Published:Updated:

வாட்சன், வார்னே, பட்லர்..! Rajasthan Royals ஆல்டைம் லெவனின் நான்காவது ஓவர்சீஸ் வீரர் யார்?

Rajastan Royals
Rajastan Royals

முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம், இளம் வீரர்கள் வளர்ச்சி, வீரர்கள் மீது சூதாட்டப் புகார், இரண்டு ஆண்டுகள் சஸ்பென்ஷன் எனப் பலவித டிராக்குக்களில் பயணித்துக்கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸின் ஆல்டைம் லெவன் எப்படி இருக்கும்?

ஓப்பனராக ஷேன் வாட்சன். ராஜஸ்தான் ஆல்டைம் பெஸ்ட் பிளேயர் ஒருவரை மட்டும் தேர்வு செய்யவேண்டுமானால் அது நிச்சயம் வாட்சன்தான்! 472 ரன்கள், 17 விக்கெட்டுகள் என முதல் சீசனிலேயே ஐ.பி.எல் தொடரில் தன் ராஜ்ஜியத்தைத் தொடங்கிவிட்டார் வாட்டோ. யாருமே எதிர்பாராத ராயல்ஸின் வெற்றியில் வாட்சனின் பங்களிப்பு அளப்பறியது. அதன்பிறகு அதே மாதிரியான அட்டகாசமான சீசன்கள் இல்லை. ஆனால், தொடர்ந்து பேட் பால் என இரண்டிலும் தன் பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டேதான் இருந்தார். சில சீசன்கள் முழுமையாக ஆடவில்லை. ஆடியிருந்தால் அவரது நம்பர்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இன்னொரு ஓப்பனராக, ஜாஸ் பட்லர். இரண்டு சீசன்கள்தான் ஆடியிருக்கிறார். அதிலும் முழுமையாக ஆடவில்லை. ஆனால், மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 21 போட்டிகளில் 8 அரைசதம் அடித்திருப்பதெல்லாம் சாதாரண விஷயமா என்ன! ஒற்றை ஆளாக அந்த அணியை வெற்றிபெற வைத்துக்கொண்டிருந்த பட்லர்தான் அந்த அணியின் விக்கெட் கீப்பரும்.

Jos Buttler
Jos Buttler

மூன்றாவதாக, இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்யா ரஹானே. இந்திய அணியில் இடம்பிடித்த பிறகுதான் பிரீமியர் லீகில் கலக்கத் தொடங்கினார் ரஹானே. 2012-ம் ஆண்டிலிருந்து 2015 வரை தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளைக் கொடுத்தார். இரண்டு 500+ சீசன், ஒரு சீசனில் 488 என கன்சிஸ்டென்டாகக் கலக்கிக்கொண்டிருந்தவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொஞ்சம் சுமாரான நம்பர்களைத்தான் வைத்திருக்கிறார். இருந்தாலும், அவரது அந்த அசத்தல் சீசன்களை எப்படி மறந்துவிடமுடியும்.

அடுத்து சஞ்சு சாம்சன். ராஜஸ்தான் யூத் ரெவல்யூஷனின் மிகமுக்கிய தயாரிப்பு. தொடக்க சீசனிலேயே தன் பொறுப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் பெற்றுவிட்ட சாம்சன், 25-30 என்ற சராசரிக்குள் சுருங்கிப்போய்விட்டதுதான் சோகம். ஆரம்பத்திலேயே இவர்மீது எதிர்பார்ப்பு எழுந்துவிட்ட நிலையில், ஒரு சீசனில்கூட அவரால் அதை முழுமையாகப் பூர்த்தி செய்யமுடியவில்லை. ஒரு சில ஆட்டங்களில் திடீரென விஸ்வரூபம் காட்டுபவர், அடுத்த போட்டிகளில் பெட்டிப்பாம்பாகிவிடுகிறார். ஆனாலும், ராயல்ஸின் ஆல்டைம் லெவனில் இடம்பிடிப்பதற்கான பெர்ஃபாமன்ஸை நிச்சயம் கொடுத்திருக்கிறார்.

Sanju Samson
Sanju Samson

ஐந்தாவது பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட். ஆடிய 3 சீசன்களிலும் 343, 462, 471 என 3 சீசன்களிலும் நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய கடைசி ஐ.பி.எல் சீசனில் 4 அரைசதங்கள் அசத்தினார் டிராவிட். சொல்லப்போனால், ராயல் சேலஞ்சர்ஸுக்க ஆடியதைவிட பலமடங்கு சிறப்பாக ராயல்ஸுக்கு ஆடியிருக்கிறார். யுசுப் பதான்… முதல் மூன்று சீசன்களில் ராயல்ஸின் மிகமுக்கிய அங்கமாக விளங்கினார் சீனியர் பதான். தென்னாப்பிரிக்க ஐ.பி.எல் சுமாராகவே போயிருந்தாலும், மற்ற இரண்டு சீசன்களிலும் மிகமுக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். 2010-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான அவரது அதிவேக சதம் ராயல்ஸ் வரலாற்றின் மிகமுக்கிய மொமன்ட்களில் ஒன்று!

ஆல்ரவுண்டர் ஸ்லாட்டுக்கு ஜேம்ஸ் ஃபாக்னர். ராஜஸ்தானுக்கு ஆடிய முதல் சீசனிலேயே 28 விக்கெட்டுகள் வீழ்த்தி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் ஃபாக்னர். பேட்டிங்கில் பெரிய ஸ்கோர்கள் அடிக்கவில்லையென்றாலும் சில முக்கியமான கேமியோக்களை அவ்வப்போது ஆடிக்கொண்டேதான் இருந்தார். ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து ஆர்.சி.பி-யைப் பந்தாடியதைப் போல்! ஸ்டோக்ஸ் கடந்த இரண்டு சீசன்களில் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை. அதனால், அந்த இடம் ஃபாக்னருக்கு எளிதாகச் சென்றுவிடுகிறது.

Faulkner vs RCB
Faulkner vs RCB

பௌலிங்கில் ஸ்பின் டிபார்ட்மென்டில் ஷேன் வார்னே & ஷ்ரேயாஸ் கோபால். 55 போட்டிகளில் 57 விக்கெட்டுகள் எடுத்து, கடைசி காலத்திலும் தன் சுழலால் பேட்ஸ்மேன்களை மிரட்டினார் வார்னே. யாரும் எதிர்பாராத அணியை கோப்பைக்கு தானே முன்நின்று வழிநடத்தினார். 19, 14, 11, 13 என ஒவ்வொரு சீசனிலுமே தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்திக்கொண்டேதான் இருந்தார். போதாதென்று பேட்டிங்கிலும் ஒன்றிரண்டு மிரட்டல் இன்னிங்ஸ்கள் ஆடினார். ராயல்ஸின் ஆல்டைம் லெவனுக்குக் கேப்டன் இந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான்தான்.

ஷ்ரேயாஸ் கோபால்… கடந்த இரண்டு சீசன்களில் ஆடிய 25 போட்டிகளில் 31 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் இந்த கர்நாடக ஸ்பின்னர். அதிலும் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற பெரிய தலைகளுக்குத் தொடர்ச்சியாக தலைவலியாக விளங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், அணியில் இரண்டு லெக் ஸ்பின்னர்கள் தேவைதானா? ஷ்ரேயாஸ் கூக்ளிகளைத்தானே பெரும்பாலும் பயன்படுத்துகிறார். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லை. வேகப்பந்துவீச்சாளர்களாக முனாஃப் படேல் மற்றும் சித்தார்ட் திரிவேதி. முதல் இரண்டு சீசன்களிலும் 14, 16 விக்கெட்டுகள் என கன்சிஸ்டென்டாக அசத்தினார் முனாஃப். திரிவேதி - ராயல்ஸின் டாப் விக்கெட் டேக்கர். இவர்களை விட அந்த அணிக்கு சீரான பங்களிப்பைக் கொடுத்த வேகப்பந்துவீச்சாளர்களைக் கண்டெடுத்துவிட முடியாது.

அடுத்த கட்டுரைக்கு