சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு துவங்கியுள்ளது மகளிர் உலகக் கோப்பை. கொரோனா தொற்று காரணமாக 9 வீராங்கனைகள் வைத்துக் கூட ஃபீல்ட் செய்ய அனுமதி, கடந்த முறையை விட 75% பரிசுத்தொகை உயர்வு என இந்த உலகக்கோப்பையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது ஐசிசி.

1978-இல் இருந்து மகளிர் உலகக்கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணி இதுவரை இரண்டு முறை (2005 & 2017) இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதிலும் 2017-இல் இங்கிலாந்துக்கெதிரான இறுதிப் போட்டியில் வெறும் 9 ரன் வித்தியாசத்தில் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி இம்முறை கோப்பையை எப்படியேனும் தவறவிட்டுவிடக்கூடாது என்று நிச்சயம் போராடும்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்கப்போகும் இந்தியப்படை பற்றிய அலசல் இதோ.
1. மித்தாலி ராஜ்

1999-ம் ஆண்டிலிருந்து சுமார் 23 ஆண்டுகளாக மேலாக நீல ஜெர்சியில் ஆடிவரும் கேப்டன் மித்தாலி ராஜை அறிந்திராத கிரிக்கெட் ரசிகர்களே கிடையாது. 204 ஒருநாள் போட்டிகளில் 7623 ரன்களைக் குவித்துள்ள மித்தாலிக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்பதால் கோப்பையை வென்று அவரை வழியனுப்ப இந்திய வீராங்கனைகள் கூடுதலாக போராடுவார்கள்.
2. ஜூலன் கோஸ்வாமி

மித்தாலி மீது எந்தளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அந்த அளவில் சிறிதும் குறைவில்லாமல் சீனியர் பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி மீதும் உள்ளது. காரணம் அவருக்கும் இதுவே கடைசி உலகக்கோப்பை. சுமார் இருபது ஆண்டுகளாக இந்திய பௌலிங் யூனிட்டை தன் தோளில் சுமந்த வரும் ஜூலன் 195 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 245 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரும் இவரே.
3. ஹர்மன்ப்ரீத் கவுர்

கடந்த உலகக்கோப்பை தொடரில் ஹர்மான்ப்ரீத்தின் 171 ரன்கள் இன்னிங்ஸே இவரின் திறமைக்கான சாட்சி. சமீப காலமாக தொடர் ஃபார்ம் அவுட்டில் தவித்து வந்த அவர் மனஉளைச்சலாலும் பாதிக்கப்பட்டிருந்தார். மனநல ஆலோசகரின் உதவியோடு அதில் இருந்து மீண்டு வந்துள்ள ஹர்மன்ப்ரீத் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து ஃபார்மிற்குத் திரும்பியுள்ளது அணிக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது.
4. ஷபாலி வெர்மா

தன் 15-வது வயதில் இந்திய அணிக்குள் நுழைந்த ஷபாலி 2018-ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். சேவாக்கை போல முதல் பந்திலிருந்தே அதிரடியைத் தொடங்கிவிடும் பேட்டிங் ஸ்டைலை கொண்டிருப்பவர் இவர். அவரின் சமீபத்திய ஃபார்ம் கவலையளிக்கும் வண்ணம் உள்ளது. ஆனால் தன் பழைய அதிரடியை மீட்டெடுக்க அவருக்கு ஒரே போட்டியே போதுமானது. அப்படி வந்துவிட்டால் ஷபாலியின் பேட்டில் இருந்து தொடர் சரவெடிகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
5. ஸ்மிருதி மந்தனா

ஷபாலியுடன் இந்திய அணிக்காக ஓப்பன் செய்யும் மற்றொரு பேட்டர் ஸ்மிருதி மந்தனா. அணியின் பேட்டிங்கில் இவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கப்போகிறது. கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த ஸ்மிரிதி இம்முறையும் அதை கச்சிதமாக நிகழ்த்துவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
6. தீப்தி ஷர்மா

தற்போதைய இந்திய அணியின் நம்பிக்கை ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா. 2017-ல் அயர்லாந்துக்கு எதிராக இவர் விளாசிய 188 ரன்கள் தீப்தியின் பேட்டிங்கிற்குச் சிறந்த உதாரணம். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பலம் சேர்க்கும் தீப்தி 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் செய்ததை போல மேஜிக்கை நிகழ்த்தவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
7. ஸ்னே ரானா

தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதமடித்து, நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி தனது இருப்பை நிலைநாட்டியவர் ஸ்னே. அதேபோல தன் முதல் ஒருநாள் போட்டியிலும் ஆறு ஓவர்களில் 7 ரன் மட்டுமே கொடுத்தார். மூட்டுவலியால் பாதிக்கபட்டு கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியிலிருந்து விலகி இருந்த ஸ்னே, ரயில்வே மேட்ச்களில் அபாரமாக ஆடி கம்பேக் கொடுத்திருக்கிறார்.
8. ரிச்சா கோஷ்
2018 டி-20 உலகக்கோப்பையில் இரண்டு ஆட்டங்கள் விளையாடிய ரிச்சா அதன் பின் சீரான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிபடுத்தி வந்தார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 26 பந்துகளில் 44 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக 26 பந்துகளில் அரைசதம் என இவரின் சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக உள்ளது. ரிச்சா கோஷிற்குக் கூடுதல் பணியாக விக்கெட் கீப்பிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
9. ராஜேஸ்வரி கெய்க்வாட்
2014-ல் இந்திய அணியில் நுழைந்த கெய்க்வாட், தவனை போல ஒரு டோர்னமென்ட் ப்ளேயர். மற்ற ஆட்டங்கள் எப்படியோ உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் உக்கிரமாக மாறிவிடுவார் இவர். 2017-ம் ஆண்டு நியூசிலாந்துக்கெதிரான உலகக்கோப்பை போட்டியில் முக்கியமான நேரத்தில் வெறும் பதினைந்தே ரன்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையிலும் 7 விக்கெட்களை வீழ்த்தி, சிறந்த எக்கனாமியைக் கொண்டிருந்தார். அதே ஃபார்மை இத்தொடரிலும் தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.
10. யஸ்திகா பாட்டியா
யஸ்திகா பாட்டியா ஒரு விக்கெட் கீப்பங் பேட்டர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த யஸ்திகா 2019-ல் ஹரியானாவிற்கு எதிரான அடித்த 145 ரன்கள் அவரின் குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ். 2021-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அணிக்காக தேர்வான யஸ்திகா பெரிய இன்னிங்ஸ் ஏதும் ஆடவில்லை என்றாலும் சராசரியாக 30 ரன்களை ஒவ்வொரு போட்டியிலும் கடந்துவிடுகிறார். இத்தொடரில் யஸ்திகாவின் பேட்டிங் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்குக் கூடுதல் பலமளிக்கும்.
11. மேக்னா சிங்
யஸ்திகாவுடன் தனது முதல் சர்வதேச கரியரைத் தொடங்கியவர் மேக்னா சிங். 5 ஒரு நாள் போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும், ஒரு டெஸ்ட் மேட்சில் 2 விக்கெட்களையும் எடுத்துள்ளார் அவர். அணிக்கு தற்போது வரை பெரிய பங்களிப்பாக எதையும் செய்யவில்லை என்பதால் இந்த உலகக்கோப்பை வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே இவரின் கரியர் அமையும்.

12. பூஜா வஸ்த்ராகர்
பேட்டராக தன் கரியரை துவங்கிய வஸ்த்ராகர், தனது கோச்சின் அறிவுரையால் பௌலிங்கில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்திய அணிக்கு லோயர் ஆர்டர் பேட்டிங்கும் பூஜா வஸ்த்ராகரை நம்பியே உள்ளது. அதை பூர்த்திசெய்வாரா பூஜா?
13. பூனம் யாதவ்

2013 இல் பங்களாதேஷுக்கு எதிராக தன் முதல் போட்டியை ஆடிய பூனம் யாதவிற்கு இது இரண்டாவது 50 ஓவர் உலகக்கோப்பை. 2017 இறுதிப்போட்டியில் இரண்டு விக்கெட் எடுத்த பூனம், 2018 டி20 உலகக்கோப்பையில் 8 விக்கெட்டுகள் என சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைக்கு ஃபார்மில் இல்லாத இவர் தன் பழைய ரிதமிற்குத் திரும்பினால் இந்திய பௌலிங் யூனிட் மேலும் வலுபெரும்.