாக உள்ளே சென்றிருந்த கேதார், வந்து கடைசி ஓவரில் சிக்சரும் பவுண்டரியும் அடித்து சென்னை அணியின் தரமான கம்பேக் வெற்றியை உறுதிசெய்தார்.

Bravo
Bravo
சென்னை சூப்பர் கிங்ஸ்

சிஎஸ்கே அணி என்பது தோனிக்கு ஒரு கௌரவம். இந்திய அணியில் கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தாலும் சென்னை அணியை விட்டுக்கொடுக்கமாட்டார் தோனி. அங்கே அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கெல்லாம் இந்த யெல்லோ ஜெர்சியில்தான் பதிலடிகளைப் பறக்கவிடுவார். சிஎஸ்கே-வால் தோனிக்குப் பெருமை. தோனியால் சிஎஸ்கே-க்குப் பெருமை. அப்படிப்பட்ட அணி இரண்டு வருடத் தடைக்குப் பிறகு மீண்டு வருவதால் இந்த ஆட்டம் தோனிக்கும் முக்கியமானதாகவே இருந்தது. `எமோஷனல் அண்டர் கன்ட்ரோல்' என மேட்ச்சுக்கு முன்பாகப் பேசியிருந்தாலும்

கேப்டன் கூல் தோனியையே மேட்ச் ப்ரெஷரில் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் குறுக்க மறுக்க நடக்க வைத்த பெருமை இந்த மேட்ச்சுக்குத்தான் உண்டு.

மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்ற பிராவோ, ``இந்த வெற்றியை நாங்கள் சிஎஸ்கே ரசிகர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்" என்றார். ஆம், இந்த மேட்ச் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் சமர்ப்பணமே..!

விசில் போடு..!

அடுத்த கட்டுரைக்கு